சிவசங்கரியின் 60 சிறுகதைகள் – இரண்டாம் தொகுப்பிலிருந்து…
செப்டிக்
அய்யர் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, கண்முன் பரத்தியிருந்த நிலக்கடலை களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ‘நச், நச்’சென்று தரையில் உடைத்து, பருப்புகளை முறத்தில் போட்டாள் தனபாக்கியம்.
மரகதபுரத்து அக்ரஹாரத்திலிருந்த எல்லா வீடுகளுமே, அவளுக்கும் அந்தக் குடிசைப்பகுதி மக்களுக்கும் ‘அய்யர் வூடு’கள்தாம். பெரிய அய்யரு, சின்ன அய்யரு, மாடி வூட்டு அய்யரு, கோவில் பூசாரி அய்யரு, கோடிவூட்டு அய்யரு – என்று அக்ரஹாரத்தில் பத்து வீடுகளுக்கும் அவர்கள் பெயர் வைத்திருந்தார்கள். ஐய்யங்கார் ராமச்சந்திரன்கூட – நாமம்போட்ட, ‘செவத்த அய்யரு’தான். மரகதபுரத்தில் எண்ணி இரண்டே தெருக்கள்… ஒன்று – அக்ரஹாரம், மற்றது – ரெட்டியார் தெரு. சிவன் கோவில், ஊருக்குப் பொது. ஊருக்குத் தள்ளி ஓடிய பெண்ணாற்றுக்குக் கிழக்குப் பக்கம், குடிசைப்பகுதி… அதனருகில் வெட்ட வெளியில், மதுரை வீரன் கோவில்.
குந்தி உட்கார்ந்து மளமளவென்று நிலக்கடலைப் பயிர்களைச் சேகரித்துக் கொண்டிருந்த தனபாக்கியம், பக்கத்தில் நிழலாடியதால் தலைநிமிர்ந்தாள்.
அவள் மகள் மல்லிகா.
“இன்னாடி… ஒடம்பு தேவலையா? சுடுதண்ணி வெச்சிருந்தேனே… மேலுக்கு ஊத்திக்கினியா?”
“ம்…”
மல்லிகா முக்கிமுனகிக்கொண்டு தாயின் அருகில் உட்கார்ந்தாள். நிரம்பி வழிந்த கர்ப்பத்தின் காரணமாய், குந்தி உட்காராமல் சப்பணமிட்டுச் சுவரில் சாய்ந்துகொண்டாள்.
வயிற்றுக்குள் ஏதோ வேதனை இருப்பதை, சோர்ந்திருந்த முகம் காட்டியது.
“இன்னாத்துக்கு இப்படி வெயில் நேரத்துல இங்க வந்தே? வூட்டுல படுத்துக் கெடக்கறதுதானே? கேப்பங்கஞ்சி வச்சிருந்தேனே, குடிச்சியா?”
தனபாக்கியத்தின் மூத்த மகள், மல்லிகா. அடுத்த கிராமமான சாலமேட்டில் பயிர்த் தொழில் செய்யும் தம்பிக்கே மகளைக் கொடுத்து, நாலில் இரண்டில் பார்த்துக்கொள்பவள். தலைச்சன் பிரசவம் என்பதால், இங்கு மரகதபுரத்துக்கு மகளைக் கூட்டிவந்து பத்து நாட்களாகின்றன. மல்லிகாவின் கணக்குப்படி பார்த்தால், இன்னும் ஒரு வாரத்தில் பிரசவமாகவேண்டும். என்றாலும், முதல் நாள் இரவிலிருந்து ‘இடுப்பைக் கடுக்கிறது’ என்று மகள் சொன்னதால், பிரசவம் சுருக்க ஆகிவிடலாம் என்றே தனபாக்கியம் நம்பினாள்.
தாய் உடைத்துப்போட்டிருந்த பயிறில் நான்கை எடுத்து வாயில் போட்டு மென்றாள் மல்லிகா.
“சும்மா எத்தினி நாழி படுத்துக் கெடக்கறது? ‘ஒடம்பு திமிரெடுத்துப்போவும், கொஞ்சம் இப்படியப்படி போயிட்டு வா’ன்னு சாரம்மா சொல்லிச்சு… வந்தேன். ஆமா, இன்னாத்துக்கு மல்லாட்ட உரிக்கறே?”
“அம்மாளோட தங்காச்சி பட்டணத்துக்குப் ப்ரஸவத்துக்கு வந்திருக்கில்ல… அதுக்கு மல்லாட்டப்பயிறு உருண்டையின்னா புடிக்குமாங்காட்டியும்… இன்னிக்கு அய்யரு பட்டணம் போறாரில்லே? அம்மா குடுத்தனுப்பப்போறாங்க… அதான் உரிக்கறேன்…”
யாருடன் தனபாக்கியம் பேசுகிறாள் என்பதுபோல சமையல்கட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள் பங்கஜம் – அந்த வீட்டு எஜமானி.
“ஆருடி அங்கே, தனபாக்கியம்?”
“எம் மவதாம்மா…”
பாட்டிலில் மோரை விட்டுக் குலுக்கி வெண்ணெய் எடுத்தவண்ணம், பங்கஜம் வெளித் தாழ்வாரத்துக்கு வந்தாள்.
“ஆரு? மல்லிகாவா? என்னடி, நேத்து ராத்திரி இடுப்பு வலிக்கறதுன்னு சொன்னியாமே? பேசாம படுத்துண்டிருக்காம ஏண்டி அல்லாடறே?”
“இன்னாவோ தெரியலம்மா… மொணமொணனு வலிக்குது! ஒக்கார முடியல, படுக்க முடியல… ரோதனைங்க…”
“அப்படித்தாண்டி இருக்கும்… உசிரன்னா சொமக்கறே! வயிறு கூட்டிக் குமிஞ்சுண்டு எறங்கிடுத்து… சுருக்க ஆயிடும், கவலைப்படாதே…”
உள்ளே போன ஐந்து நிமிடத்துக்கெல்லாம் ஒரு அலுமினிய டம்ளருடன் வந்தாள் பங்கஜம்.
“சூடா காபி கலந்திருக்கேன்… செத்த தெம்பா இருக்கும்…” என்று சொல்லி டம்ளரை மல்லிகாவிடம் வைத்துவிட்டு, “ஆச்சாடி, தனம்? நாழியாறது… அடுப்ப மூட்டி சட்டில மணலைப் போடு… ஐயா இதோ கிளம்பிடுவார்…” என்று தனத்திடம் சொன்னாள்.
தனபாக்கியம் எழுந்தாள். இன்னொரு பக்கமாகக் கிடந்த இரும்பு அடுப்பில் விறகை நுழைத்து, தீ மூட்டி, வாணலியில் நைஸ் மணலை இட்டு அடுப்பில் ஏற்றினாள். சூடு வந்ததும் பயறுகளை மணலில் கலந்து வறுக்கத் தொடங்கினாள்.
தனபாக்கியம், வறுத்துக் கொட்டிய மணலைச் சலித்து கடலைகளை எடுக்க, பங்கஜம், சல்லடையும் கையுமாய் அருகில் உட்கார்ந்தாள்.
“சீதாவுக்குக் கடலை உருண்டைன்னா உசிரு! ஒண்ணா எடுத்துத் தின்னு நா பார்த்ததில்லே… நவ்வாலா எடுத்து வெச்சிண்டு, புஸ்தகம் படிச்சுண்டே திம்பா! பிள்ளையாண்டிருக்கற பொண்ணுக்கு தினுசுதினுசா பண்ணிக் குடுப்பம்னா, எங்க முடிஞ்சுது? வடக்க கண்காணாத தேசத்துல இருந்தவ, பட்டணத்துக்கு வந்து ரெண்டு நாள்தானே ஆறது? உபரிப் பால் வாங்கிக் கொஞ்சம் திரட்டுப்பால் காய்ச்சினேன்… பத்து மனோப்பூ பிழிஞ்சேன்… கடலை உருண்டை பிடிக்கத்தான் நேரமிருக்கும்… வேற என்னத்தைக் குடுத்தனுப்பறது? வயக்காட்லேருந்து இவர் திரும்பி வந்து சாப்டுட்டு பொறப்படறதுக்குள்ள, எல்லாம் தயாராயிடணும்… இல்லேன்னா கால்ல வெந்நீரைக் கொட்டிண்ட மாதிரி குதிப்பார்!”
அருமைத் தங்கைக்கு வகையாய் மசக்கை பட்சணம் அனுப்பத் திட்டமிட்ட பங்கஜம், ஏதோ நினைத்துக்கொண்டவளாய் தனபாக்கியத்திடம், “ஏண்டி, தனம்… நேத்திலேந்து இவளுக்கு வலிக்கறதுங்கறயே… டவுனுக்கு வேணா கூட்டிண்டு போய், எல்லாம் சரியா இருக்கான்னு லேடி டாக்டர்கிட்டே கேட்டுண்டு வாயேண்டி…” என்றாள்.
“ஆங்… இன்னாத்துக்கு லேடி டாக்குட்டரு! நா ஆறு பெறலியா? இன்னா பெரிய ப்ரஸவம்? வயக்காட்டுல வேலை பண்ணிக்கிட்டே இருப்பேன்… இடுப்பு வலிக்கும்… செத்த உக்காருவேன்… புள்ளை பொறந்துடும்! இதுக்கு என்னாத்துக்கு டாக்குட்டரு? அப்டி வோணும்னா எங்க மருத்துவச்சி இருக்காள்ல, அவ பார்த்துப்பா…”
“இப்போ காலம் மாறிண்டு வரதுடி, தனம்… நீயும் நானும் புள்ளை பெத்த மாதிரியில்லே இப்போ… பெரிய படிப்புப் படிச்ச டாக்டர், அவஸ்தைப்படாத பிரசவம் – எல்லாம் வந்துடுத்து! என்னவோ நா சொல்றதைச் சொன்னேன், அப்பறம் உன் இஷ்டம்…”
இவளோடு பேசிப் புண்ணியமில்லை என்பதை உணர்ந்த பங்கஜம், சலித்த கடலைகளை அமுக்கித் தேய்த்து தோலை எடுத்தபின், “மளமளன்னு பொடைச்சு உள்ள கொண்டு வா… நா போய் பாகு வெக்கறேன்…” என்று சொல்லி உள்ளே போனாள்.
அன்று மாலை ஆறரை மணி இருக்கும்… மல்லிகாவுக்கு வலியெடுக்கத் தொடங்கியது.
நச்சுவலி பெரிய வலியானதும், அண்டாவில் வெந்நீரைப் போட்டு, பழந்துணி கொஞ்சம் வைத்து, மதுரை வீரனைப் பிரார்த்தித்து, மகளின் நெற்றியில் விபூதியை இட்டாள் தனபாக்கியம்.
வலி கண்டு நன்றாய் ஒரு முக்கு முக்கினால் பிள்ளை பிறந்துவிடும் அனுபவத்தைப் பெற்றிருந்த அவள், மணி ஒன்பதை நெருங்கியும் மகளுக்கு முக்குவலி எடுக்காமல் போகவே, தம்பியை அனுப்பி உள்ளூர் மருத்துவச்சியை அழைத்துவரச் செய்தாள்.
“இன்னாடி மவளே, ராயஸமாடறே?” என்று ஆம்பிளைக் குரலில் கேட்ட வண்ணம், கால்மணி நேரத்தில் மருத்துவச்சி உள்ளே நுழைந்தாள்.
பெயர்தான் மருத்துவச்சியே தவிரவும், முறையாக ஏதொரு பயிற்சியோ, இல்லை விஷயஞானமோ அந்தப் பெண்மணிக்குக் கிடையாது. என்றாலும், ஊருக்கெல்லாம் அவள்தான் மருத்துவச்சி. சுலபமாய் ஆகாத பிரசவங்களுக்கு அவள்தான் உதவ அழைக்கப்படுவாள்.
வந்தவள், மல்லிகாவின் வயிற்றை இரண்டு கைகளாலும் கீழ்நோக்கி அமுக்கிப் பார்த்தாள்.
“ஆவுற நேரந்தான்… சுடுதண்ணி போட்டுட்டியா? துணிங்க எங்க? சரி, சரி… வூட்டுப் பசங்களையும் ஆம்பளைங்களையும் வெளிய அனுப்பிச்சிட்டியா? அடுத்த வூட்டு ராசம்மா, சொக்கி ரெண்டு பேரையும் கூப்பிடு…”
மருத்துவச்சி உத்தரவுகள் கொடுக்கத் தொடங்கினாள்.
மல்லிகாவுக்குப் பனிக்குடம் உடைந்துபோய் அரைமணி ஆகியும் குழந்தையின் தலை வெளியில் வராமல்போகவே, மருத்துவச்சி காரியத்தில் இறங்கினாள்.
மல்லிகாவைக் குந்தி உட்காரவைத்து, எதிரில் தான் அமர்ந்துகொண்டாள். மல்லிகாவுக்குப் பின்புறமாக சொக்கியை இருக்கச் சொல்லி, இரண்டு கால்களாலும் இடுப்பில் ஓங்கிஓங்கி உதைக்கச் சொன்னாள்.
வலி தாங்காமல் மல்லிகா ‘யம்மாடி… அய்யோ’ என்று கதறும்போது, வயிற்றை மேலிருந்து கீழ்நோக்கி வேகத்துடன் அமுக்கி, பயங்கரமாய் ‘ஹோ’வென்று கத்தினாள் மருத்துவச்சி.
பயத்தில் வலியெடுத்துவிடும் என்று ஒரு நம்பிக்கை.
ம்ஹூம்… பலனில்லை.
ராசம்மாவை அருகில் அழைத்தாள் மருத்துவச்சி. மல்லிகாவின் தலைமுடியை இரண்டாகப் பிரித்து முன்பக்கம் கொணர்ந்து, பந்தாகச் சுருட்டி அவள் வாயில் அடைத்து, அதே சமயம், சொக்கியை உதைக்கச் சொல்லித் தானும் வயிற்றை அமுக்கினாள்.
