இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – தொகுதி – 3 – மேற்கு

/இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – தொகுதி – 3 – மேற்கு

கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மெளஸோவுடன் ஒரு பேட்டி

1944-ம் ஆண்டு பிறந்த தாமோதர் மெளஸோ, கொங்கணிச் சிறுகதை உலகில் தன் முத்திரையை அழுத்தமாக, வித்தியாசமாகப் பதித்த எழுத்தாளர். தான் முழுமையாக அறிந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவ கோவர்களின் சித்தரிப்பு, இலக்கியங்களில் சரியாக இல்லை என்கிற ஆதங்கம் எழுந்ததில், அக்குறையைத் தன் பேனா மூலம் தீர்க்க முயற்சிப்பவர். இவருடைய தீர்க்கமான சிந்தனைகளை அங்கீகரித்து மத்திய சாகித்ய அகாடமி, மாநில அகாடமி, கோவா கலா அகாடமி, கொங்கணி பாஷா மண்டல் போன்ற இலக்கிய அமைப்புகள் விருதுகளை வழங்கியுள்ளன.

சில வருடங்களுக்கு முன் கேரள மாநிலத்தைச் சார்ந்த ‘சுரபி’ என்ற இலக்கிய அமைப்பு, அகில இந்திய இலக்கியக் கருத்தரங்கு ஒன்றை ஆலவாய் நகரில் மிகச்சிறப்பாக மூன்று நாட்கள் நடத்தியது. அந்தக் கருத்தரங்கில்தான் முன்னணி கொங்கணி எழுத்தாளர்கள் சந்திரகாந்த் கெனி, தாமோதர் மெளஸோ, மீனா ககோட்கர் ஆகியோர் எனக்கு அறிமுகமானார்கள். அன்று தொடங்கிய நட்பு இன்னமும் நல்லவிதமாய் தொடர்வது, சந்தோஷமான விஷயம். மெளஸோ சென்னைக்கு வரும்போதும், நான் கோவாவுக்குச் செல்லும்போதும், குடும்பமாய் சந்தித்துக்கொள்ள நாங்கள் தவறுவதில்லை. மெளஸோவுக்கு நளினமான மனைவி, லட்சணமான மூன்று பெண்கள் மட்டுமல்ல, அழகான மூன்று பேத்திகள் கூட உண்டு!

• • • •

  • ‘கர்மலின்’ என்ற புதினம் உங்களுக்கு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத் தந்தபோதிலும், உங்களுடைய சிறுகதைகள் ‘கொங்கணி இலக்கியத்திற்கு வளம், வீச்சு, சேர்த்தவை’ என்ற பாராட்டைப் பெற்றுள்ளன. புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில், கொங்கணியின் முதல் சிறுகதையை, அதன் போக்குகளை, வளர்ச்சியை, தடம்பதித்த எழுத்தாளர்களை எனக்கு அறிமுகம் செய்துவைக்க இயலுமா?

கொங்கணி நவீனச் சிறுகதைகளின் முன்னோடியாக ஷெனாய் கோயெம்பாப் என்கிற வாமன் ரகுநாத் வார்தே வலெளலிகர் அவர்களைத்தான் சொல்ல வேண்டும். கொங்கணி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்து, முன்நின்று நடத்தியதோடு, இலக்கியத்தின் அத்தனை பிரிவுகளுக்குமே தன் பங்களிப்பைச் செய்தவர். அவர் எழுதி 1928-ல் வெளியான ‘என் அம்மா எங்கே போனாள்?’ என்ற கதையை, எங்கள் நவீன இலக்கியத்தின் முதல் சிறுகதை என்பேன்.

  • மீண்டும்மீண்டும் ‘நவீன’ என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிப்பது எதனால்?

ஏனென்றால், 16-ம் நூற்றாண்டிலேயே கிருஷ்ணதாஸ் ஷாமா என்பவர் சிறுகதை மாதிரியான நாட்டுப்புறக் கதைகளை நிறைய எழுதியுள்ளதால் அப்படிச் சொன்னேன். கிருஷ்ணதாஸ் ஷாமா ஓர் அற்புதமான கவி. மராத்தியில் கவிதை களையும், கொங்கணியில் நாட்டுப்புறப்பாணிச் சிறுகதைகளையும் படைத்திருக் கிறார். மகாபாரத, ராமாயணக் கதைகளோடு தன் சொந்த கற்பனை, உத்தியைச் சேர்த்து, இடமாற்றம் செய்து பல கதைகளை எழுதியுள்ளார். மற்ற எந்த இந்திய மொழியிலும் இப்படியொரு முயற்சி வந்திராத அந்தக் காலகட்டத்தில், கிருஷ்ணதாஸ் ஷாமாவின் சிறுகதை முயற்சி பாராட்டுக்குரியது, அல்லவா?

