பிரதமருடன் இரு பயணங்கள்
முதல் பயணம் – 1985
அக்டோபர் 27, 1985 காலை – மணி 9
திரிசூல் – பிரதமர் ராஜீவ் காந்தியின் ஐந்து நாடுகள் (கடைசி நிமிடக் கொசிறாகக் கொடுக்கப்பட்ட மாஸ்கோவையும் சேர்த்தால் ஆறு) விஜயத்துக்கென விசேஷமாய் மாற்றி அமைக்கப்பட்டுள்ள 707 போயிங் விமானம் – மாஸ்கோ விலிருந்து டெல்லியை நோக்கி, முப்பத்திநான்காயிரம் அடியில், வானவீதிக்கும் மேலே மிதந்து பறந்துகொண்டிருக்கிறது.
ஏர் இந்தியா பணிப்பெண்கள் அலாதி சிரிப்பு மாறாமல், சிவப்புக் கம்பளத்தை விரிக்காத குறையாய் எங்களைக் கவனித்து, உபசரித்து, காலைச் சிற்றுண்டியை வழங்கி முடித்திருந்த சமயம்.
பதினான்கு நாள்களில் துளி ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்த பிரதமரோடு, அவரின் நிழலாய் முடிந்தவரை இங்குமங்கும் அலைந்திருந்ததில், களைத்திருந்த உடம்புக்கு இதமாய் கண்களை மூடி கொஞ்சம் தூங்கலாமா, இல்லை, முதல் நாள் மாஸ்கோவின் அனுபவங்களை டைரியில் குறித்துக் கொள்ளலாமா என்ற யோசனையில் இருப்பவள், நினைத்த நினைப்பில்லாமல் கண்முன், கைக்கெட்டும் தூரத்தில் வந்து நிற்கும் நபரைப் பார்க்கிறேன்.
ராஜீவ் காந்தி!
”ஹலோ…”
லேசாக வெட்கம் கலந்த, குழந்தைத்தனமான, ஆனால் உதடுகளோடு நிற்காமல் கண்களிலும் வெளிச்சம் போடும் சிரிப்பு…
”குட்மார்னிங், சார்…”
”குட்மார்னிங்! எப்படி இருக்கிறீர்கள்? பயணம் எப்படியிருந்தது?”
”ஃபைன். தேங்க்யூ, சார்…”
இரண்டாவது வரிசையில் நடைபாதைக்கு அருகிலிருந்த முதல் இருக்கை என்னுடையது என்ற காரணத்தாலேயே, காபினுக்குள் நுழைந்த உடனேயே பிரதமர் பேச்சுக்கொடுக்கும் முதல் நபர் நானாகிப்போகிறேன்.
இதற்குள், தன் கேபினை விட்டுவிட்டு, எங்கள் ‘பிரெஸ்’ பகுதிக்கு பிரதமர் வந்திருப்பதைப் பார்க்க முடிந்தவர்களாய், இதர பத்திரிகையாளர்கள் பிரதமரைச் சூழ்ந்துகொள்கிறார்கள்.
‘டெக்கான் ஹெரால்ட்’ விஸ்வமும், ‘யூஎன்ஐ’ அரோராவும், ‘இன்ஃபா’ இந்தர்ஜித்தும் அரசியல் ரீதியாகக் கேள்விகளைக் கேட்ட நாழிகையில், எனக்கு மிகமிக சமீபத்தில் நிற்கும் பிரதமரை ஏறிடுகிறேன்.
ஆழ்ந்த கருநீல பாண்ட், வெள்ளை முழுக்கை வைத்த சட்டை, அலட்சியமாய் அதன்மேல் அணியப்பட்ட கருநீல ‘விண்ட் சீட்டர்’ (wind cheater). இடது கையில் தங்க நிற ரோலக்ஸ் வாட்ச், மோதிர விரலில் வழவழவென்று திருமணத் தங்க மோதிரம்.
