ஒலா, ஒலே, உலா

/ஒலா, ஒலே, உலா

(ஸ்பெயின், போர்ச்சுகல் பயணக்கதை)

1995

(1)

சென்ற ஆண்டு பெரியண்ணாவின் சஷ்டியப்தபூர்த்தி விழாவுக்காக அமெரிக்காவிலிருந்து வந்த சின்னண்ணா லக்ஷ்மணன், தன் பெண் ஜனனிக்குத் திருமணம் நிச்சயமாகியிருப்பதையும், 1995 ஜூன் பத்தாம் தேதி ‘நாஷ்வில்’ என்ற இடத்திலுள்ள சர்ச்சில் கல்யாணத்தை நடத்தத் தீர்மானித்திருப்பதையும் சொல்லி, ”எல்லோரும் வந்திருந்து நடத்திவைக்க வேண்டும்…” என்று என்னவோ பக்கத்து ஊரில் நடக்கப்போகும் வைபவத்துக்கு வரச்சொல்வதுபோல அழைப்பு விடுத்து, ஒரு லிஸ்டையும் நீட்ட, அந்த நிமிடத்திலிருந்தே ஜனனியின் கல்யாண ஏற்பாடுகள் இங்கு களைகட்டத் தொடங்கிவிட்டன!
லக்ஷ்மணனின் மனைவி மேரி பெத், ஓர் அமெரிக்கப் பெண்மணி. ஜனனியை மணக்கவிருந்த டேவிட்டும் அமெரிக்கன். கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடக்கப்போகும் திருமணம்தான் என்றாலும், இந்திய மணத்துடனும் வைபவம் அமைய வேண்டுமென்று மேரி பெத் விரும்பியதில், வரவேற்பு நிகழ்ச்சியில் சாப்பாட்டு மேஜைகளில் நடுநாயகமாய் வைக்க சலவைக்கல் தாஜ்மகால் பிரதிமைகள் பத்து என்று தொடங்கி, மணப்பெண்ணின் தோழிகளுக்கு மாங்காய் உருவில் அமைந்த தங்க ‘பிரேஸ்லெட்கள்’ என்று லிஸ்ட் நீண்டிருந்தது.
‘ஆசிரியர் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ போல இருக்கிறதே, ஜனனியின் கல்யாண ஏற்பாடுகள்!’ என்று விவரமறிந்த உற்றாரும் சுற்றாரும் வியக்க, சந்தோஷத்தோடு ஒவ்வொரு காரியமாகக் கவனிக்க ஆரம்பித்தேன். நகைகளைச் செய்யத்தான் தாமதமாகும்… முதலில் அவற்றுக்கு ஆர்டர் கொடுத்து விட்டு, நிதானமாய் அமெரிக்காவுக்குக் கிளம்பும் முன் கடைகளில் தயாராய் கிடைக்கும் தாஜ்மகால்களை வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணி செயல்பட்டவள், எல்லாவற்றையும் முடித்துவிட்டு ஆறஅமர தாஜ்மகால்களைத் தேடியபோதுதான், சென்னையைப் பொறுத்தவரை அவை நரிக்கொம்புகள் என்கிற உண்மை புரிந்தது. எந்தக் கடைக்குச் சென்றாலும், ஒரே ஒரு நான்கு அல்லது ஆறு அங்குல உயர தாஜ்மகால் இருந்ததே தவிர, மேரி பெத் கேட்டிருந்த பன்னிரண்டு அங்குலம் மாதிரிக்குக்கூட இல்லை என்கிறபோது, பத்து பொம்மைகளுக்கு எங்கே போவேன்! சென்னை நகரிலுள்ள அத்தனை கடைகளிலும் ஏறியிறங்கிய பிறகு, ஒரு வட இந்தியக் கடைக்காரர் போனால் போகிறதென்று மனமிரங்கி, ”இரண்டு மாதம் அவகாசம் தந்தால், ஆக்ராவிலிருந்து வரவழைத்துத் தருகிறேன்…” என்று கூற, அவர் காலில் விழாத குறையாக, ”ஒரு மாதத்தில் கொடுத்துவிடுங்கள்…” என்று கெஞ்சலோடு சம்மதித்தேன்.
இதனடுவில், அமெரிக்கப் பயணத்தைத் திட்டமிட்டதும் இன்னொரு பக்கம் செய்ய வேண்டியிருந்தது. ‘ஏற்கனவே பலமுறைகள் சென்று, இண்டுஇடுக்கு விடாமல் பார்த்தாயிற்று… அதனால், புதிதாய் ஏதாவது பிளான் பண்ணு’ என்று புத்தி அடம்பிடிக்க, வாஷிங்டனில் வேலைபார்க்கும் பெரியண்ணா பெண் மீராவோடு தொலைபேசியில் தொடர்புகொண்டேன். திருமணம் ஆனதும் பதினைந்து நாள்கள் விடுப்பு எடுக்கவும், என்னோடு விடுமுறைக்கு வரவும் அவள் சம்மதிக்க, இருவருமாய் எங்கு போகலாமென்று ஆளாளுக்குத் தோன்றிய யோசனைகளுடன் விவாதித்தோம்.
ஃபின்லாந்தைச் சார்ந்த எழுத்தாள சினேகிதி இங்கரி கிப்ளின், ‘காரவானில்’ (சின்ன வீடு போன்ற அத்தனை வசதிகளையும் கொண்ட வண்டி) ஒருவருடகாலம் தென் அமெரிக்க நாடுகளில் பயணித்து, தான் பெற்ற நானாவித அனுபவங்களைப் பற்றி என்னிடம் கண்ணகலப் பேசியது ஞாபகத்தில் மின்ன, ”காரவான் ஒன்றை வாடகைக்கு எடுத்து நாமே ஓட்டிக்கொண்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேஸில், அர்ஜன்டீனா, நிகராகுவா போய்வரலாமா?” என்றேன் நான்.
”இம்பாஸிபிள்!” என்றாள் மீரா பதிலுக்கு.
”ஏன்?” என்றேன் விடாமல்.
”முதல் காரணம் – லாட்டின் அமெரிக்க நாடுகளுக்குப் போக இரண்டு வாரம் போதாது. இரண்டாவது – இரண்டு பெண்கள் மட்டும் காரவானை எடுத்துக்கொண்டு டிரைவ் பண்ணுவது அந்த நாடுகளில் சாத்தியமில்லை. மூன்றாவது – இப்போது அங்கு குளிர்காலம்… டூரிஸ்ட் போகும் பருவமில்லை!”
மீரா காரணங்களை அடுக்கிக்கொண்டேபோக, காரவான்-தென் அமெரிக்க ஆசையைக் கிள்ளிப்போட்டேன்.
”ரொம்ப நாளாக கப்பலில் ஒரு ‘க்ரூஸ்’ (cruise என்கிற ஆங்கில வார்த்தையை ‘க்ரூயிஸ்’ என்று உச்சரித்தால், அங்கு உள்ளவர்கள் சிரிக்கிறார்கள்!) போக எனக்கு விருப்பம். அதனால், ஜமைக்கா, பஹாமாஸ், பார்படோஸ், ட்ரினிடாட் என்று ஜாலியாக ஒரு கரீபியன் ஐலண்ட்ஸ் டூர் போகலாமா?” என்றேன், ‘சின்னச்சின்ன ஆசை…’ என்று மனதுக்குள் பாடியபடியே.