மயிர் வாய்க்குள் திணிக்கப்பட்டதால், மல்லிகாவுக்குக் குமட்டலெடுத்தது.
“நல்லா கொமட்டுடி… நல்லா கொமட்டு! கொமட்டுற கொமட்டல்ல, முக்குவலி வரணும்… ஹூம்…”
வாயில் குமட்டல், இடுப்பில் உதை, வயிற்றில் நோவு… எல்லாம் ஒன்று சேர்ந்து தாங்கவொட்டாமல்போனபோது, மருத்துவச்சியும் சாமி வந்ததுபோல் ‘ஹா ஹூ’ என்று கத்தத் தொடங்கிய சில நிமிடங்களிலெல்லாம், மல்லிகாவின் பிள்ளை இவ்வுலகை எட்டிப்பார்த்துவிட்டான்.
குழந்தையை இழுத்து, தயாராக இருந்த குறுவாளால் தொப்புள்கொடியை ஓர் அங்குலம் விட்டு அறுத்து, முடி போட்டு, தலைகீழாகத் தொங்கவிட்டு, பளிச்சென்று அறைந்து, அது அழத் தொடங்கியதும், வாயில் விரலைக் கொடுத்து சுத்தம் செய்தாள் மருத்துவச்சி. வெந்நீரால் குழந்தையை அலம்பித் துணியில் கிடத்தினவள், மறுபடி மல்லிகாவிடம் வந்தாள்.
நஞ்சு விழவில்லை… மேற்கொண்டு பத்து நிமிடங்கள் போல் காத்திருந்த பிறகு, பொறுமையிழந்து, கையை உள்ளே விட்டு வயிற்றில் துழாவி நஞ்சை எடுப்பதற்குள், துடித்துப்போனாள் மல்லிகா.
“இன்னாடி இவ… இப்படி மாமாலம் பண்றா! நா பாக்காத ப்ரஸவமா? தே… சும்மாக் கெட…” என்று அதட்டல் போட்டு, தன் வேலையை முடித்தாள் மருத்துவச்சி.
இடுப்புக்குக் கீழ் மல்லிகாவை வெந்நீரில் கழுவினதும், தரையில் வைக்கோலைப் பரத்தி, அதன்மேல் பழந்துணிகளை விரித்துத் தாயையும் சேயையும் படுக்கவைக்கும்போது, மணி இரவு பதினொன்று.
மறுநாள் காலை மல்லிகாவுக்கு எழுந்து நிற்கக்கூட முடியாதபடி எரிச்சல், வலி இருந்தது.
காலை மணி ஏழுக்கு, பொடுதலைத் தழைகளை ஒரு கட்டு பறிந்துவந்து, வெந்நீரில் இட்டுக் கொதிக்கவைத்தாள் தனபாக்கியம். தண்ணீர் தளதளவென்று கொதிக்கும்போது, நல்ல செங்கல்லை ரவை ரவையாகப் பொடி செய்து வெந்நீரில் கலந்தாள். கொஞ்சம் ஆறின பிறகு மகளிடம் கொடுத்து, “இந்த வெந்நீர நெத்தம் ரெண்டு வேளை வெச்சுத் தரேன்… இடுப்புக்குக் கீழ ஊத்திக் கழுவிக்க… ரணம் ஆறிடும்…” என்றாள்.
அன்றும் மறுநாளும், மல்லிகாவுக்கு ரொட்டியும் சுடுபாலும்தான் ஆகாரம்.
மூன்றாம் நாள் காலை மல்லிகாவால் ஓரளவுக்கு எழுந்து நடமாட முடிந்தது.
பொடுதலை வெந்நீரால் உடலைக் கழுவினாள். தாய் வேலைக்குப் போகாததைப் பார்த்து, “ஏம்மா… அய்யரு வூட்டுக்குப் போகத் தாவலை?” என்று வினவினாள்.
“நேத்து ராவுக்குப் பட்டணத்துலேந்து சேதி வந்து அம்மா பொறப்பட்டுப் போயிருக்காங்களாம்… சொல்லியனுப்பிச்சா வந்தாப் போதும்னு அஞ்சலை புருஷன் செத்த மிந்தி வந்து சொல்லிட்டுப் போனான். சின்னம்மா புள்ளை பெத்துட்டாங்க போலருக்கு… அதான் அம்மா போயிருக்காங்க…”
மறுநாள் மல்லிகாவுக்குப் பத்தியம் போட்டாள் தனபாக்கியம். அன்று காலை மருத்துவச்சி வந்து குழந்தையைப் பார்த்தாள். தொப்புள்கொடி காற்று கொள்ளாமல் இருக்கிறதா என்று பார்க்க, பிள்ளையை மடியில் கிடத்திக்கொண்டு கட்டை விரலால் கொடியை அழுத்தித் திருகினாள்.
‘வீல்’ என்று கதறித் துடித்தது குழந்தை. “காத்து கீத்து இல்ல… ஆனா கொஞ்சம் சீழ் இருக்குது…” என்று தனக்குத்தானே முனகின மருத்துவச்சி, குடிசையின் சாணி மெழுகின தரையை நகத்தால் கீறிப் பெயர்த்தெடுத்து, சிறிது தண்ணீருடன் சேர்த்துக் குழப்பி, தொப்புள்கொடி மேல் தடவிவிட்டு, “நாளைக்கு நா மறுபடி வரேன்…” என்று சொல்லிப் போனாள்.
அடுத்த நாள் வந்தவள், கையில் கொணர்ந்திருந்த பொட்டலத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு, குழந்தையை மடியில் கிடத்தினாள்.
“உம் மவனுக்காக நா நேத்து இன்னா லோல்பட்டேன், தெரியுமா? சுருட்டு யாரு புடிக்கராங்கன்னு தேடியலைஞ்சு சுருட்டுச் சாம்பலை வாங்கியாந்திருக் கேன்…” என்றவள், பொட்டலத்திலிருந்த சாம்பலைக் குழைத்துக் குழந்தையின் கொடி மேல் அப்பினாள்.
“இனிமே ஒண்ணுமில்ல, ஆத்தா… கொடி பட்டுப் போலக் காஞ்சிடும்! நீ எப்படியிருக்கே? ரணம் ஆறிடுச்சா? பொடுதலைத் தழைத் தண்ணி ஊத்திக்கினியா? அப்ப என்ன… நல்லாயிடும்! சரி, என்னை அனுப்பிச்சுவையுங்க…”
ஒரு தட்டில் இரண்டு தேங்காய், அரை டஜன் பூவன் பழம், வெற்றிலை பாக்கு, நான்கு படி நெல், இரண்டு ஆழாக்கு துவரம் பயறு, படி மல்லாட்டைப் பயறு முதலியவற்றோடு இரண்டு ரூபாய்க் காசும் கொடுத்து மருத்துவச்சியை அனுப்பினாள் தனபாக்கியம்.
அடுத்த ஒரு வாரத்தில் சாதாரண மனுஷியாய் நடமாடத் தொடங்கிய மல்லிகா, வீட்டுக் காரியங்களையும் குழந்தைக் காரியத்தையும் ஒண்டியாய்க் கவனித்துக்கொள்ளும் திறன் பெற்றுவிட்டதாலும், அய்யர் வீட்டிலிருந்து தகவலே வராததாலும், சமாச்சாரம் அறிய தனபாக்கியம் அக்ரஹாரத்துக்குப் போனாள்.
போன அரை மணிக்கெல்லாம், அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாய் அவள் வந்ததைக் கண்டு மல்லிகா பதறிப்போனாள்.
“இன்னாம்மா? இன்னா சேதி?”
“நா என்னத்தடி சொல்லுவேன்? அய்யரு வூட்டம்மா நேத்துதான் பட்டணத்து லேந்து வந்தாங்களாம்… அவுங்க தங்காச்சிக்கு ராசாத்திபோல மக பொறந்துச்சாம்… ஆனா ரெண்டா நாளே, என்னமோ சீக்கு வந்து, பூடுச்சாம்! சீத்தாம்மா எளுந்திருக்காம துக்கமா படுத்துக் கெடக்குதாம்… அம்மா ஆடிப்போயிட்டாங்கடி…”
தூக்கிவாரிப்போட, அய்யர் வீட்டுக்குத் தானே ஓடினாள் மல்லிகா.
இவளைக் கண்டதும் ‘ஹோ’வென்று கதறிவிட்டாள் பங்கஜம்.
“ஊர் ஒலகத்துலயே பெரிய டாக்டர்தான் பிரசவம் பார்த்தார்… இருந்தும் என்னாச்சு? தொப்புள்கொடி ‘செப்டிக்’ ஆகி, ஒரே நாள் ஜுரத்துல கொழந்தை போயிடுத்துடீம்மா! எங்காத்துத் தங்க விக்ரஹத்தைப் பறிகுடுத்துட்டோம்டீ…”
பங்கஜம் கதற, மல்லிகாவின் துக்கம் தாங்கமுடியாமல்போய், அய்யர் வீட்டம்மாளோடு அவளும் சேர்ந்து அழ ஆரம்பித்தாலும், பாதியில் நிறுத்தி, “அதென்னம்மா தொப்புள் கொடி ‘செப்டிக்கு’? சாணி வைக்கக்கூடாதா? இல்லே, சுருட்டுச் சாம்பல் அப்பக்கூடாதா? பட்டணத்துல சுருட்டுக்கூடவா கெடைக்காது?” என்று தன் மன ஆற்றாமையை வெளிப்படுத்திவிட்டு, மீண்டும் தொடர்ந்து அழுதாள்.
– 1979
* * * * *
ஸ்டெப்னி
அனுராதா ஒவ்வொரு செடியிடமும் நின்று குனிந்து பார்த்தாள்.
ரோஜா, பூச்சி விழுந்து காணப்பட்டது. மல்லிச்செடிகள், நுனி கருகி யிருந்தன. புல், காய்ந்துபோயிருந்தது. க்ரோடன்ஸும் அரளியும், தலை தொங்கி வாடியிருந்தன.
அம்மா இருந்தால் தோட்டம் இப்படியா இருக்கும்?
பணக்காரவீட்டுக் குழந்தைகள் மாதிரி ரோஜாவும் மல்லியும், தளதளவென்று மின்னும்; புல், பச்சையாய் கண்ணைப் பறிக்கும்; தூசி தும்பு இல்லாமல் செடியும் கொடியும், என்னைப் பாரேன், பாரேன் என்று கவர்ச்சியாய் கூப்பிடும்.
மசமசத்த கண்களை இரண்டு தரம் சிமிட்டி, செம்பருத்திச் செடியிடம் சென்று நல்லதாக ஒரு பூவைப் பறித்துக்கொண்டு வீட்டுக்குள் போனாள். தன் மேஜை மேல் வைத்திருக்கும் அம்மாவின் படத்தின் வளையத்தில், பூவைச் செருகினாள். முழுசாய் ஒரு நிமிடம் அம்மாவை வெறித்தாள். லேசாகக் குனிந்து படத்தை முத்தமிட்டாள். “ஐ மிஸ் யும்மா…” என்று முணுமுணுத்தாள். மீண்டும் மசமசக்கத் துவங்கிய கண்களை ஒரு பெருமூச்சு இழுத்து அடக்கிவிட்டு நிமிர்ந்தாள்.
மணி என்ன?
எட்டேகாலா?
நாழியாகிவிட்டது… கிளம்ப வேண்டும்.
அன்றைக்குத் தேவையான புத்தகங்களை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டு, கூடத்துக்கு வந்தாள்.
“நா ஸ்கூலுக்குக் கிளம்பறேன், அத்தே…”
இவள் குரல் கேட்டு, ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் சமையல்கட்டிலிருந்து எட்டிப்பார்த்தார்.
“டிபன் சாப்பிடலையா, அனு?”
“வேணாம்… பசிக்கலை…”
“வழக்கம்போல ஆயாகிட்ட சாப்பாடு அனுப்பிடவா?”
“ம்.”
அனுராதா வாசல் வராந்தாவுக்கு வந்தாள்.
மறுபடியும் அம்மாவின் நினைப்பு உள்ளுக்குள் எட்டிப்பார்த்தது.
அம்மா இருந்தால் இப்படி வெறும் வயிறுடன் கிளம்பச் சம்மதிப்பாளா?
– என்னது? டிபன் வேணாமா? வளர்ற பொண்ணு பட்டினியாவா ஸ்கூலுக்குப் போறது? நோ, நோ… – என்பாள்.
– முட்டை வேணாட்டி, ரொட்டி சாப்பிட்டுப் போ! – என்பாள்.
– ஒரு டம்ளர் பாலையாவது குடி, அனு… இப்படிப் பட்டினி கிடந்தா உடம்பு கெட்டுடும்! – என்பாள்.
கரிசனத்தோடு வாசல்வரை வந்து, பிடிவாதமாய் எதையாவது கையில் திணித்து சாப்பிடச் செய்த பிறகே, போக அனுமதிப்பாள்.
அம்மா… என் அம்மா…
காலில் செருப்பை மாட்டிக்கொண்டு படியிறங்கிய நிமிடத்தில், பக்கத்து வீட்டிலிருந்து திடுமென ஒரு கீச்சுக்குரல் கேட்க, அனுராதா லேசாக திடுக்கிட்டுப் போய் பார்வையை காம்பெளண்டைத் தாண்டி வீசினாள்.
லாரி, சாமான்கள், கார், மனிதர்கள்…
ஓ, பக்கத்து வீட்டுக்குக் குடிவந்துவிட்டார்களா!
“ஹேய்… ஹேய்… பத்திரம்! அப்படித் தூக்காதே, அது கண்ணாடி… கேர்ஃபுல்!” திரும்ப அந்தக் கீச்சுக்குரல் ஒலிக்க, திரும்ப அனுராதா திடுக்கிட்டுப்போனாள்.
மை காட்! அம்மா குரல்! அப்படியே அம்மாவின் குரல்! அம்மாவும் இப்படித்தான் உணர்ச்சிவயப்பட்டு கீச்சுக்குரலில் அடிக்கடி கத்துவாள்.
