1
1907-1931
பட்டம்மா எழுந்து உட்கார்ந்தாள். இரண்டு கைகளையும் தேய்த்து முகத்துக்கு நேராய்ப் பிடித்து, மெல்ல கண்களைத் திறந்தாள். அரைகுறை வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்த கைரேகைகளை உற்றுப் பார்த்தவள், புடவைத் தலைப்புக்குள் கிடந்த மாங்கல்யத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு, ”என்னப்பனே… முருகா…” என்று முணுமுணுத்தாள்.
பிரிபிரியாய் தொங்கின முடியை ஒரு தட்டுத் தட்டி, கோடாலிமுடிச்சாய் முடிந்துகொண்டாள்.
எழுந்து நின்றாள்.
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவிழ்ந்திருந்த மடிசாரைச் சரியாகச் செருகி, புடவையைச் சீர்செய்தாள்.
புழக்கடையிலிருந்து ம்ம்…ஆ…ஆ… என்று மாடு குரல்கொடுக்க, எங்கோ யார்வீட்டுச் சேவலோ கூவியதும் சன்னமாய் கேட்டது.
உறங்கிக்கொண்டிருந்த எவரையும் மிதித்துவிடாமல் கவனத்துடன் காலை வைத்து, கொல்லைக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள்.
சாம்பல்நிற வானத்தில், இங்குமங்குமாய் நட்சத்திரங்கள் கண்ணைக் காட்டின.
முழுசாய் மலராத நந்தியாவட்டைப் பூக்கள், வேலியோரத்துச் செடிகளில் வெள்ளையாய் தெரிந்தன.
சாயங்காலம் பறித்ததுபோக கொடியிலேயே தங்கிவிட்ட முல்லையும் நித்தியமல்லிகையும், லேசான மணத்தைக் காற்றில் கலந்தன.
தாழ்வாரத்தில் கவிழ்த்திருந்த சொம்பு குடத்தை எடுத்து, கிணற்றடியில் கொண்டுவைத்தாள்.
கிழக்கு மூலையில் குமித்துவைத்திருக்கும் உரிமட்டைகளில் ஒன்றை எடுத்து நன்றாகப் பிரித்து நாராக்கி, வைக்கப்போருக்குப் பக்கத்தில் கொட்டிக் கிடக்கும் சாம்பலில் பிடி அள்ளிக்கொண்டு, மீண்டும் கிணற்றடிக்கு வந்தாள்.
தோண்டியைக் கிணற்றுள் இறக்கி தண்ணீர் சேந்தினவள், அங்கேயே குத்துக்காலிட்டு உட்கார்ந்து, உரிமட்டையை சாம்பலில் தோய்த்து குடத்தையும் சொம்பையும் அழுந்தத் தேய்த்து, அலம்பி ஒருபக்கமாய் கவிழ்த்தாள்.
தாழ்வாரத்துப் பிறையில், ஒரு சட்டியில் உமிக்கருக்கு வைத்திருப்பதில் கொஞ்சம் எடுத்துவந்து பற்களில் தேய்த்து, வாயைக் கொப்புளித்தாள். முகத்திலும் இரண்டு கை ஜலம் விட்டுக்கொண்டவள், புடவைத் தலைப்பால் முகத்தையும் கைகளையும் துடைத்தபடி வீட்டுக்குள் வந்தாள்.
ஸ்வாமி அறைக்குள் சென்று குங்குமத்தை இட்டுக்கொண்டு, குத்துவிளக்கில் எண்ணெய் விட்டு திரியைத் தூண்டி ஏற்றி, ”இன்னியப் பொழுதை நல்லபடி வெடீம்மா, தாயே…” என்று முனகி, விழுந்து நமஸ்கரித்தாள்.
மீண்டும் கொல்லைப்புறத்துக்குச் சென்று, ஒரு கை சாணியைக் கொஞ்சம் ஜலம் விட்டுக் கரைத்து எடுத்துக்கொண்டு, வாசலுக்கு வந்தாள்.
வெளிக்கதவைத் திறந்து, வாசலில் காத்து நிற்கிற ஸ்ரீதேவியை ‘வா’ என்று அழைக்கும் பாவனையில் ஒரு கை நீரைத் தெளித்துவிட்டு, உடனே கொல்லைக் கதவிடம் சென்று, மூதேவியை அனுப்பும் உத்தேசத்துடன் அங்கேயும் ஒரு கை தெளித்து, திரும்ப வாசலுக்கு வந்து நன்றாக சாணிஜலம் தெளித்துப் பெருக்கி, உடன் எடுத்துப்போயிருந்த அரிசிமாவினால் லட்சணமாய் கோணல்மாணல் இல்லாமல் கோலம் போட்டாள்.
