விமர்சனங்கள்

/விமர்சனங்கள்

 

‘இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ புத்தகத்தில்

கவிஞர் வைரமுத்து அவர்கள்.

 

சிவசங்கரியின் எழுத்துக்களில், பாசாங்கு இல்லை; பெரும்பாலும் ஏதேனும் ஓர் உறுத்தல் இல்லாமல் அவர் எழுதுவதில்லை.

பேனாவுக்குப் பிரசவ வலி எடுத்தால்தான் அதைத் தொடுவது என்று சங்கல்பம் கொண்டிருப்பவர்களில், அவரும் ஒருவர்.

எனவே, சிவசங்கரியின் எழுத்துக்களில் பெரும்பாலும் சத்தியத்தின் தணல் கனன்றுகொண்டேயிருக்கிறது.

ஒரு மனிதனின் தன்னம்பிக்கையை, அவன் துக்கத்தில் இருக்கும்போது கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு மனிதனின் தாய்மொழியை, அவன் தூக்கத்தில் பேசும்போது கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு படைப்பாளியின் நிஜத்தை, அந்தப் படைப்புக்குள் இருக்கும் உள்ளார்ந்த ஒலியில் கண்டுபிடித்துவிடலாம்.

சிவசங்கரியின் எழுத்துக்குள், நிஜம் இருக்கிறது.

………………………………………………………………………………………………………………………………………………..

 

‘யாவரும் கேளிர்’ கட்டுரைத் தொடரில் எழுத்தாளர் மாலன்

 

சிவசங்கரி, தனி ஒரு பெண்ணாக இந்தியாவின் நான்கு திசைகளுக்கும் பயணித்து, இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் எழுதும் எழுத்தாளர்களைச் சந்தித்து, அந்த மொழி இலக்கியத்தையும், வாழ்வையும், சூழலையும் வெள்ளிப் பேழையில் வைத்த முத்துச்சரமாகக் கோர்த்து, நான்கு தொகுதிகளாக ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்ற நூலாகத் தந்திருக்கிறார். அந்தப் பயணங்கள் திட்டமிடச் சிரமமானவை, சென்றுவரப் பெரும் செலவு பிடிப்பவை. போய் வந்தபின் எழுதுவதோ, இடுப்பொடிக்கும் வேலை. என்றாலும், அவர் செய்தார். இந்த தேசத்தின் மீதுள்ள நேசத்தின் காரணமாக. இலக்கியம் என்பதன் உண்மையான நோக்கம் என்பதை உணர்ந்ததன் காரணமாக. அந்தப் பிரம்மாண்டப் பணிக்கான அங்கீகாரம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதுபோன்ற ஒரு பெரும் பணியைச் செய்ய அவரால் மாத்திரமே முடியும்.

• • • •

‘சூர்யவம்சம் ‘ – நூல் விமர்சனம் திருப்பூர் கிருஷ்ணன் – ஆசிரியர் அமுதசுரபி

*தன் வரலாற்று வரிசையில் அண்மையில் வெளிவந்திருக்கிறது எழுத்தாளர் சிவசங்கரியின் `சூரிய வம்சம்` என்ற இரண்டு பாக நூல். வானதி பதிப்பக வெளியீடு.
நூலாசிரியர் சற்று உடல் நலமில்லாதிருந்த காலத்தில், அவர் சொல்லச் சொல்ல எழுத்தாளர் ஜி. மீனாட்சி அதை எழுதியிருக்கிறார். ஜி. மீனாட்சியின் தமிழ்ப் பணியை வாசகர்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்.
(தமிழின் முன்னோடி எழுத்தாளர் வை.மு. கோதைநாயகியின் ஆரம்ப கால நாவல்கள் சொல்லி எழுதப்பட்டவைதான். அவரது தோழி பட்டம்மாள், கோதைநாயகி சொல்லச் சொல்ல அவற்றை எழுதினார்.
காரணம் கோதைநாயகிக்கு அவர் நாவல்கள் வெளிவரத் தொடங்கிய தொடக்க காலத்தில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது! நாவல்கள் அமோகமாக விற்பனையாகவே பிறகுதான் கணவர் பார்த்தசாரதியின் உதவியோடு தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்!)
தனக்கென்று தனி வாசகர் வட்டத்தைப் பெற்ற பெருமைக்குரியவர் சிவசங்கரி. பல்லாண்டுகளாக சமூகப் பொறுப்போடு எழுதி வருகிறார். தொடராக வராமல் நேரடியாக நூலாகவே வந்துள்ள இப்புத்தகம் வாசகர்களை பிரமிப்பில் ஆழ்த்தக் கூடிய பல தகவல்களைக் கொண்டுள்ளது.
உருக்கமானவை, திகைக்க வைப்பவை, மெல்லிய முறுவலைத் தோற்றுவிப்பவை, சிந்தனையில் ஆழ்த்துபவை என நூல் முழுவதும் பதிவாகியுள்ள அனுபவங்களில் நவரசங்களும் உண்டு.