  • நிச்சயமாய்! ஷெனாய் கோயெம்பாப் எழுதிய முதல் கதையின் கரு என்ன?

உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை அது. ஒரு சின்னப் பையன், அவனுக்குத் தாய் மேல் கொள்ளைப் பிரியம். ஒரு சமயம், நோய்வாய்ப் பட்டு அம்மா இறந்துவிடுகிறாள். ‘அம்மா எங்கே?’ என்று கேட்கும் பையனை, ‘அவள் கடவுளின் வீட்டுக்குப் போய்விட்டாள்’ என்று கூறி சமாதானம் செய்கிறார்கள். தாயைப் பிரிந்திருக்க முடியாமல் இறைவனிடம், ‘மீண்டும் அம்மாவை அனுப்பிவிடு, அல்லது என்னை அவளிடம் சேர்த்துவிடு’ என்று ஓயாமல் பிரார்த்திக்கிறான். அவனும் நோய்வாய்ப்பட்டு இறந்துபோவதுதான் கதை. பிரமாதமான கரு, நடை – என்று சொல்ல முடியாதபோதும், 70 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட உணர்ச்சிபூர்வமான முதல் சிறுகதை அதுதான்.

  • ஷெனாய் கோயெம்பாபைத் தொடர்ந்து, கொங்கணிச் சிறுகதை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பதிவுகளாக எந்தெந்த கதைகளை, அல்லது எந்தெந்த எழுத்தாளர்களைச் சொல்லலாம்?

உங்களுக்கு பதில் கூறுமுன் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். போர்த்துகீசியர்களின் ஆட்சியில் சீரழிக்கப்பட்டு, அனாதரவாய் இருந்த கொங்கணி மொழியைக் காப்பாற்றி, அதற்குப் புனர்வாழ்வு கொடுப்பதுதான் எங்களுடைய தலையாய குறிக்கோளாய், கோவா விடுதலை பெறும்வரை, இருந்தது. மொழியைக் காப்பாற்றவேண்டும், வளர்க்கவேண்டும், காணாமல்போய்விட்டதை மீண்டும் மக்களிடம் சேர்ப்பிக்கவேண்டும் என்கிற துடிப்பு இருந்த அளவிற்கு, உத்தி, நடை, பரிட்சார்த்த முயற்சிகள் மேல் எங்கள் படைப்பாளிகளுக்கு கவனம் செல்லவில்லை என்பது உண்மை. ஆக, பெரியளவில் இலக்கிய நயம், தரத்தோடு படைப்புக்கள் அக்காலகட்டத்தில் படைக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது, இங்கு நிலவிய கடுமையான தணிக்கைபற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். கோவாவில் வாழ்ந்த எழுத்தாளர்கள் எழுதியதைவிட, கோவாவுக்கு வெளியே வாழ்ந்தவர்கள் சுதந்திரமாய் சிந்திக்க, செயல்பட முடிந்த காரணத்தால், அதிகளவில் இலக்கியம் வெளியிலிருந்துதான் படைக்கப்பட்டது. கொங்கணி மொழியில் வெளியான முதல் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களில் – ஆன்வ்லம் (Onvllam); புயிம் சாஃபிம் (Bhuim Chafim) – காணப்படும் கதைகள், கோவாவுக்கு வெளியே கார்வார், மங்களூர் போன்ற இடங்களில் வாழ்ந்த பல எழுத்தாளர்கள் எழுதியவைதான். அத்தொகுப்புக்கள்கூட பம்பாயிலிருந்துதான் பிரசுரமாயின. இங்கிருந்து பம்பாய்க்கும் இதர இடங்களுக்கும் படிக்கச் சென்ற இலக்கிய ஆர்வமிக்க மாணவர்கள், ‘வித்யா’ என்ற கல்லூரிகளுக்கிடையேயான பத்திரிகையை நடத்தி, அதன்மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். கொங்கணி ஓரங்க நாடகங்களை ‘வித்யா’வில் பிரசுரித்ததோடு, மேடையும் ஏற்றிய பெருமை அக்காலத்து மாணவர்களுக்கு உண்டு.

  • நீங்கள் குறிப்பிடும் ‘வித்யா’வில் உபயோகப்படுத்தப்பட்ட கொங்கணியின் லிபி என்ன?