ஒருவாரம் கழித்து போன் செய்த மீரா, ”ஸாரி, அத்தே… நீ இங்கு வரும்போது அந்த மாதிரி க்ரூஸ் எதுவும் இல்லை. மே, ஜூலை மாதங்களில்தான் கப்பல்கள் புறப்படுகின்றன…” என, அந்த ஐடியாவும் கைவிடப்பட்டது.
ஆகமொத்தம், இரண்டு பக்கமும் டெலிபோன் பில் எக்கச்சக்கமாய் ஏறியதே ஒழிய, உருப்படியாய் எதுவும் அமைகிற வழியாய் தெரியவில்லை.
இந்த அமர்க்களத்தினூடே, ஆக்ராவிலிருந்து வந்துவிட்ட தாஜ்மகால் பொம்மைகளை திடுமென ஒருநாள் மெடடார் வேன் ஒன்றில் ஏற்றி வீட்டுக்கே கடைக்காரர் அனுப்பிவைக்க, ‘ஆஹா, வந்திருச்சு!’ என்று பரவசப்படுவதற்குப் பதிலாக, இரண்டடி நீளம் இரண்டடி அகலத்தில் குட்டி யானைகள் மாதிரி கொழுக்மொழுக்கென்றிருந்த அந்தப் பெட்டிகளின் சைஸைப் பார்த்து நான் அரண்டுபோனேன். பொம்மை பன்னிரண்டு அங்குலம்தான் என்றாலும், அவை உடையாமலிருக்கவேண்டி வைக்கோல், தர்மகோல், இத்யாதி வைத்து பாக் பண்ணியிருக்கிறார்களாம்! பெட்டிகளை வாசல் போர்டிகோவில் இறக்கி வைத்து விட்டு, ”கையில் ‘ஹாண்ட் லக்கேஜ்’ ஆக (hand luggage) தூக்கிக்கொண்டு போங்கள். ‘செக் இன்’ செய்தால் தாஜ்மகால்கள் உடைந்துவிடும். சலவைக்கல் மென்மையானது… வெரி டெலிகேட்!” என்றும் புத்திமதி கூறிவிட்டு கடைக்காரர் நகர, ‘கையில் தூக்குவதா? இவற்றையா?’ என்ற கலக்கம் என்னை முழுசாக ஆக்ரமித்தது. எனக்கு இருப்பதோ இரண்டு கைகள்… அண்ணன் பெண்ணுக்காகப் போனால்போகிறது என்று முக்கிமுனகி ஒரு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகலாம். மற்றவற்றை? தலை சுற்ற, ‘பில்லர் டு போஸ்ட்’ (pillar to post) என்று சொல்வதைப்போல யார்யாரிடமோ போய், ‘என்ன செய்யலாம்?’ என்று யோசனை கேட்டேன். ம்ஹூம்… பலன் எதுவுமில்லை.
உதவி செய்வதாகச் சொல்லி கிட்டத்தில் வந்த நண்பர்களும், பெட்டிகளின் எண்ணிக்கை, அளவு, கனத்தைப் பார்த்த பிறகு, மாயமாய் மறைந்துபோனார்கள். என்ன செய்வோம், ஏது பண்ணுவோம், கல்யாணத்துக்கு இன்னமும் ஒரு மாதம் கூட இல்லையே என்று நான் தவித்துப் பறந்தபோது, ”ஏர் இந்தியா இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை?” என்று அனாதைகளை ரட்சிக்கும் சமயசஞ்சீவியாக அபயஹஸ்தம் காட்டி, என் மூச்சையும் ரத்த அழுத்தத்தையும் சீராக்கினார் ‘ஏர் இந்தியா’வின் தென்பிராந்திய மேலாளர் சிவராமன்.
”சென்னையிலிருந்து எங்கள் கார்கோ நேராக நியூயார்க் போகிறது. அதனால், நீங்கள் எல்லா ‘ஃபார்மாலிட்டி’களையும் முடியுங்கள்.. பூ மாதிரி இங்கு ஏற்றி, அங்கு இறக்கி, உங்கள் அண்ணாவிடம் பொருள்களைச் சேர்க்க நான் உத்தரவாதம் தருகிறேன்!” என்றவர், தைரியம் சொன்னதோடு நிற்காமல் ஒரே வாரத்தில் தாஜ்மகால் பெட்டிகளை நியூயார்க்கில் சேர்த்தும்விட்டது, நிஜம், நிஜம்தானே தவிர வேறில்லை! ‘ஏர் இந்தியா’ நிறுவனமும் சிவராமனும் எங்கிருந்தாலும் வாழ்க!

