ஒரு மனிதனின் கதை

/ஒரு மனிதனின் கதை

(1)

த்யாகு கண்களை மூடிக்கொண்டான்.
தொண்டை, சுத்தமாய் வறண்டுபோயிருந்தது. நாக்கு, துணி மாதிரி துவண்டு விட்டது.
தலைக்குள் மரங்கொத்தி ஒன்று உட்கார்ந்துகொண்டு, ஓயாமல் கொத்திப் பிடுங்கும் வேதனை.
காதுக்குள் பறவைகளின் படபடா.
இந்த அவஸ்தை இன்னும் எத்தனை நாழிகைக்கு?
தலையைத் தூக்காமல் பார்வையை மட்டும் நிமிர்த்தி, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பார்த்து, யாரும் தன்னை ஊன்றிக் கவனிக்கவில்லையென்ற தைரியம் எழ, வலது கையை மெதுவாய் முன்னால் நீட்டி விரல்களைச் சற்றே பிரித்துப் பார்த்தான். நீட்டிய விரல்கள், குளிர் கண்ட தினுசில் நடுங்குவது புரிய, சடக்கென்று கையை மடித்துத் தொடைக்கும் நாற்காலிக்கும் நடுவில் செருகிக் கொண்டான்.
இந்த அவஸ்தை இன்னும் எத்தனை நாழிகைக்கு?
பேசாமல் மாடிக்குப் போய் ஒரு வாய் விஸ்கி குடித்துவிட்டு, போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டால், யாருக்கு என்ன தெரியப்போகிறது!
ஒரே ஒரு வாய்…
சின்ன மடக்காய்…
தவித்து வறண்டுபோகும் தொண்டைக்கு இதமாய்…
கொஞ்சம் உள்ளே போனால்கூடப் போதும்… அப்புறம், இந்த வறட்டல் இருக்காது, இந்தத் தவிப்பு இருக்காது, இந்த மரங்கொத்திக் கொத்தல் இருக்காது…
ஒரே ஒரு வாய்…
நாற்காலியை விட்டு எழுந்த த்யாகு, யாரோ பிடித்து அமுக்கின மாதிரி மீண்டும் உட்கார்ந்துகொண்டான்.
பெற்ற தகப்பன் பிணமாகக் கிடக்கும்போது, என்ன இழவு அவஸ்தை இது!
இந்தச் சில மணிநேரத்தைக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால், அப்புறம் என்ன மனுஷன் நான்!
இரண்டு கைகளாலும் நாற்காலியின் கீழ்ச்சட்டங்களை இறுகப் பற்றிக் கொண்டான்.
வேண்டாம்… இப்போது வேண்டாம்…
இன்னும் கொஞ்ச நேரத்தில் சித்தியும் குழந்தைகளும் வந்துவிடுவார்கள்… அப்புறம், சுடுகாட்டுக்குப் போய்வந்து குளித்த பின், கங்கா, சித்தி, மற்றவர்களுடன் கீழே இருக்கும் நாழிகையில், தைரியமாய், பாதியில் அவள் வந்துவிடுவாளோ என்ற பயமில்லாமல், மாடியில் குடிக்கலாம்.
மனசை, அது சப்புக்கொட்டிக்கொண்டு ஏங்கும் ட்ரிங்கிலிருந்து பிடுங்கும் முயற்சியோடு, த்யாகு தன்னைச் சுற்றிக் கவனித்தான்.
சாமிநாதனை, நடுக்கூடத்தில் தெற்கு வடக்காகக் கிடத்தியிருந்தார்கள்.
கால், கை கட்டைவிரல்களில் கட்டு. சித்தி வர முன்னேபின்னே ஆகலாம் என்பதால், முன்யோசனையுடன் இரண்டு பக்கமும் நீளநீளமான ஐஸ்கட்டிகள். அவற்றிலிருந்து உருகி ஓடும் ஜலத்தைத் தடுத்து நிறுத்தும் சாக்கு அணைகள். பிண நெடி எழாமலிருக்க, ஏராளமாய்த் தெளிக்கப்பட்ட யூடிகோலோன். பூ மாலைகள்.
நாட் பேட் அட் ஆல்!
மனுஷன் உசிரோடு இருந்த காலத்தில், சூடாக ஒரு டம்ளர் காபி கலந்து கொடுக்கக்கூட முகத்தைக் காட்டின கங்கா, இன்று சவமாகிப்போனவருக்கு விழுந்துவிழுந்து உபசாரம் செய்திருப்பதை உணர்ந்தபோது, அழுத்தமாக இறுகிக் கிடந்த உதடுகளின் உட்புறத்தைச் சின்ன முறுவல் ஒன்று கீறியது.
சிரிப்பா? இப்போதா?
சே! என்ன விவஸ்தையில்லாத மனசு இது!
அப்பனை தெற்குவடக்காகக் கிடத்தியிருக்கும்போது, ஒரு பிள்ளைக்கு சிரிக்கத் தோன்றுமா என்ன?
தோன்றுகிறதே! அப்புறம் என்ன செய்ய!
அப்பாவின்மேல் படிந்திருந்த கண்களை த்யாகு வாசப்பக்கத்துக்கு விரட்டினான்.
சாஸ்திரிகள், பச்சை மூங்கில், தென்னம் மட்டைகள், இதர சாமான்கள். ரொம்ப சிரத்தையுடன் கிட்டத்தில் நின்று மேற்பார்வை பார்க்கும் சேஷன் – கங்காவின் தகப்பனார்.
உயரமாய், தொந்தி தொப்பையுடன் நின்றுகொண்டு, கன அக்கறையுடன் வேலைவாங்கும் மாமனாரைப் பார்க்கையில், த்யாகுவினுள் பளிச்சென்று கோபம் சீறிக்கொண்டு மின்னியது.
எல்லாம் இந்த மனுஷனால்தானே?
சும்மா கிடந்த கங்காவைத் தூண்டிவிட்டவர் இவர்தானே?
நேற்று ஊரில் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்த மனுஷன், இன்று பிணமாகக் கிடப்பதற்கு, இவர்தானே காரணம்?
ஒன்றுமேயில்லாத விஷயத்தை அப்பாவும் பெண்ணுமாய்ப் பெரிசு பண்ணியதுமல்லாமல், இந்த மனுஷனை வரவழைத்துச் சொல்லி, இவரை உணர்ச்சிவசப்பட வைத்து, ஏற்கனவே ஹார்ட் பேஷண்டானவரை வாச்வாச்சென்று கத்தச் செய்து, இப்படிப் படுக்கவைத்துவிட்டு… அப்புறம் இந்த அக்கறை என்ன, முகத்தில் வண்டி வேதனை என்ன!
எல்லாம் வேஷம்தானே!
தொடைக்கடியில் அமுக்கிவைத்திருந்த கைவிரல்கள், இப்போது நன்றாகவே நடுங்கத் தொடங்கிவிட்டது புரிய, த்யாகு கால்களைப் பலமாக அழுத்திக் கொண்டான்.
திடுமென்று தொண்டை வறட்சி அதிகமாகி, மூச்சு விடுவது சிரமமாக இருப்பது போலத் தோன்ற, அவசரமாய் கொஞ்சம் எச்சிலைக் கூட்டிவிழுங்கிக் கொள்ள முயற்சித்தான்.
ம்ஹூம்… பிரயோஜனமில்லை.
காதுக்குள் எழுந்த இரைச்சலில், சப்தம் யாருக்காவது கேட்டுவிடுமோ என்று பயமாக இருந்தது.
ஒரே ஒரு பெக்…
சின்னதாய்…
ஒரு வாய்… தட்ஸ் ஆல்…

