சிவசங்கரியின் 60 சிறுகதைகள் – முதல் தொகுப்பிலிருந்து…
பட்டாம்பூச்சியும் தூக்கமும்
சலனம்.
தோளருகே… தலைக்கு மேலே…
ட்யூப் லைட்டிலிருந்து ஒரு சாண் தள்ளி, உட்காரலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் சில நொடிகளுக்கு இறக்கைகளைப் படபடத்தவாறு தயங்கிய அந்தப் பட்டாம்பூச்சி, பிரார்த்தித்துக்கொண்டதுபோல பிரதட்சிணமாகவும் அப்பிரதட்சிணமாகவும் நான்கைந்து முறைகள் விளக்கைச் சுற்றிவந்துவிட்டு, களைத்துப்போய் சுவற்றில் தொற்றிக்கொண்டு இளைப்பாற முற்பட்டது.
மூக்கிலிருந்து இறங்கிவிட்ட கண்ணாடியை மேலே தள்ளியவன், ஒருவித சுவாரஸ்யத்துடன் பட்டாம்பூச்சியைக் கவனித்தான்.
அப்படியொன்றும் அழகானது என்று சொல்ல முடியாது… ஓரோர் பட்டாம் பூச்சிபோல ஆரஞ்சும் மஞ்சளுமாய் மின்னவில்லை. சாதாரண பழுப்பு நிறம். இறக்கைகளின் ஓரங்களில் கரைகட்டின மாதிரியும், நடுவில் பொட்டுப்பொட்டாயும் கறுப்பு வண்ணம். பழுப்பில் கறுப்பு எப்படி எடுபடும்?
அவனுக்கு மீனாம்பா பாட்டியின் ஞாபகம் வந்தது. ரொம்ப சின்ன வயதில், வருடாவருடம் கோடை விடுமுறைக்கு ஆதிச்சபுரத்திலிருந்த மீனாம்பா பாட்டி வீட்டுக்குத்தான் போவது வழக்கம். பாட்டி வீட்டை ஒட்டிக் கால்வாய் சலசலத்துக் கொண்டு ஓடும். அமானுஷ்ய அமைதியை பங்கப்படுத்தும் முயற்சியில் சில்வண்டுகள் எப்போதும் சத்தமிடும். நாணற்புதர்களுக்கு மேலே வண்ண வண்ணமாய் பட்டாம்பூச்சிகள் பறந்து ஆளை மயக்கும். அப்படி ஆளைக் கிறங்கடித்த வண்ணத்துப்பூச்சி ஒன்றை, அது ஏமாந்திருந்த சந்தர்ப்பத்தில் இரண்டு இறக்கைகளையும் ஒருசேரப் பிடித்து, வீட்டுக்குத் தூக்கி வந்து, “இதுவும் தட்டான்பூச்சிபோலக் கல்லைத் தூக்குமாடா?” என்று ஒருநாள் சின்னக் கோண்டுவிடம் கேட்டதைக் காதில் வாங்கியவாறு மீனாம்பா பாட்டி வந்துவிட்டார்.
“என்னடா செஞ்சிண்டிருக்கே?”
“ஒண்ணுமில்லே, பாட்டீ… தும்பி மாதிரி இதுவும்…”
முடிப்பதற்கு முன் பாட்டி அதட்டினார். “அடே கடங்காரா… அதும்பாட்டுக்கு தேமேன்னு போற வண்ணாத்திப்பூச்சியப் பிடிச்சுண்டு வந்து ஏண்டா இம்சை பண்றே? சட்டுனு மறுபடி பறக்க விட்டுடு… இல்லேன்னா உன்னை அது சபிச்சுடும்!”
அவன் சிரித்தான். “ஐயே… இது வண்ணாத்திப்பூச்சி இல்லே, பாட்டீ… பட்டாம்பூச்சி! இங்கிலீஷ்ல ‘பட்டர்ஃப்ளை’னு சொல்…”
நான்கே எட்டில் கிட்டத்தில் வந்த பாட்டி, மறுபடியும் அவன் முடிக்கும் முன்னர் குறுக்கிட்டு முறைத்தார். “வண்ணாத்திப்பூச்சி பாவம் பொல்லாதது, விட்டுடுன்னு சொல்றேன்… கேக்காம மேம்மேல பேசறியா, படவா…”
பாட்டிக்குக் கோபம் அதிகம் வந்தால் வலிக்கக் குட்டுவார்… தெரியும். அதற்கு இடம்தராமல் பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்ட அன்றிரவுதான், முற்றத்தில் வெள்ளையாய் நிலா வெளிச்சம் விழ, கையில் வத்தல்குழம்பு சாதத்தை நல்லெண்ணெய் விட்டு மணக்கமணக்கப் பிசைந்து போட்டுக்கொண்டே, முதல் முறையாய் அந்தக் கதையைச் சொன்னார்.
“ஒரு ஊர்ல ஒரு வண்ணான். ரொம்ப நல்லவன். அவனுக்கு ஒரு பொண்டாட்டி. அவளும் மகா உத்தமி. தினமும் ரெண்டு பேரும் விடிகார்த்தால எழுந்து ஒண்ணா துறைக்குப் போயி ஒண்ணா துணி வெளுத்து, ஒண்ணா வீட்டுக்கு வந்து சாப்பிடுவாளாம். அவ்வளவு ஒத்துமை! ஒரு சமயம் விடாம மழை கொட்டி சலவைக்கு எதிர்பாராம நிறைய துணி சேர்ந்துட்ட ஒரு நாள்ல, ‘வானம் கொஞ்சம் வெளுத்திருக்கு… நா முன்னால ரெண்டு மூட்டை வெள்ளைத் துணிங்களை எடுத்துண்டுபோயி வெள்ளாவி வெக்கறேன். நீ சாப்பாட்டோட பாக்கியிருக்கற கலர்த் துணிங்களை எடுத்துண்டு வா. வேலை முடிஞ்சதும் அங்கேயே சாப்டுட்டு நிதானமா வீடு திரும்பலாம்’னு சொல்லிட்டு புருஷன்காரன் கிளம்பிப் போயிட்டான். இவளும் அவனுக்குப் புடிச்ச சமையலா செஞ்சு எடுத்துண்டு, ஒரு மூட்டை கலர்த் துணிகளையும் தூக்கிண்டு ஆத்துக்குக் கிளம்பினா. ஆனா, அதுக்குள்ள மழை மறுபடியும் புடிச்சுண்டுட்டதுல, ஆத்துல தண்ணி கிடுகிடுன்னு ஏறிப்போயி, வெள்ளம் வண்ணானை அடிச்சுண்டுபோயிடறது! பாவம் வண்ணாத்தி… சாப்பாட்டுக் கூடையும் துணி மூட்டையுமா ஆம்படையானைத் தேடித்தேடி அலைஞ்சுட்டு, கடைசில, முதுகுல இருந்த அத்தனை துணிகளும் கலர்க்கலரான இறக்கைகளா மாற, அவ ஒரு அழகான வண்ணாத்திப்பூச்சியாவே ஆயிடறா! இன்னிக்கும் வண்ணாத்திப்பூச்சி ஒரு எடத்துல தங்காம மொலுமொலுன்னு பறந்துண்டே தன் புருஷனைத்தான் தேடறது… யாராவது அப்படித் தேடறதுக்கு இடைஞ்சல் பண்ணினா, ‘எங்களை மாதிரி நீயும் உன் பொண்டாட்டியும் பிரிஞ்சு அவஸ்தைப்படணும்’னு அது சபிச்சுடுமாம்! இப்பப் புரியறதா, ஏன் அத விட்டுடுன்னு சொன்னேன்னு?”
புரிந்தது.
கூடவே, ஈர மண்ணில் விழுந்த விதை மாதிரி அதற்குப் பிறகு பட்டாம்பூச்சியை எப்போது பார்த்தாலும், அதன்பால் ஒரு இரக்க உணர்வு முளைவிடுவதும் புரிந்தது.
பட்டாம்பூச்சி ட்யூப் லைட்டை விட்டுப் பறந்து ஜன்னலிடம் சென்று, வெளியே போவது மாதிரி பாவ்லா காட்டிவிட்டு, மீண்டும் விளக்கையே சுற்றி வந்தது.
மக்குப் பூச்சியே… உன் புருஷன் இந்த விளக்கடியிலா ஒளிந்திருக்கிறான்? வெளியே போய்த் தேடேன்!
அவன் புத்தகத்தைக் கையிலெடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்க முற்பட்டான். பத்து நாட்களில் பாங்க் பரிட்சை வருகிறது. பொறுப்பாய்ப் படித்துப் பாஸ் செய்தால், உத்தியோக உயர்வு, கூடுதல் சம்பளம், அம்மாவை அழைத்து வந்து குடித்தனம் அமைப்பது – போன்ற உபரி வசதிகளுக்கு இடமுண்டு. இல்லாவிட்டால், இந்த நாற்றம்பிடித்த லாட்ஜ் அறை வாசமும், வேகாத ‘மெஸ்’ சோறும்தான் தொடரும்.
கட்டுப்பாட்டை மீறிக்கொண்டு புத்தி, பரபரத்துத் திரிந்த பட்டாம்பூச்சியிடமே ஓட… விளக்கை அணைத்துவைத்தால் வெளியே சென்றுவிடும் என்கிற எண்ணத்தில் விளக்கை அணைத்தான். இருட்டில் உட்கார்ந்திருந்த ஓரிரு நிமிடங்களிலும் தலைக்கு மேல் பூச்சி பறக்கும் சலனத்தை உணர முடிய, அவனுக்கு திடுமென அப்பா இருந்த நாட்களில் பழைய மாம்பலம் வீட்டில் குடியிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றும் நினைவுக்கு வந்தது. அப்போது அவன் பள்ளியில் பத்தாவது படித்துக்கொண்டிருந்தான்.
துருப்பிடித்த டேபிள் ஃபேன் ஒன்றை வைத்துக்கொண்டு ஏழு பேர் காற்று வாங்கி நிம்மதியாய் உறங்கமுடியவில்லை என்பதால், தீபாவளி போனஸ் பணத்தில் சீலிங் ஃபேன் வாங்கிக் கூடத்தில் அப்பா மாட்டிய வருடம்.
ஒரு மாதம் சென்றிருக்கும்… இரண்டு நாட்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு உறவுக்காரர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றுவந்து பார்த்தால், கூடத்துத் தரை யெல்லாம் வைக்கோல், தேங்காய்நார்க் குப்பை, மின்விசிறியின் மேல்கிண்ணத் தில் கூடுகட்டிவிட்ட குஷியில் ஜாலியாய்க் குரல் கொடுத்துக்கொண்டு இங்கு மங்கும் பறக்கும் சிட்டுக்குருவிகள்!
“குருவிக்கூட்டைக் கலைச்சா, நம்ப குடும்பம் சிதறிடும்! அதும்பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டுமே! கூட ஒரு தடவை பெருக்கிட்டாப் போச்சு!” அம்மாவின் சிபாரிசில் குருவிகள் செளக்கியமாய் குடும்ப வாழ்க்கையைத் தொடர, விரைவிலேயே முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் ஓயாமல் கத்துவது கேட்க ஆரம்பித்தது.
ஒருநாள் ராத்திரி மணி ஒன்பதரை, பத்து இருக்கும்… விளக்கை அணைத்துப் படுத்துக் கொஞ்சநேரம்கூட ஆகியிருக்காது… ‘டப்’பென்று ஏதோ அடிபடும் ஓசை… பின்னோடு ‘சொத்’தென்று தரையில் எதுவோ விழும் சத்தம்…
மின்விசிறியில் அடிபட்டு தாய்க்குருவி செத்துப்போனதும், அடுத்துவந்த நாட்களில் குஞ்சுகள் அம்மாவுக்காகப் பரிதவித்ததும் நினைவுக்கு வர, அவன் சங்கடப்பட்டான்.