பரபரவென்று சுவரிடம் சென்று செடிகளூடே அடுத்த வீட்டைப் பார்த்த போது, முதுகைக் காட்டிக்கொண்டு படிக்கட்டுகளில் நின்றிருந்த அந்தப் பெண்மணியைக் காண முடிந்தது.
நெடுநெடுவென்று உயரம்… அம்மா இத்தனை உயரமில்லை. வாளிப்பான பருமன்… அம்மா கொஞ்சம் சோனி. ரவிக்கைக்கும் புடவைக்கும் நடுவில் தெரிந்த வெள்ளைச் சருமம்… ம்ஹூம், அம்மா நிச்சயம் இந்த நிறமில்லை… மாநிறம்தான்.
இரண்டு நிமிடங்கள் போல நின்றபின், யாராவது பார்த்தால் என்ன நினைத்துக்கொள்வார்கள் என்று தோன்ற, அனுராதா நகர்ந்து கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கேட்டைத் தாண்டி சாலையில் கால் வைக்கும்போது மீண்டுமொருமுறை அந்தக் கீச்சுக்குரல் காதில் விழ, அழுந்தியிருந்த உதடுகளை உட்பக்கமாய் ஒரு முறுவல் கீறியது.
குரல் மட்டும் அம்மாவினுடையதேதான்… அசல் அப்படியேதான்.
முகம் எப்படியிருக்கும்? அம்மாவின் ஜாடை இருக்குமோ?
மாலையில் அனுராதா வீட்டுக்குத் திரும்பியபோது, மணி ஐந்தரை என்றது.
கேட்டைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தவளை, “ஹலோ…” என்ற கீச்சுக்குரல் வரவேற்றது.
நின்றாள்… நிமிர்ந்தாள்.
காம்பெளண்ட் சுவரருகில் அந்தப் பெண்மணி.
ஓ… ஷி ஈஸ் ப்யூட்டிஃபுல்!
“ஹலோ!” திரும்ப அந்தப் பெண்மணி இவளை விளித்து சிரிக்க, சின்னக் குரலில் அனுராதாவும் “ஹலோ…” என்றாள்.
“என் பேர் மிஸஸ் சுந்தரம்… துர்கா! நாங்க அலஹாபாட்லேருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்கோம். காலைல உன்னைப் பாத்தேன்… தோட்டத்துல பூப்பறிச்சிட்டு இருந்தே… கூப்பிட்டுப் பேசலாம்னு நினைக்கறதுக்குள்ள, உள்ள போயிட்டே! ஸ்கூல்லேந்து வர்றியா?”
அனுராதா தலையாட்டினாள்.
“உன் பேரென்ன? எந்த ஸ்கூல்? எத்தனாவது படிக்கறே?”
அனுராதா உடனே பதில் சொல்லாமல், பேசியவரை வெறித்தாள்.
இப்படிக்கூட ஓர் ஒற்றுமை அம்மாவுக்கும் இவருக்கும் இருக்க முடியுமா!
அம்மாவும் இப்படித்தான்… யார், என்ன, ஏது என்று தயக்கமெல்லாம் இல்லாமல், ஆளைப் பார்த்துவிட்டால் போதும், கலகலக்க ஆரம்பித்துவிடுவாள்.
“என்னம்மா, பேசமாட்டியா?”
அனுராதா வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
“ஸாரி…” என்று சொல்லிவிட்டு, மெதுவாகத் தன் பெயர் மற்ற விவரங்களைக் கூறினாள்.
“ப்ளஸ் ஒன் படிக்கறியா? அப்ப என் பொண்ணைவிட நீ ரெண்டு வயசுதான் சின்னவளா இருப்பே! மதுரா பி.ஏ. ஃபர்ஸ்ட் இயர் படிக்கறா… அவ நல்ல வளர்த்தி… அவளை விட்டுட்டு வந்ததுதான் எனக்குப் பிடிக்கலை! இருக்கறது ஒரு பொண்ணு, அவளையும் தனியா விட்டுட்டு வான்னா எப்படி? என்ன செய்றது, திடும்னு டிரான்ஸ்ஃபர் வந்திடுச்சு, மாட்டேன்னு சொல்ல முடியாது… ப்ரமோஷன் வேற! ‘நீ வேணா மகளோட இருந்துட்டு அடுத்த வருஷம் வா’ன்னு அங்க்கிள் சொன்னார். ஆனா, அதெப்படி முடியும்? ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்திருக்கோம். அவளை நினைச்சா மனசாகலை… ஹூம்… என்ன பண்றது! இன்னும் குறைஞ்சபட்சம் ஆறு மாசம்… அப்பறந்தான் அவளைப் பார்க்க முடியும்…”
துர்கா கொஞ்சம் நிறுத்தினாள். மகளைப் பிரிந்த ஏக்கம் நிஜமாகவே கண்களில் வியாபிக்க, அரைக்கணம் மெளனித்தாள். அப்புறம், “உன்னைப் பார்த்தப்பறம் அவ ஞாபகம் ரொம்ப வருது!” என்று சொல்லிச் சிரித்துவிட்டு, “சரி, நீ போம்மா… ஸ்கூல்லேந்து வந்திருக்கே… டிபன் சாப்பிட விடாம நா பிடிச்சுகிட்டேன்னு உங்கம்மா திட்டப் போறாங்க!”
அனுராதா திரும்பினாள்.
நீங்கள் சொல்கிற மாதிரி கரிசனையோடு பேசவோ திட்டவோ எனக்கு அம்மா இல்லை, ஆன்ட்டி…
நினைப்பதை வெளியில் சொல்ல விடாமல் கூச்ச சுபாவம் தடுக்க, மெதுவாக உள்ளே போனாள்.
மறுநாள் காலை ஆறரை இருக்கும்… காபி சாப்பிட்டுவிட்டு புத்தகத்துடன் முன்ஹாலில் உட்கார்ந்தவள் காதில், “அனு… அ..ன்..னு…” என்று உரத்த குரலில் துர்கா கூப்பிடுவது விழ, எழுந்து வெளியில் வந்தாள்.
ஹவுஸ்கோட்டில்கூட இந்த ஆன்ட்டி எத்தனை அழகாக இருக்கிறார்!
“குட்மார்னிங், அனு… தூக்கத்துலேந்து எழுப்பிட்டேனோ? இங்க வா… இதை எடுத்துக்க…”
அனுராதா கிட்டத்தில் சென்றாள்.
சின்ன அட்டைப்பெட்டி… அது நிறைய பேடா…
“என்ன, ஆன்ட்டி?”
“பேடா, அனு… அலஹாபாட்லேந்து வாங்கிட்டுவந்தது… எடுத்துக்க!”
“இவ்வளவா?”
“நாலு பேரா ஆளுக்கு ரெண்டு சாப்பிட்டா தீந்துடும்… எடுத்துக்கம்மா…”
நீங்கள் சொல்லும் நான்கு பேர் இந்த வீட்டில் கிடையாது, ஆன்ட்டி…
எதுவும் பேசாமல் கை நீட்டி அந்த டப்பாவை அனுராதா வாங்கிக் கொண்டாள்.
“ஊர்ப்பட்ட வேலை இருக்கு, அனு… ஐ வில் ஸீ யூ லேட்டர்!”
நான்கடி எடுத்துவைத்தவளைத் தயக்கத்துடன், “ஆன்ட்டி…” என்றழைத்தாள் அனுராதா.
“ம்?”
“இன்னிக்கு சனிக்கிழமை… எனக்கு ஸ்கூல் இல்லே… வேணா அங்க்கிள் ஆபீஸ் போனப்பறம் நா வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?”
“ஃபென்டாஸ்டிக்! வா, வா… கண்டிப்பா வா!”
நினைப்பதை உடனே வெளியில் சொல்லிவிடுவதோடு, வேண்டாத உபசாரத்துக்காகக் காத்திருக்காமல் துர்கா பேசுவது சந்தோஷத்தைத் தர, அனுராதா வீட்டுக்குள் போய் அத்தையிடம் சொல்லிவிட்டு ஒன்பது மணி வாக்கில் பக்கத்து வீட்டுக்குப் போனாள்.
தன் கணவரின் வேலை பற்றியும், அவர் திறமை பற்றியும், மதுரா பற்றியும், அவள் படிப்பில் முதலாக வருவதோடு பாட்டு நடனத்திலும்கூடத் தேர்ந்து விளங்குவது பற்றியும், அவளைப் பிரிந்திருப்பது எத்தனை கஷ்டமாக இருக்கிறது என்பது பற்றியும் நீளநீளமாக துர்கா பேசுவதைக் கேட்டுக்கொண்டே, பீங்கான்களைத் துடைத்து ஸைட் போர்டில் அடுக்கினாள். குஷன் உறைகளைத் தட்டிப் போட்டாள். கர்ட்டன்களை மாட்டினாள்.
“களைப்பா இருக்கு… டீ சாப்பிடலாமா?”
சமையல்கட்டில் நுழைந்து கெட்டிலில் வெந்நீர் கொதிக்கவைத்த நிமிஷத்தில்தான் அனுராதாவைப்பற்றி தனக்கு ஒன்றுமே தெரியாதது நினைவுக்கு வந்த தினுசில், “ஹேய், அனு… உன்னப்பத்தி நீ எதுவுமே சொல்லலியே? சொல்லு, உங்கப்பா அம்மா பேர் என்ன? அப்பா என்ன செய்றார்? அம்மாவை ஏன் வெளிலியே காணும்? ம்? சொல்லு…” என்றதும், அனுராதா சட்டென்று பார்வையைத் தழைத்துக்கொண்டாள்.
உதட்டைக் கடித்து தன்னை சமாளித்துக்கொண்டு, சன்னக்குரலில் பேசினாள்.
“அப்பா பேர் ஈஸ்வரன்… எல் அண்ட் டியில சேல்ஸ் மானேஜரா இருக்கார். மாசத்துல பாதி நாள் டூர்தான். இப்பக்கூட ஊர்ல இல்ல. ஒரே அண்ணா ஸ்ரீதர்… பிலானில என்ஜினியரிங் கோர்ஸ் படிக்கறான்…”
“வயசானவங்களா ஒரு அம்மாவை கொல்லைப்பக்கம் பார்த்தேனே?”
“அது… அது… எனக்கு ஒண்ணுவிட்ட அத்தை… இங்கதான் வீட்டோட துணையா இருக்காங்க…”
துர்கா புருவங்களைத் தூக்கினாள்.
“அம்மா?”
அனுராதா அவளைப் பார்க்காமலேயே பேசினாள்.
“அ… அம்மா இறந்துபோய் ஒரு வருஷம் ஆறது, ஆன்ட்டி…”
துர்கா சட்டென்று குனிந்து அவள் கையைப் பற்றினாள்.
“ஐ’ம் ஸாரிம்மா… எ… எப்படி?”
“ட்ரக் அலர்ஜி… ஜலதோஷம் ஜுரம்னு டாக்டர்கிட்ட போனாங்க… ஸல்ஃபா எழுதிக் குடுத்தார்… வீட்டுக்கு வந்து போட்டுக்கிட்ட அரைமணிக்கெல்லாம், முகம், காது, விரல் எல்லாம் வீங்கிப்போச்சு! என்ன ஏதுன்னு புரிஞ்சு டாக்டர்கிட்ட போறதுக்குள்ள… ஷி கொலாப்ஸ்ட்! ஒரு வியாதி இல்லாதவங்க நிமிஷத்துல… நிமிஷத்துல…”
அனுராதா உதட்டைப் பல் பதியக் கடித்தவாறு தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.
நெஞ்சில் துக்கப் பந்து உருண்டது. கண்கள் மசமசத்தன.
“கமான், அனு… டோண்ட் பீ ஸோ அப்ஸெட்… ப்ளீஸ்…”
துர்கா எழுந்து வந்து பக்கத்தில் உட்கார்ந்து, தோளைத் தட்டி, தலைமுடியைக் கோதிக்கொடுக்க, அந்தப் பரிவு தந்த சுகத்தில் அனுராதா கண்களை மூடிக்கொண்டாள்.
இதற்குப் பிறகு, என்னமோ சொல்வார்களே அது மாதிரி, நாளொரு மேனி எட்ஸட்ரா எட்ஸட்ராவாக துர்காவும் அனுராதாவும் ரொம்பத்தான் நெருங்கிப் போனார்கள்.
கூச்சத்தின் காரணமாய் விலகி நிற்கப் பார்த்தாலும் விடாமல், காலையும் மாலையும் காம்பெளண்ட் சுவரிடம் நின்று ‘அ…னு…’ என்று கீச்சுக்குரலில் கத்தி, சிரிக்கச்சிரிக்கப் பேசி, இழுத்துவைத்து, ‘நீ என் பெண் மாதிரி’ என்று சொல்லி துர்கா ஈஷிக்கொள்ள ஈஷிக்கொள்ள, அனுராதாவும் தன் பங்குக்கு ரொம்பத்தான் அவளோடு ஒட்டிக்கொண்டாள்.
ஸ்கூலுக்குப் போகும் முன்னரும், திரும்ப வந்த பிறகும், கூடுமான வரையில் பக்கத்து வீட்டில் பொழுதைக் கழிப்பதில் தனி இன்பம் காண முற்பட்டாள்.
துர்காவோடு காய்கறி மார்க்கெட்டுக்கும், லாண்டரிக்கும், மளிகைக் கடைக்கும் போய்வந்தாள். அவள் சமையல் பண்ணும்போது கூட நின்று ஒத்தாசை செய்தாள்.
தன் பெண்ணைப்பற்றி முகம் மலர அவள் பேசுவதை உன்னிப்பாய் கேட்டாள்.
