ஒரிய எழுத்தாளர் மனோஜ் தாஸுடன் ஒரு பேட்டி
1934-ம் ஆண்டு, எந்த வசதியும் இல்லாத ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, உள்ளூர் ஒரியப் பள்ளியில் கல்வி பயின்று வளர்ந்த மனோஜ் தாஸ், இன்று நாடறிந்தவர் மட்டுமல்ல, உலகளவில் இலக்கியக்கர்த்தாக்கள் போற்றும் தரத்துடன் ஆங்கிலத்திலும் ஒரியமொழியிலும் கவிதைகளையும் கதைகளையும் படைக்கும் தலைசிறந்த படைப்பாளி. மனோஜ் தாஸின் முதல் கவிதைத் தொகுப்பு அவரது பதினாறாவது வயதில் பிரசுரமானது என்ற சேதியும், தனது பதினேழாவது வயதில் ‘திகந்தா’ என்ற பத்திரிகையை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றினார் என்ற விவரமும், எந்த அளவுக்கு அவருடைய ஜீவ அணுக்களில் படைப்பாற்றல் கலந்திருந்தது என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
மனோஜ் தாஸின் படைப்புகள் அவருக்குப் பெற்றுத்தந்துள்ள கெளரவங்கள் ஏராளம். ஒரிய சாகித்ய அகாடமி, மத்திய சாகித்ய அகாடமி, பாரத் நாயக், சரளா விருதுகள் அவற்றில் சில.
எங்கள் ‘அக்னி’ அறக்கட்டளையின் ‘அக்ஷர’ விருது வழங்கும் விழா ஒன்றிற்குத் தலைமைதாங்க வந்தபோது, மனோஜ் தாஸை முதன்முறையாகச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. சுமாரான உயரம், மாநிறம், தடிமனான கண்ணாடி, அப்பட்டமான ஒரிய மண் முகச்சாயல், மென்மையான அறிவுபூர்வமான பேச்சு – என்றிருக்கும் மனோஜ் தாஸோடு பேசிப்பழகுவது, ஒரு சுகமான, அர்த்தமுள்ள அனுபவம்.
• • • •
- ‘1816-ம் ஆண்டு, வரலாறு காணாத விதத்தில் பஞ்சம் உண்டாகி இந்த மாநிலத்து மக்கள் சொல்லொணாத் துன்பம் அனுபவித்தது போதாது என்பதுபோல, அதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் பல்வேறு பிரச்சி னைகளை ஒரிய மக்கள் சந்திக்க நேர்ந்தது என்றும், அவற்றில், ‘ஒரியா, வங்காளமொழியின் கிளையாகப் பிறந்த ஓர் வட்டார வழக்கு மொழிதான்’ என்ற பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடவேண்டியிருந்ததும் ஒன்று’ – என்று ஒரு கட்டுரையில் படித்தேன். இது உண்மையான குற்றச்சாட்டுதானா? ஆம் எனில், அப்படியொரு இக்கட்டு, தவறான பிரச்சாரம் எழக் காரணம் என்ன?
ஒரியாவுக்கும் வங்காள மொழிக்கும் பேச்சுவழக்கில் ஒற்றுமை இருப்பினும், எழுத்து வடிவம் முற்றிலும் வெவ்வேறானவை என்பதை நினைவுகூர்ந்தால், அந்தப் பிரச்சாரத்தில் உண்மை இல்லை என்பது விளங்கும். ஆனால், நீங்கள் குறிப்பிட்ட வகையில் ஒரு கோஷம் எழுந்தது நிஜம். அது ஏன் என்பதை விளக்கினால் நீங்களும் புரிந்துகொள்வீர்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கடைசியாகக் கைப்பற்றிய மண், ஒரிஸ்ஸா! அவர்கள் இறுதியாக வீழ்த்திய கோட்டை எங்களுடைய குர்தா (Khurdha) கோட்டை. அதன் பிறகு, 19-ம் நூற்றாண்டில் இங்குள்ள சின்னச்சின்ன ஜமீன்கள் ஆங்கிலேயருக்குக் கிஸ்தி, வரிகளைக் கட்ட முற்பட்டன; வெகுளியான ஜமீந்தார்களுக்கு உதவ பல வங்காளிகள் மேலாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். சூரிய அஸ்தமனச் சட்டம் (sunset law) குறித்து நீங்கள் அறிந்திருக்கலாம். வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரிய அஸ்தமனத்திற்குள், கட்டவேண்டிய வரிப்பணத்தைக் கட்டாவிடில், அந்த நிலம், சமஸ்தானம், ஆங்கிலேயர்களால் ஏலத்துக்கு விடப்படும். ஜமீந்தார்களின் அறியாமையைத் தங்களுக்குச் சாதகமாக்கி சுயநலத்தோடு மானேஜர்கள் செயல்பட்டதில், பல ஜமீந்தார்களின் நிலங்கள் இந்தச் சட்டத்தின்கீழ் பறிபோயிருக் கின்றன. அந்தச் சமயத்தில் சில வங்காளிகளின் கை ஓங்கியிருந்ததில் எழுந்ததுதான், நீங்கள் குறிப்பிட்ட பிரச்சார கோஷம். அதுகூட மாநிலம் தழுவி ஒலித்தது என்றும் கூற முடியாது. இயக்கமாக மாறி பலனளித்தது என்பதும் தவறு. இந்த மண்ணில் வசித்த பல வங்காளிகளுக்கு, அப்பிரச்சாரத்தில் உடன்பாடு இல்லை. ஏன், இது குறித்து மிகுந்த மனவருத்தம்கூட இருந்ததாகச் சொல்வார்கள். சரித்திரச் சான்றுகளின்படி, ஒரியா, வங்காள மொழிக்கு மூத்தது என்பதையும், இரண்டுமே ‘சரியாபதா’ (Charyapada – Buddhist scriptural work) என்பதிலிருந்து ஜனித்தவை என்ற நிபுணர்களின் கூற்றையும் ஞாபகப்படுத்திக்கொள்வது நல்லது.