தேவநாகரிதான். அதைத்தானே எங்களது ஆதிநாளைய லிபி என்று துவக்கம் முதலே சொல்லிவருகிறோம்! அந்த சமயத்தில் ரோமன் எழுத்துக்களில் கொங்கணியை எழுதுவது கோவா கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களிடையே வழக்கமாய் இருந்தது. மாணவர் இயக்கத்தைத் தவிர, பம்பாயில் செயல்பட்ட அகில இந்திய வானொலியின் கொங்கணிப் பிரிவின் பங்களிப்பு, எங்கள் மொழி, இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கிறது. கோவாவில் வசித்தவர்களின் இலக்கிய தாகத்திற்கு, தணிக்கை விதிமுறைகள் தடைபோட்டுவிட்டதில், பம்பாய் இதர இடங்களில் வசித்த ஏராளமானோர், தாங்கள் எழுதிய கொங்கணிப் படைப்புக்களை வானொலியில் ஒலிக்கச் செய்து, ஓரளவு மனத்திருப்தி பெற்றனர். எழுத முடியாத, எழுதியதைப் புத்தகமாய் வெளியிட முடியாத சூழலில், வானொலி மூலம் எங்கள் மொழி இலக்கியம் உயிர்வாழ்ந்தது உண்மை. அன்றைக்குப் பல முன்னணி எழுத்தாளர்கள் எழுதிய கதை, கவிதை, நாடகங்கள், வானொலியில் ஒலிபரப்பானாலும், எதற்கும் பிரதி இல்லாத காரணத்தால், பல சிறந்த படைப்புக்கள் இன்று எங்களிடம் இல்லாத அவலநிலை உள்ளது. இதனாலேயே ஷெனாய் கோயெம்பாபைத் தொடர்ந்து எழுதிய பல சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிடவோ, அவர்களது சிறுகதைகளைப் படிப்பதற்குக் கொடுப்பதற்கோ இயலாத நிலையில் நாங்கள் இருக்கிறோம்.

  • உங்கள் வருத்தத்தை, தவிப்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எந்தப் படைப்பாளியின் படைப்புக்கும் இப்படியொரு நிலை வரக்கூடாதுதான்!

இருப்பினும், அத்தனை கஷ்டங்களையும் மீறி, எங்கள் எழுத்தாளர்கள் அற்புதமான எழுத்துக்களைக் கொடுத்திருக்கிறார்கள். டாக்டர் மனோகர் ஸர்தேசாய், ரவீந்திர கேலேகர், ஏ.என். மம்ப்ரோ, பி.பி. போர்கர், சந்திரகாந்த் கெனி போன்ற மிகச்சிறந்த படைப்பாளிகள் அன்றைய கருமையான காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.

  • இந்தியா 1947-ல் சுதந்திரம் பெற்றதின் எதிரொலி உங்களிடையே எப்படியிருந்தது?

நம்பமாட்டீர்கள்… அதுகாறும் நிலவிவந்த சமூகநிலைகூட இந்தியச் சுதந்திரத்திற்குப் பின் எங்களுக்கு மறுக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிலிருந்து சுதந்திர வேட்கை எங்களுக்கும் தாவிவிடும் என்று பயந்ததில், பம்பாய்க்கும், இந்தியாவின் இதர பகுதிகளுக்கும் சாதாரணமாய்ப் பயணம் செய்வதற்குக்கூட போர்த்துகீசிய அரசு தடை விதித்தது. இந்தத் தடைவிதிப்பு எங்கள் போக்குவரத்தை மட்டுமல்லாது இலக்கியப் பரிவர்த்தனை செயல்பாடுகளைக்கூட முடக்கிப் போட்டது நிஜம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்… ஆங்கிலேயர் இந்தியாவை 150 வருடங்களே ஆண்டனர்; ஆனால், போர்த்துகீசியர் எங்களை 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டதோடு, மதத்தின் பெயரால் இங்கு மொழி, கலாச்சாரம், பண்பாடு என்று அனைத்தையுமே ஒட்டு மொத்தமாய் அழிக்க முயற்சி செய்தனர். இத்தனையும் மீறிக்கொண்டு எங்கள் எழுத்தாளர்கள் எழுதியதே பெரும் ஆச்சர்யம்தான்!

  • ஏ.எம். மம்ப்ரோவின் எழுத்துக்கள், நகைச்சுவை, நையாண்டிக்குப் பேர் போனது, அல்லவா? ‘விட்டுவின் சாவி தொலைந்துவிட்டது’, ‘மேஜை இழுப்பறை’ போன்ற சிறுகதைகளில் நையாண்டி வெகு புத்திசாலித் தனமாகக் கையாளப்பட்டிருக்கிறதே!

