47 நாட்கள்

/47 நாட்கள்

( 1 )

முதல் நாள்

மாங்கல்யதாரணம் ஆகப்போகிறது. வைக்கோல் திண்டு மேல் சித்தப்பா அமர்ந்திருக்க, அவர் மடிமேல் விசாலி உட்கார்ந்திருந்தாள். எதிரில், தாலியைக் கையில் தயாராய் வைத்துக்கொண்டு குமார்… பக்கத்தில், தாலி முடியப்போகும் குமாரின் தங்கை. ‘கௌரி கல்யாணம் வைபோகமே’ என்று இஷ்டப்பட்ட சுருதியில் பாடும் மற்ற உறவுப் பெண்மணிகள். வலக்கை ஆள்காட்டி விரலை தலைக்குமேல் உயர்த்தி, “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று உரக்கச் சொல்லி மந்திரத்தைக் கூறும் சாஸ்திரிகள்.
கையிலிருந்த மந்திராட்சதையை, அண்ணாவாய் லட்சணமாய் மணமக்கள் மேல் ஆசிர்வதித்து எறிந்தபோது, சந்துருவின் மனசு ஏனோ கொஞ்சம் குறுகுறுத்தது…
பதினாறே வயசு நிரம்பிய விசாலிக்குக் கல்யாணமா! மடிசாரைக் கட்டி, ‘ஷோ கேஸில்’ வைக்கப்படும் சின்ன அழகான ஸெலுலாயிட் பொம்மை போல் இருக்கும் விசாலிக்கா கல்யாணம்!
அவசரப்பட்டுவிட்டோமோ?
சரியாக ஒரு வாரத்திற்கு முன்னால், நினைத்த நினைப்பில்லாமல் விசாலியின் திருமணம் குதிர்ந்தபோதும், சந்துரு இப்படித்தான் நினைத்தான். இதையே அம்மாவிடமும் சித்தப்பாவிடமும், மற்ற தாயாதிப் பெரியவர்களிடமும் சொல்லவே செய்தான்.
“வலிய வர ஸ்ரீதேவிய வாண்டாங்கறதா! வயசு பதினாறு ரொம்பி, பதினேழு பொறந்துடுத்து… இன்னும் என்ன அவ குழந்தையா?” என்று சித்தப்பாவும்,
“விசாலி வயசுல எனக்கு சுப்புணி பொறந்துட்டான்! சின்ன வயசா இது?” என்று சித்தியும்,
“அந்தக் காலத்துல நம்ப பிராம்ணாளாத்துல பொண்டுகள் திரள்றதுக்கு முன்னாலயே கல்யாணம் பண்ணிடுவா… அதான் கொழந்தைகளுக்கு நல்லது! எல்லாம் தான்தோணித்தனமா நடந்துக்கற இந்தக் காலத்துல, உங்கப்பா தெய்வமா இருந்து விசாலிக்கு ஒரு நல்ல வழி காட்டியிருக்கார்… இதுக்கு என்னத்துக்காக இத்தன யோசனை?” என்று ஒருமுகமாய் மற்ற பெரியவர்களும்,
“பெரியவா சொல்றது நல்லதுக்குத்தாண்டா, சந்துரு… மாப்பிள்ளை ஆத்துக்காரா நல்ல மாதிரியா இருக்கா, வலிய வந்து கால்காசு செலவில்லாம பண்ணிக்கறேங்கறா, பையன் கைநிறைய சம்பாதிக்கறான், கண்ணுக்கு ராஜாவா இருக்கான்! இந்தக் காலத்துல சீமைக்குப் போய் குடுத்தனம் பண்றது தண்ணி பட்ட பாடா இருக்கு! திருவையாத்து லட்சுமி பிள்ளையும் மாட்டுப்பொண்ணும் அங்கதானே இருக்கா? என்ன குறைஞ்சுபோயிட்டா? எனக்கென்னமோ இந்த சம்பந்தத்தை விட்டுட மனசில்ல…” என்று அம்மா பட்டம்மாவும் தீர்மானமாய் சொன்ன பிறகு, அவன் வாயைத் திறக்கவில்லை.