வழக்கமாய் பெரிசாய்ப் போடுவதுபோல அன்று போட நேரமில்லை… மணியாகிவிட்டது.
மாமனார் எழுந்துவிடுவார்.
ஓர்ப்படிகள் இருவரும் கூடமாட ஒத்தாசை செய்ய இருந்தால், கவலையில்லை… ஒருத்தி கொல்லைக்கட்டு வேலையைக் கவனித்தால், இன்னொருத்தி அடுப்புக் காரியத்தைப் பார்ப்பாள்.
இன்றைக்கு அப்படியில்லை.
பட்டம்மாவுக்கு அடுத்த நாட்டுப்பெண் சாரதா, வீட்டில் இல்லை… தூரம். நாளன்றைக்குத்தான் குளிக்கிறாள். குட்டி ஓர்ப்படி கோமு, தலைச்சன் பிரசவத்துக்காக, முதல்நாள் பிறந்தகத்துக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள்.
அப்புறம்?
முழுசாய் மூன்று நாள்களை ஒண்டியாய் சமாளிப்பதற்குள், விழிபிதுங்கித் தான் போகப்போகிறது.
சமையல்கட்டில் நுழைந்த பட்டம்மா, நாழியாகிவிட்ட உணர்வுடன் அடுப்புச் சாம்பலை முறத்தில் அள்ளி, வைக்கப்போருக்கு அருகில் கொண்டு கொட்டிவிட்டு வந்தாள். அடுப்பை மெழுகி, சாணியைத் தடவி, அரிசிமாவினால் இரண்டு இழை போட்டுவிட்டு, அதன் பக்கத்திலேயே முதல்நாள் மெழுகித் தயாராய் வைத்திருந்த அடுப்பில் அடிமட்டை, உரிமட்டை, துளி வறட்டி வைத்து, தீக்குச்சியைக் கிழித்துப் பற்றவைத்தாள்.
காய்ந்திருந்த மட்டையை தீ ஸ்பர்சித்ததும், நொடியில் ஜுவாலை பரவியது.
ஒற்றைத் தீக்குச்சிக்கு மேல் அடுப்புப் பற்ற உபயோகித்தால், பட்டம்மாளின் மாமியார் மீனாம்பாவுக்குப் பிடிக்காது.
”பொம்மனாட்டிக் கழுதைக்கு இந்த விதரணைகூட இல்லாட்டா எப்படி! ஆம்படையான் வெய்யில்லயும் மழைலயும் நின்னு சம்பாதிக்கறதை, இவ தீப்பெட்டி வாங்கியே தாம்தூம்னு செலவழிச்சா ஆச்சா?” என்பாள்.
”நாங்கள்லாம் இந்த ஒத்தைக் குச்சியைக்கூடக் கிழிக்க மாட்டோம். விடிவிளக்குல விளக்குமாத்துக் குச்சியப் பத்தவெச்சு, அடுப்பை மூட்டிடுவோம்… தணல் பிடிச்சிண்டதும், ஒரு முட்டானை எடுத்துச் சொருகி வெச்சுட்டா, அது நாள் பூரா கனிஞ்சுண்டிருக்கும்! இன்னொரு தரம் அடுப்பை மூட்டணும்னா, இந்த முட்டானை எடுத்து ஊதிட்டு உரிமட்டைல காண்பிச்சா, திகுதிகுன்னு பிடிச்சுண்டுடும்! பொம்மனாட்டிக் காரியம்னா அப்படின்னா இருக்கணும்!” என்பாள்.
வாயும் கையுமாய் இருந்த மீனாம்பா, இரண்டு நாள் காய்ச்சலில் பிராணனை விட்டு, இப்போது வருஷம் நாலாகிறது.
அவள் போனதிலிருந்து பட்டம்மாதான் எல்லாம்.
வாணாயில் ஜலம் விட்டு அடுப்பில் வைத்து, தளதளவென்று கொதித்ததும், இரண்டு கை காபித்தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு, வெந்நீரை ஊற்றி, அரை நிமிஷம் தாமதித்து, காபி வடிகட்டவென தனியாய் வைத்திருக்கும் மெல்லிய துணியினால் வடிகட்டினாள்.
