சமுதாய பணிகள்

/சமுதாய பணிகள்

‘அக்னி அறக்கட்டளை’ மூலம் செய்தவை…

‘தனிநபர் விழிப்புணர்வு மூலம் சமுதாய மேம்பாடு’ என்ற கொள்கையை உடைய அக்னி, எழுத்தாளர்கள் திரு. மாலனும் திருமதி சிவசங்கரியும் இணைந்து, 1986-ம் ஆண்டு துவங்கிய ஓர் அறக்கட்டளை. அவர்களுடன் சேர்ந்து பணியாற்றிய இதர அறங்காவலர்கள், திருமதி பிருந்தா ஜெயராமன், திருமதி பவானி ராஜகோபாலன் மற்றும் திருமதி லலிதா வெங்கடேஷ்.

சமூகப் பிரக்ஞையுள்ள நல்ல மனிதர்களாக, தேசபக்தி கொண்ட பிரஜைகளாக, ஆக்கபூர்வமான சிந்தனைகள் நிறைந்த செயல்வீரர்களாக, சமுதாயத்தை, குறிப்பாக இளைய தலைமுறையை, மாற்றியமைக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கடந்தாண்டுகளில் பல கூட்டங்களையும், பயிற்சிப் பட்டறைகளையும் அக்னி நடத்தியிருக்கிறது.

பாரத தரிசனம்: 1986-ம் ஆண்டில், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து இருபது சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, புது தில்லிக்கு யாத்திரை அழைத்துச் செல்லப்பட்டு, ராஜ்காட்டில், காந்திஜியின் சமாதியின் முன் நின்று அந்தக் குழந்தைகள், ‘இன்று முதல் சிறந்த பிரஜைகளாக, மனிதராக வாழ, வளர முயற்சி செய்வோம்’ என்று சத்தியம் செய்யவைக்கப்பட்டனர்.

பாலங்கள்: ஒருவரின் கஷ்டத்தை மற்றவர் புரிந்துகொள்ளும்போது, பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்க்கப்படும் என்கிற நம்பிக்கையில், அரசு அதிகாரிகள், காவல்துறை, மாநகராட்சி போன்றோருடன் பொதுமக்கள் நேருக்கு நேர் சந்தித்து, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் வகையில், ‘பாலங்கள்’ என்ற தலைப்பில் பல தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

கவிராத்திரி: சமகாலச் சமுதாயத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாகச் செயல்படும் இலக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களையும் சார்ந்த பிரபலமான கவிஞர்கள், எழுத்தாளர்களை அழைத்து, அவரவர் மொழியிலும் ஆங்கிலத்திலும் கவிதை, கதைகளை வாசிக்கவைத்து, மொழிபேதமற்ற இலக்கியப் பரிவர்த்தனையை அக்னி இருமுறை நடத்தியுள்ளது. சென்னையிலும், பிறகு தஞ்சையில், தென்மண்டலக் கலாச்சார அமைப்பின் உதவியோடும், இக்கவிராத்திரிகள் நடைபெற்றன.

திரைக்கதை பயிலரங்கம்: ஞானபீட விருது பெற்ற பிரபல மலையாள எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான திரு. எம்.டி. வாசுதேவன் நாயரை அழைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு ‘திரைக்கதைப் பயிலரங்கம்’ நடத்தப்பட்டது.

இலக்கியப் போட்டி: இலக்கியப் பத்திரிகையான ‘கணையாழி’யுடன் இணைந்து, ‘தி.ஜானகிராமன் குறுநாவல் போட்டி’ ஏற்பாடு செய்ததன் மூலம், பத்து சிறந்த குறுநாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, ‘சுபமங்களா’ பத்திரிகையுடனும் இணைந்து, பத்து சிறந்த சிறுகதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அன்பு: ‘உலகப் பசி இயக்கம்’ (World Hunger Project) அமைப்பின் அங்கமாக ஏற்படுத்தப்பட்ட ‘அன்பு’ (ANBU – Awareness Needed for Betterment of Underprivileged) மூலம், பெண் குழந்தைகள் மேம்பாடு பற்றிய கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஏவிஎம் திரைப்பட நிறுவனத்தின் உதவியுடன் நான்கு விளம்பரப் படங்கள் தொலைக்காட்சிக்காகவும், தொலைக்காட்சியிலும் திரையரங்குகளிலும் திரையிடப்படவென ‘எத்தனை யுகங்கள், எத்தனை யுகங்கள், எங்கே போயின எங்கள் முகங்கள்’ என்ற விழிப்புணர்வுப் பாடலும் தயாரிக்கப்பட்டு, தொடர்ந்து ஓராண்டுக்கு ஒளிபரப்பாயின.