வாஸ்தவம்தான்…
குமார் போன்ற மாப்பிள்ளை விசாலிக்கு வாய்ப்பான் என்று கனவில்கூட நினைத்திருக்க முடியுமா?
சீமையில் வேலைபார்க்கும் மாப்பிள்ளை! கண்ணுக்கு மன்மதன்தான்!
வரதட்சிணை, அது இது என்று ஒரு தம்பிடி வாங்கவில்லை. கல்யாணம் ‘சிம்பிளாக’ இருக்கவேண்டுமென்று ‘கண்டிஷன்’ வேறு!
போதாக்குறைக்கு, விசாலிக்கு ஒரு கெம்பு செட், வைரமோதிரம், நாலு கெட்டிக்கரை பட்டுப்புடவைகள் எல்லாம், மாப்பிள்ளையின் தனிப் பரிசுகளாம்!
போதுமா!
ஊர் ஜனங்கள், விசாலிக்கு வந்த அதிர்ஷ்டத்தை எண்ணி மூக்கில் விரலை வைத்தவர்கள்… இன்னும் எடுக்கவில்லை.
‘எல்லாம் சரிதான்… ஆனாலும் ஏன் என் மனசு இப்படிக் குறுகுறுக்கிறது?’ என்று இப்போது மணப்பந்தலுக்கு அருகில் நின்று, தங்கை, அவள் கணவனைப் பார்க்கும்போது மீண்டும் நினைத்துப்பார்த்தான் சந்துரு.
ஒருவேளை, விசாலிக்கும் குமாருக்கும் வயசு வித்தியாசம் பன்னிரண்டு என்பதால் இருக்குமோ?
அம்மாவுக்கும் அப்பாவுக்கும், பதினாறு வயசு வித்தியாசம். சித்தப்பாவுக்கும் சித்திக்கும், பதினைந்து. அவர்கள் தாம்பத்திய சந்தோஷத்துக்கு என்ன குறை? ம்ஹூம், ஒன்றுமில்லை. அந்தக்காலத்துக்காரர்கள் என்று அவர்களை ஒதுக்கி விட்டாலும், சந்துருவுக்குத் தெரிந்த வகையில் இந்த ஆதிச்சபுரத்தில் பத்து வயசு வித்தியாசத்திலும், அதற்கு மேலும் கல்யாணம் பண்ணிக்கொண்ட எத்தனையோ சின்னவயசுக்காரர்கள் இருக்கிறார்களே! எல்லோரும் குழந்தையும் குட்டியுமாய், வாய் நிறைய சிரிப்பும், மனசு நிறைந்த வாழ்க்கையுமாய்த்தானே இருக்கிறார்கள்! ஆக, வயசு வித்தியாசத்தைக் கண்டு என்னத்துக்காக மருள வேண்டும்?
கண்காணாத தேசத்துக்கு கடைக்குட்டித் தங்கையை அனுப்புகிறோமே என்ற உணர்வு மனசை நெருடுகிறதோ? சந்துரு யோசித்தான். இருக்கும்… இருக்கும்.
விசாலி மேல் அவனுக்கு அளவுகடந்த பாசம். அதுவும், அப்பா தவறிப் போகும்போது அவள் சின்னப் பெண்… என்ன வயசிருக்கும்? அவன் அப்போது எஸ்.எஸ்.எல்.சி. படித்துக்கொண்டிருந்தான்… அப்படியென்றால், அவனுக்குப் பதினாறு, விசாலிக்குட்டிக்கு எட்டு. அப்பா இல்லாத குறை குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக, விசாலியிடம் தனிப்பட்ட அன்பை, கவனிப்பை, சந்துரு இதுநாள்வரை செலுத்திவந்தது உண்மை. ஒருவேளை, இந்த ஆழ்ந்த பாசத்தின் காரணமாக, அவளை அயல்நாட்டுக்கு அனுப்பிவிட்டால் அடிக்கடி பார்க்கக்கூட முடியாதே என்ற காரணமாகத்தான் நெஞ்சு உறுத்துகிறதோ? இருக்கும்… இருக்கும்.