இவள் அப்பா டூரிலும், அவள் கணவர் வேலையிலும், லயித்திருப்பதை லட்சியம் பண்ணாமல், இரண்டு பேரும் மாட்னி சினிமா போனார்கள்; எஸ்.வி.சேகரின் ‘காதுல பூ’, சோவின் ‘நேர்மை உறங்கும் நேரம்’ நாடகங்கள் பார்த்துவிட்டு வந்து, மறுநாள் காரசாரமாக விவாதித்தார்கள். ட்ரைவ் இன் ஹோட்டலில் ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு மணிக்கணக்கில் பேசினார்கள். ஃபெளண்டன் ப்ளாஸாவிலும் லஸ்ஸிலும் கடைகடையாய் ஏறியிறங்கினார்கள்.
பாரதிராஜாவின் படம் என்றால் துர்காவுக்கு ஏக விருப்பம் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு, ‘காதல் ஓவியம்’ படத்திற்கு அட்வான்ஸ் புக்கிங் க்யூவில் வெயிலைப் பார்க்காமல் நின்று அனுராதா டிக்கெட் வாங்கிவர… சாக்லெட் கேக், நூடுல்ஸ், பீட்ஸா என்று நாளுக்கு ஒன்றாக தினுசுதினுசாய் சமைத்து அவளை உட்காரவைத்து கிட்டே நின்று, ‘மதுகூட இப்படித்தான்… சாதம் சாப்பிட மாட்டா… இதெல்லாம் மட்டும் மூணு வேளையும் சாப்பிடுவா!’ என்று சொல்லிக்கொண்டே துர்கா பரிமாற… இன்னும்… இன்னும்…
அன்றைக்கு ஸ்கூலிலிருந்து லேட்டாக வந்து பால் குடித்துவிட்டு, யூனிஃபார்மைக் கழட்டி வேறு உடுத்திக்கொண்டு ஓடிவந்தவளிடம், “ஏன் லேட்?” என்றாள் துர்கா, முதல் கேள்வியாய்.
சூள்கொட்டினாள் அனுராதா.
“என்ன விஷயம்?”
“பெரிசா ஒண்ணுமில்லே, ஆன்ட்டி…”
“சின்னதாதான் இருக்கட்டுமே… என்ன விஷயம்?”
“அடுத்த மாசம் பேரண்ட்ஸ் டே வருது… அதுல டிராமாவுல நடிக்க என்னை ப்ரின்ஸி கூப்பிட்டனுப்பினாங்க… அதெல்லாம் எனக்கு வேணாம்னு சொல்லிட்டு வர நாழியாயிடுச்சு…”
“ஏன் வேணாம்?”
“குறிப்பா காரணம் எதுவுமில்ல, ஆன்ட்டி…”
துர்கா கண்களை இடுக்கிக்கொண்டாள். “ஏன் வேணாம்? சொல்லு…”
“வந்து…”
“வந்து?”
“அ… அம்மா போனப்பறம் எனக்கு இதுலல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல, ஆன்ட்டி… அவங்க இருந்தப்ப எல்லா ஃபங்ஷனுக்கும் வருவாங்க, உற்சாகம் குடுப்பாங்க… இப்ப… இப்ப… அப்பாவுக்கு எதுக்கும் டைமில்ல, ஆன்ட்டி… அதான்…”
“ம்ம்ம்… பேரண்ட்ஸ் டே எப்ப?”
“அடுத்த மாசம்…”
“நீ டிராமாவுல நடிச்சு நா பாக்கணுமே… ஆசையா இருக்கே!”
“ஆன்ட்டி… ப்ளீஸ்…”
“நோ எக்ஸ்க்யூஸஸ்… நீ நடிக்கறே, நா பாக்க வரேன்… ஓ.கே? நாளைக்கு ப்ரின்ஸிகிட்ட சொல்லிடு… அவ்வளவுதான்… த மேட்டர் எண்ட்ஸ்! இப்ப என்ன பண்ணப்போறே? படிக்கணுமா, இல்லே என்கூட பாண்டி பஜார் வரைக்கும் வரியா?”
துர்காவின் பேச்சு தந்த ஊக்கத்தில், மறுநாள் அனுராதா டிராமாவில் நடிக்க சம்மதம் தெரிவித்தாள்.
நாடக வசனங்களை வாங்கிவந்து சிரத்தையுடன் மனப்பாடம் செய்தாள். ஆர்வத்துடன் ஒத்திகைகளில் கலந்துகொண்டாள்.
ராத்திரி தூங்கும்போது, துர்கா வந்து முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிற மாதிரியும், தான் பிரமாதமாக நடித்து முதல் பரிசைப் பெறுகிற மாதிரியும் கலர்கலராய் கனவு கண்டாள்.
முன்போல மனதில் சதா ஓர் ஏக்கம் நெருடாததை உணர்ந்துகொண்டாள். இருதயம் காரணமில்லாமல் கனக்காததைப் புரிந்துகொண்டாள்.
என்ன மனுஷி இந்த ஆன்ட்டி… சொந்தப் பெண் மாதிரி மற்ற பெண்களையும் அழுத்தமான அன்போடு நேசிப்பது இவருக்கு எப்படிச் சாத்தியமாகிறது என்று, அடிக்கடி நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள்.
பக்கத்து வீட்டுக்கு துர்கா குடிவந்து நான்கு மாதங்கள் முடிந்த ஒரு நாளில், வாசலில் தந்திச் சேவகன் வந்து நின்றான்.
‘யூனிவர்ஸிடியில் கலாட்டா, பரிட்சைகள் ரத்தாகிவிட்டன, பதினைந்து நாட்கள் விடுமுறை விட்டுவிட்டார்கள். 18-ம் தேதி காலை வருகிறேன் – மதுரா’.
துர்கா தேன் குடித்த நரியாகிப்போனாள்.
“பதினெட்டாம் தேதி… மை காட்! நாளைக்கு மது வந்துடுவா!”
சொன்னதையே சொல்லிக்கொண்டு குதிகுதியென்று குதித்தாள்.
அந்த சந்தோஷமும் படபடப்பும் ரொம்பப் புதுசாக இருக்க, அத்தனையையும் ஒரு சின்ன சிரிப்போடு அனுராதா அனுபவித்தாள்.
பிறகு, “மதுராவுக்கு குலாப் ஜாமூனும் ஓமப்பொடியும் பிடிக்கும்னு சொல்வீங்களே, ஆன்ட்டி… செய்யலாமா?” என்றாள்.
“இப்பவா?”
“இப்பத்தான்… அப்பறம் நாளைக்கு ஹாயா பேசிட்டிருக்கலாம்…”
வீட்டிலிருந்த பாலோடு தன் வீட்டிலிருந்து கொணர்ந்த ஒரு லிட்டரையும் சேர்த்து அடுப்பில் வைத்து அனுராதா கோவா காய்ச்ச, துர்கா வளவளவென்று என்னென்னவோ பேசிக்கொண்டே ஓமப்பொடியைப் பிழிந்தாள்.
இவள் கோவாவை உருட்டி வைக்க, அவள் பொரித்தெடுத்து பாகில் போட்டாள்.
வேலைகள் முடிந்து அனுராதா வீட்டிற்கு வந்தபோது மணி பத்தரை.
கூடப்பிறந்த அக்காவை வரவேற்பதற்காக அம்மாவுடன் சேர்ந்து ஆயத்தம் பண்ணிவிட்ட குதூகலத்தோடு தூங்கினவள், காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாரானாள்.
ஜன்னலருகில் நின்று, மதுராவோடு துர்காவும் அங்க்கிளும் வந்து இறங்குவதைப் பார்த்த பின்பு, ஆன்ட்டி கூப்பிடுவார் என்று காத்துவிட்டு, ஒருமணிநேரம் ஆன பிறகு பொறுக்க மாட்டாமல் தானே பக்கத்து வீட்டுக்குச் சென்றாள்.
“குட்மார்னிங், ஆன்ட்டி…”
வெட்கத்துடன் பேசியவளை துர்கா நிமிர்ந்து பார்த்தாள்.
“ஹலோ, அனு… மதுவைப் பார்த்தியா? அதுதான் மது… எப்படி இருக்கா? போட்டோல பார்த்ததைவிட இன்னும் அழகா இல்லே? நாலு மாசத்துல ஒரு இஞ்ச் வளந்துட்டாலும், ஹாஸ்டல் சாப்பாடு சரியில்லாம இளைச்சிட்டா! ஏன் மது, கட்டாயம் ரெண்டு டம்ளர் பால் சாப்பிடுன்னு சொல்லியிருந்தேனே, சாப்பிடலியா?”
மதுரா, அம்மா மாதிரி கலகலக்கவில்லை. அனுராதாவிடம் ‘ஹலோ’ என்றாள். படிப்புபற்றி விசாரித்தாள். நிதானமாக யோசித்து தன்னைப்பற்றிச் சொன்னாள்.
மணி எட்டேகாலைத் தொடுகையில் ‘ஸ்கூலுக்கு நாழியாச்சு’ என்று அனுராதா கிளம்பினாள்.
சமையல்கட்டில் மதுராவுக்கு டிபன் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த துர்கா அங்கிருந்தே ‘பை’ என்று விடைகொடுத்துவிட்டு, “வா, மது… உனக்காக ராத்திரி உட்காந்து குலாப்ஜாமூன் செஞ்சிருக்கேன்… வந்து சாப்பிடு!” என்று மகளிடம் சொன்னதைக் காதில் வாங்கியபடி, ரொம்பப் புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும் இப்படியொரு அம்மாவை மதுரா அடைவதற்கு என்று நினைத்துக்கொண்டே அனுராதா வெளியில் வந்தாள்.
அன்று மாலை ஸ்கூலிலிருந்து திரும்பி, பக்கத்து வீட்டுக்கு அவள் சென்றபோது வீட்டில் யாருமில்லை.
“வெளியே போயிருக்காங்க…” என்றாள் வேலைக்காரி.
வீட்டுக்குத் திரும்பி வந்து ஜன்னலிடம் சென்று, பக்கத்து வீட்டில் விளக்கு எரிகிறதா என்று எட்டியெட்டிப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அனுராதா தூங்கச் செல்லும்போது மணி பத்து.
மறுநாள் காலை முதல் காரியமாய் காம்பெளண்ட் சுவரிடம் நின்று “ஆன்ட்டி…” என்று குரல் கொடுத்தாள்.
துர்கா வேகமாக வெளியில் வந்தாள்.
“ராத்திரி எங்க போயிட்டீங்க, ஆன்ட்டி… ரொம்ப நேரமாச்சா திரும்ப?”
“கடைக்குப் போயிட்டு, தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போனோம்… பேசிட்டிருந்ததுல நேரம் போயிடுச்சு…”
“மதுராவுக்கு குலாப்ஜாமூன் பிடிச்சுதா, ஆன்ட்டி?”
“பாத்திரம் காலி!” சிரித்த துர்கா, சட்டென்று சிரிப்பதை நிறுத்தினாள். “ராத்திரி ரொம்ப நாழி பேசிட்டுப் படுத்ததுல மது இன்னும் எழுந்திருக்கல… இந்தப் பக்க பெட்ரூம்லதான் படுத்திருக்கா… நாம பேசினா எழுந்திடப்போறா… அப்பறமா பேசலாம், என்ன?”
அன்றும் அனுராதா வீடு திரும்பியபோது, பக்கத்து வீட்டில் யாருமில்லை.
ஈவ்னிங் ஷோ, அடையார் கேட் ஹோட்டலில் டின்னர்.
மறுநாள் ஷாப்பிங்.
– அனு, உன் சிவப்புச் சுரிதார் கம்மீஸை எங்க வாங்கினே? அதே மாதிரி மதுவுக்கு ஒண்ணு வாங்கணும்.
– அனு, ஐஸ்க்ரீம் ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்லுவியே, எங்க?
– அனு, நாங்க நாளைக்கு மகாபலிபுரம் போறோம்… ஸ்கூல் இருக்கு, இல்லாட்டி நீயும் வரலாம்…
மதுரா வந்து ஒரு வாரம் போவதற்குள், துர்காவை முழுசாய் பார்த்து, அவளுடன் முழுசாய் இரண்டு நிமிஷங்கள் பேச அவகாசம் கிடைப்பதற்குள், அனுராதா திண்டாடிப் போனாள்.
நாடக ஒத்திகை முடிந்து வீட்டுக்குக் களைப்புடன் வந்தால், பக்கத்து வீட்டின் வெறுமை அவளை வரவேற்கும். படிக்கவேண்டியதைப் படித்து, சாப்பிட்டு பொழுதோடு படுத்தால், தூக்கம் வரமாட்டேனென்று சண்டி பண்ணும்.
அரைகுறைத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கையில், துர்காவின் கீச்சுக்குரல் சிரிப்பு பலமாகக் கேட்கும்; சட்டென்று எழுந்து ஜன்னலிடம் ஓடினால், எங்கோ போய் விட்டு, காரிலிருந்து மகள் கணவருடன் ஆன்ட்டி சிரித்தபடி இறங்குவது ஒரு கணம் மின்னி மறையும்.
அந்த ஞாயிற்றுக்கிழமை தயக்கத்துடன் அனுராதா பக்கத்து வீட்டுக்குச் சென்ற போது, இரண்டு பெட்டிகளில் துணிகளை துர்கா அடுக்கிக்கொண்டிருந்தாள்.
இவளைக் கண்டதும் வழக்கமான சிரிப்பை சிரித்து, “என்னம்மா… ஆளைக் கண்ணிலயே காணும்! ஆன்ட்டியைப் பார்க்க வரமுடியாத அளவுக்கு பிஸியா?” என்று கேட்டு, பதில் பேசாமல் அனுராதா நிற்க, அவளே தொடர்ந்தாள். “அங்க்கிளுக்கு சேலத்துல நாலு நாள் வேலையிருக்கு… அப்படியே ஏற்காடு போயிட்டு வரலாம்னு ஒரு திடீர் பிளான்… எப்படி?”
அனுராதா அதிர்ந்துபோய் கண்களை விரித்தாள்.
“நீ… நீங்க கூடவா போறீங்க, ஆன்ட்டி?”
“நா போகாம?”