 

சிவசங்கரியின் நாவல்களைப் போலவே இந்த வாழ்க்கை வரலாறும் எடுத்தால் கீழே வைக்க இயலாத விறுவிறுப்போடு செல்கிறது. இத்தனைக்கும் புனைவுகளே அற்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்பே இந்நூல்.
ராஜீவ் காந்தியுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடியது, தோற்றப்பொலிவோடு நடனமணியாகவும் திகழ்ந்த தனது புறத் தோற்றத்தின் பொலிவில் மாறுபாடு தோன்ற அதனால் ஏற்பட்ட மன அதிர்ச்சியும் பின்னர் அதை அவர் இயல்பாக எதிர்கொண்டதும், கணவர் இறந்தபோது குழந்தை இல்லாத தனக்குக் குழந்தை போல விளங்கிய தோழி லலிதா குளித்துவிட்டு வந்து ஈரப் புடவையோடு கணவரின் உடலைக் குளிப்பாட்டிய போது ஏற்பட்ட மன நிறைவு, `உங்கள் சின்னஞ்சிறு பெண்குழந்தையை வீட்டிலிருக்கும் ஆண்களிடம் தனியாக விட்டுப் போகாதீர்கள்` என சொந்த அனுபவத்தைச் சொல்லி விடுக்கும் எச்சரிக்கை… என எத்தனையோ விஷயங்கள் இந்நூலில் இருக்கின்றன.
சென்னை மேற்கு மாம்பலம் ஹெல்த் சென்ட்டரில் ராஜாஜி, ஜி.சி. பந்த், பரமாச்சாரியார் ஆகிய பெயர்களோடு நாலாவது சலவைக் கல்லில் சிவசங்கரி என்னும் பெயரும் இடம்பெற்றது ஏன் என்ற விவரம், பத்துலட்ச ரூபாய் டெபாசிட் கொடுக்க இரவு ஏழு மணிக்கு ஹோட்டலுக்கு வரச் சொன்ன தொழிலதிபரிடமிருந்து தப்பித்தது எப்படி என்ற தகவல், ராணிமைந்தனின் பத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் சாவி காலமான விதம், வசுமதி ராமசாமி தோழிகளோடு சிவசங்கரியின் வீட்டுக்கு வந்த சம்பவம், வாணிஜெயராமுக்கும் சிவசங்கரிக்கும் உள்ள நட்பு, செல்வி ஜெயலலிதாவின் நட்பு, அவருக்கு இவர் தோசை வார்த்துக் கொடுத்தது, இந்திரா காந்தியைச் சந்தித்தது, ராஜீவ் காந்தியுடன் பயணம் செய்தது, மணியன், சாவி, விகடன் பாலன், சிவந்தி ஆதித்தன் போன்றோர் நட்பு….என நூல் தெரிவிக்கும் செய்திகள் ஏராளம். கடவுளுக்கு போர்ன்விடா நைவேத்யம் செய்தது பற்றிக் கூட எழுதியுள்ளார்.

 

குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பல சுவாரஸ்யமான சம்பவங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. ஃபிரிட்ஜ் தன் மேலே விழுந்து மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே இறந்த சச்சு சித்தியின் மரணம் (எங்கம்மா பிரிஜ்ஜுக்குக் கீழே படுத்துண்டிருக்கா. நீ வர்றியா அக்கா என்று காலமானவரின் எட்டு வயது மகன் ஃபோன் செய்தது),
சிவசங்கரி தலையில் வைத்திருந்த பூவை அவர் உறங்கும்போது ஒரு மான்குட்டி பிய்த்துப் பிய்த்துச் சாப்பிட்டது என்றிப்படி விறுவிறுப்பாகச் செல்கிறது சுயசரிதை. `உக்காரை செய்வது எப்படி?` என்ற சமையல் குறிப்பும் உண்டு. இலக்கிய மணத்தோடு நெய்மணமும் கமழும் வரிகள் அவை!
நூலெங்கும் இழையோடும் ஆன்மிக நம்பிக்கை இதம் தருகிறது. (நூல் என்றால் இழையோடும் என்று சொல்வதுதானே சரி!)
நம் கம்பீரமான நினைவுகள்தான் நம் பொக்கிஷம் என்றால் சிவசங்கரியின் வாழ்க்கை பல வியக்கத்தகு நினைவுகளைக் கொண்ட ஓர் அற்புதமான பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தில் ஒளிவீசும் வைரத்தை நமக்கு எடுத்துக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
இந்நூலின் இரண்டு பாகங்களையும் படித்து முடித்த பிறகு சிவசங்கரி படைத்துள்ள எல்லா நூல்களிலும் தலையாய நூல் இது என்று தோன்றுகிறது. இந்த நூலில் எழுதப்படாத, சமூகத்திற்கு வெளிப்படுத்தக் கூடிய நினைவுகள் ஏதேனும் மீதி இருக்குமானால் அவற்றையும் அவர் பதிவு செய்துவிட வேண்டும்.

• • • •