- தேக்கமடைந்திருந்த ஒரியமொழி இலக்கியத்தைத் தூக்கி நிறுத்திய பெருமை, நவீன ஒரிய புனைகதைகளின் தந்தையாகக் கருதப்படும் ஃபக்கிர் மோகன் சேனாபதியைச் சேரும் என்று கூறுவது எதனால்? ஒரிய இலக்கியம் புத்துணர்ச்சி பெற அவர் செய்த காரியங்கள் என்ன?
அபூர்வமாக ஒரு காலகட்டத்தின் தன்மைக்கும், தனிப்பட்ட நபரின் ஆற்றலுக்கும் ஏதோவொரு விதத்தில் பிணைப்பு, சந்திப்பு தோன்றுவதுண்டு. (Spirit of an era and genius of an individual). அப்போது விளையும் பயனும், அபூர்வமானதாக இருக்கும். இதற்கு உதாரணமாக ஷேக்ஸ்பியரைச் சொல்லலாம். ஷேக்ஸ்பிய ருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, அந்தக் காலகட்டத்தில் அப்படியொரு கவிஞர் தோன்றவில்லை. அது ஒரு மறுமலர்ச்சியை எதிர்பார்த்த தருணம். காலத்தின் அந்தத் தன்மையோடு, ஷேக்ஸ்பியரின் ஆற்றல் சேர்ந்துகொள்ள, அற்புதம் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட எங்கள் மொழியிலும் அப்படியொரு நிகழ்வு, ஃபக்கிர் மோகன் சேனாபதி காலத்தில் நடந்திருக்கிறது. சேனாபதி பன்மொழிகளை அறிந்தவர். சமஸ்தானத்தில் திவானாக வேலைபார்த்து, பல்வேறு அனுபவங் களைப் பெற்றவர். வேர்களை மண்ணிலும், கிளைகளை ஆகாயத்திலும் பரப்பிய மரம் போல, அடிமட்ட மக்களில் துவங்கி, அறிவுஜீவிகள் வரை அவருக்குப் பரிச்சயமிருந்ததில், வாழ்க்கையைத் துல்லியமாகக் கவனித்து, எளிமையான மொழியில் பகிர்ந்துகொள்வது சாத்தியமாயிற்று. படிக்காத மனைவிக்காகக் காவியங்களை மொழிபெயர்த்துக் கூறியதும் ஓர் அனுபவம்தான்! சரியான முதிர்ச்சி வரும்வரை நாவல்கள் எழுதமாட்டேன் என்ற முடிவுடன் இருந்துவிட்டு, தனது ஐம்பதாவது வயதிற்குப் பிறகே நாவல்களை எழுத முற்பட்டார். சேனாபதி யின் ஆற்றலும், எங்கள் மக்களின் பக்குவம், தயார் நிலையும் ஒருங்கிணைந்த போது, நான் ஏற்கனவே குறிப்பிட்ட விதத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. அதைப் புத்துணர்ச்சி, மறுமலர்ச்சி என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
- சேனாபதி எழுதி இன்றைக்கும் வெகுவாகப் பாராட்டப்படும் ‘ரேபதி’ என்ற முதல் ஒரியச் சிறுகதையை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்களேன்…
இன்றுவரை நான் படித்துள்ள சிறுகதைகளில் தலைசிறந்ததாக, ‘ரேபதி’யை மதிப்பிடுவேன். நீங்கள் அயர்லாந்து எழுத்தாளர் ஸின்ஜ் (Synge) எழுதியுள்ள ‘ரைடர்ஸ் டு த ஸீ’ (Riders to the Sea) படித்திருக்கிறீர்கள், அல்லவா? அதன் கடைசி வரிகளைப் படிக்கையில், வெதுவெதுப்பான கடல்நீர் நம்மைச் சூழ்ந்துகொள்ளும் அனுபவம் கிட்டும் பாருங்கள், ‘ரேபதி’யைப் படிக்கும்போதும் அப்படியொரு சோகம் நம்மைக் கவ்விக்கொள்ளும். பாட்டியுடன் வசிக்கும் ரேபதி, கிராமத்தில் ஆட்டம் போடும் காலராவுக்கு இறுதியில் பலியாவதுதான் கதை. ஒரு வார்த்தை மிகையாகவோ, குதர்க்கமாகவோ இல்லாமல், புத்திமதி சொல்வதாக அமையாமல், வெகு யதார்த்தமான வர்ணனை, நடப்புமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் அபாரமானது! ‘ரேபதி’ எழுதப்பட்ட காலகட்டத்தை நினைத்துப்பார்க்கையில், சேனாபதி கையாண்டிருக்கும் உத்தி, கரு இரண்டுமே நம்மை பிரமிக்கவைக்கிறது.
- தேசியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள் துவக்கிய ‘சத்யபடி’ இயக்கம் பற்றியும், அதில் தீவிரமாகப் பங்குகொண்ட கோபால பந்து தாஸ், கோடபரிஸ் மிஸ்ரா, கோடபரிஸ் மஹாபத்ரா போன்றவர்களின் எழுத்துக்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
‘சத்யபடி’ இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அனைவரும் முதலும் முழுசுமாய் தேசியவாதிகள். அசல் இலக்கியவாதிகளாகத் திகழ்ந்த ராதாநாத் ராய், சேனாபதி ஆகியவர்களிலிருந்து மாறுபட்டவர்கள். சமுதாயச் சீர்திருத்தங்களுக்காகச் சிந்தனை செய்தவர்கள். காங்கிரஸ் பேரியக்கத்தை ஒரியாவுக்குக் கொண்டு வந்தவர் கோபாலபந்து தாஸ். இன்றைக்கும் மிகப்பெரிய எண்ணிக்கையில் விற்பனையாகும் ‘ஸமாஜ்’ பத்திரிகையின் ஸ்தாபகர். மிகச்சிறந்த பத்திரிகையாளர். ‘சத்யபடி’ இயக்கத்தைச் சார்ந்த சிலர் தரமான இலக்கியவாதிகளாகவும் திகழ்ந்தனர். பண்டிட் கோடபரிஸ் மிஸ்ரா தரமான கவிதைகளைப் படைத்திருக்கிறார். சிலிகா ஏரியில் மூழ்கி இறந்ததாகக் கருதப்படும் பெண்பற்றி அவர் எழுதியுள்ள கவிதை ஒரு ‘கிளாஸிக்’!