காபிப்பொடி தீர்ந்துவிட்டது… நாளைக்குத்தான் காணும். மாமனார் தஞ்சாவூரிலிருந்து இரண்டு வீசை கொட்டை வாங்கிவந்து வைத்திருக்கிறார். கொஞ்சமாக மத்தியானத்துக்கு மேல் வறுத்து இடித்து வைத்துவிட்டால், சாரதா குளித்துவிட்டு வந்த பின் அரைவீசையை வழக்கம்போல இடித்துக்கொள்ளலாம்.
கோனார் கறந்துவைத்திருந்த பாலை உருளியில் ஊற்றி அடுப்பில் வைத்த பட்டம்மா, கூடத்துக்குச் சென்று அங்கு கால்மாடு தலைமாடு புரியாமல் படுத்துக் கிடந்த மூத்த பெண்ணை உலுக்கி எழுப்பினாள்.
”டீ… சிவகாமு, எழுந்திருடீ… விடிஞ்சு அரைஜாமம் ஆச்சு, இன்னும் என்னடீ தூக்கம்? பொம்பளைக் குட்டி இத்தனை நாழி தூங்கினா நன்னா இருக்குமாடீ?”
சிவகாமு கொட்டாவி விட்டபடி எழுந்து உட்கார்ந்தாள்.
”என்னம்மா நீ… தினம்தினம் விடியறதுக்கு முன்னால எழுப்பிடறே! தூக்கம் வர்றதும்மா…”
”வரும், வரும்… ஏந்திருடீன்னா…”
”கோண்டு மட்டும் தூங்கறானே?”
”அவன் புருஷப் பிள்ளைடீ! பதிலுக்குப் பதில் வாயக் காட்டாம, ஏந்திரு… சாரதா சித்தி ஆத்துல இல்ல… நீ போய் பல்லத் தேய்ச்சுட்டு, மாட்டுக் கொட்டகையப் பெருக்கி அலம்பிவிடு… நாழியாச்சு… தாத்தா எழுந்துண்டுடுவார்…”
சிவகாமு பாயைச் சுருட்டி வைத்துவிட்டு, கொல்லைப்பக்கம் போனாள்.
பல் தேய்த்து, கைகால் அலம்பி, லக்ஷ்மியை அவிழ்த்து தென்னைமரத்தில் கட்டி, கொட்டகையில் கிடந்த கூளம் சாணத்தை வாரி, இரண்டு தோண்டி ஜலம் விட்டு அலம்பி, அம்மா சொன்ன வேலைகளை முடித்துவிட்டு உள்ளே வருவதற்குள், பொழுது பலபலவென்று விடிந்துவிட்டது.
தாத்தா காளாஸ்தி எழுந்து வாய்க்காலுக்குப் போய்வந்து, காபி சாப்பிட்டு விட்டு வாசத் திண்ணைக்குப் போய்விட்டார்.
அப்பா கணபதியும் சித்தப்பாக்களும், கிணற்றடிக்குப் பல் தேய்க்க வந்து விட்டார்கள்.
சமையல்கட்டில் எட்டிப்பார்த்தவளை, நிற்க விடாமல் பட்டம்மா விரட்டினாள்.
”என்னத்துக்கு அசமஞ்சமா நிக்கறே? புருஷாள்லாம் எழுந்தாச்சுன்னா, பசங்களைக் கிளப்பிவிட்டுட்டு, எடத்தைப் பெருக்கி மெழுகு… தூங்கியெழுந்த எடம், பிரேதம் கிடந்த எடத்துக்குச் சமம்னு பெரியவா சொல்லுவா! தெவசம் இட்ட வீடு மாதிரி ஒத்தை மெழுகு மெழுகாதே… குடும்பத்துக்கு ஆகாது! குனிஞ்சு பவ்யமா ரெண்டு தரம் மெழுகு! ஆச்சுன்னு சுருணையத் தூக்கிண்டு ஓடிவந்துடாதே… கையோட ஒரு தரம் பெருக்கிடு! கொழந்தையக் கையில வெச்சுண்டு பாத்துண்டிருக்கற பூமாதேவி, மெழுகின தரையப் பெருக்கினாத்தான், கொழந்தைய எறக்கிவிடுவாளாம்! என்ன, காதுல வாங்கிண்டியா? மசமசன்னு ஏன் நிக்கறே?”