தாஜ்மகால்களை விமானத்தில் ஏற்றி அனுப்பிய அதே தினம்தான், மீரா என்னை அழைத்து, பிரமாதமாக ஒரு பயணத்திட்டத்தைச் சொல்லி என்னைத் திக்கு முக்காடவைத்ததும் நடந்தது.
மாலை ஏழு மணி இருக்கும்… போன் ஒலித்தது. எடுத்து, ”ஹலோ…” என்றேன்.
”இனிமே ஹலோ என்று சொல்லாதே, அத்தே… ‘ஒலா’ என்று சொல்!” என்றது மீராவின் குரல்.
”ஒலாவா? என்னாயிற்று உனக்கு? போன வாரம் பேசும்போதுகூட நன்றாக இருந்தாயே?”
”இப்பவும் ஜோராகத்தான் இருக்கிறேன். ‘ஒலா’ என்றால் ஸ்பானிஷ் மொழியில் ‘ஹலோ’ என்று அர்த்தம்! இப்போதிலிருந்தே நீ பழகிக்கொண்டால் தானே, நாம் அடுத்த மாதம் அங்கு போகும்போது சில வார்த்தைகளையாவது பேசி ஜமாய்க்க முடியும்!”
எனக்குள் வண்ண நீரூற்று ஒன்று குதித்துக்கொண்டு கிளம்பியது.
”ஸ்பெயினுக்குப் போகிறோமா? ஹெள லவ்லி! மாடு சண்டை, ஃப்ளெமிங்கோ நடனம்! ஹோ! நினைத்தாலே இனிக்கிறது… சபாஷ், மீரா!”
மீரா என்னைப் பேசவிடாமல் குறுக்கிட்டு, ”ஒலே, அத்தே… ஒலே!” என்றாள் சிரிப்புடன்.
”ஒலேவா? ஒரு நிமிடத்துக்கு முன்னால் ‘ஒலா’ என்றாயே!”
”அது ஒலாதான்… ஆனால், இது ஒலே! ஸ்பானிஷில் ‘ஒலா’ என்றால் ‘ஹலோ’… ‘ஒலே’ என்றால், ‘பலே, சபாஷ்’! புரிகிறதா?”
புரிந்தது.
ஸ்பெயின், போர்ச்சுகல் நாடுகளில் இரண்டு வாரம் பயணம். ஆக, ‘ஒலா, ஒலே, உலா!’ அப்படித்தானே!

மேலும் படிக்க

• • • • •