வேண்டாமென்று சொல்லுவோம்: காட்டுத்தீயை விட பயங்கரமாய் பரவி, ஒரு சமுதாயத்தை, நாட்டை, பூண்டோடு அழிக்கும் வல்லமை படைத்த போதை மருந்துப் பழக்கம், நம் நாட்டில் வேர்விட்டுவிடாமல் கவனிக்கவேண்டிய பொறுப்பு, இந்தியப் பிரஜைகள் அனைவருக்கும் உண்டு. இப்பொறுப்பை உணர்ந்த அக்னி, இயன்ற விதங்களிலெல்லாம் பாடுபட்டுவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களுக்கும் சென்று, சமூகத் தொண்டு நிறுவனங்களின் கூட்டங்களிலும், பள்ளி, கல்லூரிகளிலும், உண்மை உதாரணங்களோடு ‘ஸ்லைட்’ படங்களோடும் உரை நிகழ்த்தப்பட்டு, ‘வேண்டாமென்று சொல்ல இளம் பிராயத்திலிருந்தே பழகுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளது.

‘ஒரே ஒரு தரம்’ என்ற 22 நிமிட விடியோப் படம் தமிழில் எடுக்கப்பட்டு, ஏவிஎம் நிறுவனத்தாரின் உதவியுடன் அப்படத்தின் நூறு பிரதிகள் தயாரிக்கப்பட்டு, ரோட்டரி சங்கங்கள் மூலம், 1989-90 ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் புறநகர்ப் பகுதி பள்ளிக் குழந்தைகளுக்குத் திரையிடப்பட்டுள்ளது. ‘வேண்டாமென்று சொல்லுவோம்’ என்கிற தமிழ், ஆங்கிலக் கையேடுகள் ஆயிரக்கணக்கில் அச்சடிக்கப்பட்டு, கூட்டம் நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் இலவசமாக வினியோகிக்கப்பட்டுள்ளது.

போதைமருந்துப் பழக்கம் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றை விற்பவர்களைக் கடுமையாய் தண்டிக்கவேண்டும் என்பதிலும் அக்னி முனைந்திருக்கிறது. ‘கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படவேண்டும்’ என்கிற வேண்டுகோளுடன், ஐம்பதாயிரம் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் அளித்து, போதைமருந்துக் கடத்தலிலும் விற்பனையிலும் ஈடுபட்டிருக்கும் நபர் இரண்டாவது முறையாகக் கைதாகும்போது தூக்குதண்டனை விதிக்கப்படலாம் என்கிற அளவுக்கு சட்டத்தைக் கடுமையாக மாற்ற அக்னி பாடுபட்டுள்ளது.

பிரபல கிரிக்கெட் ஆட்டக்காரர்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், ஸ்ரீகாந்த் ஆகியோரைக் கொண்டு, ‘வேண்டாமென்று சொல்லுவோம்’ என்ற செய்தியைக் கூறும் தொலைக்காட்சி விளம்பரப் படங்கள் எடுக்கப்பட்டு, மாநில மற்றும் தேசிய தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாயின.

போதைமருந்துக்கு அடிமையாதல், அதைத் தடுத்தல், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு மீண்டுவருதல் – போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்பொருட்டு, கூட்டங்களை நடத்தவும், களப்பணி செய்யவும், ‘விதைகள்’ எனப்படும் நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கான பயிலரங்கங்கள், மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்டன.