அந்தக் குருவி போல இந்தப் பட்டாம்பூச்சியும், சுழலும் விசிறியின் இறக்கையில் சிக்கிக்கொள்ளலாம் என்கிற எண்ணம் இருப்புக்கொள்ளாமையை அதிகமாக்க, அவசரமாய் எழுந்து சுவரில் தடவி ஸ்விட்சைக் கண்டுபிடித்து, ஃபேனை நிறுத்தினான்.
மறுபடி இருட்டைத் துழாவிக்கொண்டே கட்டிலில் உட்கார்ந்தான்.
ஓரிரு நிமிடங்கள் செல்வதற்குள் கழுத்திலும் கக்கத்திலும் வியர்வை கசகசக்க ஆரம்பித்ததும், மேற்கொண்டு பொறுக்க முடியாதவனாய் எழுந்து விளக்கைப் போட்டான்.
மொட்டுப்போல கதவுக்கு மேலே சமர்த்தாய் உட்கார்ந்திருந்தது, வெளிச்சம் பரவியதும் மீண்டும் பறக்கத் துவங்க, அவன் ஓரத்தில் வைத்திருந்த குடையை எடுத்து சுவரில் தட்டி அதை விரட்டப் பார்த்தான். பட்டாம்பூச்சி அறைக்குள்ளேயே சுழன்று வந்ததே தவிர, வெளியே போகப் பிடிவாதமாய் மறுத்தது.
சில நொடிகளுக்கு என்ன செய்வது என்று புரியாத தினுசில் மூச்சிரைக்க நின்றான். பட்டாம்பூச்சியை மறந்துவிட்டுப் புத்தகத்தைப் படிக்கலாமா என்றும் நினைத்தான். முடியாது என்று தோன்ற, விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.
புழுக்கம் அதிகமாய் இருந்ததில், உறக்கம் வர மறுத்தது. பட்டாம்பூச்சி எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மின்விசிறியைச் சுழலவிட்ட சில நொடிகளுக்கெல்லாம், அது மடத்தனமாய்க் குறுக்கே பறந்து அடிபடுகிற மாதிரியான கற்பனை எழ, ‘சனியன், சனியன்’ என்று வாய்விட்டு வைதுகொண்டே எழுந்தான்.
இரவு முழுவதும் இப்படி அல்லாடிக்கொண்டிருந்துவிட்டுக் காலையில் அவன் எழுந்தபோது, கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. முகத்தில் நீர் சுரந்திருந்தது.
கழிவறைக்குச் சென்று திரும்பியபோது எதிர்ப்பட்ட மூன்றாவது அறை பாஸ்கர், “என்ன, நைட் ஷோவா?” என்ற கண்களைச் சிமிட்டி வினவியது எரிச்சலை எழுப்பியது.
உடை உடுத்தித் தயாரான நாழிகையில் அந்தப் பட்டாம்பூச்சி ஜன்னல் வென்டிலேட்டர் மேல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடிய, மாலை அலுவலகத்திலிருந்து திரும்புவதற்குள் அது நிச்சயம் வெளியே பறந்துவிடும் என்று உறுதியாய்த் தோன்றியது. எதற்கும் இருக்கட்டும் என்று ஜன்னலை அகலத் திறந்து, கொக்கியைப் போட்டுவிட்டுக் கிளம்பினான்.
நாள் முழுவதும் துளி ஓய்வு இல்லாமல் உழைத்துவிட்டு மாலையில் லாட்ஜுக்கு வந்து, பூட்டியிருந்த அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்து விளக்கைப் போட்ட நொடியில், அதுநாழிகை மறந்திருந்த பட்டாம்பூச்சியின் ஞாபகம் தலைதூக்கியது.
சட்டையைக்கூடக் கழற்றாமல் கண்களைச் சுழற்றிப் பார்த்தவரையில் அது தென்படாமல்போக, சன்னமாய் விசிலடித்துக்கொண்டே மின்விசிறியை வேகமாக ஓடவிட்டான். உடைகளைக் கழற்றி, லுங்கி அணிந்து, குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான்.
ஈரத்துண்டை நாற்காலியின் முதுகில் போட்டுவிட்டு, கண்ணாடிக்கெதிராக நின்று தலை சீவியபோது, முதலில் பின்னால் சலனத்தை உணரமுடிந்தது. பிறகு கண்ணாடியில் பிரதிபலித்த பிம்பத்தையும் பார்க்கமுடிந்தது.
திரும்பினான். அதுவேதான்… அந்தப் பழுப்பு பட்டாம்பூச்சியேதான்.
அன்றிரவும் முந்தின இரவுபோல அல்லாட்டத்தில் முடியுமோ என்கிற பதட்டம் எழ, கையிலிருந்த சீப்பை ஆத்திரத்துடன் பட்டாம்பூச்சியை நோக்கி வீசியெறிந்தான்.
யாரோ மணியடித்துக் கூப்பிட்ட மாதிரி வந்து கழுத்தை அறுக்கிறதே சனியன்!
லாட்ஜ் பையனைக் கூப்பிட்டு அதைத் துரத்தச் சொல்லலாமென்று எண்ணினான்.
பத்து நாட்களுக்கு முன் கீழ்த்தளத்தில் இருக்கும் செந்தில் அறையில் கருந்தேள் ஒன்று எப்படியோ புகுந்துவிட்டதும், அதை அடிக்கக் கூப்பிட்டதற்காக போவோர் வருவோரிடமெல்லாம், ‘ஒரு ஆம்பிளை, தேளைக் கண்டு பயப்பட்டா எப்படி!’ என்று லாட்ஜ் பையன் சொல்லி டபாய்த்ததும் நினைவுக்கு வர, பட்டாம் பூச்சியைத் துரத்த அழைத்தால், நாளைக்குப் பேரை சந்திசிரிக்கப் பண்ணிவிடுவான் என்ற பயம் தோன்ற, நினைப்பை மாற்றிக்கொண்டான்.
எரிச்சல் அடங்காமலேயே விளக்கை அணைத்து, கதவைப் பூட்டிக்கொண்டு மெஸ்ஸுக்கு சாப்பிடப் போனான்.
திரும்பி வந்தபோது, பிரச்சினை இன்னும் கொஞ்சம் சிக்கலாகியிருந்தது.
எங்கிருந்தோ அறைக்குள் வந்துவிட்ட சாம்பல்நிறப் பல்லி ஒன்று, பட்டாம் பூச்சிக்குக் குறிவைத்து அதைத் துரத்திக்கொண்டே நகர, பின்தொடரும் ஆபத்தை உணராமல் பட்டாம்பூச்சி தன் இஷ்டத்துக்கு மடத்தனமாய் சஞ்சரிக்க… அதை வேடிக்கை பார்த்தவாறு கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்க முடியாமல், பல்லி பூச்சியை நெருங்கவிடாமல் விரட்ட முற்பட்டான்.
சுவரில் பலமாய்த் தட்டி பல்லியை பயமுறுத்தினாலும், அது சில நிமிடங்களுக்குக் கட்டிலுக்கு அடியில், கதவிலிருந்த விரிசலில் – என்று இண்டு இடுக்குப் பார்த்து ஒளிந்து கொண்டிருந்துவிட்டு, மறுபடி ஓசைப்படாமல் வெளிப்பட்டுத் தன் இரையைத் தொடருவதிலேயே குறியாய் இருக்க, அவன் அதற்கு மிஞ்சின எச்சரிக்கையுடனும் வேகத்துடனும் செயல்படவேண்டி வந்தது.
இருக்கிற கஷ்டம் போதாதுபோல, சில சந்தர்ப்பங்களில் பல்லி எட்டிப்பிடிக்கிற தொலைவில் வலிய வந்து, அந்த முட்டாள் பட்டாம்பூச்சி உட்காருவதை விரட்டிவிடும் வேலையோடு, மின்விசிறியை நிறுத்தி, புழுக்கம் அதிகமானால் ஓடவிட்டு, மறுபடி நிறுத்திய அவஸ்தை வேறு சேர்ந்துகொண்டது.
இதனடுவில், பதட்டத்தில் அவன் எழுப்பிய ஓசைகளைக் கேட்டுவிட்டு, மூடியிருந்த கதவை அடுத்த அறை சுந்தரலிங்கம் தட்டி, “என்ன சத்தம், தம்பி? நிம்மதியா தூங்கவிடாம என்னத்த உருட்டிக்கிட்டு இருக்கீங்க? நடுராத்திரியில?” என்று அதட்டலாக விசாரித்ததையும் சமாளிக்கவேண்டிவந்தது.
இரவு கழிந்து, பொழுது விடிந்தபோது, சொதசொதத்து ஏகத்துக்கு சிவந்த கண்களும், அவற்றைச் சுற்றி கருவளையங்களுமாய் இருந்தவன், அதே கோலத்தில் ஆபீஸுக்குப் போனதும், தலையோடு கால் ஏறிட்ட அதிகாரி சிடுசிடுப்பை மறைக்காமல் கேட்டுவிட்டார்.
“வாட்ஸ் ராங்? ரொம்ப நல்ல பையன்னு நினைச்சிருந்தேனே?”
அவருடைய மாப்பிள்ளை சென்ற ஆண்டு குடிநோயாளியாக மாறி, வயிறு வீங்கி, ரத்தவாந்தி எடுத்து, இளம் மனைவியையும் பிஞ்சுபிஞ்சாய் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு அகாலமாய் செத்ததிலிருந்து, தூசி விழுந்து யாருக்காவது கண்கள் சிவந்துபோனால்கூட, ‘குடி கேஸ்தான்’ என்கிற தீர்மானத்தில், ‘நல்ல பையன்னு நினைச்சிருந்தேனே… வாட்ஸ் ராங்?’ என்ற கேள்விதான்.
மதியம் ஆவதற்குள் வேலைகளை ஒழுங்காகக் கவனிக்க முடியாமல் கண்கள் ஒரேயடியாய் எரிந்தன. இமைகள் திறக்க மறுத்தன. சிந்தனை தெளிவில்லாமல் கன்னாபின்னாவென்று ஓடியது.
பீச்சில் காற்றாட உட்கார்ந்துவிட்டு, இருட்டிய பிறகு லாட்ஜுக்குத் திரும்பிய போது, அவன் ஏகத்துக்கு ஓய்ந்திருந்தான். உள்ளே நுழையவே தயக்கமாக இருந்தது. மின்விசிறியையோ விளக்கையோ போடாமல் கொஞ்ச நேரம் சும்மா உட்கார்ந்தான்.
பிறகு மெதுவாக எழுந்து விளக்கை ஏற்றிவிட்டு, கூசின கண்களை வெளிச்சத்துக்குப் பழக்கி மெதுமெதுவாக அவன் நிமிர்ந்தபோது, எங்கிருந்தோ பறந்துவந்த பட்டாம்பூச்சி, பரிச்சயமாகிவிட்ட தைரியத்தோடு ட்யூப் லைட்டின் விளிம்பிலேயே அமர, விளக்கின் அடிப்பக்கத்தில் சாமர்த்தியமாய் மறைந்திருந்து விட்டு சரக்கென்று வெளிப்பட்ட சாம்பல் பல்லி, கண்மூடித்திறக்கும் அவகாசத்தில் அதை நோக்கித் தாவ…
முக்கோணமாய், குறுக்கே கோடு கிழித்த அரை உள்ளங்கை சைஸில் தெரிந்த பட்டாம்பூச்சியின் உடம்பில் பாதிப்பகுதி காணாமல்போயிற்று… மரண அவஸ்தையில் துடித்த மிகுதியை, தலையை உதறி நான்கு விழுங்கலாய் விழுங்க… எண்ணி சில கணங்கள் நகர்வதற்குள் அந்தப் பட்டாம்பூச்சி இருந்த சுவடு தெரியாமல் மறைந்தது மாயமாக.