சிவகாமு கூடத்தைப் பார்க்க நகர்ந்தாள்.
சித்தப்பா பிள்ளைகள் கோண்டு, நாணாவையும், தங்கைகள் பார்வதி, லஷ்மியையும் எழுப்பினாள்.
கூடத்தை இரண்டு தரம் மெழுகிப் பெருக்கிய நிமிஷத்தில், பட்டம்மாவின் குரல் அருகாமையில் சிடுசிடுத்தது.
”விளக்குமாறைக் கையில வெச்சுண்டு சதிரா ஆடறே? குனிஞ்சு வணங்கி பெருக்குடீ! துள்ற மாடு பொதி சுமக்காது… இந்த ஆட்டம் ஆடினேன்னா, நாளைக்கு இவளைப் பெத்த வயத்துல பெரண்டைய வெச்சுக் கட்டிக்கோடீன்னு எல்லாரும் என்னத்தான் ஏசுவா…”
”விளக்குமாறு தோதா இல்லம்மா… தேஞ்சுபோச்சு.”
”அதுசரி… ஆடத்தெரியாத தேவடியா, முத்தம் கோணல்னு சொன்னாளாம்! பதில் பேசிண்டு நிக்காதே… வேலையக் கவனி! மத்த பசங்க எங்க? எல்லாத்தையும் இழுத்துண்டு வா… உங்களுக்குப் பழையது போட்டு தலைவாரிப் பின்னிட்டு, நா காவேரிக்குப் போகணும்…”
ஐந்து நிமிஷத்தில் எல்லாக் குழந்தைகளும் நடையில் வரிசையாய் உட்கார, கற்சட்டியில் தண்ணீர் கொட்டி ஒருபக்கமாய் வைத்திருக்கும் சாதத்தில் கட்டித் தயிரை ஊற்றி, கொஞ்சம் உப்பைப் போட்டுப் பிசைந்து, முதல்நாளே கொதிக்க வைத்திருந்த எரித்த குழம்புடன், புரச இலையைக் கையில் பிடித்துக்கொள்ளச் சொல்லி பட்டம்மா உருட்டிப் போட்டாள்.
சாப்பாட்டுக்கடை ஆனதும், ஒவ்வொரு பெண் தலையிலும் நல்லெண்ணெய் தடவி வழவழவென்று வாரி, சட்டமாகப் பின்னிவிட, மீதமிருந்த பழையதில் ஒரு சுருளை நார்த்தங்காயைக் கிள்ளிப்போட்டு, சிவகாமி புழக்கடைக்குத் தூக்கிச் சென்றாள்.
மாட்டுத்தொழுவத்துக்குப் பக்கத்தில் நின்று, ”சித்தி…” என்று குரல்கொடுக்க, யார் கண்ணிலும் படாமல் அமர்ந்திருந்த சாரதா, ”என்னடீ?” என்றாள்.
”பழையது வெச்சிருக்கேன்… நார்த்தங்கா போறாதுன்னா, மாங்கா பறிச்சுத் தரட்டுமா?”
”வாண்டாம்… கொல்லையப் பெருக்கறப்ப உதுந்து கெடக்கறதை நானே எடுத்துக்கறேன். நீ போ… தாத்தா பாத்தா கோவிச்சுக்கப்போறார்…”
சிவகாமு மாட்டுக்கு ஒரு கை வைக்கோலை உதறிப் போட்டுவிட்டு உள்ளே வந்து, காவேரிக்குப் புறப்படத் தயாராக இருந்த அம்மாவுடன் தானும் ஒரு குடத்தைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.
தெருவைத் தாண்டி, ஐயனார் கோவிலைக் கடந்து மூங்கில் தோப்பில் நடந்தால், ஜலஜலவென்று சிருங்காரமாய் ஓடும் காவேரி.
பாவாடையை மார்புவரை ஏற்றிக் கட்டி, முங்கி, பத்தடி நீந்திவிட்டு அம்மாவிடம் வந்து உட்கார்ந்து, ஜில்லிப்பு தாளாமல் சிரித்தாள்.
”வண்டல் மண்ணை மஞ்சளோட கலந்து, கை கால்ல அழுத்தித் தேய்டீ… மயிரு மட்டைனு அசிங்கமா ஆம்பளையாட்டம் இல்லாம, உடம்பு பளபளன்னு இருக்கும்.”
தேய்த்தாள்.