“எ… எத்தனை நாளாகும் வர?”
“மாக்ஸிமம் ஒரு வாரம்…”
ஒரு வாரமா? என்ன சொல்வது என்று புரியாத தினுசில் அனுராதா கொஞ்சம் திகைத்தாள்.
அப்புறம் ரொம்பத் தழைந்த குரலில், “வர்ற சனிக்கிழமை எங்க ஸ்கூல்ல பேரண்ட்ஸ் டே, ஆன்ட்டி…” என்றாள்.
“ஓ!”
புடவையை மடித்துப் பெட்டிக்குள் போட்ட துர்கா நிமிர்ந்தாள். எதிரில் நின்றவளை ஊன்றிப் பார்த்தாள்.
“ஆமா, நீ சொல்லியிருந்தே… நாந்தான் மறந்துட்டேன். ம்ம்… பரவாயில்லே… நா இல்லாட்டி என்ன? நீ டிராமாவுல பிரமாதமா நடிப்பே… எனக்குத் தெரியும்…”
“இல்லே… வந்து… ஆன்ட்டி…”
தவிப்போடு அனுராதா பேசியதை அவள் காதில் வாங்கும் முன், “மம்மி… இங்க கொஞ்சம் வாங்களேன்…” என்று மதுராவின் குரல் பக்கத்து அறையிலிருந்து கேட்டது.
பெண் அழைக்க, போட்டது போட்டபடி துர்கா போனதும், மசமசக்கும் கண்களுடன் அனுராதா வாசலுக்கு வந்து தன் வீட்டைப் பார்க்க நடந்தாள்.
அன்று பூராவும் முகம் சிவக்க அழுதவள், மாலையில் தந்தை அலுவலகத்திலிருந்து வந்ததும், “எங்க ப்ரின்ஸியை சந்திச்சு, எனக்கு உடம்பு சரியில்ல, டிராமாவுக்கு வர முடியாதுன்னு சொல்லிடுங்க…” என்றாள்.
“என்ன விஷயம்மா?” என்றவரிடம், பிடிவாதமாக எதுவும் சொல்ல மறுத்தாள். தொடர்ந்து வந்த நான்கைந்து நாட்களும் தன் அறையிலேயே பழிகிடந்தாள். ஒழுங்காய் சாப்பிட, பேச மாட்டேன் என்று அடம்பிடித்தாள்.
சரியாக அடுத்த செவ்வாய் இரவு, துர்காவும் மற்றவர்களும் சேலம் பயணத்திலிருந்து ஊர் திரும்பினார்கள். மறுநாளே மதுரா அலஹாபாத்துக்குப் போக டிக்கெட் எடுத்திருந்ததால், காலையில் அனுராதாவிடம் சொல்லிக்கொள்ள வேண்டி தாயும் மகளுமாக காம்பெளண்ட் சுவரிடம் நின்று குரல்கொடுத்தபோது, வேண்டுமென்றே அனுராதா வெளியில் வராமல் இருந்தாள்.
மகளை ரயிலில் ஏற்றிவிட்டு அழுத கண்களும் சிவந்த முகமுமாகத் திரும்பிய துர்கா, வீட்டுக்குள் நுழையாமல் சுவரிடம் நின்று, “அ…னு…” என்று பெரிதாய் கத்தினபோது மட்டும், இவள் மெதுவாக வாசலுக்குப் போனாள்.
“என்ன, அனு… வெளியில எங்கயாவது போயிருந்தியா? நானும் மதுவும் மாறிமாறி கூப்பிட்டமே… அவ உன்கிட்ட ஊருக்குப் புறப்படறப்ப சொல்லிக்க ஆசைப்பட்டா… நீ எங்க போயிட்டே?”
“……………”
“சேலம் ட்ரிப் ரொம்ப நல்லா இருந்தது, அனு… அங்கேந்து மைசூர் பெங்களூர் போயிட்டு ராத்திரி வந்து, உடனே மதுராவை அனுப்பறதுக்குள்ள முழி பிதுங்கிப்போச்சு!”
தானே பேசுவதும், அனுராதா எதுவும் பதில் சொல்லாமல் இருப்பதும் புரிந்த தினுசில், துர்கா சட்டென்று நிறுத்தினாள்.
“என்ன அனு, ஏன் எப்படியோ இருக்கே?”
“இல்லியே…”
“பேரண்ட்ஸ் டே நல்லா நடந்துதா? டிராமா? உனக்கென்ன, பிரமாதமா நடிச்சிருப்பே!”
“……………”
எதுவும் கூறாமல் வாடின முகத்துடன் அனுராதா நிற்பது சங்கடப்படுத்த, எட்டி அவள் கையைப் பிடித்தாள்.
“என்னம்மா, உடம்பு சரியில்லையா?”
“ம்ஹூம்…”
“அப்பா ஏதாவது சொன்னாரா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல…”
“பின்ன ஏன் எப்படியோ இருக்கே? ம்? எதுவானாலும் என்கிட்ட சொல்லும்மா… நா உனக்கு அம்மா மாதிரி, நீ எனக்கு மது மாதிரி! ரெண்டு வாரமா அவ இருந்தா, நா சந்தோஷமா இருந்தேன்… இப்ப? இனிமே எனக்கு யாரு? நீதானே? வெளியில போய்ப் பேசலாமா, அனு? ஹவ் அபெளட் ட்ரைவ் இன்? மது இல்லாத வீட்டுக்குள்ள போகவே எனக்குப் பிடிக்கல! வரியா, ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்? பத்து நிமிஷத்துல…”
வேகமாகப் பேசியவளின் பிடியிலிருந்து தன் கையை விடுவித்துக்கொண்ட அனுராதா, நிதானமாக, “ஆன்ட்டி…” என்று குறுக்கிட்டு அழைத்தாள்.
“ஸாரி, ஆன்ட்டி… இப்ப நா உங்களோட வரப்போறதில்ல… எனக்கு வேற வேலை இருக்கு! அப்பறம், இனிமே அடிக்கடி ‘நீ என் பொண்ணு மாதிரி, நா உன் அம்மா மாதிரி’ன்னு சொல்லாதீங்க… நோ, யூ ஆர் நாட் மை மதர்… அண்ட் ஐ’ம் நாட் யுவர் டாட்டர்! உங்க மகளைத் தற்காலிகமா பிரிஞ்சிருக்கற வேதனைல, அவ கண் முன்னால இல்லாத ஏக்கத்துல அவளை எனக்குள்ள பாக்க முயற்சிக்கற நீங்க, அவ நேர்ல வந்ததும் என்னை வேணாம்னு ஒதுக்கிடறீங்க! ஆனா, திரும்ப அவ போன பிறகு அந்தப் பிரிவு தாங்காம என்னைத் தேடி வந்திருக்கீங்க! வேணாம், ஆன்ட்டி… உங்களுக்கு வேணுங்கறப்ப உங்களை அம்மாவா நினைச்சு, உங்களுக்கு வேண்டாதப்ப தள்ளி நிக்க என் மனசுக்கு வலு இல்ல… என்னை விட்டுடுங்க! பத்து நாளா நா பட்ட வேதனை எனக்குத்தான் தெரியும்… இப்பத்தான் ரெண்டு நாளா, நிறைய யோசனை பண்ணினப்பறம் நா தெளிஞ்சிருக்கேன். திரும்ப என்னைக் குழப்பாதீங்க. லெட் அஸ் ஜஸ்ட் பீ ஃப்ரெண்ட்ஸ். அம்மா இல்லாத சூன்யத்தை நானும், மகளைப் பிரிஞ்ச தற்காலிக வலியை நீங்களும் புரிஞ்சுகிட்டு சினேகிதங்களா வாழறதுதான் நமக்கு – முக்கியமா எனக்கு – நல்லது! நீங்க வேணும்னு எதுவும் செய்யல, ஆனாலும் உணர்ச்சியில்லாத யந்திரங்களுக்குத் தான் ஸ்டெப்னி சரி… மனுஷங்களுக்கு இல்ல! நோ… உங்க தாய்ப் பாசத்துக்கு ஒரு ஸ்டெப்னியா இருந்து, அதை எடுத்துக்கத் தெரியாம என்னையே வருத்திக்க நா விரும்பல… ப்ளீஸ், ப்ளீஸ்… புரிஞ்சுக்கங்க, ஆன்ட்டி…”
நினைத்ததைச் சொல்லிவிட்ட திருப்தியோடு, ஸ்தம்பித்து நிற்கும் துர்காவை லட்சியம் பண்ணாமல் திரும்பி, உள்ளே வந்து, அம்மா படத்திடம் குனிந்து, “ஐ லவ் யூ அண்ட் மிஸ் யூ, மம்மி…” என்று முணுமுணுக்கையில், அனுராதாவின் கண்களிலிருந்து பிரவாகமாகக் கண்ணீர் பெருகி, அவள் அம்மாவின் புகைப்படத்தின் மேல் விழுந்து தெறிக்கத் துவங்கியது.
– 1982
* * * * *
வெள்ளிக்கிழமை ராத்திரி அவள் செத்துப்போனாள்
குனிந்து, கொதித்துக்கொண்டிருந்த நொய்க்கஞ்சியைக் கிளறக்கூட முடியாதபடி, ஈர விறகின் புகை அவள் முகத்தைத் தாக்கியது. நன்றாய் எரியாத அடுப்பை மூச்சைப் பிடித்துக்கொண்டு ஊதி நிமிர்ந்தபோது, புகையின் காரணமாய் அவள் கண்கள் எரிந்தன.
வயிறும் மனசும் காய்ந்து எரிந்த வெப்பம் தாங்காது, கண்களில் நீர் திரண்டது. வாய்விட்டு அழுதால், அதே அறையில் ஓரமாய்ப் படுத்திருக்கும் கணவன் விஸ்வத்துக்குக் கேட்டுவிடுமே என்ற நினைப்பில், வெட்டிக்கொண்டு எழுந்த கேவலை அடக்கி, கையைத் தூக்கி ரவிக்கையில் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
தலையைச் சற்றே ஒடித்து கணவனைப் பார்த்தாள்.
கோவில்காளை போல மதமதவென்ற வளர்த்தியுடன் ஓடியோடிச் சம்பாதித்த புருஷன், இன்று அரை உடம்பாய் வற்றிப்போய், கிடத்தின இடத்தை விட்டு நகராமல் படுத்துக்கிடப்பது அவளின் துக்கத்தை அதிகரிக்கவே, வெருட்டெனத் தலையை மீண்டும் அடுப்புக்கே திருப்பிக்கொண்டாள்.
சிரிப்பும் கும்மாளமுமாய் இருந்த அவர்களின் இல்வாழ்க்கையில், தன் கொள்ளிக் கண்ணைப் போட்டது யார்?
கூழோ கஞ்சியோ குடித்துக்கொண்டு, நன்றாய் வெளியில் வாசலில் போய் வந்துகொண்டு, மானத்தோடு குடும்பம் நடத்திவந்தவர்கள் மேல் திருஷ்டி போட்டது யார்?
நொய் வெந்துவிட்டது. இறக்கி, சூடு தணிய ஆற்றினாள். பால் கைவசம் இல்லாததால், சிறிது மோரும் உப்பும் கலந்து எடுத்துக்கொண்டு கணவனருகில் வந்தாள்.
“எழுந்திருங்கோன்னா, கஞ்சி கொண்டுவந்திருக்கேன்… குடிச்சுட்டுப் படுத்துக் கோங்கோ…”
விஸ்வம் எழுந்து உட்கார்ந்தான்.
“கொழந்தேள்ளாம் சாப்பிட்டாளோ? நீ என்ன சாப்பிட்டே?”
“வக்கீலாத்துலேந்து கொண்டுவந்திருந்த பழையது இருந்துது… பசங்க அதைச் சாப்டுட்டு வாசல்ல விளையாடறா. எனக்குப் பசிக்கல… சரோஜாவாத்துல முறுக்கு சுத்தக் கூப்பிட்டிருக்கா… போனேன்னா முறுக்கை சுத்திட்டு, அப்படியே ரெண்டு வாய் போட்டுண்டு வந்துடுவேன். நீங்க கஞ்சியக் குடிங்கோ…”
கஞ்சியைக் குடித்து டம்ளரை மனைவியிடம் விஸ்வம் நீட்டியபோது, அவன் கண்களிலிருந்து நீர் பெருகிக் கன்னத்தில் ஓடியது.
“என்னன்னா இது… சின்னக் கொழந்தையாட்டம்…”
கண்களைத் துடைத்த ராஜத்தின் கைகளை விஸ்வம் பிடித்துக்கொண்டு விசும்பினான். “நா கையாலாகாதவனா ஆயிட்டேண்டி, ராஜம்… நீயும் கொழந்தைகளும் பிச்சைக்காரா மாதிரி யார்யார் ஆத்துலயோ சாப்பிடற நிலைமை வந்துடுத்தேடி…”
“என்னன்னா இது… எனக்கு தைரியம் சொல்லவேண்டிய ஆம்பிளை, நீங்களே இப்படி வருத்தப்பட்டா எப்படி? கால் ரெண்டும் இல்லாட்டாலும், புருஷனா நீங்க என் மஞ்சளுக்கும் குங்குமத்துக்கும் குந்தகமில்லாம, முழுசா இருக்கேளே… இது போதும்னா எனக்கு! அந்த அம்பாள் நம்பளைக் கைவிட மாட்டா… தைரியமா இருங்கோ!”
அம்பாளாவது, கைவிடாமல் இருக்கிறதாவது!
குடியே மூழ்கிப்போய்விட்டது… இனி எந்தத் தினுசில் அம்பாள் வந்து கரைசேர்க்கப் போகிறாள்!
ம்ஹூம்… ஒன்றுமில்லை.
ராஜத்துக்குத் தன் நிலைமை நிதர்சனமாகத் தெரிந்ததுதான். நொந்துகிடக்கும் கணவனைத் தேற்ற ஏதாவது சொல்ல வேண்டாமா? சொல்கிறாள்… அவ்வளவுதான்.