ராஜாஜி புனர்வாழ்வு இல்லம்: போதைமருந்து, குடிநோய் ஆகியவற்றிற்கான பணிகளில் ஈடுபட்டபோது, பொருளாதார ரீதியில் நலிவடைந்தோர் இவற்றால் அதிகமாகப் பாதிப்படைவதை உணர்ந்து, அவர்களுக்கான மறுவாழ்வு குறித்து அக்னியின் நிறுவனர் சிவசங்கரி சிந்தித்ததன் விளைவாகப் பிறந்ததே இவ்வில்லம். விழிப்புணர்வு பெற்ற குடி, போதை நோயாளிகள் அவற்றிலிருந்து மீண்டுவர, இந்தியன் வங்கியின் உதவியுடன், அடையாறிலுள்ள வி.எச்.எஸ். மருத்துவமனையில் ‘ராஜாஜி புனர்வாழ்வு இல்லம்’ 1991-ல் துவக்கப்பட்டு, சற்றும் தொய்வின்றி மிகச்சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.

குடிப்பழக்கம் குறித்த ஆய்வு: சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் குடிசைவாழ்ப் பகுதி மக்களிடையே குடிப்பழக்கம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிய, மத்திய அரசுக்காக ஓர் ஆய்வில் அக்னி ஈடுபட்டபோது, ‘சென்னையில் சுமார் நூற்றுக்கு ஐம்பத்தி ஏழு நபர்கள் (57%) குடிப் பழக்கத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்’ என்கிற உண்மை தெரியவர, குடிப் பழக்கத்தைத் தடுப்பதற்கும், அதுகுறித்த விழிப்புணர்வுக்குமான நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியன் வங்கியின் உதவியுடன், குடியின் தீமையை விளக்கும் படத்தின் முன்னூறு பிரதிகள் எடுக்கப்பட்டு, ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ள தொழிற்சாலைகளுக்கு இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டு, குடும்பத்தோடு சேர்ந்து அவர்கள் ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்பதை உணர்வதற்கான வழிசெய்யப்பட்டது. குடியின் தீமைகளைக் கதையாக விளக்கும் புத்தகமும், பத்தாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு, ஏராளமான நூலகங்களுக்கும் தொழிற்கூடங்களுக்கும் இலவசமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தமிழுக்கும் அமுதென்று பேர்: தொன்மையான செம்மொழியான தமிழ் இலக்கியத்தின் சுவையைப் பருக, இலக்கியத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரித்துக்கொண்டு, மூன்று சிறந்த சொற்பொழிவுகளை அக்னி ஏற்பாடு செய்திருந்தது. 1994-ம் ஆண்டு நிகழ்ந்த இவ்விழாவில், ‘சங்ககாலம்’ குறித்து கலைஞர் கருணாநிதி அவர்களும், ‘இடைக்காலம்’ குறித்து குமரி அனந்தன் அவர்களும், ‘சமகாலம்’ குறித்து வலம்புரி ஜான் அவர்களும் ஆற்றிய சிறப்புரைகள், பெரும் வரவேற்பைப் பெற்றன.

அக்னி அஷர விருது: தமிழுக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களைப் பாராட்டி, அவர்களது எழுத்தை அங்கீகரிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டது ‘அக்ஷர’ விருது. 1993-ம் ஆண்டு, பத்து எழுத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ‘அக்ஷர’ விருதுப் பத்திரமும், பஞ்சலோகத்தாலான சரஸ்வதி சிலையும் வழங்கப்பட்டன. அடுத்து வந்த ஒவ்வோர் ஆண்டும், தமிழ் இலக்கியத்திற்குத் தங்களது சீரிய பங்களிப்பால் வளம் சேர்த்த மூத்த இலக்கியவாதி ஒருவருக்கும், முந்தைய ஆண்டின் சிறந்த புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் ஒருவருக்கும், ஐயாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் சரஸ்வதி சிலையும் ‘அக்ஷர’ விருதாக வழங்கப்பட்டன. வேற்று மாநில இலக்கியவாதி ஒருவரை அழைத்து, அம்மாநிலத்தின் சமகால இலக்கியத்தைப் பற்றின சிறப்புரை வழங்கப்பட்டது, இவ்விருது வழங்கும் விழாக்களிலுள்ள குறிப்பிடத்தக்க அம்சம்.