”கங்கா ஸ்நானம், காவேரி ஸ்நானம், ஹரி, ஹரி…” என்று சொல்லி முழுக்குப் போட்டுவிட்டு அம்மா பின்னோடு கரையேறி, குடத்தில் தண்ணீரோடு நடந்தாள்.
அம்மா சமையல் செய்ய, இவள் தாத்தாவின் பூஜைக்கு பூப்பறித்து வந்தாள். சந்தனம் அரைத்து வைத்தாள்.
வாசத் திண்ணையில், கோண்டு, நாணாவுக்குத் தாத்தா பாடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, தானும் கூட உட்கார்ந்து, பரப்பியிருந்த மணலில் அ… ஆ… ஹரி ஓம் என்று ஆள்காட்டி விரலால் எழுதிப்பார்த்தாள்.
சமையல், சாப்பாடு ஆகி, உள்ளை ஒழித்துப் போட்ட பின், காபிக்கொட்டை வறுக்க உட்கார்ந்த பட்டம்மா, ”சிவகாமு…” என்று உரக்க அழைக்க, தங்கைகளுடன் பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்தவள், ”என்னம்மா?” என்றாள், இருந்த இடத்திலிருந்தே.
”முட்டான் கொஞ்சந்தான் இருக்கு… சித்திய ஒரு கூடை உருட்டிப்போடச் சொல்லுடீ…”
பாதி ஆட்டத்தில் அம்மா கூப்பிடுவது சின்னதாக எரிச்சலைத் தர, சிவகாமு எழுந்து கொல்லைப் பக்கம் போனாள்.
அள்ளிக் கொட்டியிருந்த சாணியோடு, கூளத்தைக் கலந்து வேலியோரமாய் அமர்ந்து வறட்டித் தட்டிக்கொண்டிருந்த சித்தியை நெருங்காமல், தள்ளி நின்று கத்தினாள், ”அடுப்புல சொருக முட்டான் இல்லியாம்… வறட்டி தட்டற கையோட, ஒரு கூடை முட்டானையும் உருட்டிப்போட்டுடச் சொன்னா அம்மா.”
”நானே உருட்டிவெச்சுட்டேன்னு சொல்லு.”
உள்ளே வந்து அம்மாவிடம் சித்தி கூறியதைச் சொல்லிக்கொண்டிருந்த நிமிஷத்தில், வாசலில் குடியானவன் வந்து நின்று, ”ம்மா…” என்று குரல் கொடுத்தான்.
”முனியன் மாதிரியிருக்கே… என்னன்னு கேளு.”
போய்த் திரும்பி வந்தவள் கையில், கூம்புகூம்பாய் இரண்டு தாழம்பூக்கள்.
”இப்ப ஏதுடீ தாழம்பூ?”
”தில்லைஸ்தானத்துக்குப் போயிட்டுவர்ற ஜோலி இருந்துதாம்… அங்க கண்ணுல பட்டுதாம்… ரெண்டு பூ ஒடிச்சுண்டு வந்திருக்கானாம்…”
”இருக்கற வேலை போறாதுன்னு இது வேறயா! சரி… மடலப் பிரிச்சு சுத்தம் பண்ணி வை… நா வந்து தெக்கறேன்.”
அன்றைக்கு மூன்று பெண்களுக்கும் வங்கிப் பின்னல் பின்னி, தாழம்பூவைத் தைத்து, உச்சந்தலைக்கு தோட்டத்துக் கனகாம்பரத்தைப் பறித்துக் கட்டிவைத்து விட்டு பட்டம்மா எழுந்திருக்கும்போது, மணி இரண்டரை என்றது.
அடுப்பை மூட்டி, காபி கலந்து புருஷர்களுக்குக் கொடுத்து, தானும் ஒரு வாய் குடித்தவள், கல்லைப் போட்டு தோசை வார்க்க முற்பட்டாள்.
பெரியவர்கள் சாப்பிட்டு எழுந்துபோனதும், பாக்கியிருந்த தோசைகளைப் பாதிப் பாதியாக விண்டு, தயிர்சாதம் சாப்பிட்ட குழந்தைகளுக்குத் தொட்டுக் கொள்ளப் போட்டாள்.
இரவுச் சமையல் வேலை ஆன பிறகு, நாலுமணிக்கெல்லாம் முகம் அலம்பி, தலை வாரி, பொட்டு இட்டுக்கொண்டாள்.
லேசாக இருட்டிக்கொண்டு வருகையில், ஸ்வாமி விளக்கை ஏற்றி, ஸ்லோகம் சொல்லி நமஸ்கரித்தாள்.