ராஜீவ் நல்ல உயரம்… 5′ 11” அல்லது ஆறு அடிகூட இருக்கலாம். வெள்ளைக்காரர்களுக்குச் சமமான ரோஜா நிறம்… கன்னத்தில் ‘அலர்ஜி’ போல நாலைந்து சிவப்புப் புள்ளிகள்…
‘ரீடர்ஸ் டைஜெஸ்ட்’ ஆசிரியரான அசோக் மகாதேவன், ”நேற்று மாஸ்கோவில் ‘போல்ஷாய்’ நிகழ்ச்சிக்குப் போயிருந்தீர்களே… எப்படியிருந்தது?” என்று கேட்க, ”நன்றாக இருந்தது… நான் மிகவும் ரசித்தேன்!” என்று பதில் கூறும் பிரதமர், கொஞ்சம் நிறுத்தி, ”திடீரென்று தீர்மானிக்கப்பட்டதால், உபரியாய் டிக்கெட்டுகளுக்கு ஏற்பாடு செய்து உங்களையெல்லாம் அழைத்துச்செல்ல முடியவில்லை… ஸாரி!” என்கிறார்.
இதற்குள் நிதானப்பட்டுப்போனவளாய் நான் பேசுகிறேன்.
”உங்களிடம் பர்சனலாக சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன், சார்…”
”கேளுங்களேன்…”
”தனியாக இருந்தால் தேவலை…”
ராஜீவ் சிரிக்கிறார்.
”பிற்பாடு என் கேபினுக்கு வாருங்கள்.”
”தேங்க்யூ, சார்… அதற்கு முன் அரசியல் ரீதியில் ஒரு கேள்வி… ஜெயவர்த்தனே, பிரேமதாஸா ஆகியோரைச் சந்தித்தபோது, இலங்கைத் தமிழர்கள் குறித்து ஆக்கபூர்வமாக ஏதேனும் முடிவுக்கு வந்தீர்களா?”
”இது விஷயமாக நாங்கள் பேசினோம். ‘சண்டை நிறுத்த உடன்படிக்கை’ அவர்களுக்கு சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. இது ரொம்பவும் சிக்கலான பிரச்சினை… நிதானமாகத்தான் அணுக வேண்டும். சுமுகமான தீர்வுக்கு என்னால் முடிந்தளவுக்கு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஜெயவர்த்தனேயும் சரி, நானும் சரி, எங்கள் நாடுகளை விட்டு இரண்டு வாரங்களாக வெளியில் இருக்கிறோம்… தாய்நாட்டுக்குத் திரும்பி நிலைமையைப் புரிந்துகொண்ட பிறகு, மீண்டும் முயற்சியைத் தொடருவோம்.”
”விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாடு விசேஷமாக ஆதரவு அளிப்பதைப்பற்றி, உங்களிடம் ஜெயவர்த்தனே புகார் செய்தாரா?”
”அப்படி எதுவுமே இல்லை.”
இதற்குள் ஃபிளைட் நிர்வாகி திரு. ராய், ஒரு பெரிய கேக்கைக் கொண்டுவர, ‘ப்ராவோ இண்டியா’ (Bravo India) என்ற வாசகத்தோடு இருந்த அந்தக் கேக்கை பிரதமர் வெட்டுகிறார். துண்டங்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்படுகின்றன.
கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் போல எங்களோடு இருந்துவிட்டு ராஜீவ் தன் இருப்பிடத்துக்குத் திரும்ப, நானும் உடன் போகிறேன்.
மந்திரிகள், செயலாளர்கள் அடங்கிய முன்பகுதியில் ‘இண்டியா கேன் டூ இட்’ (India can do it) என்ற இன்னொரு கேக்கை பிரதமர் வெட்டின பிறகு, என் தனிப்பட்ட பேட்டியைத் தொடங்குகிறேன்.
”திருமதி இந்திரா காந்தியை நான் பேட்டிகண்டபோது, தன் கண்களை தானம் செய்ய உறுதி எடுத்துக்கொண்டிருப்பதை என்னிடம் கூறியிருக்கிறார்… அதன்படி, அவர் இறந்ததும், பிள்ளை என்ற உரிமையில் அவர் கண்களை நீங்கள் தானம் செய்தீர்களா?”