‘லீப்’ (LEAP – Leadership Education Action Programme): இன்றைய இளைய தலைமுறை, தங்களது திறமைகளை இனம்கண்டுகொள்ளத் தவறியவர்களாகவோ, அல்லது தவறான வழிகளில் அவற்றைப் பயன்படுத்துபவர்களாகவோ இருப்பதை உணர்ந்து, அவர்களது ஆற்றல்களை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தத் தூண்டும் விதமாக, ‘லீப்’ முகாம்களை அக்னி ஏற்பாடு செய்தது. மேலாண்மைப் பயிற்சி, பிரச்சினைக்கான தீர்வைக் கண்டறிதல், ஆக்கபூர்வமான சிந்தனை, சிறப்பான தொடர்புகொள்ளுதல் – போன்ற பல்வேறு தலைப்புகளில், அந்தந்த துறைகளைச் சார்ந்த நிபுணர்களின் சிறப்புரைகளையும் வழிகாட்டுதல்களையும் கொண்டு, ஐம்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவியருக்கு நடத்தப்பட்ட முகாம்கள், பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நேர்மறைச் சிந்தனையைத் தோற்றுவிப்பவை யாகவும் அமைந்தன.

சாதனையாளர் சந்திப்பு: அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்ட சாதனையாளர் சந்திப்புகளுள், வங்க மொழியின் பிரபல எழுத்தாளரும் சமூகப் பணியாளருமான திருமதி மகாஸ்வேதா தேவி அவர்களின் வருகை குறிப்பிடத்தக்கது. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான ‘ஞானபீடம்’, சமூகப்பணிக்கான சர்வதேச உயர் விருதான ‘ராமன் மகசேசே’ போன்றவற்றைப் பெற்றுள்ள திருமதி மகாஸ்வேதா தேவி, பட்டியலில் குறிப்பிடப்படாத பழங்குடியினரின் உயர்வுக்காகப் பாடுபட்டவர்.

குழந்தைகள் தினம்: பண்டித நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு 18.11.1998 அன்று, சென்னையிலுள்ள பள்ளிக்குழந்தைகளை அழைத்து, ‘குழந்தைகள் தினம்’ கொண்டாடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ என்ற படம் திரையிடப்பட்டதோடு, ‘தேசப்பற்று’ குறித்து கிரிக்கெட் வீரர் திரு.ஸ்ரீகாந்த், ‘ஆக்கபூர்வமான சிந்தனை’ குறித்து அமர் சேவா சங்கத்தைச் சார்ந்த திரு. சங்கரராமன், ‘தேசிய ஒருங்கிணைப்பு’ குறித்து திருமதி சிவசங்கரி ஆகியோர் உரையாற்றவும் செய்தனர். நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற மூத்த தலைவர் திரு. ஜி.கே. மூப்பனார் அவர்கள், திருமதி சிவசங்கரியின் ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ புத்தகத்தின் முதல் தொகுதியின் முன்னூறு பிரதிகளை, சென்னையிலுள்ள முன்னூறு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கியது, விழாவின் சிறப்பம்சம்.

‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ நூல் வெளியீடு: தனது இலக்கியச் செயல்பாடுகளின் ஓர் அங்கமாகவும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்பொருட்டும், திருமதி சிவசங்கரியின் மாபெரும் இலக்கியப் பங்களிப்பான ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ திட்டத்தின் நான்கு தொகுதிகளையும் வெளியிடும் விழாக்களை, அக்னி மேற்கொண்டது. முதல் தொகுதி 1998 ஜனவரியில், இரண்டாம் தொகுதி 2000 செப்டம்பரில், மூன்றாம் தொகுதி 2004 மே மாதத்தில், இறுதித் தொகுதி 2009 ஜூன் மாதத்திலும் வெளியிட்டதில் அக்னி மிகுந்த பெருமை கொள்கிறது.

நாட்டுப்பற்று, சரியான மதிப்புகள், சமுதாயத்தை நேசித்தல், ஆக்கபூர்வமான சிந்தனைகள், தன்னம்பிக்கை – என்று பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து சிந்திக்கும் அதே தருணத்தில், இளைய சமுதாயத்தையும், தொழிலாள வர்க்கத்தையும், தேக்கமற்ற நேர்ப்பாதையில் செயல்படுத்தும் விதமாகவும் பல்வேறு விதங்களில் அக்னி முனைந்துவந்துள்ளது.