சின்ன வயசிலேயே தாய் தந்தையை இழந்தவள் ராஜம். பந்துக்களின் அன்பை அவளுக்குக் கொடுக்காத அம்பாள், தங்கமான குணத்தையும், ‘பளிச்’சென்று கண்ணில் நிற்கும் உருவத்தையும் கொடுத்திருந்தாள்.
அவளைப் பத்து வயது வரைக்கும் வளர்த்துவந்த உறவுக்கார மாமி, யாரோ சொல்லி யாரோ கை காட்ட, வந்தவரைக்கும் லாபம் என்று ராஜத்தை சுற்றுவேலைக்கு ஒரு டாக்டர் வீட்டில் விட்டாள்.
டாக்டர் வீட்டுக் குழந்தைகள், பெரியவர்கள், ஏவும் வேலைகளைச் செய்யத் தொடங்கி, அந்த வீட்டின் தேர்ந்த சமையல்காரியாகவே ராஜம் மாறினபோது, அவளுக்கு வயது பத்தொன்பது.
டாக்டர் தம்பதி நல்லவர்கள். ஒன்பது வருடங்களாய் உண்மையாய் உழைத்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுப்பது நம் கடமை என்று உணர்ந்து, ராஜத்துக்கு மாப்பிள்ளை தேடினவர்கள் கண்களில், ‘பிராமணாள் காபி ஓட்டல்’ சொந்தக்காரர் வேதாசலம் விழுந்தார். வேதாசலத்துக்கு விஸ்வம் ஒரே பையன். எஸ்.எஸ்.எல்.ஸி. பாஸ் பண்ணின பிறகு, அப்பாவின் கடையிலேயே அவருக்கு உதவியாய் இருந்தான். வயது இருபத்தியிரண்டு.
விஸ்வத்துக்கும் ராஜத்துக்கும் சுபயோக சுபதினத்தில் கல்யாணம் நடந்தது.
திருமணமான ஒருசில நாட்களுக்குள், மாமனாரைப் புரிந்துகொண்டு விட்டாள் ராஜம்.
மனைவியைப் பறிகொடுத்த வேதாசலம், வயதுவந்த பிள்ளை இருந்ததால் இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தயங்குவதும், பெண்டாட்டி ஆசை இன்னும் மனசில் பூதமாய் உட்கார்ந்திருப்பதும் ராஜத்துக்குப் புரிந்துபோனது.
காபி, தண்ணீர் கொண்டுபோனால், கையைத் தொட்டு வாங்குவார். விஸ்வம் அருகில் இல்லாதபோது, தலையைத் தடவுவார். ‘மருதாணி பத்தியிருக்கான்னு பார்க்கறேன்’ என்று உள்ளங்கையைப் பிரித்துத் தடவுவார். ‘தலை வலிக்கிறது, அமுக்கிவிடும்மா…’ என்று பணித்துவிட்டு, இவள் குனிந்து அமுக்கும்போது மார்பகத்தை உற்றுப்பார்ப்பார். இன்னும் சில்லறை சில்லறையாய் என்னென்னவோ…
அப்பாவின் பாசம் அறியாத ராஜத்திற்கு, வேதாசலம் இப்படி நடந்து கொள்வது முதலில் தப்பாய்த் தெரியவில்லை. ஆனால் வெகு விரைவிலேயே, இது தகப்பன் பாசம் அல்ல, பெண்டாட்டிக்கு அலையும் ஆசை என்று புரிந்தபோது, பயந்துபோனாள்.
இதை எப்படி நிறுத்துவது?
‘அப்பா உன்னண்ட எத்தனை அன்பு வெச்சிருக்கார், தெரியுமாடீ? நேத்து ஓட்டல்ல சாம்புகிட்ட சொல்லிண்டிருக்கார், ‘பொண்ணு இல்லேங்கற கொறையை ராஜம் தீர்த்துட்டா’ன்னு! கேக்கறச்சே எனக்கு எத்தனை சந்தோஷமா இருந்தது, தெரியுமாடீ?’ என்றும்,
‘இன்னிக்கு வெள்ளிக்கிழமை, உனக்குப் பூ வாங்கித்தரணும்னு எனக்குக்கூட ஞாபகமில்லே… அப்பாதான் ஓட்டல தூபம் காட்டி பூப் போட்டப்பறம், ‘இந்தாடா, இதுல பாக்கிப் பூ இருக்கு, ராஜத்தண்ட கொண்டு குடு’ன்னார்…’ என்றும்,
ஒன்றுமே தெரியாமல் சந்தோஷிக்கும் ஆத்மாவிடம், என்னவென்று ராஜம் சொல்வாள்?
வேதாசலமும் எமகாதகர்தான்.
தலைக்குத் தைலம் தேய்க்கும்படியோ, காலை அமுக்கும்படியோ, மாட்டுப் பெண்ணிடம் பிள்ளைக்கு எதிரில் கேட்க மாட்டார். ஓட்டலை அவனைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு திட்டமிட்டு வீட்டுக்கு சுருக்க வரும் நாட்களில்தான் இந்தக் கூத்தெல்லாம்.
வேதாசலத்தின் உள்நோக்கம் புரிந்ததிலிருந்து, அவர் தலையை தெருக் கோடியில் கண்டாலேயே பக்கத்துப் போர்ஷன் குழந்தைகளைத் தன் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுவாள் ராஜம். இல்லையென்றால், பரக்கப்பரக்க வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்கோ கடைக்கோ கிளம்புவாள்.
கூடுமானவரையில் தன்னால் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் ஆகாமல் போகக் கூடாது என்ற பைத்தியக்கார ஆசை அவளுள் இருந்ததாலேயே, வாயைத் திறந்து புருஷனிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்ததோடு, முடிந்தமட்டும் மாமனாரிடம் தனியாக அகப்பட்டுக் கொள்ளாமலும் இருந்தாள்.
எத்தனை நாட்களுக்குத்தான் இப்படிக் கண்ணாமூச்சி ஆட முடியும்!
ராஜத்துக்குக் கல்யாணமாகி எட்டு மாசம் ஆனபோது, வயிற்றில் தலைச்சன் பிள்ளைக்கு ஆறு மாசம்.
ஒருநாள் ஓட்டலுக்கு விஸ்வம் புறப்பட்டுப் போய்விட்டான். ‘சித்த மயக்கமா இருக்கு, நா அப்பறமா வரேன்…’ என்று வேதாசலம் வீட்டில் தங்கிவிட்டார்.
கல்லா சாவியை மறந்துவிட்டதால், பத்து நிமிடத்தில் அதை எடுத்துச் செல்ல வீட்டுக்குத் திரும்பியிருக்கிறான் விஸ்வம்.
ராஜம் குளித்துவிட்டு வந்து சமையலறைக்குள் கதவை சாத்திக்கொண்டு புடவை உடுத்திக்கொள்வதையும், கதவு இடுக்கு வழியாக அப்பா அவளை ரசிப்பதையும் நின்று கவனித்துவிட்டான்.
பிறகு?
பிறகென்ன!
விஸ்வம் ஓர் ஆண்பிள்ளை என்று தட்சணமே நிரூபித்துவிட்டான். வாய்வார்த்தையாக ஒன்றுமே பேசவில்லை… எங்கு போனானோ, எப்படிச் சுற்றினானோ… அன்று மாலையே ஊருக்கு அந்தக் கோடியில் ஓர் அறையை வாடகைக்குப் பேசின பின், பெட்டி சாமான்களுடன் மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.
‘ஏண்டா?’ என்று வேதாசலமும் கேட்கவில்லை; ‘என்னன்னா?’ என்று ராஜமும் வாயைத் திறக்கவில்லை.
மூவருக்குமே காரணம் தெரிந்ததுதான்.
கையிலிருந்த பணத்தைக் கொண்டு அத்தியாவசியமான பொருட்களை விஸ்வம் வாங்கினான். அன்றாடம் ராஜம் உதவி செய்ய, ஒரு டின் பட்டாணி சுண்டல், மசால் வடை, முறுக்கு தயாரித்து, பீச்சில் விற்க ஆரம்பித்தான். பண்டங்கள் ருசியாய் தரமாய் அமைந்ததால், வறுமையில்லாமல் குடும்பத்தை ஓட்டுமளவுக்கு வருமானம் வந்தது. பணத்தில் பெண்டாட்டியை விஸ்வம் புரள விடாவிட்டாலும், தன் அன்பால் அவளைத் தாங்கத்தான் செய்தான்.
லக்ஷ்மி பிறந்தாள். இரண்டு வருடத்தில் வைதேகியும் சேர்ந்துகொண்டாள். காலம் இருக்கும் இருப்பில் இதற்குமேல் வேண்டாம் என்று ராஜமும் விஸ்வமும் தீர்மானித்து, புத்தியுடன் நடந்துகொண்டார்கள்.
கணவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்தபின், எஞ்சி நின்ற பொழுதில் அப்பளம் வடகம் இட்டு, தன்னாலான அளவில் வருமானத்தைக் கூட்டினாள் ராஜம்.
கடன் இல்லாமல், யார் தயவையும் எதிர்பார்க்காமல் ஏதோ திருப்தியாய் வாழ்ந்து வந்தவர்களின் நிம்மதி, சென்ற வருஷம் ஓர் அடைமழை பெய்த நாளில் பறிக்கப்பட்டது.
பதார்த்தங்களை மழையின் காரணமாய் விற்க முடியாமல்போனதால், இரவு வெகு நேரம் பீச்சில் சுற்றியலைந்த விஸ்வம், கிடைத்தவரைக்கும் போதுமென்று தீர்மானித்து வீட்டை நோக்கி நடக்க எண்ணி, சாலையைக் கடந்திருக்கிறான்.
பிசாசாய் வந்த காரை அவன் கவனிக்கவில்லை… இருளில் மழையில் இரண்டு தகர டின்களைத் தூக்கிக்கொண்டு சாலையைக் கடக்கும் விஸ்வத்தை வண்டியோட்டியும் பார்க்கவில்லை.
செமை அடி.
மழையைத் தனக்கு சாதகமாய் வைத்துக்கொண்டு கார்க்காரன் நிற்காமல் ஓடிவிட்டான்.
விஸ்வத்தின் இரண்டு கால்களும் தொடைக்குக் கீழ் அறுபட்டுப்போயின. வலது கையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு.
ஆறு மாசங்கள் பொது மருத்துவமனையில் கிடந்தான் விஸ்வம். ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் நடையாய் நடந்து, ஓய்ந்து, தேய்ந்துபோனாள் ராஜம்.
பிள்ளைக்கு அடிபட்ட விவரம் கேட்டு ஓடிவந்தார் வேதாசலம். அழுதார், புலம்பினார்… பண உதவி செய்ய முன்வந்தார்.
முதல் மாசம் அப்பாவிடம் முகம் கொடுத்துப் பேசாமல் வீம்பாய் இருந்தான் விஸ்வம். ஆனால் இந்த வைராக்கியமும் பிடிவாதமும் எத்தனை நாளைக்கு! கஷ்டத்திலும் வறுமையிலும் புரண்டு, மாசங்களைக் கடத்தினபோது, வேண்டாமென்று உதவியை ஒதுக்க தனக்கு யோக்யதை இல்லை என்று பூரணமாய் உணர்ந்து, அப்பாவின் கரிசனத்தையும் அன்பையும் பண உதவியையும் வாய் திறக்காமல் ஏற்றுக்கொண்டான்.
ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும், ஒன்றுக்கும் உபயோகமில்லாத விஸ்வத்தையும், ஐந்து, இரண்டு வயசு லக்ஷ்மி, வைதேகியையும் காப்பாற்றி, குடும்பத்தை நடத்துவதற்குள் ராஜத்தின் முழி பிதுங்கித்தான்போயிற்று.
“என்னத்துக்காக இங்க கெடந்து ஒரு வாய் சோத்துக்கில்லாம திண்டாடணும்? அங்க வந்து என்கூட இருக்கப்படாதா? நா சம்பாதிச்சு கொஞ்சம் சேத்து வெச்சிருக்கறதெல்லாம் யாருக்கு? இதென்ன வைராக்கியம்?” – இவர்கள் விட்டுக்கு வரும்போதெல்லாம் வெளிப்படையாய், தைரியமாய் வேதாசலம் பேச முற்பட்டுவிட்டார்.
சரோஜா வீட்டில் முறுக்குச் சுற்றிவிட்டு களைத்துப்போய் அன்று ராஜம் வீடுதிரும்பினபோது, வேதாசலம் அங்கிருந்தார்.
விஸ்வத்தின் தலைமாட்டில் ஆறு ஆரஞ்சுப் பழங்கள், இரண்டு ஆப்பிள், ஒரு ஹார்லிக்ஸ் புட்டி, குழந்தைகள் கையில் பிஸ்கோத்துப் பொட்டலங்கள்.
அவர் புறப்பட்டுப்போன பிறகு, மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு வெகுநேரம் படுத்திருந்த விஸ்வம் மெல்லச் சொன்னான், “ஆயிரம் இருந்தாலும் அவர் என்னைப் பெத்தவர்… என் கஷ்டம் தாங்காம உருகிப்போறார்! வயசான காலத்துல அவர்கிட்ட இருக்கறதுதான் நியாயம்னு தோண்றது. அவர் நம்மகிட்ட சண்டை போட்டாரா? இல்லை, வீட்டை விட்டுத் தொரத்தினாரா? என்னத்துக்காக நமக்கு இந்த வீம்பு? நா இப்படி ஆனப்பறம், அவரோட சேர்ந்து இருக்கறதுதான் நமக்கு செளகர்யம். அப்பா அழுது, மனசு கஷ்டப்படறது எனக்குத் தாங்கல! நாளைக்கு வண்டியோட வரேன்னார்… நா யோசிச்சுப்பாத்து சரினுட்டேன்… என்ன?”