- சேனாபதி எழுதிய முதல் சிறுகதையிலிருந்து, அடுத்துவந்த ஆண்டுகளில் ஒரியச் சிறுகதையின் வளர்ச்சி எப்படியிருக்கிறது என்பீர்கள்?
ஒரியச் சிறுகதைகளின் தரம் வெகுவாகத் திருப்தியைத் தந்தாலும், எண்ணிக்கையில் அவை அதிகம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சேனாபதியோடு ஒப்பிடக்கூடியவர் என்றால், அடுத்து கோபிநாத் மொஹந்தியைத்தான் சொல்ல வேண்டும். அலாதி ஆற்றல் என்று சேனாபதியிடம் குறிப்பிட்டதை கோபிநாத்திடமும் காணமுடியும். இந்த இருவருக்கும் இடையே இருந்த காலத்தில் எழுதியவர்களிடம் சிறுசிறு பொறிகளாகத் திறமை இருந்தது என்றும், அவை ஒட்டுமொத்தமாய்த் திரண்டு கோபிநாத்திடம் பரிமளித்தது என்றும் நான் நம்புகிறேன்.
- முப்பதுகளில் ஒரிய இலக்கியத்தில் மார்க்ஸிஸம், ஃப்ராய்டிஸம் என்று இரண்டு போக்குகள் தீர்மானமாய்த் தென்பட்டன என்ற விமர்சனத்தை ஏற்கிறீர்களா?
மார்க்ஸிஸத்தின் பாதிப்பு பல எழுத்தாளர்களிடம் அழுத்தமாக இருந்தது. ஆனால், ஃப்ராய்டின் சிந்தனைகளின் பாதிப்பு சொல்லும்படியாக இல்லை. அதனால் ‘இரண்டு போக்குகள்’ என்று குறிப்பிடுவது சரியான கணிப்பாக ஆகாது. பகவதி சரண் பாணிக்ரஹி, அனந்த் பட்நாயக், இன்னும் அற்புதமான கவிதைகளைப் படைத்துக்கொண்டிருக்கும் சச்சிதானந்த ரெளத்ராய் போன்றவர்களின் மார்க்ஸிஸத் தத்துவங்களைத் தாங்கிய படைப்புகள், ஒரிய இலக்கியத்திற்குப் பெருமை சேர்த்தவை. பகவதி சரண் எழுதிய ‘ஷிகார்’ இன்றைக்கும் பேசப்படும் ஒரு மைல்கல் சிறுகதை ஆயிற்றே!
- அறுபதுகளில் ‘கரு இல்லாமல் எழுதுவது’ (plotless, sketch) போன்ற உத்திகள் கையாளப்பட்டன என்பதாக ஒரு குறிப்பு படித்தேன். அதை விளக்க முடியுமா?
உலக நாடுகளில் அவ்வப்போது நிகழும் மாற்றங்கள், செய்யப்படும் பரிசோதனை முயற்சிகள், எங்கள் இளைய தலைமுறையினரையும் பாதிப்பதுண்டு. மேலைநாடுகளில் ‘அப்ஸர்ட்’ நாடகங்கள் உருவானபோது, இங்கும் அதனைப் பின்பற்றி எழுதப்பட்ட எழுத்துக்களை ‘கரு இல்லாதது’ – ஸ்கெட்ச் – என்று முத்திரை குத்தினார்கள். ஆனால், மேலைநாட்டில் ‘அப்ஸர்ட்’ நாடகங்கள் மறைந்துவிட்டதைப் போன்றே இங்கும் இந்த வகை எழுத்துக்கள் சீக்கிரமே காணாமல்போய்விட்டன. ஆர்வத்தின் காரணமாய் மேற்கொள்ளப்பட்ட பரிட்சார்த்த எழுத்துக்கள் மக்களைச் சென்றடையவில்லையென்றால், ‘இறந்துபோவது’ இயற்கைதானே!
- ‘ஒரிய இலக்கியத்தின் நாவல்களும் சிறுகதைகளும் ஆரோக்கியமாக வளர, பத்திரிகைகள் ஒரு முக்கியக் காரணம்’ என்ற விமர்சனம் படித்தேன். ஒவ்வொரு மொழிக்குமே இந்தக் கூற்று பொருந்தும் என்கையில், விசேஷமாக இப்படிக் குறிப்பிடக் காரணம்?