சரியாகச் சொன்னீர்கள்! மேலைநாடுகளில் எழுதப்பட்ட அபத்த எழுத்து (absurd writing) மாதிரியான கதைகளைப் படைத்தவர் மம்ப்ரோ. ‘பணாஜிக்கு இப்போது வயதாகிவிட்டது’ (Panaji has now grown old) என்ற புத்தகத்திலுள்ள கதைகள் அனைத்துமே வித்தியாசமானவை. அதேபோல, சந்திரகாந்த கெனியும் புதுப்புது உத்திகளோடு கதை எழுதுவதில் வல்லவர். இவர்களை அடுத்து வந்த நால்வர் அணி, கொங்கணிச் சிறுகதைத் தளத்திற்கு உரமும் வீச்சும் தந்தது என்பார்கள். அந்த நால்வர் – முதலாவதாக என் பெயரைச் சொல்வதற்காக மன்னிக்கவும் – நான், புண்டலிக் நாயக், ஷீலா கோலம்ப்கர், மீனா ககோட்கர். அதுவரை கொங்கணியில் எழுதப்படாத விஷயங்களை, புதிய உத்தி, பதப்பிரயோகங்களோடு இந்த நால்வரும் எழுத முற்பட்டதில், அறுபதுகளில் தொடங்கி எழுபது வரையிலான காலகட்டத்தைக் கொங்கணிச் சிறுகதைகளின் பொற்காலம் என்று குறிப்பிடுகிறோம். இவர்களைத் தவிர, என். சிவ்தாஸ், துகாராம் ஸேட், கஜானன் ஜோக், டத்தா எஸ். நாயக், மஹாபலேஷ்வர் செயில் – ஆகியோரையும் நினைவு கூர்வது அவசியமாகிறது.

  • ‘கொங்கணி இலக்கியத்தில் ‘சரஸ்வதி’ பிராமணர்களின் ஆதிக்கம் அதிகம்’ என்று என் நண்பர் விமர்சித்தார். இதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?

இந்தக் குற்றச்சாட்டு சில வருடங்களுக்குமுன் வரையிலும் உண்மையாக இருந்தது. இப்போது அப்படியில்லை. கல்வியறிவு எளிதில் கிடைத்த காரணத்தால், அன்றைய எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களே! ஆனால், கோவா விடுதலை பெற்றபின் முதலமைச்சராகப் பதவியேற்ற பந்தோத்கர், முதலில் செய்த நல்ல காரியம் என்னவென்றால், சின்னச்சின்ன குக்கிராமங்களில்கூடப் பள்ளிகளைத் திறந்ததுதான். மராத்தியைக் கற்கவேண்டியிருந்ததால் தேவநாகரி லிபியில் தேர்ச்சி பெற்றதில், அதே எழுத்தில் எழுதப்படும் கொங்கணியையும், இளைய தலைமுறை படிப்பதும் எழுதுவதும் சாத்தியமாயிற்று. எல்லோருக்கும் கல்வி என்கிற விதி நடைமுறைக்கு வந்த பிறகு, அதுநாள்வரை ஒதுக்கிவைக்கப்பட்ட, ஒதுங்கியிருந்த பிரிவினர் நடுவிலும், தரமான சிந்தனாவாதிகள் தோன்றினர். விவசாயப் பின்னணியில் வந்த புண்டலிக் நாயக்கின் பிரவேசம், கொங்கணி இலக்கிய உலகில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதுபோல, ‘பட்’ சமூகத்தைச் சேர்ந்த கஜானன் ஜோகும் தன் பங்குக்கு சிறுகதை இலக்கியத்தை வளப்படுத்தியுள்ளார். கோவாவின் எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கும் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்தவர், மஹாபலேஷ்வர் செயில். இவர்களைத் தவிர, தேவிதாஸ் கதம், பிரகாஷ் பர்யேகர், வஸந்த் பகவந்த் ஸாவந்த், ஜெயந்தி நாயக் போன்றவர்களும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய எழுத்தாளர்களே! இதுவரை நான் குறிப்பிட்ட அனைத்து எழுத்தாளர்களுமே, தாம் சார்ந்த இடத்தின் மண்வாசனை கமழ எழுதியவர்கள். அனைவருமே இன்னமும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதனாலேயே கொங்கணிச் சிறுகதைகளைப் பொறுத்தவரை பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்பதை என்னால் உறுதியாய்க் கூற இயலும்.

  • இனி, கொங்கணிப் புதினங்களைப்பற்றிப் பேசலாம்… ஷெனாய் கோயெம்பாப் எழுதிய முதல் கொங்கணி நாவலைத் தொடர்ந்து அடுத்ததாக ஏற்றுக்கொள்ளப்படும் புதினம், புண்டலிக் நாயக் எழுதிய ‘அச்சேவ்’ – என்ற தகவல் சரியானதுதானா? அத்தனை நீண்ட இடைவெளி எழக் காரணம்?