அவன் எதையுமே சிந்திக்க, செய்ய, தோன்றாத மாதிரி செயலிழந்து போனான். உடம்பு விறைத்தது. பிடறியில் வியர்த்தது. அடிஉதட்டை நாவால் மெதுவாக ஈரமாக்கி மூச்சை இழுத்து வெளியிட்டான். பின்னர் தலையைக் குனிந்தவண்ணம் கட்டிலை நெருங்கி மெள்ளக் காலை நீட்டிப் படுத்துக் கொண்டான்.
சில நிமிடங்களில், இன்னும் சாப்பிடாததையோ, விளக்கை அணைக்காமல் இருப்பதையோ குறித்து அலட்டிக்கொள்ளாமல், நிம்மதியாய் உறங்க ஆரம்பித்தான்.
– 1992
* * * * *
இன்னொரு நாள்
மாலை வெயில் உடம்புக்கு இதமாக இருந்தது. ஜிலுஜிலுவென்று விசிய காற்றை அனுபவித்தவண்ணம், அலைகள் அடித்து ஓயும் மேட்டில், நுரையுடன்கூடிய நீர் கால்களை வருடிக்கொடுக்க சில நிமிஷங்கள் நின்ற ரமணன், கொஞ்சம் நடந்து ஒருபக்கமாய் உட்கார்ந்துகொண்டான்.
சற்றுத் தொலைவில் ஒரு இளம் ஜோடி. அவளுக்குத் தண்ணீர் என்றால் பயம் போலிருக்கிறது. வரமாட்டேன் என்று சண்டி பண்ணியவளை ‘நான் இருக்கும்போது என்ன பயம்’ என்கிற தினுசில் அணைத்து தண்ணீரிடம் இழுத்துச் செல்கிறான் அவன். அலைகள் வந்து காலில் மோதும் சிலிர்ப்பில் அவள் துள்ளுகிறாள். அவன் இதுதான் சாக்கு என்று இன்னும் இறுக அணைக்கிறான். அவள் சிணுங்குகிறாள்… அப்புறம் அந்த அணைப்பை ரசிக்கிறாள்.
என்ன அன்னியோன்னியம்! என்ன பரவசம்!
இந்த மாதிரி ஒரு நாளாவது, வத்ஸுவோடு பீச்சில் உட்கார்ந்து, நிலா உதயமாகும்வரை சல்லாபிக்க வேண்டும் என்று அவனுள்ளும் ஆசை பூதமாகத்தான் படர்ந்திருக்கிறது. ஆனால் நடப்பதற்குத்தான் வழியைக் காணோம்.
சொன்னால் சிரிப்பார்கள்… கல்யாணமாகி முழுசாய் மாசம் ஒன்று பூர்த்தியாகிவிட்டது, இன்னும் ஒரு மாலைப்பொழுதைக்கூட – ஒரே ஒரு சாயங்கால வேளையைக்கூட – அவன் வத்ஸுவோடு தனியாய்க் கழிக்க முடியவில்லை என்பது நிஜம்தான்.
வத்ஸு… அவனுடைய வத்ஸுக்குட்டி…
தேய்த்துவைத்த வெங்கலக் குத்துவிளக்கு மாதிரி, அவள்தான் எத்தனை அழகு! சாட்டைசாட்டையாய் கை, கால்கள், அளவான உடற்கட்டு, காம்பஸ் வைத்து வரைந்த மாதிரியான வட்ட முகம், சொப்பு வாய்… அப்புறம்…
ஹோ! எதைச் சொல்ல எதை விட!
“எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன முடை? விலைவாசி விக்கற அழகுல, குடும்பத்தை உன்பாடு என்பாடுனு கரையேத்தினா போதும்னு இருக்கறப்ப, புதுசா ஒருத்தியைக் கூட்டிண்டுவந்து அவ பொறுப்பையும் என்னத்துக்காக சுமக்கணும்?”
இரண்டு மாசங்கள் முன் அம்மா ‘நல்ல இடம் ஒண்ணு வந்திருக்குடா, ரமணா’ என்றபோது, எப்போதும் சொல்லும் சாக்கைச் சொல்லி அவன் தட்டிக் கழிக்கவே பார்த்தான்.
“நன்னா இருக்குடா, நீ சொல்றது! குடும்பம்னா ஆயிரம் இருக்கத்தான் செய்யும்… வாசப்படி இல்லாம வீடு ஏது? அதுக்காக கல்யாணம் வேண்டாம்னா எப்படி? உனக்குன்னு ஒருத்தி வந்து, உனக்குன்னு ஒரு குழந்தை காலாகாலத்துல பிறக்க வேண்டாமா? இந்த மாசியில உனக்கு முப்பத்திநாலு முடியறது! இன்னும் எத்தனை வருஷம் போகணுங்கறே? நல்ல எடம், பொண்ணு கண்ணுக்கு நன்னா இருக்கா… ஏதோ நம்ம அந்தஸ்துக்குத் தகுந்தாப்பல சீர்செனத்தி செய்யறேங்கறா… பொண்ணைப் பாக்காமலே மாட்டேன், வேண்டாம்னா எப்படிடா?”
மேற்கொண்டு அம்மாவோடு தர்க்கம் பண்ண விரும்பாமல் “சரி, சரி… தொணதொணக்காதே! பொண்ணுபாக்க வரணும், அவ்வளவுதானே? வரேன்…” என்று சொன்னாலும், மனசுக்குள், ‘பெண் கறுப்பு, குட்டை, முகத்தில் அசடு வழிகிறது’ என்று எதையாவது சொல்லி இத்தனை வருஷங்களாய்ப் பல இடங்களைத் தட்டிக்கழித்தது போல இதையும் உதறிவிடலாம் என்ற நம்பிக்கைதான் ரமணனுக்கு.
பின்னே? கல்யாணம், அது இது என்பதற்கெல்லாம் ஆசைப்படும் ஸ்திதியிலா அவன் இருந்தான்?
அப்பா இல்லாத குடும்பம்.
கணவனை இழந்து, சின்னப் பிள்ளை கண்ணனோடு அம்மா வீட்டில் நாலாம் வருஷம் தஞ்சம் புகுந்துவிட்ட அக்கா லக்ஷ்மி; பி.காம் படிக்கும் தம்பி சங்கர்; எஸ்.எஸ்.எல்.சி. யில் கெளரி – தங்கை; அம்மா; வீட்டின் சீமந்த புத்திரனான இவன்…
இத்தனை பேர்களும் மானமாய் வாழ வழிபண்ணுவது, இவன் கிளார்க் உத்தியோகம் பார்த்து கொண்டுவரும் நானூற்றிப் பத்தும், அக்கா டீச்சராய்த் தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்தி சம்பாதிக்கும் நூற்றி அறுபதும்தானே!
இதில்தான் சாப்பாடு, வாடகை, மற்ற போக்குவரத்துக்கள். இதில் மிச்சம் பண்ணித்தான் கெளரிக்கு ஒரு வழி செய்யவேண்டும். திடுமென்று வியாதி, உடம்பு என்றால் சமாளிக்கத் தெரியவேண்டும். எவ்வளவு இல்லை!
வாடகையே பகாசூரன் மாதிரி நூற்றி நாற்பதை விழுங்குகிறதே என்று முணுமுணுப்பதில் அர்த்தம் கிடையாது… மைலாப்பூர் மாடவீதியில் குடித்தனம் பண்ணுவதற்கு இது ரொம்ப மலிவுதான். அப்பா இருந்த நாட்களிலிருந்து – கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாய் – இந்த போர்ஷனிலேயே இருப்பதால், வீட்டுக்காரர் தாறுமாறாய் வாடகையை ஏற்றாமல் இருக்கிறார்.
கடை, கண்ணி, கோவில், பஸ் ஸ்டாப் எல்லாம் கிட்டத்தில் என்ற செளகரியம் இருந்ததே தவிர, இடம் என்னவோ ரொம்பச் சின்னதுதான். மாடி ஏறினால், ஒரு சின்ன நடை. தொடர்ந்து பெரிசாய்க் கூடம். பின்னால், சமையல்கட்டு. அதையும் தாண்டி தனி குளியலறை, டாய்லட்.
தனக்கு இப்போதைக்குக் கல்யாணம் வேண்டாம் என்று ரமணன் மறுத்ததற்கு இந்த வீடும் ஒரு காரணமே. இருப்பதோ ஒற்றைக் கூடம்… சாப்பாடு, படுக்கை, படிப்பு – எல்லாம் இதில்தான் என்றிருக்க, புதுசாய்க் கல்யாணம் பண்ணிக்கொள்கிறவர்களுக்கு ஏது இடம்!
வாச நடையில் படுத்துக்கொள்ளலாம் என்றால், அதற்குக் கதவு கிதவு ஒன்றும் கிடையாது. சமையல்கட்டை உபயோகிக்கலாம் என்றால், இரவில் பாத்ரூம் போகிறவர்கள் அந்த அறை வழியாகத்தான் போகவேண்டும்.
அப்புறம் எப்படி?
இத்தனை வருஷங்களாய் அம்மாவை சமாளித்த தினுசில் இந்த முறையும் ஏய்த்துவிடலாம் என்ற ரமணனின் எண்ணத்திற்கு பெப்பே காட்டிய பெருமை, வத்ஸலாவின் லட்சணமான தோற்றத்தையே சாரும்.
நிமிர்ந்து பார்த்தவன், பிரமித்துதான் போனான்.
இத்தனை அழகையும் கட்டியாளும் பாக்கியம் எனக்கா! இந்த வெள்ளைத் தோலும் செதுக்கின உடம்பும், எனக்கா!
மனசில் அடியில் உறங்கிக்கொண்டிருந்த ஏக்கங்கள் மெதுவாய் விழித்துக் கொள்ள, அன்றிரவு அம்மாவிடம் சம்மதத்தைத் தெரிவிக்க, இதோ, வத்ஸு இவன் மனைவியாகி மாசம் ஒன்று ஓடிவிட்டது.
கல்யாணம் நிச்சயமான கையோடு அம்மா ஒரு தச்சரை அழைத்து, பத்து கள்ளிப்பெட்டிகளை வாங்கிவந்து, கூடத்தில் எட்டடிக்கு எட்டடி என்று சின்னதாய் ஒரு தடுப்புச்சுவர் எழுப்பச் சொன்னாள்.
கல்யாணமான மறுநாள் கட்டுச்சாதக் கூடையுடன் வந்திறங்கின பிறகு, இதுதான் இவர்கள் அறை ஆயிற்று.
இரண்டு பெட்டிகளை ஓரமாக வைத்து, சம்பந்தி தைத்துத் தந்திருந்த மெத்தைகளை விரித்து, நாலு மல்லிகைச் சரங்களைக் குறுக்கும் நெடுக்கும் கட்டி, ஊதுபத்தி கொளுத்தி, கூஜாவில் பால், தட்டில் பழம், ஜாங்கிரி வைத்து அம்மாவும் அக்காவும் ஜோடித்திருந்த இந்த அறையில்தான், அவர்களுடைய சாந்தி முகூர்த்தம் நடந்தது.
மேல்விட்டம் வரைக்கும் உயராத ஆறடி மரத்தடுப்பு என்பதால், சின்னக் குரலில் பேசினாலும் வெளியில் கேட்டுவிடும் என்ற பயம்.