விழுப்புரத்திலிருந்து நேராக திருச்சி போகும் நெடுஞ்சாலையில் மூன்று மைல்கள் போனால், ஜானகிபுரம் வரும். அங்கு ஒரு லெவல்-க்ராசிங் உண்டு. அதற்கு முன்னால் வலதுகைப் பக்கம், செம்மண் சாலை ஒன்று பிரியும். அதிலேயே வளைந்துவளைந்து, பச்சை வயல்களையும், அல்லிப்பூக்கள் ஏகமாய் மலர்ந்திருக்கும் குளங்களையும், களத்துமேடுகளையும் கடந்து, கிட்டத்தட்ட நான்கு மைல்கள் போலச் சென்றால், மரகதபுரமும், அதற்கு மேற்கே பாதையில் தொடர்ந்து போனால் ஆதிச்சபுரமும் வரும்.
அக்ரகாரத் தெரு ஒன்றும், ஒரு ரெட்டிமார் தெருவும்தான் ஆதிச்சபுரத்தின் பிரதான வீதிகள். ஒரு வீடு விடாமல் எண்ணினால்கூட, தெருவுக்கு இருபது வீடுகள் தேறாது. சின்ன கிராமம். பிள்ளையார் கோவில் முக்கியமானது. அப்புறம், மாந்தோப்பிலுள்ள அம்மன் கோவில். சற்றுத் தள்ளி, குடியானவர்கள் குடியிருப்பு, இன்னும் தூரத்தில் சேரி.
அக்ரகாரத்தில் இருந்தவர்கள் அனைவருமே தாயாதிகள்தாம். ஓஹோவென்று கொழித்துக்கொண்டும், பண்ணை மிராசுக் குடும்பம் என்றும், அந்தக் கிராமத்தில் யாரும் கிடையாது. எல்லோருமே தலைக்குப் பத்துப் பதினைந்து ஏக்கராக்களுக்குள் வைத்துக்கொண்டிருந்த சின்ன நிலக்காரர்கள்.

நிலத்தின் முக்கிய சாகுபடி கரும்பு… மற்றபடி, வீட்டுச் சாப்பாட்டுக்குத் தேவையான நெல்லையும் அவரவர் பயிராக்கி உபயோகிப்பது வழக்கம்.
சங்கரய்யர் – சந்துருவின் தந்தை – பன்னிரண்டு ஏக்கரா நிலத்துக்கு உரிமையாளராக இருந்தவர். வருஷத்துக்குப் பத்தாயிரம் போல வருமானம் வரும்.