‘ஸன்வ்ஸார் புட்டி’ (Sanvsar Butti) என்ற வெகு சுவாரஸ்யமான நாவலை கோயெம்பாப் 1928-ல் வெளியிட்டார். இதைத்தான் எங்கள் மொழியின் முதல் புதினம் என்று பெருமையோடு ஏற்கிறோம். ‘ஸன்வ்ஸார் புட்டி’ என்றால், மகா வெள்ளம் அல்லது பிரளயம் என்று பொருள். இது வித்தியாசமான ஆன்மீகச் சிந்தனையோட்டம் கொண்டது. மக்கள் அனைவரும் மரித்து சொர்க்கத்தை நோக்கிப் பயணிப்பதுதான் கதையின் மையக்கருத்து. அற்புதமான வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த இப்புத்தகம், விரைவில் ஆங்கில மொழிபெயர்ப்பில் எல்லோரும் படித்து ரசிக்கக் கிடைக்குமென்று நினைக்கிறேன். இரண்டாவது நாவல், புண்டலிக் நாயக் எழுதிய ‘அச்சேவ்’. மற்ற லிபிக்களில் வந்ததைக் கணக்கில் சேர்க்காமல், தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட நாவல்களில், அதை முதல் என்றும் இதை இரண்டாவது என்றும் குறிப்பிடுகிறோம்.

  • உங்களுடைய ‘கர்மலின்’ நாவல் மட்டுமல்லாது, பல சிறுகதைகளும் கிறிஸ்தவ சமூகத்தைச் சார்ந்ததாக இருப்பதற்குக் காரணமென்ன? ‘கர்மலின்’ கதைச் சுருக்கத்தைத் தர இயலுமா?

கர்மலின் – அந்தக் கதையில் வரும் பெண் கதாபாத்திரத்தின் பெயர். அவள் கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவள். ஒருகாலத்தில் நிறைய கோவர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கப் போனார்கள். அதை ‘கோவன் டயஸ்போரா’ (Goan Diaspora) என்று குறிப்பிடுவதுண்டு. அவர்கள் முதன்முதலில் போர்த்துகீசியரின் வசமிருந்த கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்றார்கள். அங்கு ஆட்சி மாறியபோது, அவர்களின் மரியாதை குறையத் தொடங்கியதில், முடிந்தவர்கள் கானடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று குடியேறினார்கள்; முடியாதவர்கள், கோவாவுக்கே திரும்பி வந்தார்கள். அதுவரை கொட்டிக் கொண்டிருந்த வெளிநாட்டு வருமானம் நின்றுபோனது, கோவாவில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. அச்சமயம் கோவாவிலிருந்து நிறைய கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பெண்கள் வளைகுடா நாடுகளில் வேலை தேடிச் சென்றார்கள். குவைத், இதர நாடுகளிலிருந்து அப்படிச் சம்பாதித்துக்கொண்டு வந்தவர்களைப் பார்த்துப் பலர் மறைவாகக் கேலி செய்தாலும்கூட, அவர்களுக்கு இந்த மண்ணில் அதுவரை கிட்டாத மரியாதை கிட்டியது. பணத்தோடு, அவர்கள் தரும் பரிசுப் பொருட்கள்தாம் இந்த மதிப்பு, மரியாதைக்குக் காரணம் என்பது என்னைச் சிந்திக்க வைத்தது. அதன் விளைவுதான், ‘கர்மலின்’.

  • கொங்கணி மொழியில் எந்த மாதிரியான பரிட்சார்த்த எழுத்துக்கள் வெளியாகியுள்ளன? நான் படித்தவரையில், மற்ற மொழிகளில் மாஜிக் ரியலிஸம், க்யூபிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம் – என்று பல நவீனப் பிரிவுகள் இருப்பதுபோன்ற போக்குகள், இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனக்குக் கிடைத்துள்ள தகவல் சரியானதுதானா?

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த மாதிரியான பரிட்சார்த்த முயற்சிகளில் எனக்கு ஆற்றலும் கிடையாது, ஈடுபாடும் இல்லை. அதனால் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க நான் தகுதியான நபர் இல்லை. எங்கள் மொழியில் பல எழுத்தாளர்கள், நடை, உத்திகளில் மாற்றங்களுடன் தம்தம் படைப்புக்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றிலும் அவரவர் முத்திரை கட்டாயம் இருக்கும். கதைக்குத் தேவையான விதத்தில் உத்தியைத் தேர்ந்தெடுக்கிறார்களே ஒழிய, ஒரே பாணியில் தொடர்ந்து யாரும் எழுதுவதில்லை. உத்தி சிறப்பாக இருக்கவேண்டி, கருவைக் கோட்டைவிடுவதில் எனக்குச் சம்மதமில்லை. கரு இன்னதென்று தீர்மானித்துவிட்டால், அதற்கேற்ற வடிவம் இயல்பாக வந்துவிடும் என்பது என் நம்பிக்கை. புண்டலிக் நாயக், சந்திரகாந்த் கெனி, மஹாபலேஷ்வர் செயில் – போன்றவர்கள், புதுப்புது உத்திகளைக் கையாண்டு எழுதியிருக்கிறார்கள்.