ராஜீவ் இல்லை என்று தலையசைக்கிறார்.
”அந்தச் சமயத்தில் நான் வெளியூரில் இருந்தேன். அவர் இறந்தது உறுதிப்பட்டு, நான் டெல்லிக்குத் திரும்புவதற்குள், ஏகக் குழப்பம். அந்தக் குழப்பமான சூழ்நிலையில், ‘காலக்கெடு’ தாண்டிவிட்டது. இறந்து இவ்வளவு மணிநேரத்துக்குள் கண்களை தானமாகக் கொடுக்கவேண்டும் என்கிற கெடு இருப்பது, உங்களுக்குத் தெரியும் அல்லவா? அம்மாவின் இந்த ஆசையை நிறைவேற்ற இயலாமல்போனது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.”
”பாதுகாப்பை முன்னிட்டு, உங்கள் குழந்தைகள் எல்லா சிறுவர் சிறுமியரையும் போல பள்ளிக்குச் செல்வதில் தொடங்கி, எங்கும் சுதந்திரமாய் போக முடியாதது குறித்து?”
”ஐ ஃபீல் வெரி, வெரி ஸாட் (I feel very, very sad)… இது மிகமிக வேதனைக்குரிய விஷயம்! ஆனாலும், என்ன செய்வது, சொல்லுங்கள்?”
”இந்தப் பதினான்கு நாள்களும் குழந்தைகளுடன் அடிக்கடி பேசினீர்களா?”
”சோனியா தினமும் பேசினார்… நான் அவ்வப்போது பேசினேன்… தே ஆர் ஓகே.”
”திருமதி சோனியாவை லண்டனில் தனியாய் டின்னருக்கு அழைத்துப் போனீர்கள், போலிருக்கிறதே!”
ராஜீவ், ‘அட! உங்களுக்கு எப்படித் தெரியும்!’ என்கிற வியப்பில் புருவங்களை உயர்த்துகிறார்.
”அத்தனை வேலை நடுவிலும், நல்ல கணவனின் பொறுப்புடன் மனைவிக்கென தனியாக நேரம் ஒதுக்கி அவரை வெளியில் அழைத்துப்போனது, என் போன்ற பெண்களுக்கு அலாதி மகிழ்ச்சியைத் தந்தது, சார்…”
ராஜீவ் வெட்கத்தோடு சிரிக்கிறார்.
”அன்றைக்கு சோனியாவோடு வெளியில் போனதுதான்… அப்புறம், ‘ரிட்ரீட்’டிலும் சரி, மற்ற இடங்களிலும் சரி, அவளை நன்றாகப் பார்க்கக்கூட அவகாசம் கிடைக்கவில்லை, தெரியுமா?”
தெரியுமாவாவது! அதுதான் பதினான்கு நாள்களாய் பிரதமர் நாளொன்றுக்கு இருபது இருபத்தியிரண்டு மணிநேரம் உழைத்ததைக் கண்கூடாகப் பார்த்து விட்டேனே!
”திடுமென இப்படித் தனியாகப் போவதற்கு செக்யூரிடிக்காரர்கள் ஆட்சேபித்திருப்பார்களே?”
ராஜீவ் சிரிக்கிறார்.
”பின்னே? ஆனாலும், கடைசி நிமிடத்தில் எப்படியோ சமாளித்தேன்!”
”க்யூபாவில், ஜனாதிபதி காஸ்ட்ரோ கொடுத்த விருந்தின்போது, நீங்கள் ரொம்பவும் களைத்துப்போய் காணப்பட்டீர்கள்…”
”பஹாமாஸ் வேலைகளுக்குப் பிறகு ஓய்ந்துபோயிருந்தது நிஜம்தான்… அன்றைக்கு இரண்டு மணிநேரம்கூடத் தூங்கவில்லை, தெரியுமா?”
”இவ்வளவு கடுமையாக உழைத்தும், எப்போதும் பளிச்சென்றும் சிரித்த முகமாக இருப்பது உங்களுக்கு எப்படி சாத்தியமாகிறது, சார்?”