விளக்கைப் போட்டுக்கொண்டு, நடையில் பரீட்சைக்குப் படிக்கும் சங்கர். அதே கூடத்தில், மருமானை அணைத்தபடி தூங்கும் கெளரி. பத்தடி தள்ளி இருந்த சமையல்கட்டில் அம்மா, அக்கா.
முதலாவது, இரவாவது… மண்ணாங்கட்டி! என்னவோ தப்புப் பண்ணுவது போல… ச்சே! என்ன வேண்டிக்கிடக்கிறது!
நாலு நாட்கள் ஆவதற்குள் சலிப்பும் ஏக்கமும் மொத்தமாய் ஆட்டுவிக்க, ரமணி சதா மனசுக்குள் குமையத் தொடங்கியது வாஸ்தவம்.
பந்தாய் மனைவி பூச்சூடி வர, அதில் முகம் பதித்து மகிழ்ந்தால் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை பண்ணுவதோடு நிறுத்திக்கொள்ள, அவன் பழகிக்கொண்டான்.
ஒரு ரூபாய்க்குப் பூ வாங்கினாலும், சாமி படங்களுக்குக் கொஞ்சம், கெளரிக்குக் கொஞ்சம் என்று போனால், பாக்கி விரக்கடை அளவுதானே வத்ஸுவுக்குத் தேறும்? அப்புறம் பெரிசாய் பூ என்ன!
சினிமாவுக்கு மனைவியை அழைத்துப் போகவேண்டும் என்று ஏகத் துடிப்பு… ஆனால், முடியுமா? அம்மா, அக்கா, தம்பி கிளம்பாவிட்டாலும், கெளரியும் கண்ணனும் முதலில் தயாராவது நிச்சயம். புது மனைவியுடன் முதல் சினிமா… பால்கனி டிக்கெட் எடுக்காவிட்டால் எப்படி? நாலு இரண்டரை ரூபாய் டிக்கெட் எடுத்தால், பத்து ரூபாய். அப்புறம் போகவர பஸ் செலவு. அங்கு பாப்கார்ன், சோடா என்று எதையாவது கண்ணன் இழுத்துவிடும் செலவு… ஆக, இருபது பழுத்துவிடும். அப்பாடி! இருபது ரூபாயா? இருந்தால், நாலு கிலோ துவரம்பருப்பு வாங்கலாமே!
பீச், கோவில் போகப் பணம் காசு வேண்டாமே, போய்வரலாமே என்றால், அத்தனை பேர்கள் இருக்கும் வீட்டில் ஒருத்தியை மட்டும் பார்த்து ‘நீ கிளம்பு’ என்று எப்படிச் சொல்வது? நா கூசுகிறதே! குழந்தைக்குட்டிகளை வீட்டில் விட்டு விட்டு அப்படியாவது என்ன பீச்… என்று மனசில் என்னவோ நெருடுகிறதே!
என்ன கல்யாணம், என்ன பெண்டாட்டி! நினைத்தபோது மனைவியின் கையைப் பிடித்து சீண்ட முடிவதில்லை, நினைத்தபோது ஒரு வார்த்தை பேச முடியவில்லை. இதெல்லாம்கூட வேண்டாமய்யா, ராத்திரி படுக்கும்போது நாள் பூராவும் பிரிந்திருந்துவிட்டுப் புது மனைவியோடு சேர்ந்து இருக்கும்போது, மனுஷன் ஒரு கொஞ்சலான வார்த்தை சொல்லி, விளக்கு வெளிச்சத்தில் அவள் முகத்தைக் கையில் ஏந்தி ரசிக்க முடியவில்லை என்றால்… அப்புறமென்ன கல்யாணம் வேண்டிக்கிடக்கிறது!
கிசுகிசுப்பாய்க் காதுக்குள் “வத்ஸும்மா… என்னோட வத்ஸுக்குட்டி…” என்றால், “ஐயோ, வேண்டான்னா… அவாள்ளாம் இருக்கா…” என்பாள். “உன் பட்டுக் கைக்கு இந்த மருதாணிச் சிகப்பு எத்தனை…” முடிக்க விடமாட்டாள். “ஐயய்யோ… வெளக்கை அணைச்சுடுங்கோ… பலகைல இடுக்கு இருக்கு…” ரகசியமாய் பதில் வரும். உடம்பு விலகிப்போகும்.
ச்சே… என்ன தாம்பத்தியம்டாப்பா…
ருசி காணாதவரை எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால் இப்போது எத்தனை வேதனை, எத்தனை அவஸ்தை…
இருட்டிவிட்டது. ரமணன் மணலைத் தட்டிவிட்டுக்கொண்டு எழுந்தான்.
சலிப்பு மாறாத மனசுடனேயே நடந்துபோய் வீட்டு மாடிப்படிகளில் அவன் ஏறும்போது, ஏழடிக்க ஐந்து நிமிஷங்கள் இருந்தன.
வழக்கத்துக்கு மாறாக, வாசக்கதவு தாளிடப்பட்டிருந்தது. தட்டினான்.
“யாரு?” ஜன்னல் வழியாக நிலாவாக வத்ஸுவின் முகம்.
“நாந்தான்…”
கதவு திறந்தது.
“எதுக்காகக் கதவைத் தாள் போட்டிருக்கேள், சந்தியாவேளைல? இத்தனை பேர் இருக்கற வீட்டுல, எவன் திருட தைரியமா நுழைவான்?” பேசிக்கொண்டே சட்டையைக் கழட்டினவன், நிமிர்ந்து நன்றாய் மனைவியைப் பார்த்தபோது, அந்த முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது.
முகம் பளிச்சென்று அலம்பிப் பவுடர் பூசப்பட்டிருந்தது. வட்டமாய்ப் பொட்டுக்கள், ஓரங்களில் மைத்தீற்றல். என்னவோ சொல்லத் துடிக்கும் வாய்… அலாதித் துறுதுறுப்பு… என்ன சமாச்சாரம்?
ரமணன் கூடத்தைப் பார்வையிட்டான்.
அம்மா எங்கே? ஓரமாய் உட்கார்ந்து தினமும் வயர்கூடை பின்னும் அக்கா எங்கே? நடையில் நின்று போவோர் வருவோரை விமர்சிக்கும் கெளரியும், ‘மாமா, பிஸ்கெட் வாங்கிண்டு வந்தியா?’ என்று மறிக்கும் கண்ணனும், எங்கே?
கண்ணன் பள்ளிக்கூடத்தில் பெற்றோர் தினமாம்… அக்கா கெளரியுடன் போயிருக்கிறாளாம். சங்கர், கீழ்வீட்டு மாமாவுடன் ஆர்.ஆர். சபாவில் ஓசி நாடகம் பார்த்துக்கொண்டு… அம்மா கோவிலுக்கு – வாரியார் கதை.
வத்ஸு பேசி முடிப்பதற்குள், இதயத்துக்குள் ஏதோ ஜிங்கென்றது ரமணனுக்கு.
அப்படியென்றால்… வீட்டில் அவனும் அவளும்தானா?
கடவுளே! ஒரு மாசமாய் தவம் பண்ணிய சமயம் கண்முன் நின்று, வா வா என்கிறதா! கால்மணி நேரமாய் வத்ஸு தனியாய் இருந்திருக்கிறாளா? பதினைந்து நிமிஷங்கள் அநியாயமாய் வீணானவா?
சடக்கென்று வத்ஸுவை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான். “நீயும் நானும் மட்டுமா இருக்கோம், வத்ஸும்மா? நாம மட்டுமா?” திரும்பத்திரும்ப சந்தோஷம் தாங்காமல் கேட்டவன், என்னவோ நினைத்துக்கொண்டது போல பர்ஸை எடுத்தான்.
ஐந்து ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் இருந்தன.
சட்டையை அவசரமாய் மாட்டிக்கொண்டு, “கதவைத் தாள் போட்டுக்கோ, இதோ வந்துடறேன்…” என்ற சொல்லி இரண்டு எட்டு போனவன், நின்றான். திரும்பி வந்து மனைவியின் கையைப் பற்றி லேசாய் அழுத்தி, “இதோ ஓடி வந்துடறேன்… நீ அதுக்குள்ள, நலங்குக்குக் கட்டிண்டியே, அந்த நைலான் புடவையக் கட்டிண்டு ஜம்முனு இரு… என்ன?” என்று கூறிக்கொண்டே, நாலுநாலு படிகளாய்க் கீழே இறங்கி ஓடினான்.
ஒரு ரூபாய்க்குப் பூ… திருநெல்வேலி அல்வா நூறு கிராம்… பக்கோடா கால் கிலோ… போதும்.
பொட்டலங்களோடு ஓட்டமும் நடையுமாய் வந்தவன், சலூனைத் தாண்டிய போது ஒரு வினாடி தாமதித்தான்.
சின்னதாய் ஒரு ஷேவிங்? ம்ஹூம், அரைமணியாவது பழுத்துவிடும்… வேண்டாம்.
மூச்சிறைக்க இறைக்க மாடிப்படிகளில் ஏறி, கதவைத் தட்டினான்.
அவன் விருப்பப்பட்டது போல, வத்ஸு கிளிப்பச்சை நைலானில் குளுகுளுவென்று இருந்தாள்.
பரபரப்புடன் குளியலறைக்கு ஓடி நாலு சொம்பு விட்டுக்கொண்டான். பவுடர் பூசி, தலைவாரி, சலவை வேஷ்டி, பனியன் அணிந்துகொண்டு, கூடத்துக் கட்டிலில் அமர்ந்தான்.
அவனுடைய செய்கைகளை வெட்கத்தோடு பார்த்தபடி நின்றிருந்த மனைவியை இழுத்து, கிட்டத்தில் அமர்த்திக்கொண்டான். மார்பு படபடவென்றது. சின்னப்பையனின் குறுகுறுப்பு… துடிப்பு…
“வத்ஸும்மா, என்னோட வத்ஸுக் கண்ணம்மா…னு ஆசையா கூப்பிட்டா, இப்ப ‘ஷ், ஷ்’னு அடக்க மாட்டியோன்னோ?” என்றான்.
“அம்மாடி… இந்த அழகை விளக்கு வெளிச்சத்துல பக்கத்துல உக்கார வெச்சுண்டு, கண்குளிரப் பாக்கணும்னு எத்தனை நாளா ஆசைப்படறேன்!” என்றான்.
“ஒண்ணுமே பண்ணவேண்டாம், வத்ஸு… உன்னைத் தோள்ல சாய்ச்சிண்டு, பயமில்லாம பேசி சிரிச்சிண்டு, உன் மருதாணி பூசின விரலை என் கையோட கோத்துண்டு அப்படியே மணிக்கணக்கா உக்காந்திருக்கணும்… அப்பறம் வந்து…”
“டீ, வத்ஸலா…” வீட்டுக்கார மாமி குரல் திடுமென்று கீழிருந்து கேட்க, வத்ஸு எழுந்து நின்றாள்.
“உங்காத்துக்கு விருந்தாளி வந்திருக்காடீ…”
வத்ஸலா ஜன்னலிடம் செல்ல, ரமணனும் உடன் சென்று எட்டிப் பார்த்தான்.
மாமா…
“மாமா, வத்ஸு… இப்பப்போயி… இவர்… கடவுளே…”
ரமணனின் குரல் உடைந்திருந்தது.
“யாரு? அப்பா போன சமயத்துல உபகாரமா இருந்தார்னு அம்மா சொல்வாளே, அவரா? லீவு கிடைக்காததுனால வடக்கேந்து கல்யாணத்துக்கு வர முடியலைன்னாரே, அவரா?”
ரமணன் ஆமாம் என்று தலையாட்டினபோது அவன் முகத்தில் ஏமாற்றம் கூத்தாடுவதை, ஆசைகள் கருகிப்போன வலியில் கண்கள் கலங்குவதை, வத்ஸுவால் பார்க்க முடிந்தது.