னியும் தாங்கமுடியாதென்று ஆனதும், த்யாகு எழுந்தான். கால்களை அகலஅகலமாக வைத்து, மாடிப்படிகளை இரண்டிரண்டாய்க் கடந்து, தன்னறைக்குள் இருந்த பாத்ரூமுக்குள் நுழைந்து, கதவைத் தாள்போட்டுக் கொண்டான்.
மார்புக்கூடு ஏறியிறங்கி, மூச்சு புஸ்ஸென்ற சப்தத்துடன் வெளிவந்தது.
டாய்லெட் ஃப்ளஷ் டாங்கின் மூடியைத் திறக்க முடியாதபடி கை ஏகமாய் நடுங்கியது.
திறந்தான். வலதுகையை உள்ளே விட்டு, நீரில் துழாவினான். மிதக்கும் ஃப்ளோட் பந்துக்கு அடியில், ஸைஃபனுக்குப் பக்கத்தில், பட்டையாய் படுத்துக் கிடந்த பாட்டிலை எடுத்தான்.
ஒருவித அவசரத்துடன் மூடியைத் திறந்து, மூக்குக்கு முன் அந்தத் திரவத்தை நீட்டி சுவாசித்த பின், ஒரு மடக்கு குடித்தான்.
அம்மா…
இதென்ன மணம்!
இதென்ன இன்பம்!
பொங்கிவரும் பால் ஒரு துளி ஜலத்தை ஸ்பர்சித்ததும் அடங்குவதுபோல, அந்தப் படபடப்பும் இரைச்சலும் மாயமாய்த் தேய்ந்து ஓய்ந்தன. மூளையின் ரத்த நாளங்களைக் கொத்திக்கொண்டிருந்த மரங்கொத்தி, பறந்து மறைந்தது.