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. எந்த மொழியிலும் அதன் இலக்கிய வளர்ச்சிக்கும் பத்திரிகைகளுக்கும் தொடர்பு உண்டுதான். ஆனால், ஒரியாவைப் பொறுத்தவரை, புதினங்களை வெளியிடும் ஆர்வத்தால் தோற்றுவிக்கப்பட்ட பத்திரிகைகள்தான் அதிகம் என்பது என் கருத்து. ஒவ்வொரு காலகட்டத்தின் தேவைக்கேற்ப பல பத்திரிகைகள் தோன்றியுள்ளன. அந்தக் காலத்தில் வெளியான ‘உத்கல ஸாஹித்ய’-வை ஒரு முன்னுதாரணப் பத்திரிகை என்பேன். தரமான சிறுகதைகள், தொடர்கள், கட்டுரைகள், கவிதைகள் என்று அனைத்தையும் வெளி யிட்டு, மக்களிடையே இலக்கியம் குறித்தான புது விழிப்புணர்வை உண்டாக்கிய தில் அப்பத்திரிகைக்குப் பெரும் பங்குண்டு. அதன் பின்னர் அந்தந்த இயக்கங்களின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இலக்கியப் பத்திரிகைகள் இருந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, ‘ஸஹகார்’ (Sahakar) பத்திரிகையைச் சொல்லலாம். எங்கள் காலத்தில் ‘சங்க’, ‘சதுரங்க’ என்ற இரண்டு அற்புதமான இலக்கியப் பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கே ஒரு விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்… தற்சமயம் ஆங்கிலத்தில்கூட இலக்கியத்திற்கென முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பத்திரிகை இல்லை… ஆனால், ஒரியாவில் இன்றைக்கும் சுமார் 25 சஞ்சிகைகள் – இலக்கியத்துக்காக மட்டும் – செயல்படுகின்றன என்பது பெருமைக்குரிய சேதி! கவிதைகளுக்காக ஒன்று, நாடகங்களுக்காக ஒன்று, சிறுகதைகளுக்காக ஒன்று – என்று ஆக்கபூர்வமாக இன்றும் பத்திரிகைகள் வெளியாவது மகிழ்ச்சியைத் தந்தாலும், அவற்றிற்கு வாசகர்கள் பெரிய எண்ணிக் கையில் இல்லாததில், பொருளாதார ரீதியாக வெற்றிநடை போடவில்லை என்பது வருத்தம் தரும் சமாச்சாரம்.
- உங்களுடைய ஒரு பேட்டியில், ‘அவரவர் தாய்மொழியில் கவிதை எழுதப் படும்போது அது சிறக்கிறது’ என்று கூறி, அதற்கு ஸ்ரீஅரவிந்தர் போன்ற வர்கள் விதிவிலக்கு என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒரிய நவீனக் கவிதையின் பிதாமகராகக் கருதப்படும் ராதாநாத் ராய், வங்காளி அல்லவா? பிரபல கவிஞர் மதுசூதன் ராவ், மராட்டியர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேனே! இதற்கு உங்கள் விளக்கம்?
என் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு குழந்தை முதன்முதலில் எந்த மொழியில் பேச முற்பட்டு, படித்து, எழுதுகிறதோ, அதைத்தான் தாய்மொழி என்று நான் சொல்கிறேன். ராதாநாத் ராய் ஒரிஸ்ஸாவில் வளர்ந்து, ஒரியமொழியில் கல்வி பயின்றவர். அதேபோல மதுசூதன் ராவின் குடும்பம் பல தலைமுறைகளாக இந்த மண்ணில்தான் வாழ்ந்துவந்தது. ஆக, அவ்விருவரும் பிறப்பால் வேற்று மொழியைச் சார்ந்தவர்களாக இருந்தபோதும், இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்ததில், ஒரியமொழியில் தேர்ந்தவர்களாக இருக்க முடிந்தது.
- ஒரியாவைத் தாய்மொழியாகக் கொண்ட நீங்கள், ஆங்கிலத்திலும் சரள மாக எழுத முற்பட்டது எப்படி? ஒருசமயம் நீங்கள் ‘ஒவ்வொரு மொழிக்கும் உயிர்த்துடிப்பு உள்ளது, ஒரு தெய்வீக சக்தி அதனோடு பிணைந்துள்ளது’ என்று சொன்னதும் எனக்குப் புரியவில்லை… விளக்க முடியுமா?
உணரும் அனைத்து விஷயங்களையும் தர்க்கரீதியாக விவரிப்பது சாத்திய மல்ல… எனினும் முயற்சிக்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் சின்னப்பையனாக இருந்த போது, பஸ், ரயில் என்று எதையும் கண்டிராத குக்கிராமத்துப் பள்ளியில் ஒரிய மொழி மட்டுமே பயின்றுவந்தேன். ஒருநாள் என் தமக்கைமார் இருவர், வங்காளப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தனர். ஒரு வார்த்தை என்னவென்று புரியாமல் அவர்கள் தடுமாறியபோது, பக்கத்தில் நின்ற நான் அதை இன்ன சொல் என்று சொன்னேன். என் சின்னக்கா ஆச்சர்யத்தோடு, ‘உனக்கெப்படி தெரியும்?’ என்று கேட்க, பெரியக்கா, ‘அவனுக்கு எல்லாம் தெரியும்’ என்றார். நம்பவேண்டும்… அன்று துவங்கி, யாரும் கற்பிக்காமல் வங்காள மொழியை நானாகப் படிக்க முயன்றது நிஜம். இதைத் தர்க்கரீதியாக விளக்கு என்றால், என்னால் இயலாது. இதேபோல, நான் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கையில், இந்திய எழுத்தாளர் ஒருவர் ஆங்கிலத்தில் இந்தியாவைப்பற்றி எழுதியிருந்த கட்டுரை யைப் படிக்க நேர்ந்து, அதிர்ந்துபோனேன். அவ்வளவு மோசமானச் சித்தரிப்பு! அன்று ஏதோவொரு உந்துதலில், ‘என் இந்தியாவைச் சரியான விதத்தில் வெளிப் படுத்தும் எழுத்துக்களை எழுதுவேன்’ என்று தீர்மானித்தேன். ஓரிரு வருடங்களில் என்னைத் தயார்பண்ணிக்கொண்டு ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தேன். கடைசியாக என்ன கேட்டீர்கள்? ஒவ்வொரு மொழிக்கும் உயிர்த்துடிப்பு (spirit) இருக்கிறதா, என்றுதானே? ஆம், நிச்சயம் உள்ளது. அந்தத் தெய்வீக சக்தியின்பால் நாம் வைக்கும் நம்பிக்கை, அதனோடு நம் உறவு, சரியாக இருந்தால், நிச்சயம் பலனும் அமோகமாக இருக்கும்.