கையை நீட்டி, கணவனின் கன்னத்தை இதமாகத் தடவிக்கொடுத்தாள்.
“என்னன்னா இது! சின்னக்குழந்தை மாதிரி இதுக்குப் போய் வருத்தப் படறேள்? நாம்பதான் ஆயுசுபர்யந்தம் சேந்து இருக்கப்போறோமே, அப்பறம் இன்னிக்கு இல்லேன்னா இன்னொரு நாள் வராமயா போயிடும்? போங்கோன்னா… போய், வந்த பெரியவரை வாங்கோன்னு சொல்லி அழைச்சிண்டு வாங்கோ…”
தன்னைவிட எட்டு வயசு சின்னவளாக இருந்தாலும், சமயம் அறிந்து, ஒரு தாயாக மாறி, அனுசரணையுடன், விவேகத்துடன் மனைவி பேசியதும், ரமணனின் மனசு சட்டென்று தெளிந்துபோனது.
இந்த மாதிரி, நொடியில் அனுசரித்துப்போவது, இந்தப் பெண்களுக்கே கைவந்த கலையா? இப்படி விட்டுக்கொடுக்கவேண்டிய சமயத்தில் விட்டுக் கொடுத்து, தட்டிக்கொடுக்கவேண்டிய தருணத்தில் தட்டிக்கொடுத்து, தாம்பத்தியத்தை இனிமையாக ஓட்டிச்செல்வது, இந்தப் பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியமா?
எட்டி மனைவியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு, “நீ சொல்றது சரிதான்… இன்னொரு நாள் வராமயா போயிடும்!” என்று சின்னக்குரலில் சொல்லி விட்டு, மாமாவை வரவேற்கக் கதவைத் திறந்துகொண்டு ஓடினபோது, மனசு விவரிக்கத்தெரியாத சந்தோஷத்தோடு இருப்பதை ரமணனால் புரிந்துகொள்ள முடிந்தது.
– 1978.
* * * * *
முட்படுக்கை
பூட்டியிருந்த கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தபோது. வீட்டில் நிலவிய அமைதி சங்கடப்படுத்தியது. கிழவி இருந்தால் இப்படிப் பூட்டியும் இருக்காது, மயான அமைதியுடனும் இருக்காது. செருப்பை உதறி, இருட்டில் சுவரைத் தடவி, விளக்கை ஏற்ற முனைகையில், காலடியில் எதுவோ மிதிபட்டு ‘ஙே’ என்று பரிதாபமாய் குரலெழுப்பியது.
சின்னப் பையனின் ரப்பர் பொம்மை! குனிந்து எடுத்ததை. மேஜை மீது வீசினான். பெண்டாட்டியையா அல்லது மனதில் மண்டிய எரிச்சலையா என்று விளங்காமல், பொதுவாக “சனியன்!” என்று முணுமுணுப்பாய் வைதான்.
கோட் ஸ்டாண்டில் சட்டையை மாட்டியபோது, அருகிலிருந்த டிவியின் உச்சியில் காணப்பட்ட சீட்டு பார்வையில் விழுந்தது. எடுத்துப் படித்தான்.
‘எதிர்வீட்டு பர்வதம் அக்காவுடன் மாலை ஆட்டத்துக்குப் போகிறேன். சமையல்கட்டு மேடையில் டிபன் வைத்திருக்கிறேன்’.
இந்த முறை மனைவியை மனதில் நிறுத்தி மறுபடியும், “சனியன்!” என்று உரக்கத் திட்டியவன், காகிதத்தைக் கசக்கி மூலையில் எறிந்தான். சற்றுத் தள்ளி விழுந்தது, இரண்டு தரம் அப்படியும் இப்படியும் உருண்டுவிட்டு நின்றது.
இவளுக்கு வேறென்ன வேலை! ஊரில் ஒரு கொட்டகையில் புதுப்படம் ரிலீஸ் ஆகக்கூடாது… இரண்டு நாட்களுக்குள் பார்க்காதுபோனால், தலை வெடித்து விட்ட மாதிரி ஓயாமல் புலம்புவாள்!
‘போன வாரம்தானே ஒரு படம் பார்த்தாய், அதற்குள் இன்னொன்றா?’ என்றால்கூட, என்னவோ கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதுபோல பத்ரகாளியாய் குரலெடுத்துக் கத்துவாள்.
“ஊர் உலகத்துல ஒவ்வொரு புருஷன் பொண்டாட்டியத் தாங்கற மாதிரி, நீங்க எதனாச்சும் செய்யறீங்களா? கேவலம் சினிமா… இதக்கூடப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னா எப்படி? ஜெயில் கைதியாட்டம் நாள் பூரா விட்டுலயே அடைஞ்சுகிடக்கச் சொல்றீங்களா? பெரிசா வி.சி.ஆர். வாங்கிப் போட்டு, கேபிள் டி.வி.க்கும் கனெக்ஷன் குடுத்துட்ட மாதிரி, என்ன பேச்சு இது! அதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க, அப்பறம் நா வெளிய காலடி எடுத்து வெச்சா ஏண்டீன்னு கேளுங்க!”
ஆமாமாம், கேட்க வேண்டியதுதான்! போன வருடம் வரைக்கும், “கால் காசு பொறாதவளெல்லாம் கலர் டி.வி. வெச்சுகிட்டு பெருமைப்பட்டுக்கறா… வசதியான குடும்பத்துல பொறந்தும், தாலிகட்டினவருக்குத் துப்பில்லாததால, பிளாக் அண்ட் வொயிட் டிவியக் கட்டிக்கிட்டு மாரடிக்கணும்னு என் தலைல எழுதியிருக்கு!” என்று வாய் ஓயாமல் புலம்பினது தாளமுடியாமல்போக, கலர் டிவி வாங்கியாயிற்று.
இப்போது வி.சி.ஆர்., கேபிள் டிவி! இவற்றை உன்பாடு என்பாடு என்று சாதித்துக்கொண்ட பிறகு, புதிதாய் இன்னொரு புலம்பல் கிளம்பும்.
புலம்பல், புகார் சொல்லுதல், அடுத்தவரைப் பழித்தல்… இவை தவிர கமலத்திற்கு வேறென்ன உருப்படியாய் செய்யத் தெரியும்?
பேண்ட்டைக் கழற்றி, வேட்டி உடுத்திக்கொண்டவன், பின்கட்டுக்குச் சென்று குளியலறையில் குளிர்ந்த நீரை முகத்தில் வாரியடித்துக்கொண்டான்.
வேட்டியைத் தூக்கித் துடைத்துக்கொண்டே சமையலறைக்கு வந்து, மேடை மேல் தட்டுப் போட்டு மூடி வைத்திருந்த பாத்திரத்தைத் திறந்து பார்த்தான்.
காய்ந்து, தீய்ந்து, ஆறி, வறட்டி போலிருந்த தோசைகளைப் பார்க்கவே பிடிக்காமல்போக, அடங்கியிருந்த எரிச்சல் மீண்டும் தலைதூக்கியது.
பசி அதிகமாய் இருந்ததில், ஃபிளாஸ்கில் சூடு இல்லாமல், பூனை மூத்திரம் மாதிரி வெதவெதத்த காபியை மட்டும் டம்ளரில் ஊற்றி நான்கு வாயாகக் குடித்தான்.
அலுப்புடன் முன்னறைக்கு வந்து, கட்டிலில் காலை நீட்டிப் படுத்தான்.
கிழவி இருந்தால், இந்தத் திண்டாட்டம் இல்லை.
விளக்கை ஏற்றிவிட்டு, இவன் வருகைக்காக வாசப்படியிலேயே கதவைத் திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். இவன் தலையைக் கண்டதும், ‘கை காலக் கழுவிட்டு வா, தம்பி… சூடா தோசை சுட்டுப் போடறேன்’ என்றவாறு எழுந்து கூடவே வருவாள். ‘இன்னும் ஒண்ணு சாப்பிடு, தம்பி… நாள் பூரா வேலை செஞ்சு களைச்சு வர்ற பிள்ளை, வயத்துக்கு சரியா சாப்பிடாட்டி எப்படி?’ என்று மன்றாடி சாப்பிட வைப்பாள்.
படுக்கையில் ஏதோ உறுத்தியது. எழுந்து உட்கார்ந்து என்னவென்று தடவிப் பார்த்தான். ஒன்றுமில்லை. மறுபடி படுத்தான்.
கிழவி இருந்தவரையில், வீடு இப்படி கந்தரகோலமாய் ஒருநாள் இருந்து இவன் பார்த்ததில்லை. முடிகிறதோ இல்லையோ, இரண்டு வேளையும் பெருக்குவாள்; செவ்வாய், வெள்ளி மெழுகுவாள்; படுக்கை விரிப்பைத் தட்டிப் போடுவாள்; சின்னப்பையனின் விளையாட்டுச் சாமான்களை ஓரிடமாய் அடுக்கி வைப்பாள்; மாலை வேளைகளில் காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டு, சின்னப் பையனை அருகில் அமர்த்திக்கொண்டு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவாள்.
இவை மட்டுமல்லாது, காலையில் வெள்ளன எழுந்து பால் வாங்கிவருவது, சமையலுக்குக் காய் அரிந்து, அரைத்துக் கரைத்துக் கொடுப்பது எல்லாம்கூடக் கிழவியின் வேலைதான்.
இத்தனை செய்தும், கமலத்தின் வாயில் கிழவி விழுந்து புறப்படாத நாளே இல்லை.
“விடிஞ்சதும் விடியாததுமா பாலை வாங்க, கிழம் ஏன் ஓடுது தெரியுமா? அதுக்குக் கண்ணத் தொறந்த உடனேயே காபி வேணும்! இருட்டுல தடுக்கி எங்காச்சும் விழுந்து கை கால் ஒடஞ்சு படுத்துகிட்டா, அதுக்குப் பணிவிடை பண்ண என்னால முடியாது, சாமி! இப்பவே வேலை இடுப்பு விட்டுப்போவுது!” என்பாள்.
“இந்தக் கிழத்தைக் கொஞ்சம் அதட்டி வையுங்க… வீட்டைக் கூட்டறேன் மொழுகறேன்னு, இதத் தூக்கி அங்க, அத எடுத்து இங்க வெச்சு, பெரிய்ய்ய்ய ரோதனை பண்ணுது! நேத்து மூணாவது வீட்டு தர்மு அக்கா, ‘ராணி புஸ்தகம் குடுத்தேனே, எங்கடீ?’ன்னு கேட்டாங்க… தேடி எடுக்கறதுக்குள்ள போதும்போதும்னு ஆயிடுச்சு! ராமா ராமான்னு சொல்லிகிட்டு மூலைல விழுந்து கெடக்காம, சின்னப் பொண்ணா நினைச்சுகிட்டு கிழவி அடிக்கற கூத்து சகிக்கலைங்க!” என்பாள் மறுநாள்.
சொல்கிறாளே என்று அதிசயமாய் கிழவி கோவில் குளத்துக்குக் கிளம்பி விட்டால், அதையும் பழிக்காமல் கமலம் விடமாட்டாள்.
“சாமி பாக்கவா இந்தக் கிழம் போவுது! எவ கிடைப்பா வம்பு பேசன்னு இல்ல கோவிலைத் தேடி ஓடுது!” என்பாள்.
இல்லாவிட்டால், “காலைலேந்து தலைவலின்னு அவஸ்தைப்பட்டுகிட்டு இருக்கேன்… ராத்திரி சமையல் செய்ய ஒத்தாசை பண்ணாம, தன் பாட்டுக்குக் கிழம் வெளிய போயிடுச்சு, பாருங்க!” என்று பல்லைக் கடிப்பாள்.