பெண்டாட்டி ஒருவேளைச் சோறுகூட சரியாக உண்ணாமல் அல்லாடுவது தன மனசை உறுத்தினதாலும், வாய்க்கு ருசியாய் பதார்த்தங்களும் செளக்கியமாய்ப் படுக்க இடமும் தனக்குத் தேவைப்படுவதை உணர்ந்து விட்டதாலுமே விஸ்வம் இந்த முடிவுக்கு வந்திருப்பதை ராஜம் புரிந்து கொண்டதால், பேசாமல் இருந்தாள்.
மறுநாள், பழையபடி மாமனார் வீட்டோடு குடிபோயாகிவிட்டது.
வருஷங்கள் ஆனதாலோ, இல்லை தனக்கும் குழந்தைகள் பிறந்து உடம்பு தேய்ந்துபோனதாலோ, இல்லை பிள்ளை இப்படி ஆகிவிட்டானே என்று இடிந்து போனதாலோ, தெரியவில்லை… வேதாசலம் முதலில் சில நாட்களுக்கு அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று தன் வழிக்கு வராமல் இருந்தபோது, ராஜம் மகிழ்ந்துதான்போனாள்.
ஆனால், வெகு சீக்கிரத்திலேயே பழைய குணங்களான தொடுவது, தடவுவது, கள்ளத்தனமாய்ப் பார்ப்பது எல்லாம் தலையெடுக்கவும், அவள் இருதலைக்கொள்ளி எறும்பானாள். நிம்மதியாய் இருக்கும் கணவனிடம் எதுவும் சொல்லவும் பயம்.
ராஜம் வாயை மூடிக்கொண்டு இருக்கயிருக்க, வேதாசலத்தின் ஆசை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
அன்று வெள்ளிக்கிழமை. விடியற்காலை எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, ஸ்வாமியிடம் கண்மூடி அவள் நின்றபோது, பின்னால் அரவம் கேட்டுத் திரும்பினாள்.
வேதாசலம்…
கையில் பூப்பந்தோடு நின்றிருந்தார். அவள் கைகளில் அதைக் கொடுத்து, அவள் வாங்க முயன்ற சமயத்தில் இறுக அணைத்து வாயில் முத்தமிட்டதும், ராஜம் பதறிப்போனாள்.
“நீங்க என் தோப்பனாருக்குச் சமம்… வேண்டாம்ப்பா… அப்பா…” என்று தவித்துப் புலம்பி தன்னை விடுவித்துக்கொண்டு சமையல்கட்டுக்கு ஓட்டமாய் ஓடிப்போனாள்.
அன்று மதியம் கணவனை உட்காரவைத்து அவன் மார்பில் தலையை சாய்த்துக்கொண்டு, “நாம்ப பழையபடி தனியாப் போயிடலாம்னா… இந்தாத்துல இருக்க எனக்கு பயமா இருக்கு… காரணத்தைக் கேக்காதீங்கோ… நாம்ப போயிடலாம்னா…” என்று ராஜம் அழுதாள்.
பதறும் மனைவியைக் கண்களை இடுக்கிப் பார்த்தான் விஸ்வம். தலைமுடியைக் கோதவில்லை, கண்களைத் துடைக்கவில்லை, இதமாய் இரண்டு வார்த்தைகள் சொல்லவில்லை…
ஒன்றுமே சொல்லாமல் மெளனமாய் பல நிமிஷங்களுக்கு இருந்துவிட்டு, பிறகு பேசினான்.
“இப்ப என்ன நடந்துடுத்துன்னு நீ அழுது அமக்களம் பண்றேடீ? நாந்தான் ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லாதவனா ஆயிட்டேன்… நம்ப குடும்பத்தைக் காப்பாத்தறது – ஆணுக்கு ஆணா நின்னு காப்பாத்தறது – அப்பாதானே? அவரும் மனுஷர்தானே? அவர் இஷ்டப்படி நடந்துண்டா நீ என்ன தேய்ஞ்சாபோயிடுவே?”
தணலை வாறிக்கொட்டின தினுசில் கணவன் பேசின உடனே, தடக்கென தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள் ராஜம்.
செளக்கியமான சாப்பாடு, வசதியான வாழ்க்கை – இன்றைக்கு விஸ்வத்துக்கு ரொம்ப அவசியம். அவற்றை இனி எத்தனை உழைத்தும் அவனாலோ அவளாலோ கனவில்கூட அடையமுடியாது என்பதை அவன் நிதர்சனமாய் உணர்ந்துவிட்டதால், சூன்யமான பார்வையுடன் பேசிவிட்டு மீண்டும் ஆயாசத்துடன் படுக்கையில் சாய்ந்தபோது, ராஜம் வாய்வார்த்தையாய் பதிலேதும் பேசவில்லை.
ஆனால், அந்த வெள்ளிக்கிழமை ராத்திரி, தான் கட்டிய புடவைத் தலைப்பால் கழுத்தை சுருக்கிட்டுக்கொண்டு ராஜம் செத்துப்போனாள்.
– 1978
* * * * *
சுத்தம்
ப்ரீதி ரொம்ப சுத்தம். இன்றைக்கு என்றில்லை… சின்ன வயது முதற்கொண்டே இந்த சுத்த உணர்வு ரொம்ப ஜாஸ்திதான். இவளையொத்த பெண்கள் பள்ளி விடுமுறை நாட்களில் ஸ்கூல் எக்ஸ்கர்ஷன், மகாபலிபுரம் போகிறோம், திருநீர்மலை ஏறப்போகிறோம் என்று அலைந்த நாட்களில்கூட, “நா வரலப்பா… எனக்கு வேலை இருக்கு!” என்று ஒதுங்கிவிடுவாள். ஒருநாள் லீவு கிடைத்தால், மண்டையை ஓட்டை போடும் வெயிலில் நின்று புடவைகளைத் தானே தோய்த்து, கஞ்சி போட்டு உலர்த்தி, இஸ்திரி பண்ணுவாள். இல்லாவிட்டால், அலமாரி சாமான்களை இறக்கிவைப்பாள்; அழுக்குப் பேப்பரை மாற்றுவாள்; புடவைகளைச் சீராய், குஞ்சம் ஒரு பக்கம், மடிப்பு ஒரு பக்கம் என்று அடுக்குவாள்; ஊதுபத்தி பாக்கெட் வாங்கி பிரித்துப் போடுவாள்; பாக்கெட் மணியில் ‘ஃப்ளவர் டஸ்ட்’ வாங்கி உடுப்புகள் நடுவில் வைப்பாள். இதுவும் இல்லாவிட்டால், தன் மேஜையைத் துடைப்பாள்… தூசி இல்லாமல் தட்டி, புத்தகங்களையும் மற்ற சாமான்களையும் புதிதாய் வைப்பாள்.
“ஏண்டி, ஆளைப் பண்ணச் சொல்லேன்… நீ எதுக்கு கெடந்து அல்லாடறே?” என்று அம்மா அங்கலாய்ப்பார்.
“ச்சே… அவனுக்கு நன்னாவே பண்ணத் தெரியலைம்மா! கை நகத்துல வண்டி அழுக்கு! என் துணிமணியெல்லாம் நானே க்ளீன் பண்ணிக்கறேம்மா… ஐ லைக் இட்!” என்று பதில் ரெடியாய் வரும்.
இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்த ப்ரீதியின் சுத்த உணர்வு, இவள் கணவன் அமெரிக்காவுக்கு விஸிட்டிங் புரொஃபஸராக ஒரு வருடம் போனபோது, தானும் கூடச் சென்று அங்கு குடித்தனம் செய்துவிட்டுத் திரும்பியதிலிருந்து, வெறியாக மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
அமெரிக்காவின் சுத்தத்தை, தன்னுடைய எண்ணூறு ரூபாய் வாடகை வீட்டிற்குக் கொண்டுவந்துவிடத் தலைகீழாய் நிற்க ஆரம்பித்தாள்.
தரையும், சுவர்களும், பொருட்களும் மின்னி ஜொலித்ததுகூட ஆச்சர்யமில்லை… இந்த பாத்ரூமைத்தான் குறிப்பாகச் சொல்ல வேண்டும்! ஒருபக்கமாய் மொஸைக் தரையிலும், ‘க்ளாஸட்’ மேலும், புஸுபுஸுவென்ற அழகான கம்பளங்களைக் கொணர்ந்து விரித்தாள். யாரும் சொட்டு ஜலம் விடக் கூடாது! “அந்த நாட்டுப் பழக்கவழக்கம், கிளைமேட்டுக்கு இந்தக் கவர் எல்லாம் தேவை… நமக்கு எதுக்கும்மா?” என்று கணவன் சொன்னதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிட்டாள். யாராவது பாத்ரூம் உபயோகப்படுத்த விரும்பினால், அவர்கள் அந்தத் தகதகக்கும் சுத்தமான அறையில் விருப்பப்படி கையை நீட்டிக் காலை ஆட்டிக் குளிக்கக்கூட முடியாமல் தவித்துத்தான் போனார்கள்.
வீட்டில் ஒரு குந்துமணி இடத்தில் தூசி தும்பு இருப்பதில் ப்ரீதிக்கு இஷ்டமில்லை. இடுப்பில், சலவை செய்து வந்த துண்டை ஏப்ரனுக்கு மேல் செருகிக்கொண்டு, சதா சாமான்களைத் தட்டினாள். நிமிடத்துக்கு ஒரு தரம் கையை சோப்புப் போட்டுக் கழுவினாள். மற்றவர்களையும் அலம்பச் செய்தாள்.
“சீ… இந்த கண்ட்ரிலே என்ன தூசி, என்ன அழுக்கு! கையை அலம்புங்கோ!”
“ஐய்யையோ… அழுக்குக் கையோட ஃப்ரிஜ்ஜைத் தொடாதீங்கோ!”
“ப்ளீஸ், செருப்புப் போட்டுண்டு கார்பெட் மேல போகாதீங்கோ… ஒரே மண்ணு!”
“டிராயிங் ஹால் சோபா மேல கால் வெக்காதீங்கோ… வெளிர் மஞ்சள் சில்க் துணி… அழுக்குப் பளிச்சுனு தெரியும்!”
“ஆமா, கார்க் கதவை ஸாவ்லான் போட்டுத் துடைச்சேளா? அந்தப் பிச்சைக்காரன் கதவைத் தொட்டுட்டானே…”
ப்ரீதியின் ‘க்ளென்லினெஸ் மேனியா’வுக்கு பலியானவர்கள் ஏராளம், ஏராளம்.
இவளின் கடுமையான உத்தரவு, நியம நிஷ்டைகளுக்கு பயந்துகொண்டு, வந்த இரண்டு நாட்களுக்குள் ஆட்கள் வேலையை விட்டு ஓடிப்போனார்கள்.
“ஐயே, அந்தம்மா வூட்டுல வேலை பண்ண நமக்குக் கட்டுப்படியாகாதும்மா! சும்மாச் சும்மா பெருக்கு, துடைங்கறாங்க!” என்றாள் ஒருத்தி.
“படா பேஜாரும்மா… வூட்டுக்குள்ள நுழைஞ்ச உடனே சோப்புப் போட்டுக் கை களுவணும்! தும்மக் கூடாது, இருமக் கூடாது! இன்னா பொண்ணும்மா அது!” என்றாள் இன்னொருத்தி.
“அவாத்துல மனுஷியால வேலை பண்ண முடியுமோ? அம்மிலே அரைக்கரச்சே கையால தள்ளக் கூடாதாம்… ஸ்பூன் வெச்சுண்டு தள்ளணுமாம்! இது சாத்தியமோ? அப்பளத்தை இடுக்கியால பரிமாறணுமாம், கை படக் கூடாதாம்! இது என்னடிம்மா கூத்து, லோகத்துல இப்படியும் ஒரு பொம்மனாட்டியா!” என்றாள், இவள் வீட்டுக்கு வந்து ஒண்ணேகால் நாள் தங்கி சமையல் வேலை செய்த அம்புஜம்.
வாஸ்தவம்தான்… ப்ரீதி கூத்துக்கட்டிதான் அடித்தாள். தன் சுத்த உணர்வுக்கு ஆட்கள் சரிப்பட்டுவராமல் போனபோது, “இவா தயவு எனக்கெதுக்கு? நானே பாத்துப்பேன்!” என்று வீறாப்புப் பேசினாள். அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்திருந்த வாஷிங் மெஷின், மிக்ஸி வகையறாக்களை வைத்துக்கொண்டு உயிரை விட்டாள்.
இந்தச் சமயத்தில், மேரி இவளிடம் வேலைக்கு வந்துசேர்ந்தாள். வெள்ளைக்கார துரை வீட்டில் வேலைசெய்து அனுபவமாம். மடிப்புக் கலையாத வெள்ளைப் புடவை, தூக்கிப் போட்ட கொண்டை, பிரா, காலில் செருப்பு என்று படு நறுவிசாய் இருந்தாள்.
மெதுவாய்ப் பேசினாள், பணிவாய் பதில் சொன்னாள். சம்பளம் மட்டும் எண்பது ரூபாய், சாப்பாடு போட்டு.
“வீட்டு வேலைக்காரிக்கா எண்பது ரூபாய், சாப்பாடு போட்டு!” என்று வாயைப் பிளந்தவர் அனேகம்.
ஆனால் ப்ரீதிக்கு மனதில் குறையில்லை.
“என் மனசு அறிஞ்சு நடந்துக்கறா, சொன்ன வேலையை ‘கப்’புனு புரிஞ்சுக்கறா, துண்டை இடுப்புல வெச்சிண்டு கை துடைச்சிக்கறா! சோம்பேறியா உக்காராம ஷெல்ஃப் தட்டறா! ஓ, ஷி ஈஸ் வெரி க்ளீன்! இன்னும் பத்து ரூபா சேர்த்துக் குடுக்கக்கூட நா ரெடி!”