நாலைந்து மணிநேரமாய் கிட்டாத நிம்மதி, வாடா ராஜா என்று இரு கைகளாலும் அணைத்துக்கொண்டது.
நின்று நிதானித்து அந்த இதத்தை அனுபவிக்கவிடாதபடி கதவு தட்டப்பட்டதும், பயத்துடன் த்யாகு, ”யாரு?” என்றான்.
கண்ணன்… அவன் மகன்.
”விசு மாமா வந்திருக்கார்… அம்மா உங்களை உடனே கீழ வரச் சொன்னா…”
”வரேன்… நீ போ.”
பெரிய வாயாய் ஒருதரம் குடித்த பின், பாட்டிலைப் பழையபடி டாங்கின் அடியில் படுக்கவைத்துவிட்டு, ஓசைப்படாமல் மூடியை மூடினான்.
கங்காவை எத்தனை வருஷங்களாக, எத்தனை சுலபமாக ஏமாற்ற, இந்த பாத்ரூம் டாங்கும் தன் சாமர்த்தியமும் உதவுகின்றன என்பதை நினைத்துப் பார்த்தவனுக்கு, சந்தோஷமாக இருந்தது.
கங்காவுக்கு வெஸ்டர்ன் க்ளாஸெட்டை உபயோகிப்பது பிடிக்காது.
”ஸ்டூல் மேல உக்காந்துண்ட மாதிரி… தூ! எனக்கு அதெல்லாம் வாண்டாம்ப்பா…”
அவளுக்கு, கீழே இருக்கும் இண்டியன் ஸ்டைல் டாய்லெட்தான் சரிப்பட்டு வரும். மாடி பாத்ரூமுக்குள் அவள் நுழைவது அத்திப்பூப்பதற்குச் சமம்.
கணவனின் குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டது என்பதைப் புரிந்துகொண்ட பிறகு, கங்கா அவனுடைய மாடி அறையை அக்கு வேறு ஆணி வேறாக அலசி, பாட்டில் வேட்டையாடியது உண்டுதான்… ஆனாலும், இந்த இடம் இன்றுவரை ஏனோ அவளிடம் அகப்பட்டுக் கொள்ளவே இல்லை.

பாத்ரூமை விட்டு வெளிவரும் முன், ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, நாலு தரம் புகையை உள்ளுக்கு வாங்கி வெளியில் விட்டான். விஸ்கியின் நெடி இல்லாமலிருக்கவேண்டி, எரியும் நிலையிலேயே சிகரெட்டை ஒருபக்கமாகக் கீழே போட்டுவிட்டுக் கதவைத் திறந்தான்.
அறையிலிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் நின்று, சென்ட்டா, ஆஃப்டர் ஷேவ் லோஷனா, இல்லை நீலகிரித் தைலமா என்று அரைநிமிஷம் யோசித்தவனுக்கு, தகப்பனின் பிணம் கிடக்கும்போது முதல் இரண்டும் அசட்டுத் தனமாய்த் தெரியும் என்பது புரியவே, நீலகிரித் தைலத்தை எடுத்து காலர் மேல் இரண்டு சொட்டுக்களை விட்டு, நெற்றியிலும் தேய்த்துக்கொண்டு கீழே வந்தான்.
விசு மாமா, சென்னையில் அவர்களுக்கு இருக்கும் சொல்ப உறவுக்காரர்களில் ஒருவர்.
அவரோடு கங்கா நின்றிருந்தாள்.
கண்களில் ஜலம், முகத்தில் வேதனை, புடவைத் தலைப்பில் கை.
”அடுத்த வருஷம் ஷஷ்டியப்தபூர்த்தி வர்றதும்மா, சாஸ்திரோக்தமா பண்ணிக்கணும்னு வாய்க்கு வாய் சொல்வார்… இப்படி நினைச்ச நினைப்பில்லாம போயிட்டாரே, மாமா… எனக்கு மனசு ஆறலியே… பிள்ளை காலடில உசிரை விடணும்னு கங்கணம் கட்டிண்டாப்பல, ராத்திரி போட்மெயில்ல புறப்பட்டு இங்க வந்து, இப்படிப் பொசுக்குனு போயிட்டாரே! சித்திய நா எப்படிப் பாப்பேன்… ஐயோ! என்னால தாங்கமுடியலியே, மாமா…”
கங்காவின் பேச்சும் குரலும் போலியாய் ஒலிக்க, த்யாகு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
பத்து நிமிஷத்தில் விசு மாமா புறப்பட்டுப் போனார்.
அவர் தலை மறைந்ததும், கிட்டத்தில் வேண்டியவர் யாருமில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு, கங்கா சிடுசிடுப்புடன் கேட்டாள், ”என்ன, என்னமோ வாசனை வர்றது?”
”தலை வலிச்சுது… தைலம் தேச்சிண்டேன்…”
மேற்கொண்டு பேசினால் விஸ்கி வாசனையை கங்கா அடையாளம் கண்டு கொள்வாள் என்ற பயத்துடன், த்யாகு நகர்ந்துபோய் வாசல் வராந்தாவில் உட்கார்ந்துகொண்டான்.
தெரு மனிதர்களும் நண்பர்களும், இருந்த ஓரிரண்டு உறவுக்காரர்களும், வந்துபோய்விட்டார்கள். வாசலில் எல்லாம் ரெடி. சித்தி வந்துவிட்டால், எடுத்து விடலாம்.