  • பொதுவாக ஷெனாய் கோயெம்பாப்தான் ‘நவீன கொங்கணியின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். ஆனால், ஓரிரு கட்டுரைகளில், ‘திர்வெம்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த பெட்ரோ ஜோஸோ ஸுஸா (Pedro Joso Souza) என்பவரே நவீன கொங்கணியின் தந்தை என ஏற்கப்படவேண்டும் என்கிற குறிப்பைப் படித்தேன். ஏன் இந்த முரண்பாடு?

இதைப் புரியவைக்க, மங்களூரிலிருந்து எழுதப்படும் கொங்கணி இலக்கியங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவது அவசியமாகிறது. போர்த்துகீசியர்களின் ‘இன்க்விஸிஷன்’ சட்டம் அமலில் இருந்தபோது, இந்துக்கள் மட்டும் கட்டாயமாய் இங்கிருந்து அண்டை மாநிலங்களில் குடியேறவில்லை; கடுமையான சட்டதிட்டங்களைத் தாளமுடியாத ஏராளமான கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் வெளியேறினார்கள். அப்படிச் சென்றவர்களில் பலர், மங்களூரில் வசிக்க முற்பட்டு, ‘திர்வெம்’ (Dirvem) என்ற கொங்கணிப் பத்திரிகையைத் துவக்கினார்கள். அதன் ஆசிரியராக இருந்தவர், பெட்ரோ ஜோஸோ ஸுஸா. பெரும்பாலான பத்திரிகைகள் சர்ச்சுகளால் அல்லது மத ஸ்தாபனங்களின் பின்னணியில் வெளியிடப்பட்டதில், இலக்கிய ஆர்வலர்களை இப்பத்திரிகைகள் பெரியளவில் சென்றடையவில்லை. எனினும், ‘திர்வெம்’ போன்ற பத்திரிகைகள் ஆற்றிய பங்கு மகத்தானது. கன்னடமொழி பேசும் பிரதேசத்தில் இருந்த காரணத்தால், முழுக்கமுழுக்க கன்னடமொழி இலக்கியங்களுக்குள் சென்றிருக்கக் கூடிய கொங்கணி மக்களை, கொங்கணி இலக்கியத்தோடு தொடர்பு வைத்திருக்கச் செய்த பெருமை, ‘திர்வெம்’ பத்திரிகையைத்தான் சாரும். மற்றபடி, கோயெம்பாப் தான் எங்கள் ‘நவீன கொங்கணியின் பிதா’ என்பதில் எந்த முரண்பாடும் கிடையாது.

  • எட்வின் டி.ஸுஸா, ரெஜினால்டோ ஃபெர்னாண்டஸ், ஜோகிம் ஸன்டானோ அல்வாரஸ், வி.ஜே.பி. ஸல்தானா – போன்ற எழுத்தாளர்களைப்பற்றி நீங்கள் எதுவும் சொல்லவில்லையே…

நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள், இன்னும் பலரும்கூட, கொங்கணி இலக்கியத்திற்கு வளம்சேர்த்தவர்தாம். ஆனால், வெவ்வேறு லிபிக்களைப் பயன்படுத்தி எழுதியுள்ளதால், நான் அவர்களின் படைப்புக்களைப் படித்ததில்லை என்பதை வருத்தத்தோடு சொல்கிறேன். ரோமன், கன்னடம், மலையாளம் என்று பல எழுத்துக்களில் இவர்கள் புதினங்கள், சிறுகதைகள் படைத்திருக்கிறார்கள். வி.ஜே.பி. ஸல்தானாவின் ‘கடவுளின் கிருபை’ என்ற புதினம், தேவநாகரியில் மாற்றி எழுதப்பட்டதைப் படித்திருக்கிறேன். திப்பு சுல்தானை மையமாக வைத்து எழுதப்பட்ட அற்புதமான சரித்திர நாவல்! ரெஜினால்டோ ஃபெர்னாண்டஸ், ‘மில்ஸ் அண்ட் பூன்ஸ்’ மாதிரியான காதல் புதினங்களை ரோமன் எழுத்துக்களில் எழுதிய மிகப்பிரபலமான எழுத்தாளர். அவருடைய புத்தகங்கள் ஐயாயிரம் பிரதிகள் போட்டாலும், விற்றுவிடும்!

  • மத்திய சாகித்ய அகாடமியின் விருது, தேவநாகரி லிபியில் எழுதப்படும் கொங்கணிப் புத்தகத்திற்கு மட்டும்தான் அளிக்கப்படுகிறது என்பது உண்மையா?