- ஐந்துவிதமான இலக்கியப் போக்குகள் உள்ளன என்பது உங்கள் கருத்து அல்லவா? அதை விவரியுங்களேன்…
முதல் போக்கு, தூய்மையான அகத்தூண்டுதல் (inspiration) மட்டுமே காரணமாக எழுதப்படுபவை. இதற்கு, வால்மீகி, வியாஸர் போன்றவர்கள் படைத்த காவியங் களை உதாரணங்களாகக் கூறலாம். இன்று நாம் வாழும் சூழ்நிலை வேறு. ஆத்ம திருப்திக்காக எழுதினாலும்கூட, பணம், புகழ், பாராட்டு என்று பல விஷயங்கள் பலனாகக் கிடைக்கின்றன. ஆனால், அன்றைய நிலை வேறு. அதனால்தான் இதை அகத்தூண்டுதல் மட்டுமே பிரதானமாக இயங்கும் இலக்கியப் போக்கு என்கிறேன். அடுத்து, ஓர் உயர்ந்த இலக்கை முன்னிருத்தி செயலில் இறங்கத் தூண்டக்கூடிய (motivating) எழுத்துக்கள். பஞ்சதந்திரக் கதை போன்ற இலக்கியங்களை இதற்கு உதாரணம் காட்டுவேன். மூன்றாவதாக, வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பிரதி பலிக்கும் எழுத்துக்கள் – பிராக்மாடிக் லிட்டரேச்சர் (Pragmatic literature). லட்சியம் என்று ஒன்றை வைத்துக்கொள்ளாமல், நல்லதையும் கெட்டதையும் உண்மை பூர்வமாக வெளியிடும் எழுத்துக்கள். பொழுதுபோக்கு எழுத்துக்களை, நான்காவது போக்கு என்பேன். மக்களின் ரசனைக்கேற்ப பொழுதுபோக்கு அம்சங்களை ஆரோக்கியமான அளவில் கொண்ட எழுத்துக்கள் வெளிவருவதில் தவறேதும் இருப்பதாக நான் எண்ணவில்லை. ஆனால், வியாபாரம் ஒன்றையே கருத்தில் கொண்டுள்ள கடைசிப் பிரிவு இருக்கிறது, பாருங்கள்… ஆபாச, வன்முறை நிறைந்த எழுத்துக்கள் – இவை விஷத்துக்கு ஒப்பானவை. கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை.
- உங்களோடு பேசும்போது அடிக்கடி ‘இன்ஸ்பிரேஷன்’, ‘மோடிவேஷன்’ (inspiration, motivation) என்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கிறீர்கள்… இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
அருமையான கேள்வி. ‘இன்ஸ்பிரேஷன்’ என்பது தனித்து இயங்கும் விஷயம். ஆனால், ‘மோடிவேஷனில்’ சில சமயம் ‘இன்ஸ்பிரேஷன்’ கலந்திருக்கலாம். அகத் தூண்டுதல் – எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பார்த்துச் செய்வதல்ல. ஒரு படைப்பாளி தன்னை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் உந்துதலை அகத்தூண்டுதல் எனலாம். உதாரணத்திற்கு, ஒரு தாயின் அன்பைச் சொல்லலாம். தன் குழந்தையை எடுத்துக் கொஞ்ச, அவளுள் உண்டாகும் அகத்தூண்டுதல் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? கொஞ்ச நேரத்திற்கு முன் உங்கள் பூனையை எடுத்து அன்போடு அரவணைத்தீர்களே, அதற்கு உள்நோக்கம் ஏதாவது உண்டா? இல்லையே! அதுதான் ‘இன்ஸ்பிரேஷன்’. ஆனால், ‘மோடிவேஷன்’ என்பது தீர்மானமான இலக்கை நோக்கிய செயலைத் தூண்டுதல் ஆகும்.
- ஆக, வெறும் செயல் தூண்டுதலை மட்டும் முன்னிறுத்தி எழுதப்படும் எழுத்துக்கள். வியாபார நோக்குடையவை எனலாமா?
உண்மை. ஆனாலும், எழுத்தாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்குள் அகத்தூண்டுதல் இல்லாமல் போகாது. இதைத்தான் பல சந்தர்ப்பங்களில் செயல் தூண்டுதல், அகத்தூண்டுதலோடு சேர்ந்திருக்கிறது என்றேன்.
- உங்கள் எழுத்துக்களுக்குச் செல்வதற்கு முன், உங்கள் இளமைக் காலத்தைப்பற்றி அறிய விரும்புகிறேன். சொல்லுங்கள்… எந்த மாதிரியான குழந்தைப் பருவம் உங்களுக்குக் கிட்டியது?