அனுமனாக மாறி விஸ்வரூபம் எடுப்பதும், தீயவற்றை ஒட்டுமொத்தமாகப் பொசுக்குவதும், எல்லோருக்கும் சாத்தியமில்லை… எனினும், சிறு அணில்களாக, ராமன் சேது பாலத்தைக் கட்ட சின்ன கற்களைக் கொணர்ந்து கொடுத்துதவிய அணில்களாகவேனும் செயல்படுவதை, தனது நோக்கமாகவே கொண்டு பணியாற்றியது அக்னி அறக்கட்டளை.

25 ஆண்டுகள் சமுதாயத்துக்காக முழுமையாக தொண்டாற்றிய பின் 2012 ஆம் ஆண்டு அரங்காவலர்களின் ஒரு மனதான தீர்மானத்துடன் அக்னி அறக்கட்டளை மூடப்பட்டது.

 

‘சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளைமூலம் செய்துவருபவை

கல்விக்கான உதவி: அகரம் ஃபவுண்டேஷன், சுத்தானந்தா வித்யாலயா, அவ்வை இல்லம், சேவாலயா, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்வி அமைப்பு, தஞ்சை கல்யாணசுந்தரம் மேநிலைப் பள்ளி, பிலானியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கழகம், சென்னை சாரதா வித்யாலயா, ஜஸ்டிஸ் பஷீர் அஹமத் பெண்கள் கல்லூரி – ஆகிய கல்வி நிறுவனங்களுக்குப் பொருளுதவி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, சிறப்பான கல்வித்திறன் இருந்தும் பொருளாதாரப் பின்னணி இல்லாத மாணவ மாணவியருக்கு, அவர்களது கல்விக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டுவருகிறது.

 

மருத்துவ உதவி: சங்கர நேத்ராலயா, வி.ஹெச்.எஸ். போன்ற மருத்துவ மனைகளில், வசதியற்ற நோயாளிகளுக்கு இலவசச் சிகிச்சையை ஒவ்வோர் ஆண்டும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வசதியற்ற நோயாளிகளுக்கு இலவச சிறுநீரக டயலாலிசிஸ் செய்வதற்காக, டாங்க்கர் ஃபவுண்டேஷன், ஸ்ரீ மாதா அறக்கட்டளை போன்ற அமைப்புகளுக்கு டயாலிசிஸ் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

சிறப்பு சிகிச்சைப் பிரிவு: சென்னை மேற்கு மாம்பலம் பப்ளிக் ஹெல்த் சென்டர் மருத்துவமனையில் பெண்களுக்கும் குழந்தைகளுக்குமான சிறப்பு சிகிச்சைப் பிரிவு, சிவசங்கரியின் தந்தை திரு. சூரியநாராயணன் (சூரி அண்ட் கம்பெனி) அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதர பணிகள்: முதியோர் பராமரிப்பு, ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் நலனைப் பாதுகாத்தல் – போன்ற சமுதாயப் பணிகளுக்கு தொடர்ந்து உதவி செய்யப்பட்டு வருகிறது.

 

இலவசத் திருமணங்கள்: ஜாதி மத பேதமற்று, வசதியில்லாத நிலையிலுள்ள ஆண்-பெண்களின் திருமணத்திற்கு தாலி; புடவை-வேட்டி; கேஸ் அடுப்பு, குக்கர், பாத்திரங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் – என்ற அனைத்தையும் கொடுத்ததோடு, திருமணச் செலவையும் மேற்கொண்டு, வருடத்திற்கு பத்து தம்பதிகளுக்கு என்ற வகையில் இதுவரை நூறு தம்பதிகளின் திருமணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

முக்தி பவுண்டேஷன் மூலமாக 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

மூத்த எழுத்தாளருக்கு மூன்று லட்சம் பரிசு தொகையோடு‘ சூர்யா விருது’ம் ,சிறந்த தமிழ் புத்தகத்துக்கு இரண்டு லட்சம் பரிசு தொகையோடு ‘அக்ஷர விருது’ம் ஒவ்வொரு வருஷமும் வழங்கப்படுகின்றன.

சிறு பத்திரிகைகள், இலக்கிய அமைப்புகளோடு இணைந்து போட்டிகள் நடத்தி சிறந்த சிறுகதைகளுக்கு பரிசுகள் அளிக்கப்படுகின்றன.

பலகார தள்ளுவண்டி, தையல் எந்திரங்கள், ஆடுகள் கொடுப்பதன் மூலம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.

 

* * * * *