வேற யாராவது வர்றதுக்குள்ள, வந்து ரெண்டு வாய் போட்டுண்டு போங்களேம்ப்பா…”
கங்கா ரகசியமாய் அழைக்க, சேஷன் உள்ளே போனார்.
குத்துக்கல் மாதிரி நான் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன், மதித்து ஒரு வார்த்தை ஏதாவது சாப்பிடுகிறீர்களா என்று கேட்டால் என்னவாம்?
அப்பாவைக் கவனிக்கத் தெரியும்போது, இது மட்டும் தெரியாதா?
கழுதை… திமிர் பிடித்த கழுதை.
தங்களுக்குத்தான் பணம் இருக்கிறது என்கிற அகம்பாவம்.
எரிச்சலுடன் த்யாகு கடிகாரத்தைப் பார்த்தான்.
இரண்டா?
பத்துமணிக்கு சித்தி கிளம்பிவிட்டதாய் சேதி வந்திருக்கிறது. பத்தும் ஆறும் நாலு… ஆக, நாலுமணிக்கு முன்னால் சித்தி இங்கு வரமுடியாது.
மேலே போய் இன்னொரு ட்ரிங்க் அடித்தாலென்ன?
ருசிகண்டுவிட்ட நாக்கு, விஸ்கிக்குப் பறவாய்ப் பறக்க, த்யாகு எழுந்தான்.
கூடத்தில் நின்றிருந்த கங்காவிடம், ”தலை வலிக்கறது… நா மாடில இருக்கேன். சித்தி வந்துட்டா, கூப்பிடு…” என்று சொல்லிவிட்டு, அவள் பதிலுக்காகக் காத்திராமல் மேலே போனான்.
பாத்ரூம் கதவை சாத்திக்கொண்டு, பாட்டிலை எடுத்து, இன்னும் ஒண்ணே ஒண்ணு, தட்ஸ் ஆல் என்ற தீர்மானத்துடன் குடிக்கத் துவங்கியவனின் மனசில், கங்காவின் அலட்சியம் பூதமாய்ப் படர்ந்திருந்தது.
இரண்டாவது பெக் உள்ளே போனதும், என்றோ செத்துப்போய்விட்ட அம்மாவின் நினைப்பு வந்தது.
கொதிக்கும் ரசத்தை அம்மா முகத்தில் அப்பா விசிறியடித்ததும், நகம் பதிய அவர் தன்னைத் தொடையில் கிள்ளியதும், அம்மா செத்த மறுவருஷமே வெட்கமில்லாமல் சித்தியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்ததும் நெஞ்சை அடைக்கத் தொடங்க, சீக்கிரமே அந்த விஸ்கி பாட்டில் காலாகக் குறைந்து போனது.
இரண்டு மூன்று முறைகள் பிள்ளையை அனுப்பி அழைத்தும் கணவன் கீழே வராததால், தானே மேலே வந்து, ”என்ன பண்றேள் பாத்ரூம்குள்ள? சித்தி வந்தாச்சு… வெளில வாங்கோ…” என்று கங்கா படபடப்புடன் அதட்டவும், இவளென்ன என்னை விரட்டுவது, நானும் நாய்க்குட்டிபோலப் பின்னால் ஓடுவது என்ற கடுஞ்சினம் எழுந்ததன் காரணமாய், வழக்கம்போலக் குடிபோதை அதிகமாகி விட்டால் சாதுவான த்யாகுவுக்குள்ளிருந்து ஒரு முரட்டு த்யாகு பிரசவமாகும் தினுசில் அந்தக் கணத்திலும் ஒரு ஜனனம் நிகழ்ந்தது.

(தொடரும்)

• • • • •

 

மேலும் படிக்க