அத்தனைக்கும், வாயைத் திறந்து இவன் ஒரு வார்த்தை பதில் சொன்னவனில்லை. திருமணமான இந்த ஐந்து வருஷங்களில் கமலத்தின் குணம் நன்றாகவே புரிந்து, இவன் ஒன்று சொன்னால் அவளிடமிருந்து நான்காக பதில் வரும் என்பதால், வாயை இறுக மூடிக்கொண்டு, யாரோ யாரையோ சொல்கிறார்கள் என்கிற மாதிரி மெளனம் சாதிப்பான்.
ஆனால், அடிக்கிற அடியில் அம்மிக்கல்லே நகரும் என்கிறபோது, இவன் எம்மட்டு!
கமலத்தின் போதனை, காதில் விழுந்து, மனதில் பதிந்து, கடைசியில் அவனும் கிழவியிடம் சொல்லத்தகாத வார்த்தைகளை வீசிவிட்டதுதானே நடந்தது!
நடுமுதுகில் ஏதோ ‘சுரீர்’ என்று குத்த, அவசரமாய் எழுந்து உட்கார்ந்தான்.
பகல்வேளையில் தூங்கி எழுந்த பிறகு, நொறுக்குத் தீனியை தட்டு நிறைய நிரப்பிக்கொண்டு அசைபோட்டவாறு, சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை ஒரு வரி விடாமல் படிப்பது கமலத்தின் மாமூல் வழக்கம். அப்படித் தின்று சிதறிய பலகாரத் துகள்களுக்காகப் படுக்கையை மொய்க்கும் சிற்றெறும்புகள் கடிப்பதால் தான், இந்த வேதனையா?
கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்த வரையில், எதுவும் புலப்படவில்லை.
அரை நிமிஷம் அப்படியே குந்தி, படுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன், விளக்கத் தெரியாத அயர்ச்சி ஆளை அழுத்த, மெதுவாகப் படுத்தான்.
சில மாசங்களாகவே, கமலம் சமயம் கிடைக்கும்போதெல்லாம் இவனிடம் ஓதும் விஷயம்தான் அன்று கணப்பொழுதில் விஸ்வரூபம் எடுத்து, இவனையும் விவகாரத்தில் மூக்கைவிடச் செய்துவிட்டது.
“கிழத்தை வெச்சிக்க நமக்கு மட்டும்தானா தலையெழுத்து? கஸ்தூரிக்கு அந்தப் பொறுப்பு கிடையாதா? ‘போய் மூணு மாசம் இருந்துட்டு வா’ன்னு ரெயிலேத்தி அனுப்ப, உங்களுக்கு தைரியமில்ல! கிழம் வீட்டுல இருக்கறதால, ரெண்டு நாள்கூட வீட்டைப் பூட்டிகிட்டு இங்க அங்க போக முடியறதில்லே! நா சொன்னா, கிழம் காதுல வாங்க மாட்டேங்குது… நீங்க எதனாச்சும் சொல்லப் போறீங்களா, இல்லியா?” என்று எப்போதும் அவள் கூறி, இவன் இந்தக் காதால் கேட்டு அந்தக் காதால் விடும் தினுசில் அல்லாது, அன்று மட்டும் சோதனையாய் உள்ளுக்குள் தூங்கிக்கொண்டிருக்கும் பிசாசு விழித்துக்கொண்டு, கோரப்பற்களும் புலிநகங்களுமாய் வெளிப்பட்டுவிட்டது.
கிழவிக்கு ரத்த அழுத்தக் கோளாறு உண்டு. தினமும் மாத்திரை சாப்பிடும்போதே, சில சந்தர்ப்பங்களில் தலைசுற்றி உட்கார்ந்துவிடுவாள்.
பத்து நாள்களுக்கு முன் ஆபீஸுக்குப் புறப்பட்டவனிடம், “மாத்திரை தீர்ந்து போச்சு, தம்பி… வாங்கிட்டு வர்றியா?” என்று கிழவி கேட்டிருந்தாள்தான். வேலை மும்முரத்தில் மறந்துவிட்டது. அன்றிரவு சாப்பாடாகி கமலத்தோடு டிவி இரண்டாவது சானலில் ‘படமும் பாடலும்’ பார்த்துக்கொண்டிருக்கையில், உள்கட்டு வேலை முடிந்து, ஈரக்கையைத் தலைப்பில் துடைத்தவாறு வந்து நின்ற கிழவி, “மாத்திரை வாங்கிட்டியா, தம்பி?” என்றபோது, உள்ளங்கையால் நெற்றியில் அடித்துக்கொள்வதைத் தவிர அவனால் வேறு எதுவும் செய்ய இயலவில்லை.
படுத்த பிறகு கமலம், “உப்பு இல்லாம கிழவிய இருக்கச் சொல்லுங்க… நாக்கக் கட்டினா தன்னால ரத்த அழுத்தம் சரியாயிடும்!” என்று தெரிந்த மாதிரி பேசியதற்கு, “அப்படி ஒண்ணும் கண்டதத் திங்கறவங்க இல்லியே?” என்று சாதாரணமாய் இவன் பதில் கூறியது தப்பாகிவிட்டது.
“என்ன… என்ன?” என்று கேட்டவாறு எழுந்து உட்கார்ந்தவள், “அப்ப, நா இல்லாததையும் பொல்லாததையும் பேசறேன்னு சொல்றீங்களா?” என்று ஆரம்பித்து மாபாரமாய் சண்டைக்கு வர… அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் திண்டாடிப்போனான்.
இறுதியில், கிட்டத்தில் படுக்காமல் தரையில் பாய் விரித்து கமலம் படுக்க, இரவு முழுவதும் இவனுக்கு சரியான உறக்கம் இல்லை.
காலையில் எழுந்திருக்கும்போது, தலை வலியில் நமநமவென்றது. கமலத்தின் தூக்கிய முகம், குழாயில் தண்ணீர் வராத பிரச்சினையோடு, “எழுந்திருக்க முடியாம கண்ண இருட்டிகிட்டு வருது, தம்பி…” என்று கிழவி கைகளில் தலையைத் தாங்கி பரிதாபமாகக் கூறியதும் சேர்ந்துகொள்ள, ஊசிமுனை பட்ட பலூன் மாதிரி சட்டென்று வெடித்தான்.
“வரவர ரொம்பத்தான் மாமாலம் செய்யறே! ஒருநாள் மாத்திரை சாப்பிடாட்டி உசிரா போயிடும்? என்னமோ மறந்திடுச்சு… வேணும்னே வாங்கிட்டு வராம இருந்த மாதிரி நாலு தரம் சொல்லிக்காட்டறியே! சரி, சரி… நா செய்றது பத்தலைன்னா, இங்க ஏன் இருக்கே? முப்பது பவுன் நகை, கையில ரொக்கம் இருவதாயிரம்னு, இருந்ததெல்லாம் கஸ்தூரிக்கு வாரிவிட்டியே? அங்க போய் சொகுசா இருக்கறதுதானே? ஏன் காலைச் சுத்தின பாம்பா என் கழுத்தையே அறுக்கறே?”
தணல் துண்டங்களாய் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தபோது, அதன் காட்டத்தை உணர முடியவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் செல்வதற்குள், ‘அசிங்கமாய் பேசிவிட்டோமே’ என்கிற தவிப்பு உண்டாகவே செய்தது. வாயை மூடிக்கொண்டு, குனிந்த தலையுடன் அறைக்குள் வந்து உட்கார்ந்துகொண்டான்.
ஆபீஸுக்குப் புறப்படும்போது கிழவி எதிரில் வந்து நின்றாள். சின்னக் குரலில் பேசினாள்.
“நீ சொல்றது நியாயம்தான், தம்பி… இங்கயும் அங்கயுமா இருக்கறதுதான் சரி! சாயங்கால வண்டிக்கு டிக்கெட் எடுத்திட்டு, கஸ்தூரிக்கும் தந்தி அடிச்சிடறியா?”
அவசரமாய் மறுக்க நிமிர்ந்தவனால், கிழவிக்குப் பின்னால் நின்றுகொண்டு கமலம் விழிகளை உருட்டி, ‘சரியென்று சொல்லுங்கள்!’ என்று சமிக்ஞை செய்வதைப் புரிந்துகொள்ள முடிய, சும்மா தலையசைத்துவிட்டுப் படிகளில் இறங்கினான்.
பின் இடுப்பில் சுருக்கென்று ஏதோ குத்துவதை, துல்லியமாய் உணர முடிந்தது. புரண்டு படுத்தான். மறுபடியும் சுருக்… மறுபடியும் சுருக்… இங்கே… அங்கே…
என்ன வேதனை இது! துவைத்துவைத்த வேட்டியில், சிராம்பு ஏதாவது ஏறியிருக்குமோ? அதுதான் உறுத்துகிறதோ?
எழுந்து, கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து உதறி உடுத்திக்கொண்டான்.
மீண்டும் படுக்கத் தயக்கமாக இருந்தது.
கூடத்திலிருந்த பிரம்பு நாற்காலியில் வந்து உட்கார்ந்துகொண்டான்.
கஸ்தூரி இருப்பது ஹைதராபாத்தில். கிழவிக்குத் தெலுங்கு ஒரு வார்த்தை தெரியாது. கஸ்தூரி வேலைக்குப் போய்விட்டால், கொட்டுக்கொட்டென்று தனியாய் வீட்டில் இருக்கவேண்டும். பொழுது போவது கஷ்டம். கஸ்தூரி வீட்டில் வடக்கத்திய பாணியில் இரண்டு வேளையும் சப்பாத்திதான். கிழவிக்கு கோதுமை ஒத்துக்கொள்ளாது.
இருப்புக்கொள்ளாமல், இவன் எழுந்து குறுக்கும் நெடுக்கும் நடந்தான்.
‘பத்து நாள்கள் அங்கு இருந்தது போதும், வந்துவிடு’ என்று கடிதம் போடலாமா?
நகத்தைக் கடித்தவாறு யோசித்தபோது, கிழவியைத் திரும்ப கூட்டிவந்து விட்டால் தேவலைபோலத் தோன்றியது. ‘அன்னிக்கு என்னமோ புத்தி கெட்டுப் போய் பேசிட்டேன், மனசுல வெச்சுக்காதே!’ என்று சொல்லிவிட்டால் தேவைலை போலத் தோன்றியது.
நாளைக்கே கடிதம் எழுதிவிட வேண்டும். கமலத்தைச் சமாளிக்க, ஆபீஸில் கடனை வாங்கியாவது வி.சி.ஆர். வாங்கித் தந்துவிடலாம்.
தீர்மானம் எடுத்த பிறகு, உட்கார்ந்தான். பத்து நாள்களாய் அலைக்கழிக்கும் உறுத்தல் சட்டென்று குறைந்துவிட்டதை உணர முடிய, சின்னதாய் தனக்குத் தானே புன்னகைத்துக்கொண்டான்.
இப்போது நிம்மதியாய் படுக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் எழுந்து இரண்டடி வைத்த நொடியில், வாசல் மணி அடித்தது.
படம் முடிந்துவிட்டதா? அதற்குள்ளாகவா? மணி எட்டரைதானே ஆகிறது!
புருவங்கள் கேள்வியில் உயர, கதவைத் திறந்தான்.
தந்தி சேவகர்.
கையெழுத்து போட்டு வாங்குவதற்குள், உள்ளங்கையில் வியர்த்தது.
பிரித்தான்.
‘அம்மா மாரடைப்பால் இன்று பகல் காலமானார். உடனே வரவும் – கஸ்தூரி’
டைப் செய்யப்பட்டிருந்த வாசகங்களின் அர்த்தம் புரியாத மாதிரி, பத்து தரம் திரும்பத்திரும்ப படித்தான்.