நாலு நிலவிளக்குகளிலும் குத்துவிளக்குகளிலும் விளக்கெண்ணெய் ஊற்றி, தோட்டத்துப் பஞ்சை தடிமனாய் திரித்துப்போட்டு ஏற்றினாள்.
வாசப்பிறைகளில் நிலவிளக்குகளையும், நடுக்கூடத்தில் குத்துவிளக்கையும் வைத்தாள்.
ஏழு மணி சுமாருக்கு, சொட்டுப் பால் எடுத்துப்போய் நிலவிளக்குகளில் இட்டு அணைத்து, உள்ளே கொண்டுவைத்துவிட்டு, வாசநடையில் மறைவாய் நின்று, திண்ணையில் உட்கார்ந்திருந்த புருஷர்களிடம், ”சாப்பிட வரேளா? எலை போடட்டுமா?” என்று கேட்டாள்.
பெரியவர் ‘ம்’ என்று கூற, வாழைச் சருகைப் போட்டு தண்ணீர் தெளித்துச் சுத்தம் பண்ணி, சுட்ட அப்பளத்தை வைத்து சாதத்தைப் பரிமாறினாள்.
பரிசேஷணம் செய்து சாப்பிடத் துவங்கிய காளாஸ்தி, ”நீ வயலுக்குப் போயிருந்தப்போ, ராமு அத்தான் வந்திருந்தான்… அவன் வந்துபோன சமாச்சாரத்தை உன்னண்ட சொல்லலாம்னு பாத்தா, உன்னைக் கண்ணுலயே காணுமே!” என, ”திருவையாறு வரைக்கும் ஒரு நடை போயிட்டுவந்தேன்… சீமாச்சு நல்ல சம்பா விதைநெல் இருக்குன்னு சொன்னான்… பாத்துட்டு வந்துடலாமேன்னு போனேன். நாழியாயிடுத்து…” என்று கணபதி தயக்கத்துடன் பதில் சொன்னார்.
”சுப்புணிக்கு நாலு எடத்துலேந்தும் சம்பந்தம் பேச வராளாம்… உங்க சிவகாமு சேதி என்ன, தெரிஞ்சுண்டு மத்தவாகிட்ட குடுக்கலாம்னு இருக்கேன்னு சொன்னான்.”
கதவுக்குப் பின்னால் நின்றிருந்த பட்டம்மாவுக்குள், குபுக்கென்று சந்தோஷம் துள்ளியது.
சுப்புணி…
மூக்கும் முழியுமாய், கட்டுக்குடுமி, சிவப்புக்கல் கடுக்கனுடன், டாண்டாண் என்று ஸ்லோகம் சொல்லி, கண்ணுக்கு லட்சணமாய் வளையவரும் சுப்புணி.
”நம்மாத்துக் கொழந்தைக்கும் இந்தத் தைக்கு ஏழு ரொம்பிடுத்து… சுப்புணிக்குப் பதினொண்ணாறது. வயசு திட்டமாயிருக்கும். மகம் நட்சத்திரம் ஜகத்துல கிடைக்காது! ராமு அத்தான் இப்படின்னு சொன்னதுமே, ஜாதகங்களைப் பாத்தேன்… நன்னா பொருந்தியிருக்கு! நீயும் உங்காத்துக்காரியும் சரின்னு சொல்லிட்டா, வர்ற வெள்ளிக்கிழமை பாக்கியப் பேசி, தீர்மானம் பண்ணிடலாம். என்ன சொல்றே?”
காளாஸ்தி பேசி நிறுத்த, கணபதி, மனைவி பக்கம் பார்வையை வீசினார்.
முப்பது வயசு, நாற்பது வயசு ஆண்களுக்கு இரண்டாம், மூன்றாம் தாரமாக சின்னப் பெண்களைக் கொடுப்பது சகஜமாக இருக்கும் அந்த நாளில், ராஜா மாதிரி சுப்புணியை மணக்க சிவகாமு கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்ற பெருமிதம் மனசில் ததும்ப, ”பெரியவரா அப்பா சொல்லிட்டப்பறம், நாம சொல்றதுக்கு என்ன இருக்கு? அவர் பாத்து எது சேஞ்சாலும், அது சரியாத்தான் இருக்கும்…” என்றாள் பட்டம்மா சின்னக் குரலில்.
(தொடரும்)
• • • • •