ஆசிர்வதிக்கப்பட்ட இளமைக்காலம் என்னுடையது. கூட்டுக் குடும்பத்தில், சரியான கிராமத்தில் – பஸ் நிலையம் 8 மைல், புகைவண்டி நிலையம் 22 மைல் – வளர்ந்தபோதும், அன்புக்கும் வசதிக்கும் பஞ்சமில்லை. எங்காவது போகவேண்டு மென்றால், அம்மா பல்லக்கிலும் அப்பா குதிரைமீதும் சவாரி செய்து பயணித்தனர். நான்கூடப் பல்லக்கில் நிறைய பயணித்திருக்கிறேன். சங்காரி என்ற அந்த ஏகாந்தமான கிராமத்தில், எங்களுடையதுதான் கடைசி வீடு. வீட்டைச் சுற்றி மரகதப் பச்சைப் போர்வை விரித்த மாதிரி வயல், இரண்டு பெரிய ஏரிகள்… ஒன்றில் வெண்தாமரை, இன்னொன்றில் செந்தாமரை. இயற்கைக்காட்சியின் அழகு கொள்ளைகொள்ளும். வாஸ்தவமாகச் சொல்கிறேன், என் கிராமத்தைப் போன்ற வசீகரமான கிராமத்தை வேறெங்கும் நான் பார்த்ததில்லை. எனக்கு நான்கு வயதாகையில் ஒருசமயம், வானவில்லைப் பார்த்துவிட்டு, அதன் ஆரம்பத்தைத் தொடுவதற்காக ரொம்ப தூரம் ஓடிவிட்டேன். சட்டென்று நின்று பார்த்தால், அத்வானமான புது இடம். செவ்வானம், கூட்டமாய்ப் பறக்கும் நாரைகள்… அழகை ரசிக்க முடியாமல், ‘நான் எங்கே இருக்கிறேன்’ என்ற பயம் எழுந்துவிட்டது! அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கிராமப் பெண், ‘நீ எப்படி இங்கு வந்தாய்?’ என்று கேட்டு, என்னைக் கத்தக்கத்த தூக்கிவந்து வீட்டில் விட்டுச் சென்றாள். இதுதான் கிராம மக்கள், கிராம வாழ்க்கை! எல்லா குழந்தைகளும் கிராமத்துக்குச் சொந்தமான குழந்தைகள் என்ற எண்ணம் இருந்ததில், ஒரு ஒட்டு மொத்தமான கரிசனம், கவனிப்பு உண்டு.
- நீங்கள் பேசுவதைக் கேட்கையில், ஒரு கதை படிக்கிற உணர்வு எனக்கு வருகிறது! நீங்கள் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்?
எழுதப்படிக்க கற்கும் முன்னரே எனது முதல் கவிதையை உருவாக்கி விட்டேன். பள்ளி நாட்களில் நிறைய கவிதைகள் எழுத முற்பட்டேன். ஒன்பதாவது வகுப்பில் இருக்கும்போது, என் முதல் கவிதைத் தொகுப்பு புத்தகமாய் வெளி வந்தது.
- நீங்கள் எழுதி பிரசுரமான முதல் கவிதை, அதன் கரு என்ன?
‘இரண்டு தினங்களின் கதை’ என்பது அந்தக் கவிதையின் தலைப்பு. 1947-ல் நமக்கு சுதந்திரம் வந்தது. 1948-ல் மகாத்மா மறைந்தார். இந்த இரண்டு தினங்களுமே என்னைப் பாதிக்க, அவற்றையே கவிதையின் கருவாக்கினேன்.
- சின்ன வயதிலேயே ஒரு கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும், கவிதை யிலிருந்து சிறுகதைக்கு மாறியது ஏன்?
பத்தாவது படிக்கும்போது நான் கம்யூனிஸச் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு ஒரு தீவிர கம்யூனிஸ்ட் ஆனேன். பல தலைவர்களுடன், சிந்தனாவாதிகளுடன் பழகும் வாய்ப்பும்; வாழ்க்கை, மக்கள், அவர்கள் பிரச்சினைகள் பற்றின நிர்வாண உண்மைகளை அறிந்துகொள்ளும் சந்தர்ப்பமும் கிட்டின. அப்போதுதான், உணர்ந்ததை உணர்ந்தபடி பகிர்ந்துகொள்ள கவிதையைவிட உரைநடை சரியான ஊடகம் என்பதும் புரிந்தது.
- கம்யூனிஸச் சித்தாந்தங்கள்பால் உங்களை ஈர்த்தது எது, பின்னர் அதை விடச் செய்தது எது?
சின்ன வயதிலிருந்தே சமுதாய நடப்புகள் என்னை வெகுவாகப் பாதித்திருக் கின்றன. நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டை இரண்டு முறை கொள்ளையர் தாக்கி சூரையாடியிருக்கின்றனர். இதனோடு, மிகப்பெரிய அளவில் பஞ்சம், பசி, பட்டினிச்சாவு, காலரா போன்ற வியாதிகளின் தாக்கம் – என்று பல விதங்களில் மக்கள் அல்லலுறுவதைப் பார்த்திருக்கிறேன். காலரா பரவியிருந்த ஒரு சமயம் – எனக்கு எட்டு வயது இருக்கும் – பள்ளியிலிருந்து தனியாய் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். சுற்றிலும் வயல், மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி. ஒரு புதரில் பிணம் ஒன்று கிடப்பதைப் பார்த்தேன். திடுமென அப்பிணத்தின் தலை மட்டும் அசைய, அரண்டுபோனேன். நரி ஒன்று பிணத்தைச் சுவைப்பது பின்னர் புரிந்தாலும், பிடறியில் கால்பட ஓடிப்போனேன். ஏழைகளின் இல்லாமை, மக்களில் தாழ்ந்தவர் உயர்ந்தவர் – இப்படிப் பல விஷயங்கள் குறித்து எனக்குத் தீவிரக் கவலை உண்டு. இதன் காரணமாகக் கம்யூனிஸச் சித்தாந்தங்கள் என்னை இயல்பாகவே ஈர்த்திருக்கவேண்டும். கல்லூரி நாட்களிலும், அடுத்து வந்த வருடங்களிலும் தீவிரக் கம்யூனிஸ்டாகச் செயல்பட்டதில், என்மேல் அரசு சார்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு சிறைச்சாலைக்குக்கூடச் சென்றிருக்கிறேன். ‘கடவுள் இல்லை’ என்று கோஷமிட்டு, அவர் இடத்தில் ஸ்டாலினை அமர்த்தி யிருந்த காலம் அது. ஆனால், விரைவிலேயே எல்லாம் நொறுங்கிப்போயிற்று. 1956 ஃபிப்ரவரி மாதம் சோவியத் கட்சியின் இருபதாவது மாநாட்டில், குருஷ்சேவ் முதன்முறையாக, ஸ்டாலின் செய்த அக்கிரமங்களை வெளியிட, கேட்டுக் கொண்டிருந்த கட்சிக்காரர்களில் பலர் அதிர்ச்சி தாளாமல் மயங்கி விழுந்ததாகக் கூறுவர். இதையடுத்து என்னுள்ளும் பல மாற்றங்கள்.