கிழவி செத்துவிட்டாளா?
ஐயோ… கிழ… வார்த்தை பாதியிலேயே நின்றது. கமலத்தைப் போலவே தானும் ‘கிழவி’ என்றே குறிப்பிடுவதை முதல் முறையாக உணர முடிய, இருதயம் அதிர்ந்தது. கூசியது. கால்கள் துவண்ட மாதிரி வெலவெலத்தது.
மெதுவாக நகர்ந்து நாற்காலியில் வந்து உட்கார்ந்தவன், முகம் கோணிப் போக, வாய்விட்டு “அம்மா… ஆ…” என்று கத்தலாக அழ ஆரம்பித்தான்.
– 1992.
* * * * *
ஆயா
இரண்டு மணித் தறுவாய். சரியான வெயில்.
சமையல்கட்டு வாசல்படியில் தலை வைத்துப் படுத்திருந்த வடிவாம்பாளுக்கு, அடிக்கழுத்தில் கசகசத்தது.
பக்கத்தில் வைத்திருந்த பனை ஓலை விசிறியை எடுத்து, இரண்டு தரம் விசிறிக்கொண்டாள். கை வலித்தது. விசிறியைக் கீழே வைத்துவிட்டு, தலைப்பால் கழுத்தைத் துடைத்துக்கொண்டாள்.
தூக்கம் வரவில்லை.
எழுந்து உட்கார்ந்தாள். தலை ஒருதரம் வட்டமடித்துவிட்டு நின்ற மாதிரித் தோன்றியது.
வரவர இந்தப் பிரஷரின் அட்டகாசம் அதிகமாய்த்தான் போய்விட்டது. திடுதிடுப்பென்று நெஞ்சுக் கூட்டுக்குள் பெரிசாய்ப் பறவை ஒன்று புகுந்துகொண்டு இறக்கைகளை அடித்துக்கொண்டு பறக்கிற மாதிரி, இடதுபக்கமாய்ப் பரபரவென்று இரைகிறது. சட்டென்று குனிந்தால் நிமிர்ந்தால், தலையைச் சுற்றுகிறது.
வடிவாம்பாள் மெதுவாக எழுந்து சமையல்கட்டுக்குப் போனாள். ஃபில்டரில் ஒரு டீஸ்பூன் காபித்தூளைப் போட்டு அமுக்கி, அரை லோட்டா வெந்நீர் கொதிக்க வைத்து சுழற்றி ஊற்றினாள்.
டிகாக்ஷன் இறங்கும்வரை காத்தாட உட்காரலாம் என்று பின்கட்டுக்கு வந்து, துளசிமாடத்துக்கு அருகில் காலை நீட்டி அமர்ந்தாள்.
காற்று லேசாக முணுமுணுவென்றது.
வெள்ளை வெயில் கண்களைக் கூசவைத்தது.
காகம் ஒன்று வெக்கை தாங்காமல் தவித்துப் பறந்து, கிணற்றடியில் தேங்கியிருந்த ஜலத்தில் இரண்டு வாய் குடித்தது. அப்புறம் கொய்யாமரக்கிளை நிழலில் அமர்ந்து வாயைத் திறந்து வைத்துக்கொண்டு, தலையைச் சாய்த்து காக்காய்ப் பார்வை பார்த்தது.
கொய்யாமரம் நிறைய பிஞ்சு எடுத்திருப்பதை, வடிவாம்பாளால் இங்கிருந்து காணமுடிந்தது.
இந்த மரத்திற்கு இப்போது என்ன வயசிருக்கும்?
இருபது, இருபத்தைந்து வயசு இருக்காது?
இருக்கும்… தாராளமாய்.
மோகன் குழந்தையாய் இருக்கும்போது, யாரோ சினேகிதர் தந்தார் என்று மோகனின் அப்பா வாங்கிவந்து நட்டார்.
அப்புறம் மோகனுக்குப் பத்து வயசு ஆவதற்குள், இது திமுதிமுவென்று வளர்ந்து, கிளைகளைப் பரப்பிக்கொண்டு கூடைகூடையாய்க் காய்க்கக்கூடத் துவங்கிவிட்டது.
இது அத்தனை பெரிய ராசி என்று சொல்ல முடியாது. அடியில் பருத்து, நுனியில் சிறுத்து, எலுமிச்சை சைஸ்தான் இருக்கும். ஆனால் உள்ளே பிளந்தால், சிவப்பாய், கொட்டைகள் அதிகமில்லாமல் சதைப்பத்தாய் இருக்கும். வாயில் போட்டால் சர்க்கரையாய்க் கரையும்.
மோகன் குழந்தையாய் இருக்கையில், இந்த மரத்திலேயேதான் குடியிருப்பான்.
பள்ளி விடுமுறை நாள்கள் என்றால், நண்பர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொண்டு என்னமாய் ஹதம் பண்ணுவார்கள்!
இப்போது அந்த மோகனுக்குக் கல்யாணமாகி, ஆறு மாசத்தில் பிள்ளைகூடப் பிறந்துவிட்டான்!
பிள்ளையைத் தொடர்ந்து புருஷனின் நினைப்பு மனசுள் எட்டிப்பார்க்க, கண்களில் நீர் துருத்திக்கொண்டு எழுந்தது.
ராஜா கணக்காய் இருந்த மனிதர், நிமிஷத்தில் போய்விட்டார். நான் இருக்கிறேன், கல்லுக்குண்டாய், எதுக்கும் உபயோகமில்லாமல்…
இந்த ஐப்பசி வந்தால் கணவர் போய் மூன்று வருஷங்கள் நிறையப் போகின்றன என்ற எண்ணம் ஒருவித வேதனையை உண்டாக்க, வடிவாம்பாள் தூணில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
கட்டின புருஷர் தவறிப்போய், ஒற்றைப் பிள்ளையும் கண்காணாமல் வடக்கில் இருக்க, இப்படி அநாதையாய், தனியாய் இருப்பது வழக்கம்போல இப்பவும் ஏகத்துக்கு உறுத்த, மூடின கண்களிலிருந்து மெல்லிசாய் நீர் கோடு போட்டுக்கொண்டு கன்னத்தில் இறங்கியது.
வடிவாம்பாளுக்கு இப்போது ஐம்பத்தெட்டு நடக்கிறது. பன்னிரண்டு வயசில், பெரியவளாகுமுன் புருஷனுக்குக் கழுத்தை நீட்டிவிட்டு, இந்த வீட்டுக்குள் நுழைந்தவள். நடேசன் இருந்தவரையில், அவள் வேறு உலகம் தெரியாத குழந்தையாய் இருந்தாள். வீடு, தோட்டம், சமையல், புருஷன், பிள்ளை – இவைதான் அவளுக்குத் தெரிந்தவை.
நடேசனுக்கு அந்தக் கிராமத்தில் பத்து ஏக்கரா நிலம் உண்டு. வஞ்சனை யில்லாமல் விளைச்சல் இருக்கும். பத்தாயம் நிறைந்து, விளைநெல் எடுத்து வைத்து, காசுக்குப் போடுவதைக் கொண்டு மனைவிக்கு நாலு புடவை எடுப்பார்; கைக்கு வளையல் செய்து போடுவார்; வருஷாந்தர சாமான்கள் வாங்கி அடுக்குவார்; எதிர்காலத்துக்கு இருக்கட்டும் என்று பாங்கில்கூடக் கொஞ்சம் போட்டுவைப்பார்.
பிறந்ததும் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று மோகன் ஒருத்தன் என்பதால், எதற்கும் பஞ்சம் இருந்ததில்லை.
கணவரைப்போல, பரம்பரை விவசாயத்தை மேற்கொண்டு பிள்ளையும் ஊரோடு இருப்பான் என்று அசட்டுத்தனமாய் வடிவாம்பாள் நம்பியிருந்தது நடக்காமல், அவன் மேலேமேலே படித்தான்; என்ஜினியர் ஆனான். ‘இந்த கிராமம், இந்தப் பக்கம் எதுவுமே பிடிக்கலை’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டு, பம்பாயில் ஒரு வேலை தேடிக்கொண்டு அவன் போனது ஐந்து வருஷங்களுக்கு முன் நடந்த கதை.
‘போறான் போ, விருப்பமில்லாதவனை வலுக்கட்டாயமா எப்படி நிறுத்தி வைக்கிறது?’ என்று வெளியில் நடேசன் சொல்லிக்கொண்டாலும், உள்ளுக்குள் அவருக்குக் குறை இருந்தது வடிவாம்பாளுக்குத் தெரியும்.
சரி, நடந்தது நடந்ததாக இருக்கட்டும்… இனி, காலாகாலத்தில் பிள்ளைக்கு ஒரு நல்ல இடத்தில் சம்பந்தம் செய்து பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, அப்பாவும் அம்மாவும் மாறிமாறி பெண்களைப் பற்றின விவரங்களோடு கடிதாசு போட்டதற்கு, மோகன் கிணற்றில் போட்ட கல்லாக இருந்தான்.
ஒருசமயம் லீவில் ஊருக்கு வந்தவனை இருவருமாய் மடக்கி, ‘பேசாம இருந்தா என்ன அர்த்தம்? எங்க ஆசை புரியுதா இல்லியா?’ என்று கேட்க… உண்மை வெளியானது.
அங்கேயே ஒருத்தியைப் பார்த்துவைத்திருக்கிறானாம்; பேர் உஷாவாம்; படித்தவளாம், வேலை பார்ப்பவளாம், அழகானவளாம்; முக்கியமாய், நாகரிகம் தெரிந்தவளாம். ஜாதி விட்டு ஜாதியில் மணப்பது கூடாது என்று அப்பா அம்மா தடுத்தாலும், மனசை மாற்றிக்கொள்ளத் தயாரில்லையாம்.
நடேசனும் வடிவாம்பாளும் ஆடிப்போனார்கள்.
இரண்டு நாள்களுக்கு சாம, தான, பேத, தண்ட முறைகளைக் கிட்டத்தட்ட பிரயோகித்துப் பார்த்தும் அவன் பிடிவாதமாக இருக்க, இனி என்ன செய்வது என்று புரியாமல் இவர்கள் உடைந்துபோனார்கள்.
பிள்ளையின் அடத்தின் ஆழம் புரிந்ததும், கண்ணால் ஜலம் விட்டுக் கொண்டு இரண்டாம் நாள் ராத்திரியின் தனிமையில், புருஷனின் காலைப் பிடித்தபடி வடிவாம்பாள் கெஞ்சினாள். ‘விட்டுக்குடுத்துடுங்க… மீறிக்கிட்டு அவன் போயிட்டா, உறவும் பாசமும் கசந்துபோயிடுங்க…’ என்று விசும்பினாள்.
நடேசன் அவள் காட்டிய காரணத்தை ஏற்றுக்கொண்டார். காலையில் எழுந்ததும், எங்கோ பார்த்துக்கொண்டு பிள்ளையிடம், ‘உன் இஷ்டம் போலச் செய்’ என்றார்.
கல்யாணம் பம்பாயில்தான்.
இவர்கள், யாருடைய திருமணத்திற்கோ போகிறவர்கள் மாதிரி முதல்நாள் போய், மறுநாள் கிளம்பி வந்துவிட்டதை ஊர் பூராவும் மூலைமூலையாய், முடிச்சு முடிச்சாய் நின்று வம்பு பேசியது.
– என் மகனாயிருந்தா, காலை வெட்டி வெந்நீ அடுப்புல வெச்சிருப்பேன்… என்றார்கள்.
– என் பிள்ளையாயிருந்தா, போடா நாயேனு வெரட்டியிருப்பேன்… என்றார்கள்.