மீண்டும் சிரிப்பு.
”தெரியவில்லை… ஒருவேளை அது ஓர் ஆசிர்வாதமோ?”
”இரண்டு வருடங்களுக்கு முன் உங்களை ‘ஆனந்த விகடனு’க்காகப் பேட்டி கண்டேன்… நினைவிருக்கிறதா?”
”நன்றாக…”
”அப்போது, ‘இன்றைய பல பிரச்சினைகளுக்குக் காரணம், நேர்மை, உண்மை போன்ற பல உன்னதமான குணங்களை நாம் இழந்துவருவதுதான்’ என்றீர்கள்… இப்போது பிரதமராகிவிட்ட நிலையில், இது குறித்து ஆக்கபூர்வமாக என்ன செய்ய இருக்கிறீர்கள்?”
”இன்னமும் – உண்மை, நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொண்டால் பல பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்க்கலாம் என்றே நான் அழுத்தம் திருத்தமாக நம்புகிறேன். காந்தியக் கொள்கைகள் நமக்கு மிக அவசியமானவை. தனிநபரில் துவங்கி, எல்லாவற்றையும் சுத்தமாக்குவது நம்முடைய தலையாய முயற்சியாக இருக்க வேண்டும். மனிதாபிமானம், தூய்மை, உண்மை, நேர்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே என் செயல்கள் அமைய வேண்டுமென்று நான் மனதார விரும்புகிறேன்.”
”அந்தப் பேட்டியிலேயே லாட்டரி மோகத்தை ஒழிப்பதைப்பற்றி குறிப்பிட்டீர்கள்… ஆனால், ‘பதினேழு கோடி முதல் பரிசு’ என்னும் அளவுக்கு அந்தக் கேடு வளர்ந்துவிட்டதே ஒழிய, குறையக் காணோமே!”
”வாஸ்தவம்தான்… ‘கேடு’ என்றீர்கள்… உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதைவிட நிலைமை இப்போது இன்னும் மோசமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்… விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும்.”
”ஓர் வித்தியாசமான கேள்வி… எதற்கும் கட்டாயம் ஓர் விலை இருந்தே தீரும் என்பார்கள்… இன்றைக்கு, பிரபலமாக, யாவரும் மிகவும் விரும்பக்கூடிய பிரதமராகியிருக்கும் நீங்கள், இதற்குக் கொடுத்த விலை என்ன, சொல்ல முடியுமா?”
ராஜீவ் நிதானிக்கிறார். பின்னர், நிமிர்ந்து என் கண்களைப் பார்த்துப் பேசுகிறார்.
”எல்லாம்தான்… என் நிம்மதி, என் தனிப்பட்ட வாழ்க்கை, என் பொழுது போக்குகள்…”
”இதற்காக நீங்கள் வருந்துகிறீர்களா?”
நான் முடிக்கும் முன் பதில் வருகிறது. ”இல்லை… நிச்சயமாக இல்லை!”
கையோடு கொண்டுபோயிருந்த, பேட்டி வெளியாகியிருந்த ‘ஆனந்த விகடன்’, புகைப்படத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, நன்றி சொல்லிவிட்டு வெளியே வருபவளை, மத்திய மந்திரி நட்வர்சிங் ஏறிட்டு, சிரித்தவாறு கேட்கிறார்.
”திருப்திதானே? அத்தனை கேள்விகளையும் கேட்டுவிட்டீர்கள், அல்லவா?”
நான் சந்தோஷத்தோடு, ”எஸ் சார்… ஆனால், பிரதமரைப் பார்க்கும்போது, மனதும் உடம்பும் பரபரத்துத்தான் போகின்றன!” என, நட்வர்சிங் என்னருகில் குனிந்து கண்களைச் சிமிட்டி, ”நீங்கள் மட்டுமில்லை… அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும்போது, நாங்களும் பரபரத்துத்தான் போகிறோம்! (not only you, even we get excited every time we see him) என்று கூறிச் சிரிக்க, அந்தச் சிரிப்பு என்னையும் தொற்றிக்கொள்கிறது.
• • • • •