அப்படியும் இப்படியுமாக மேரி வேலைக்கு வந்து பதினைந்து நாட்கள் கடந்த ஒரு நாளில், வீட்டில் குழம்புப்பொடி தீர்ந்துபோனது. சாதாரணமாய் ஊரிலிருந்து ஆறு மாதத்துக்கு ஒருதரம் பொடி அரைத்து அனுப்பும் அம்மா, இந்த முறை அனுப்பவில்லை. மறந்துபோய்விட்டதோ, இல்லை விட்டுப்போய்விட்டதோ… தெரியவில்லை.
நாமே இங்கு அரைத்துக்கொள்ளலாம், இது என்ன ப்ரும்ம வித்தையா என்று நினைத்திருந்ததால், ப்ரீதியும் அம்மாவுக்கு ஞாபகப்படுத்தி எழுதவில்லை. ஆனால், நினைத்தது நடக்காதபடி என்னவோ தொட்டுத்தொட்டு வேலை, நச்நச்சென்று மழை. சுத்தமாய் துடைத்துவைத்த மாதிரி பொடி தீர்ந்துபோய், ஒருநாள் அரைத்துவிட்ட சாம்பார், ஒருநாள் பொரித்த குழம்பு, ஒருநாள் மோர் சாம்பார் என்றும் வைத்தாகிவிட்டது. இனியும் எப்படிச் சமாளிப்பது?
அன்றைக்கு சாமான்களைத் திட்டமாய் ‘சமைத்துப்பார்’ புத்தகத்தில் சொல்லியிருந்த தினுசில் தயார்செய்து டப்பாவில் போட்டுக்கொண்டு, மேரி உடன்வர, காரில் ப்ரீதி கிளம்பினாள்.
“அரைக்கிற மிஷின் எங்க இருக்குனு தெரியுமா, மேரி?”
“எங்க விட்டுக் கிட்டத்துலயே ஒண்ணு இருக்குதும்மா… குடுங்க, நா அரைச்சிட்டு வந்துடறேன்…”
“நோ, நோ… நானும் வரேன்… சுத்தமா, கிட்ட நின்னு அரைக்கச் சொல்லணும்!”
மேரி வழி சொல்ல, இவள் அங்கு வண்டியை ஓட்டிச் சென்றாள். சந்து குறுகலாய் இருக்கவே, சற்று எட்டி வண்டியை நிறுத்தினாள்.
மெஷின் கட்டடம் ரொம்பப் பழசாக இருந்தது. என்றைக்கோ வெள்ளையடித் திருந்த கட்டடத்தில் இங்குமங்கும் சிவப்புக் கற்கள் தெரிந்தன.
“இதுவா? க்ளீனா இல்லியே, மேரி! வேற எடத்துக்குப் போலாமே…”
“உள்ள நல்லா இருக்கும்மா… எனக்கு வேற மிஷின் தெரியாதுங்க…”
முகத்தைச் சிணுங்கிக்கொண்டே ப்ரீதி கீழே இறங்க முற்பட்டாள். முதல் நாள் பெய்த மழையில் தரை சொதசொதத்திருந்தது. சற்றுத் தள்ளியிருந்த ஓட்டு வீடுகளின் வாசலில், அம்மணமாய் குழந்தைகள் மூக்கில் சளி வழிய, ஓடிய தண்ணீரில் காகிதக் கப்பல் விட்டுக்கொண்டிருந்தனர்.
“நீங்க இருங்கம்மா… நா உள்ளார போய் மிஷின் ஓடுதான்னு பார்க்கறேன்…” மேரி இறங்கிப்போய் இரண்டு நிமிஷத்தில் இவளிடம் வந்தாள். “கரெண்ட் இல்லம்மா… நீங்க வீட்டுக்குப் போங்க, நா இருந்து அரைச்சிட்டு வரேன்…”
“ஓ காட்… வாட் எ நியூசென்ஸ்! கரெண்ட் எப்ப வருமாம்?”
“நாழி ஆவலாம்ங்கறாங்க…”
ப்ரீதி யோசித்தாள். மணியைப் பார்த்தாள். பதினொன்று. பன்னிரெண்டு மணிக்கு உமா வருவதாய்ச் சொல்லியிருக்கிறாளே…
“நீ என்ன சொல்றே, மேரி?”
“நீங்க போங்கம்மா… நா பார்த்துக்கறேன்…”
மேரியின் மேல் உண்டாகிவிட்ட அதீத நம்பிக்கையால், பாத்திரங்களை அவளிடம் கொடுத்த ப்ரீதி, கூடவே துணி ஒன்றையும் கொடுத்தாள்.
“மிஷினை நல்லா துடைச்சிட்டு அரைக்கச் சொல்லு… எவங்க தொட்டதோ! என்ன?”
“சரிம்மா…”
“கை படாம அரைச்சு எடு… தொறந்து போடாம, வீட்டுக்கு உடனே எடுத்துட்டு வந்துடு!”
“சரிம்மா…”
“அப்ப, நா போறேன்… பார்த்து அரைச்சுண்டு வா!”
“சரிம்மா… நீங்க கவலைப்படாம போங்க… நா பார்த்துக்கறேன்! உங்க சுத்தம் எனக்குத் தெரியாதா?”
நம்பிக்கையளிக்கும் தினுசில் மேரி புன்னகைக்க, இவள் கிளம்பிப் போனாள்.
கார் அந்தப் பக்கம் போனதும், மேரி பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு மெஷின் கட்டடத்துக்குள் போனாள்.
“இன்னா, மேரி… மிஷினை நிப்பாட்டச் சொல்லிட்டு எங்க போயிட்டே? ஆளு காத்திருக்காங்க… ஓட்டலாமா?”
முண்டாசு கட்டின ஆள் மேரியைப் பார்த்துக் கேட்கவும், இவள் தொப்பென்று பாத்திரங்களை வைத்துவிட்டுத் தரையில் உட்கார்ந்தாள்.
“ஓட்டு, அண்ணே… நல்லவேளையா நீ நிப்பாட்டினியோ, அந்தம்மா உள்ளார வராம போச்சோ! இல்லாட்டி உன் தாவு தீந்துபோயிருக்கும் இன்னிக்கு!”
‘டொர்…ரூம்…’ என்ற உறுமலோடு மெஷின்கள் ஓடத் தொடங்கின. கூடையும் கையுமாய் காத்துக் கிடந்த ஒரு பெண், “நா மொளகா அரச்சிக்கினு போயிடறேங்க்கா…” என்று மேரியிடம் சொல்லி மெஷினிடம் சென்றாள்.
சற்றுமுன் மிளகாயும் மஞ்சள் தூளும் அரைத்த இன்னொரு பெண், ஒருபக்கமாய் ஒதுக்கிவிடப்பட்ட இடத்தில் அவற்றைக் கொட்டி, தகரத் தட்டால் துளாவிக்கொண்டிருந்தாள். அவள் கிட்டத்தில் பத்து மாதப் பிள்ளை ஒன்று தவழ்ந்தது.
“தே… போ அப்பால… நெடி ஏறுது!” என்று பிள்ளையை விரட்டினவள், “இன்னா மேரிக்கா, இன்னேரத்துல மிஷினுக்கு வந்து குந்திக்கினே?” என்று குசலம் விசாரித்தாள்.
“ச்சூ!” என்று சூள்கொட்டின மேரி, பதிலேதும் கூறவில்லை.
துளாவி முடிந்த கையோடு அவற்றை டப்பாக்களில் அந்தப் பெண் அள்ளி முடிப்பதற்கும், குழந்தை ‘ஜொர்’ரென்று சிறுநீர் கழிப்பதற்கும் சரியாக இருந்தது. கோடாய் ஓடிய நீர் அங்குமிங்கும் வளைந்து கோலம் போட்டது.
இதற்குள் மெஷினில் மிளகாய் அரைத்து முடித்த பெண், அதை ஆறப்போட வேண்டி கிட்டத்தில் வந்தாள்.
“அட, இன்னாடா நீ… இங்க போய் ஒண்ணுக்கு இருந்துக்கினு! இப்ப நா எங்க கொட்டி தொளாவுறது? ஆங்?”
பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு எழுந்த மேரி, அந்தப் பெண்ணின் சங்கடம் புரிய, மெஷின் துடைப்பதற்காக ப்ரீதி கொடுத்திருந்த துணியை அவளிடம் வீசி, “இதால துடைச்சிடு…” என்றாள்.
இடத்தை சுத்தமாய்த் துடைத்த பெண்ணும், அது காய்ந்த உடன் மிளகாய்த் தூளை அங்கு கொட்டினாள்.
மெஷின், சப்தத்தோடு ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓசையையும் மீறி முண்டாசுக்காரன் மேரியிடம் பேச்சுக்கொடுத்தான்.
“தாஸுக்கு வேலை கிடைச்சிடுச்சா, மேரி? ஆளைக் கண்ணுலயே காணுமே? வேலை தேடி ரொம்ப அலையறானா?”
“எங்க! அதுவும் அலையாத, ஏறாத எடமில்ல… எங்க கிடைக்கிது?” மேரி சலிப்புடன் கத்தினாள்.
பக்கத்தில் சீயக்காய்ப் பையை யாரோ உதற, முண்டாசுக்காரன், ‘லொச்… லொச்…’ என்று நான்கு முறை தும்மி, மூக்கில் சேர்ந்த சளியை இடக்கையால் வழித்து சுண்டியெறிந்தபின், விரல்களை மெஷினின் மேல்புறத்தில் தேய்த்தான்.
“உன் புது வூட்டு வேலை எப்படியிருக்குது? சல்லிசா இருக்கா?”
“ஐயே… என்னா சல்லிசு? ஆளை ஒரு நிமிஷம் ஒக்கார உடமாட்டேங்கறாங்க! எங்க வூட்டுக்காரருக்கு ஒரு எடத்துல வேலை கிடைச்சிடுச்சின்னா, நா இந்த இடத்துக்குத் தலைமுழுகிடுவேன்! சரியான கேஸு இந்தம்மா!”
மிளகாயும் சாமான்களும் அரைபட்டுவிட்டன. அவற்றை எடுத்துவந்து, சற்று முன் குழந்தை சிறுநீர் கழித்து இப்போது காய்ந்துவிட்ட இடத்தில் கொட்டி ஆறவைத்தாள் மேரி. பின், வெளியில் வந்து விளையாடிக்கொண்டிருந்த பையன்களில் ஒருவனை அழைத்தாள்.
“டே ராசு, இங்க வாடா… ஒரு பொட்டலம் தாரேன், அதை எங்க வூட்டுக்காரர்கிட்ட குடுத்துடுடா… இந்தா, பத்து காசு, குச்சி ஐஸ் சாப்பிடு, கண்ணு…”
ராசு, பத்து காசுக்கு ஆசைப்பட்டு உள்ளே வந்தான்.
பழைய பேப்பர் ஒன்றை எடுத்து, அரைத்திருந்த மிளகாய் மற்ற தூள்களிலிருந்து கால்பங்கு போல எடுத்து பொட்டலம் கட்டி, ராசுவிடம் கொடுத்து, கூடவே பத்து காசையும் நீட்டினாள் மேரி.
பையன் காசு, பொட்டலத்தோடு ஓடினான்.
மேரி மிகுதிப் பொடியைப் பாத்திரங்களில் வாரிக் கொட்டினபோது, கூலி வாங்க அவளிடம் நெருங்கி வந்த முண்டாசுக்காரன், அவளுக்கு உதவியாக மஞ்சள், மற்ற சாமான் தூளைக் கையால் வாரி பாத்திரத்துள் போட்டான். அப்புறம், கூலியை அவன் சொல்ல, மேரி கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள்.
இரண்டடி சென்றவள் திரும்பி, குழந்தையின் மூத்திரம் துடைக்கப்பட்ட துணியை எடுத்துப் பாத்திரங்களை அழுந்தத் துடைத்தாள். பின்னர் துணி, பாத்திரங்களுடன் வெளியே நடந்தாள்.
மேரி வீட்டை அடைந்தபோது, விருந்தாளிகள் வந்துவிட்டனர். பளபளத்த வீட்டைப் பெருமையுடன் அவர்களுக்குச் சுற்றிக்காட்டின ப்ரீதி, கடைசியாய் சமையற்கட்டுக்குக் கூட்டிவந்தாள்.
அரைத்துவந்த பொடிகளைப் பாத்திரத்திலிருந்து கரண்டியின் உதவியுடன் கண்ணாடி சீசாக்களுக்கு மாற்றிக்கொண்டிருந்தாள் மேரி.
“நல்லா சுத்தமா அரைச்சியா, மேரி?”
“ஆமாம்மா…”
“மிஷினை முதல்ல துடைக்கச் சொன்னியா?”
“ஆமாம்மா, இங்க பாருங்க துணியில அழுக்கை!” என்று மூத்திரம் துடைத்த துணியை மேரி நீட்டினாள்.
“குட்! கை படாம எடுத்தியா?”
“ஆமாம்மா…”
‘பார்த்தீர்களா என் வீட்டு சுத்தத்தை!’ என்ற தினுசில் விருந்தாளிகளை ஒரு பார்வை பார்த்தாள் ப்ரீதி.
“ஒரு ஆபரேஷன் தியேட்டர் மாதிரி இருக்கு உங்க கிச்சன்… அத்தனை சுத்தம், அத்தனை பளபளப்பு! யுவர் சர்வெண்ட் ஈஸ் வெரி க்ளீன்!”
சினேகிதியின் பாராட்டில் பூரித்தாள் ப்ரீதி.
“அமெரிக்கா சுத்தத்தை இங்க எதிர்பார்க்காதேன்னு எல்லாரும் சொன்னா… பட், நெள லுக் அட் மை ஹவுஸ்! மனசு வெச்சா எதுதான் நடக்காது? ம்? நாம பொறுமையா கத்துக்குடுத்தா ஏன் ஆட்கள் கத்துக்க மாட்டா?”
தோளைக் குலுக்கி கர்வத்துடன் எஜமானி பேசியபோது, தன்னை மீறிக் கொண்டு எழுந்த சிரிப்பு வெளியில் தெரியாதிருக்கும்பொருட்டு, வேறு பக்கமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் மேரி.
– 1979
* * * * *