– என்னா வடிவு, எதுக்கு அவன் போக்குல போனீங்க? குலம், கோத்திரம்னு எதையும் பாக்காம எப்படி சரின்னு சொல்லத் துணிஞ்சீங்க?… என்றார்கள்.
எதற்கும் இவர்கள் வாயைத் திறக்கவில்லை. மெளனம் சாதித்தார்கள். அப்புறம், தனிமையில் கண்ணீர் விட்டார்கள்.
இப்படி ஊமையாய்ப் புழுங்கினதுதான் நடேசனுக்கு எமனாய் முடிந்திருக்க வேண்டும்.
நாலு மாசம்… எண்ணி நாலே மாசம்.
தலைவலி என்று படுத்தார்… உடனே மார்வலி என்றார்… இரண்டு தரம் கஷாயம் போட்டு வடிவாம்பாள் தருவதற்குள் பிராணன் போய்விட்டது.
அப்புறம்? அப்புறமென்ன!
மோகனுக்குத் தந்தி போக, மறுநாள் மனைவியுடன் வந்து இறங்கினான்.
ஒரு தீர்மானத்துடன் வந்திருந்ததுபோல காரியங்களைச் செய்துகொண்டே, எட்டு ஏக்கராவை விலைக்குப் பேசினான். அம்மா வேதனையுடன், ‘எதுக்கு மோகன், இப்ப என்ன அவசரம்?’ என்று முனகியதைக் காதில் வாங்காமல், கொட்டிலை அடைத்துக்கொண்டு நின்ற உழவுக் கறவைமாடுகளை விற்றான்.
ஊர்ப் பெரியவர்களிடம், ‘நா இருக்கறது பம்பாய்ல, இனி நினைச்சுநினைச்சு வர முடியாது. அதனால பொறுப்புங்களக் குறைச்சுக்கிட்டு, அம்மாவையும் என்னோட அழைச்சிட்டுப் போயிட வேண்டியதுதானே…’ என்று சொல்லிவிட்டு, பெற்றவளுடன் பம்பாய்க்குக் கிளம்பிப் போனான்.
‘ஹா’வென்று கொல்லையும், வாசலும், தோட்டமும், உபகார ஜனங்களுமாய் இருந்துவிட்டவளால், பம்பாயை ஜீரணிக்க முடியாதுபோனதைவிட, நாட்டுப்புற வடிவாம்பாளை வீட்டோடு வைத்துக்கொள்ள நாகரிக உஷாவும் மோகனும் அதிகமாய் சிரமப்பட்டுப்போனார்கள் என்பதுதான் நிஜம்.
தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது, உரக்க ஏப்பம் விடுவது, யார் வந்தாலும் ‘வாங்க’ என்று சொல்லி தானும் பேச வந்துவிடுவது… என்ற வடிவாம்பாளின் கிராமியப் பழக்கங்களெல்லாம் பட்டினத்துக்காரர்களுக்கு எரிச்சலை மூட்ட, வந்து இரண்டு மாசங்கள் ஆவதற்குள் மொணமொணவென்று தலைதூக்கிய கசப்பு, எரிச்சல், ஆறு மாசங்கள் முடிவதற்குள் சுத்தமாய் தலைவிரித்து ஆட முற்பட்டது.
வேலைக்குப் போய்விட்டுத் திரும்பும் புருஷனும் மனைவியும், அக்கடா என்று தனியாய் உட்கார்ந்து பேச முடிவதில்லை. ‘என்னப்பா விஷயம்?’ என்று வந்துவிடுகிறார்.
நைட்ஷோ, நண்பர் வீட்டில் பார்ட்டி என்று போக முடிவதில்லை; ‘எனக்கு ராத்திரில தனியா இருக்க பயமா இருக்கு…’ என்கிறார்.
சமைக்கிறேன் பேர்வழி என்று, க்ளேஸ் டைல்ஸ் போட்ட சமையல்கட்டை ஊழலாக்குகிறார்.
உரக்க, நாசூக்கு இல்லாமல் பேசுகிறார்.
ச்சே…
மொத்தத்தில் எதுவும் சரியாக இல்லாமல்போக, ஏழாம் மாசம் அம்மாவை அழைத்து அக்கறையுடன் மோகன் பேசினான்.
“இந்த ஊர் ஒங்களுக்கு ஒத்துக்கவே இல்லேம்மா. வந்ததுலேந்து தலைவலி, கால்வலினு ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கீங்க! இந்த பாஷை புரியாம, மனுஷங்ககிட்ட பழகமுடியாம கஷ்டப்படறீங்க… கோவில் குளம்னு நினைச்சா உங்களால போக முடியலை… அதனால, நா என்ன சொல்றேன்னா, நீங்க பழையபடி கிராமத்துக்கே போயிடுங்க… நாங்க அப்பப்ப வந்து பாத்துக்கறோம். என்ன?”
பிள்ளை எதை மனசில் வைத்துக்கொண்டு பேசுகிறான் என்பது புரிய, ஏதும் பேசாமல் வடிவாம்பாள் புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்துசேர்ந்தாள்.
‘ஏன் வந்திட்டே?’ என்று பிடுங்கின ஊர்ஜனங்களிடம், ‘அந்த ஊர் ஒத்துக்கலை’ என்று சொல்லி சமாளித்தாள்.
இது நடந்து வருஷம் இரண்டரை ஓடிவிட்டது. நடுவில் ஒருதரம் இரண்டு நாள்களுக்கு, மோகன் வந்து போனான். அப்புறம் பேரன் பிறந்து அவனுக்கு ஆறு மாசமும் ஆகிவிட்டது. இன்னும் ஒரு நடை அவர்கள் இங்கு எட்டிப் பார்க்கவில்லை.
ஒருதரம் வரக்கூடாதா?
பேராண்டியைக் கண்ணில் காட்டக்கூடாதா?
சலிப்புடன் வடிவாம்பாள் எழுந்தாள். சமையல்கட்டுக்குச் சென்று காபி கலந்து, ருசி நாக்கில் இறங்காமல் குடித்தாள்.
மீண்டும் கொல்லைத் தாழ்வாரத்துக்குச் சென்று உட்கார்ந்துகொண்டாள்.
மோகன், மோகன் என்று சதாசர்வகாலம் மனசு பறவாய்ப் பறந்தது, கடவுளுக்கே பொறுக்காத மாதிரி, பெற்ற வயிறு குளிரும் வகையில், மறுநாள் மோகனிடமிருந்து ஒரு கடிதாசு வந்தது.
“உங்களைத் தனியாக அங்கு விட்டிருப்பது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. நாலாம் தேதி வருகிறேன். என்னோடு புறப்படத் தயாராக இருங்கள்.”
நாலு வரிதான்.
ஆனால், வடிவாம்பாளுக்குப் பாலில் முங்கிக் குளித்த மாதிரி சந்தோஷமாக இருந்தது.
கடிதாசைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு வீடாய் ஏறியிறங்கினாள்.
“என் மகனைப்பத்தி எவ எவளோ நாக்குல பல்லு பட, ‘அம்மாளை வெச்சிக்கத் துப்பில்லை, விரட்டிட்டான்’னு பேசினீங்களே, இப்ப என்ன சொல்றீங்க?” என்று ஆளாளாய் நிற்கவைத்துக் கேட்டாள்.
பிள்ளைக்காக அடுத்துவந்த நாள்களில் சாமான்களை மூட்டை கட்டினாள். பலகாரங்கள், பொடி, ஊறுகாய் வகையறாக்கள், இட்லி அரிசி, சாப்பாட்டு அரிசி, அப்பளம், வத்தல்… இன்னும் இன்னும்…
மோகன் சொன்னபடி வந்தான். சொன்னபடி அம்மாவுடன் கிளம்பினான்.
வடிவாம்பாளுக்கு வாயெல்லாம் பல்.
பம்பாயில் சென்று இறங்கினார்கள்.
பேரன் மெலிந்து, கறுத்து, ‘ஙே’ என்று சோனியாய் இருந்தான். வீடு கந்தரகோலமாய் இருந்தது.
உஷாவின் அலவலகத்தில் ரொம்பக் கண்டிப்பாய் இருக்கிறார்களாம். பத்து நாள்கூட லீவு கொடுக்க மறுக்கிறார்களாம். பிள்ளை பெற்ற நாற்பத்தைந்து நாளிலிருந்து இதே அவதிதானாம்.
அவர்கள் இருவரும் வேலைக்குப் புறப்பட்டுப் போனபின், குழந்தையைக் குளிப்பாட்டி, பால் புகட்டி, தூளியில் போட்டு வடிவாம்பாள் தூங்கப் பண்ணினாள்.
துணிமணிகளை மடித்து அடுக்கினாள். வீட்டை சுத்தமாய்ப் பெருக்கி மெழுகினாள். எழுந்துவிட்ட குழந்தையைக் கவனித்துக்கொண்டே, பிசுக்குப் பிடித்துக்கிடந்த பாத்ரூம், சமையல்கட்டை சோடா போட்டு அலம்பி, சமைத்து, சாப்பிட்டு, மூன்று மணி அளவில் ‘அப்பாடி’ என்று கூடத்துத் தரையில் உட்கார்ந்து காலை நீட்டியபோது, வாசல்மணி அழைத்தது.
எட்டிப்பார்த்தாள்.
எதிர் ஃப்ளாட் பெண்மணி. முன்பு வந்தபோது பார்த்திருக்கிறாள்.
“வாங்க…” என்றபடி கதவைத் திறக்க, அவர் உள்ளே வந்தார்.
“நல்லா இருக்கீங்களா?”
“இருக்கேன்.”
“நேத்து ராத்திரி வந்தீங்க போலருக்கு… ரயில்ல வந்தது களைப்பா இருக்கும், தொந்தரவு பண்ண வேணாம்னுதான் காலைல வரலை…”
பேசியவர், வீட்டை ஒரு பார்வை பார்த்தார்.
“இப்பத்தான் வீடு வீடாய் இருக்கு! இனிமே உஷாவுக்குக் கஷ்டம் இல்லே! நாலு மாசமா வகையா ஆள் யாரும் இல்லாம, ரொம்பத் திண்டாடிட்டா போங்க… வீடு, சமையல், குழந்தை, ஆபீஸ் வேலைன்னு நாறிப்போயிட்டா! குழந்தைக்குத் தூக்க மருந்து, பிராந்தி கொடுத்துட்டு வெளில சுத்தப் போயிடறதா இந்த ஊர் ஆயாக்களைப்பத்தி கதைகதையா கேள்விப்படறதால, நம்பி குழந்தைய விட முடியலை… அவ அம்மாவும் உடம்பு சரியில்லாம படுத்திட்டாங்களா… பாவம் உஷா, தவிச்சிப்போயிட்டா! ‘எங்க மாமியார வரவழைச்சா என்ன?’னு அவ யோசிச்சப்ப, ‘முதல்ல அதச் செய்’னு நாந்தான் அடிச்சு சொன்னேன்…”
வந்தவர் நீளமாய்ப் பேச, வடிவாம்பாளுள் என்னமோ மளுக்கென்று முறிந்தது.
அம்மாவைப் பிரிந்து இருப்பதும், அம்மா தனியாய் கஷ்டப்படுவதும் நிஜக்காரணம் இல்லையா?
இப்போது இவர்களுக்கு ஒரு ஆயா, நம்பிக்கையான ஆயா தேவைப் படுவதால்தான் என் ஞாபகம் வந்ததா?
கண்களில் ஊறிய ஜலத்தை அவசரமாய் அடக்கி எச்சிலைக் கூட்டி விழுங்கி, “உக்காருங்க… நின்னுகிட்டே பேசறீங்களே…” என்றபோது, வடிவாம்பாளின் குரல் ரொம்ப தழுதழுத்திருந்தது.
* * * * *