சந்துரு, சீமந்த புத்திரன். அடுத்து, ஞானம். கடைசியில் விசாலி.
ஆதிச்சபுரம், மரகதபுரத்துக் குழந்தைகளெல்லாம் படிக்க, விழுப்புரம்தான் வரவேண்டும். யார் வீட்டு வண்டிக்கு வேலையில்லாமல் இருக்கிறதோ, அவர்கள் வண்டியைக் கட்டி, ஊர்க் குழந்தைகளை அதில் ஏற்றி, ஜானகிபுரம் வரை கொண்டுவந்து விடுவர். அங்கிருந்து அவர்கள் பஸ் பிடித்து விழுப்புரம் வந்து, பள்ளியில் படிப்பார்கள். மாலையில் ஜானகிபுரத்துக்கு வந்து, ஏதாவது வண்டி வந்து காத்திருந்தால் அதில் ஏறி ஊர்திரும்புவார்கள். எந்தக் குழந்தையாவது ஜானகிபுரத்துக்கு நேரத்துக்கு வந்துசேரவில்லையென்றால், கொஞ்ச நாழிகை காத்திருந்து பார்த்துவிட்டு வண்டி கிளம்பிவிடும். அப்புறம் அந்தக் குழந்தை, ஐந்து மைலுக்கு நடராஜாதான்! ஊரில் அறுப்பு, நடவு சமயமாக இருந்தால், வண்டிகளுக்கு வேலை இருக்குமாதலால், பாதி சமயங்கள் குழந்தைகள் நடக்கத்தான் நேரும். இதனாலேயே படிப்பை ஆர்வமாக ஆதிச்சபுரத்துக் குழந்தைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரியவர்களும், ‘படிச்சு என்ன கிழிக்கப் போறதுகள்? ஒருநாள் வயலில் இறங்கவேண்டியதுகள்தானே!’ என்ற அலட்சியத்துடனே இருந்ததால், உயர்நிலைப் பள்ளியை எட்டிப்பார்த்த பையன்களே அந்தக் கிராமத்தில் குறைவு. எஸ்.எஸ்.எல்.சி. முழுசாக முடித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்… அதில் சந்துரு ஒருவன் இல்லை.
சந்துரு பள்ளியில் இறுதியாண்டு படித்த வருஷத்தில், சங்கரய்யர் அகாலமாய் மாண்டுபோனார்.
காலையில் எழுந்து வயல்காட்டுக்குப் போனவர், உச்சிவெயில் மண்டையைப் பிளக்கும்போது வீட்டுக்குள் வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து, “பட்டம்மா… குடிக்க தூத்தம் கொண்டு வா…” என்றாராம். பட்டம்மா தம்ளரில் ஜலத்தோடு வந்தபோது, மனுஷனுக்கு உயிர் இல்லை.
என்ன வியாதி, என்ன செய்தது என்றுகூட, அந்த ஊர் ஜனங்களால் புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு சாவு அவருக்கு.
பத்து நாள் காரியங்களைப் பண்ணிய கையோடு, பள்ளிப் படிப்புக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, வேஷ்டியை வரிந்துகட்டிக்கொண்டு வயலில் இறங்கி, அப்பாவுக்குப் பிறகு அந்த வீட்டின் பொறுப்பைச் சுமக்கும் ஆண்மகன் ஆனான் சந்துரு.
அப்பாவின் மரணத்துக்குப் பின், ஊரில் மற்ற பெண்களோடு பதினெட்டாம் புள்ளி, பத்துக் கட்டம், பல்லாங்குழி ஆடிக்கொண்டு காலத்தைக் கழித்த ஞானத்துக்கு, உன்பாடு என்பாடு என்று போன இரண்டாம் வருஷம்தான் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறியது.
ஒரு மைல் தள்ளி உள்ள மரகதபுரம்தான், ஞானத்தின் புக்ககத்தார் வாழும் ஊர்.
கையில் இரண்டாயிரம், சீர்செனத்திகள், மாப்பிள்ளைக்கு மயில்கண் வேஷ்டி, மோதிரம் என்று எத்தனையோ சிறப்பாய் செய்தும், சம்பந்திகளுக்குத் திருப்தியில்லை.
மாட்டுப்பெண் அவர்களைப் பொறுத்தவரை, ஒரு வேலைக்காரிக்குச் சமம். வீட்டுக் காரியங்களைச் செய்து, மாட்டுத்தொழுவ வேலைகளைச் செய்து, நாள் பூராவும் லொங்குலொங்கென்று உழைத்தாலும், வயிறு நிறைய சாதம் போடக்கூட ஞானத்தின் மாமியாருக்கு மனசு ஆகாது. அப்படியொரு ஜென்மம்!
அத்திப்பூத்தாற்போல இங்கு வரும் ஞானம், தன் கஷ்டங்களைச் சொல்லி பிழியப்பிழிய அழுவாள்.
விழுப்புரத்திற்கு சந்துரு போகவேண்டிய ஜோலி இருக்கும்போதெல்லாம், தார் வாழைப்பழம், பூசணிக்காய், தோட்டத்துக் காய்கறி என்று எதையாவது கொண்டுபோய் வாசல் திண்ணை நிறைய அடுக்கினால்தான், தங்கையை ஒரு நிமிஷம் பார்த்துப் பேச அனுமதிக்கப்படுவான். அப்போதும், சிண்டு முடியும் நாத்தனார் எமன் கூடவே இருக்கும்.
விசாலியை இந்தச் சீமை வரன் பெண்பார்க்க வந்தபோது எல்லோரும், ‘சீமைக்கா பொண்ணை அனுப்பறது?’ என்று கணநேரம் யோசித்தபோது, பளிச்சென்று பேசி சந்தேகத்தைத் தீர்த்தவள் ஞானம்தான்.
“ஜாதகப் பொருத்தம் பாத்து, கூப்பிடு தூரத்துல என்னைக் குடுத்திருக்கேளே… நா என்ன சுகத்தைக் கண்டுட்டேன்? பொழுது விடிஞ்சு பொழுது போனா, மாபாரமா வேலை செய்யணும்… அக்கடான்னு ஒரு நிமிஷம் உக்காரக் கூடாது. கால் வயறு சோறு. ஆம்படையான் மூஞ்சிய நின்னு பாக்கணும்னாக்கூட, அவாகிட்ட உத்தரவு வாங்கிக்கணும்… சீ, நாய் வாழ்க்கை! இந்த மாதிரி ‘நானும் குடுத்தனம் பண்றேன்’னு சொல்றதுக்குப் பதிலா, கழுத்துல கயத்தை மாட்டிண்டு தொங்கிடலாம்! என் தலையெழுத்துதான் இப்படியாயிடுத்து… விசாலிக் குட்டியாவது நன்னா இருக்கட்டும்! யோசிக்காம இந்த வரனை முடிச்சுடும்மா! சந்துரு கெடக்கான்… ஆயிரம் வாண்டாத யோஜனை பண்ணிண்டு! நாளைக்கு அவ ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாம, ராணி மாதிரி வாழறப்போ, இவனே புரிஞ்சுப்பான்!” என்று ஆணித்தரமாய் திரும்பத்திரும்ப அவளே பேசி, இந்தச் சம்பந்தத்தை முடிப்பதில் குறியாய் நின்றாள்.
முதலில் யோசித்த அம்மாகூட, மாப்பிள்ளைப் பையனின் அழகையும் குணத்தையும், கனகதாரையாக விசாலிக்கு அவன் கொடுக்கும் பரிசுகளையும் கண்டு, மனசு குதூகலித்துத் திருமண ஏற்பாட்டில் தீவிரமாய் ஈடுபட்டாள்.