- ஸ்ரீஅரவிந்தர் சிந்தனைகளில் ஈடுபாடு உண்டானதோடு, புலம்பெயர்ந்து பாண்டிச்சேரிக்கே குடியேறத் தீர்மானித்தது ஏன்? இந்த முடிவுக்கு உங்கள் குடும்பத்தாரிடம் என்ன மாதிரியான வரவேற்பு கிட்டியது?
ரொம்ப வருடங்களாகவே ஸ்ரீஅரவிந்தரின் எழுத்துக்களைப் படித்து அவர்பால் அலாதி பிரேமை கொண்டிருந்தேன். முதல் முறை குடும்பத்தோடு பாண்டிச் சேரிக்குப் போய் ‘அன்னை’யை தரிசித்தபோது, எனக்குள் உண்டான உணர்வை வார்த்தைகளில் விவரிப்பது கஷ்டம். அது ஓர் அற்புதமான அனுபவம். அதன்பின், 1963-ல் பாண்டிச்சேரிக்குக் குடிபெயரத் தீர்மானித்தேன். இதில் என் தந்தைக்கு முதலில் கொஞ்சம் வருத்தம் இருந்ததாகச் சொன்னார்கள். அவரிடம் விடைபெற ஊருக்குச் சென்றபோது, “கார் வாங்கப் பணம் கேட்டிருந்தாயே, வேண்டாமா?” என்றார். “வேண்டாம்” என்றேன். “அப்படியானால், அந்தப் பணத்தை நம் பள்ளிக்கு நன்கொடையாய்க் கொடுத்துவிடலாமா?” என்று கேட்டார். சம்மதித்துவிட்டேன். அன்றைய தேதியில் நான் நன்கு அறியப்பட்ட எழுத்தாளன் என்பதால், இலக்கிய உலகிலிருந்தும் என் முடிவை எதிர்த்துக் குரல்கள் எழவே செய்தன. இந்த 35 வருடங்களாக பாண்டிச்சேரி வாழ்க்கை மிகப் பலனுள்ளதாக அமைந்திருக்கிறது. இங்கு வந்த பிறகு, ஒரு மனிதனாக, எழுத்தாளனாக எவ்வளவோ அறிந்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன், வளர்ந்திருக்கிறேன்.
- ஒரியச் சூழ்நிலையை விட்டுப் பிரிந்திருப்பது உங்களுக்குச் சிரமமாக இல்லையா?
நிச்சயம் இல்லை. ஒரிய மொழி, கலாச்சாரம் எல்லாம், பாண்டிச்சேரியிலும் இருக்கிறதே! தினம், முப்பது நாற்பது ஒரிய மக்கள் ஆஸ்ரமத்துக்கு வருகிறார்கள். ஒரிஸ்ஸாவின் அத்தனை பத்திரிகைகளும் எனக்கு வருகின்றன. எல்லா சேதிகளும் உடனுக்குடன் கிடைத்துவிடுகின்றன. தவிர, ஒரிய மக்களுக்கு ஸ்ரீஅரவிந்தர், அன்னை ஆகியோரிடம் ஏகமரியாதை, பிடிப்பு உண்டு. எங்கள் சென்டர், ஒரிஸ்ஸாவின் பல சிற்றூர்களில்கூட இருக்கிறது. வீட்டுக்கு வீடு அன்னை படம் வைத்து வழிபாடு உண்டு. அவர்கள் இங்கு வருவதும், தங்குவதும் சகஜம். அப்புறம், அந்தச் சூழ்நிலை இல்லை என்ற ஏக்கத்திற்கு அவசியமென்ன?
- நீங்கள் 50 வருடங்களாக இலக்கிய உலகத்தோடு தொடர்பு கொண்டவராக இருக்கிறீர்கள்… ஒரிய இலக்கியம் – உங்கள் படைப்பு களையும் சேர்த்து தான் கேட்கிறேன் – காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் செயல் பட்டுவந்திருக்கிறது என்பீர்களா?
எந்தப் படைப்புக்குமே இரண்டு விஷயங்கள் மிக முக்கியமான அடிப்படை யாகின்றன. ஒன்று – நான் ஏற்கனவே குறிப்பிட்ட அகத்தூண்டுதல் – இன்ஸ்பிரேஷன். இரண்டு – அதை வெளிப்படுத்தும் உத்தி. இந்த இரண்டு விஷயங்கள் நல்ல இலக்கியத்துக்கு அஸ்திவாரங்களாகின்றன. எந்தவொரு சிந்தனையையும் சமகாலத்தவர்களுக்குப் புரிகிற மாதிரி, தற்கால விஷயங்களோடு சம்பந்தப்படுத்தி எழுத, உத்தி உதவுகிறது. ஒரு படைப்பு சமகாலத்தைச் சார்ந்தது என்பதால் அது நிரந்தரமாகாமல் (eternity) போய்விடுவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். என்னுடைய பல கதைகள் பிரபுத்துவ ஆதிக்கம் நொறுங்கி யதைப் பற்றியதுதான். முன்பு நடந்ததை இப்போது எழுதும்போது, அது சமகாலத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றாகிவிடுமா? ஞாபகத்தில் தங்கியதை, எனக்குள்ளே விழுந்த விஷயங்களை, நான் வாழும் காலத்திலேயே வெளியிடு வதும் சமகாலப் பிரதிபலிப்புதானே? ஒரிய இலக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் நடப்புகள் 70 சதவிகிதம் இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கின்றன என்பேன்.
- ஆங்கிலத்திலும் எழுதி முத்திரை பதித்த எழுத்தாளர் என்ற வகையில், உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்… இந்திய-ஆங்கில (Indo Anglican) இலக்கியம் என்பதின் தற்கால நிலை என்ன? அந்த இலக்கியத்தை எப்படி மதிப்பீடு செய்வீர்கள்?
என்னைக் கேட்டால், இந்திய-ஆங்கில இலக்கியம் இன்னமும் தன் ஸ்வதர்மாவைக் கண்டுபிடிக்கவில்லை… அதாவது, தன் மனோதர்மத்தை, சாஸ்வதப் பங்களிப்பை (psychic law, eternal role) இன்னும் போதுமான அளவு உணர்ந்து செயல்படவில்லை என்பேன். ஸ்ரீஅரவிந்தரின் எழுத்துக்கள் இந்த வகை இலக்கியத்தில் தனித்து நிற்பவை. அவரது ‘சாவித்ரி’-க்கு ஈடாக வேறு எந்த இலக்கியத்தையும் குறிப்பிட முடியாது. ஸ்ரீஅரவிந்தரைத் தவிர்த்துப் பார்க்கும் போது, இந்திய ஆங்கில இலக்கியங்கள் இந்தியாவின் ஆன்மாவை இன்னமும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பது என் கருத்து.
- கடந்த 40 – 50 ஆண்டுகளில் ஒரிய இலக்கியத்தின் வளர்ச்சி, உங்களுக்கு நிறைவைத் தந்திருக்கிறதா?
நிச்சயமாக. எவ்வளவோ சிரமங்கள் இருந்தபோதும், எழுத்தாளர்கள் தொடர்ந்து தரமான இலக்கியத்தைப் படைத்துக்கொண்டிருக்கிறார்கள், சோதனை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் சந்தோஷமான விஷயங்களே. ஆனால், நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி, தரத்திற்கும் எண்ணிக்கைக்கும் விகிதத்தில் சம்பந்தம் இல்லாமல் இருப்பது ஒரு நெருடும் உண்மை.
- ஒரிஸ்ஸாவை நேசிக்கும் ஓர் ஒரிய எழுத்தாளராக இருப்பினும், அந்த மண்ணிலிருந்து தள்ளி வாழும் காரணத்தால், சொந்த விருப்புவெறுப்பு இன்றி அந்த மாநிலத்தை உங்களால் மதிப்பீடு செய்ய இயலும், அல்லவா?
இந்தியாவின் பல மாநிலங்களில் காணப்படும் பிரச்சினைகள், துரதிர்ஷ்ட வசமாக ஒரிஸ்ஸாவிலும் உள்ளன. எங்கள் மாநிலத்தின் ஆன்மாக்களாகத் திகழும் பெண்களின் முன்னேற்றம், இன்னமும் தடைபட்ட நிலையிலேயே இருக்கிறது. அவர்களின் பிரச்சினைகள் அனேகம். இளைய தலைமுறையினரை எடுத்துக் கொண்டால், குழம்பி, திகைத்துப்போன நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். கணத்திற்குக் கணம் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகள், சமுதாயத்தில் நிலவும் இரட்டைவேடப் போக்கு, எதிலும் வியாபாரத் தன்மை, கிராமங்களில்கூடப் படையெடுத்துவிட்ட கேபிள் தொலைக்காட்சிகள் – என்று பலவித பாதிப்புக்களால் இளைய தலைமுறையினர் குழம்பித்தான் போயிருக் கிறார்கள். ஆக, மேலோட்டமாகப் பார்த்தால், மற்ற மாநிலங்களைப் போல ஒரிஸ்ஸாவின் நிலைமையும் பரிதாபத்துக்குரியதாகத்தான் இருக்கிறது. ஆனால், ஒன்றை நான் மிக அழுத்தம்திருத்தமாகக் கூற விரும்புகிறேன். தற்சமயம் இந்தியா ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் பருவத்தில் – ட்ரான்ஸிஷனல் (transitional period) – இருக்கிறது. மேலே குறிப்பிட்ட சீரழிவுகள் நிரந்தரமானவை என்று நான் கருதவில்லை. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. வெகு சீக்கிரமே, தேக்கமடைந்திருக்கும் மனிதன் விழித்துக்கொள்வான் என்று நான் நம்புகிறேன். இந்த விழிப்புணர்வு எப்படி, எப்போது வரும் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது. ஆனால், வரும், உறுதியாய் வரும் என்பது மட்டும் நிச்சயம். ஸ்ரீஅரவிந்தரின் கூற்றுப்படி, மனிதன் பரிணாம வளர்ச்சியின் கடைசிக்கட்டம் அல்ல… அதற்கு மேலும் ஒரு வளர்ச்சி உண்டு. மனிதனின் மனதைவிட அதிகப் பேராற்றல் படைத்த மனம் (supra mental) தோன்றும்போது, எல்லா பிரச்சினைகளும் மாறும், மறையும்.
- உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
முன்பு நான் திட்டமிட்டுச் செயல்படுபவனாகத்தான் இருந்தேன். ஆனால், இப்போது 64 வயதில், மனதளவில் திட்டமிடாமல் வாழ்வதுதான் வசதியாக இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் தேவையான வரைபடம் (blue print) வேறெங்கோ தயாரிக்கப்படுகிறது என்பது புரிந்த பிறகு, திட்டமிடுவதின் முக்கியத் துவம் குறைந்துவிட்டது. எதிர்காலத் திட்டம் என்றால், எதற்காக நான் படைக்கப் பட்டிருக்கிறேனோ, அந்தக் காரணங்கள் புரிந்து, முழுமையாக அதற்கு நான் பயன்பட வேண்டும். ஓர் எழுத்தாளனாக, மனிதனாக, வாழ்க்கையின் பூரண அர்த்தம் புரிந்து வாழ வேண்டும் – என்பதைத் தவிர வேறென்ன இருக்கமுடியும்?
– மே, 1998.