இப்போது பந்தலில் மாங்கல்யதாரணம் முடிந்த இந்த வேளையில், நின்று நிதானித்து யோசித்துக்கொண்டே மீண்டும் விசாலியைப் பார்த்தான் சந்துரு.
விசாலியை நெருங்கி மாப்பிள்ளை அவளுக்கு மட்டும் கேட்கும்படி என்னவோ சொல்லியிருப்பான் போலிருக்கிறது…
ஏற்கனவே தாமரையாய் இருந்த முகம், இன்னும் நாணத்தால் அழகு பெற்றுச் சிவக்க, தலையைக் குனிந்துகொண்டு தன் புன்னகையை விசாலி அடக்க முயற்சிப்பதை சந்துரு பார்த்தான்.
விசாலி சந்தோஷமாய் இருக்கிறாள்… அதுதானே முக்கியம்!
ஞானம் சொன்னாளே… ‘ஒரு பொண்ணுக்கு அவ மனசப் புரிஞ்சுண்டு அன்பா இருக்கற ஆம்படையான் கிடைச்சுட்டா, வேற ஒண்ணுமே வாண்டாம்!’ என்று.
விசாலிக்கு அவள் மனம்போல மாங்கல்யமா! இந்தக் கல்யாணத்தில் விசாலிக்குப் பரிபூரண திருப்தி இருந்தால், அமெரிக்கா என்ன, லண்டன் என்ன!
தலையை நிமிர்த்தி மணமேடையிலிருந்தே அண்ணாவைப் பார்த்து விசாலி புன்னகைக்கவும், சந்துருவும் பதிலுக்குத் தன் சந்தோஷத்தைக் காட்டிச் சிரித்தான்.

மேலும் படிக்க