ஆம். ஆனால், கன்னட, மலையாள, இதர லிபிக்களில் எழுதுவதை தேவநாகரியில் மொழிமாற்றம் செய்துகொடுப்பதுகூட, விருதுக்குத் தகுதியானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

  • உங்கள் குழந்தைப் பருவம், உங்கள் அபிலாஷைகள், குடும்பம் – இவற்றை எனக்கு அறிமுகப்படுத்துங்களேன்…

நான் பிறந்தது, இதே மஜோர்டா கிராமத்தில்தான். என் அப்பா நடத்திவந்த பலசரக்குக் கடையை, தற்சமயம் நான் பார்த்துக்கொள்கிறேன். அப்பா என் பன்னிரண்டாவது வயதில் இறக்கும்வரை, வாழ்க்கை சந்தோஷம் மட்டுமே நிறைந்ததாக இருந்தது. புத்தகங்களைப் படிக்கும் வழக்கத்தை எனக்கு உண்டாக்கியவர் அப்பாதான். ஆனால், எழுத்தில், இலக்கியத்தில், ஆர்வத்தை ஊட்டியது அம்மா. சின்ன வயதில் அம்மா நாட்டுப்புறக் கதைகளோடு சுயமாகவும் இட்டுக்கட்டிச் சொல்வார். அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. எனினும், என் பெரியக்கா பள்ளிக்குச் சென்றபோது, தானும் உடன் சென்று ‘அ’னா, ‘ஆ’வன்னா கற்று, தானே புத்தகங்களை மெள்ள எழுத்துக்கூட்டிப் படிக்கத் துவங்கினார்.

  • உங்கள் அம்மாவுக்கு வைராக்கியம் அதிகம் என்று தோன்றுகிறது!

வைராக்கியம், பிடிவாதம் எல்லாம் நிறைந்த திடமான பெண்மணி. பின்னர், மார்காவ் உயர்நிலைப் பள்ளியில் நான் படிக்கச் சென்றதும், நூலகம் என்னை வெகுவாக ஈர்த்தது. மராத்தியிலுள்ள அத்தனை புத்தகங்களையும் படித்திருக்கிறேன். பள்ளியில் இரண்டாவது மொழியாக மராத்தியையே எடுத்திருந்தேன். ஒருசமயம், கட்டுரை வகுப்பில் ஆசிரியர் மற்றவர்களுக்குப் புத்தகங்களை வினியோகம் செய்துவிட்டு, என்னுடையதை மட்டும் தனியாக வைத்துக்கொண்டு என்னை அழைத்தார். ‘ஏன் மராத்திமொழி படிக்க வந்தாய்?’ என்றதும், நான் ஏதோ தவறு செய்துவிட்டோமென்று பயந்துபோனேன். தொடர்ந்து அவரே, ‘நீ ஃப்ரெஞ்சு மொழியை எடுத்துப் படி. மிக அழகாக உனக்கு எழுத வருகிறது… உலகளவில் புகழ்பெற்ற இலக்கியங்களைப் படிக்க அந்த மொழி உதவும்’ என்றார். அந்த வார்த்தைகள் உசுப்பிவிட்டதில்தான், நான் எழுத ஆரம்பித்தேன். மீனா ககோட்கர் என் பள்ளித் தோழி… அவருக்குக்கூட அன்று வகுப்பில் நடந்தது நினைவிருக்கலாம்.

  • நீங்கள் எழுதி வெளியான முதல் கதை எது?

அச்சில் வெளியானது என்றால், ‘அசோக்’. ஆனால், அதற்கு முன் எழுதிய பல கதைகள், பம்பாய் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. கல்லூரிப் படிப்பிற்கு பம்பாய்க்குச் சென்றதும், இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பலரின் தொடர்பு உண்டானது. முதல் கதையைப் பிரசுரத்திற்கு அனுப்பியபோது, பரிட்சைக்குப் படிக்கும் மும்முரத்தில் இருந்ததால், அள்ளித்தெளித்த அவசரக்கோலமாய் அதை எழுதினேன். அதற்கு சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்தது. இரண்டாவது கதையான ‘மரணத்திற்கான காத்திருப்பு’, என்னைப் பிரபலமாக்கியது.

  • ஓ! இரண்டு பாம்புகள் கடுமையான கோடைகாலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மிகுந்த சிரமம், பரிதவிப்புடன் சென்று, பின்னர் பரிதாபமாக இறந்துபோகும் அந்தக் கதையை நானும் படித்திருக்கிறேன். வித்தியாசமான கரு!

சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்… ஒருநாள் மதியம் வராந்தாவில் அமர்ந்து தோட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு வினோதமான உணர்வு என்னை ஆட்கொள்ள, உடனே பேப்பரை எடுத்து எழுதத் துவங்கியதும், சரசரவென்று இந்தக் கதை உருவானது. கதையின் கரு எனக்குள்ளே எப்போதோ நுழைந்திருக்க வேண்டும். ஊறித் திளைத்து, முளைத்து, வெளிவரத் துடித்த அந்தக் கணத்தைத் தான் நான் வினோத உணர்வாக உணர்ந்திருக்கவேண்டும். தொடர்ந்து எழுதிய அத்தனை கதைகளுமே அந்த ‘உணர்வு’, அந்தப் ‘பொறி’ தோன்றிய பிறகே என்னால் எழுதப்பட்டவை. ‘மரணத்திற்கான காத்திருப்பு’ வெளியானதும் எக்கச்சக்க பாராட்டுக் கடிதங்கள் வந்தன. முக்கியமாய் மூத்த எழுத்தாளர் லக்ஷ்மண் ஸர்தேசாய் என்னைப் பாராட்டியதோடு, தானே அந்தக் கதையை மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டதை எனக்குக் கிடைத்த பெரும் கெளரவமாகக் கருதுகிறேன்.

  • பல கதைகளில் கிறிஸ்தவக் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதோடு, அவர்களின் பழக்கவழக்கங்களையும் துல்லியமாக எழுதுவது, எழுத்துக்கள் மூலம் இந்து-கிறிஸ்தவ ஒற்றுமையை வளர்க்கும் ஒரு முயற்சியா?

அந்த மாதிரி வேண்டுமென்றே எதையும் எழுத்தில் நான் திணிக்க முற்படுவ தில்லை. எந்த எழுத்தாளனும், தான பிறந்து வளர்ந்த சூழலுக்கு விசுவாசமாக இருப்பது இயற்கையான உணர்வுதானே! என் சொந்த கிராமமான மஜோர்டாவில், நூற்றுக்குத் தொண்ணூறு பேர் கிறிஸ்தவர்களே. நான் அவர்கள் நடுவில், அவர்களோடு வளர்ந்தவன். என் பள்ளி, கல்லூரித் தோழர்களில் பலர் கிறிஸ்தவர்கள். மதத்தால் வேறுபட்டபோதும், அவர்களிடமிருந்து நான் வித்தியாசமாய் என்னை உணர்ந்ததே கிடையாது. சின்ன வயதில் மராத்தியிலும் கொங்கணியிலும் கிறிஸ்தவர்களைப் பற்றின கதைகளைப் படிக்க நேரும்போது, ‘இவர்கள் இப்படி நடந்துகொள்ள மாட்டார்களே!’, ‘இந்தப் பழக்கவழக்க வர்ணனை தவறாக உள்ளதே!’, ‘எழுத்துக்கள் மேலோட்டமாக இருக்கின்றனவே!’ என்று வருத்தப்பட்டதன் விளைவு, ‘ஏன் நாமே எழுதக்கூடாது?’ என்ற எண்ணம். அவர்களைப் பற்றி எழுதுவதும், அவர்களைக் கதாபாத்திரங்களாக அமைப்பதும் எனக்கு இயல்பாக வரும் விஷயம். யாரைப்பற்றி எழுதினாலும், அவர்களின் உள்ளுணர்வுகளைத் தொட்டுப்பார்த்து, நமக்குள் வாங்கிக்கொண்டு எழுத வேண்டும். இல்லையென்றால், நுனிப்புல் மேய்கிற கதையாகிவிடும். மராத்தி எழுத்தாளர் சுபாஷ் பெந்தே, கன்யாஸ்த்ரீகளைப்பற்றி எழுதியுள்ளார்… ஆனால், உள்ளுணர்வை நெருங்காமல் எழுதியிருப்பதில், அது எனக்கு ஒரு மேலோட்டமான கதையாகவே தோன்றுகிறது.

  • இந்த ‘உள்ளுணர்வை நெருங்குதலை’, கொங்கணியில் எந்தெந்த எழுத்தாளர்கள் திறமையாகச் செய்திருக்கிறார்கள் என்பீர்கள்?

ஓ, பலர் அருமையாய்ச் செய்திருக்கிறார்கள். எங்களில் சிலருக்கு இந்த விஷயம் இயற்கையிலேயே அமைந்துவிட்டதை ஓர் ஆசிர்வாதம் எனலாம். எனக்குக் கிறிஸ்தவச் சூழல். விவசாயியின் மகனான புண்டலிக் நாயக், எழுதத் துவங்கும்போது இலக்கியம் மேல்தட்டு மக்களின் ஆக்ரமிப்பில் இருந்தது. தந்த கோபுரத்தில் உட்கார்ந்துகொண்டு அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை அவர்கள் எழுதியது, கண்டிப்பாய் மேலோட்டமான கண்ணோட்டமாகவே இருந்தது. ஆனால், புண்டலிக் நாயக் அந்த மண்ணிலிருந்து, அந்தச் சூழலிலிருந்து தோன்றி, அந்தப் பிரச்சினைகளை அனுபவித்தவராய் எழுதியபோது, அது வாசகர்களின் நெஞ்சைத் தொட்டது. இலக்கியத்தரமான மொழியைத் தவிர்த்து, வட்டாரமொழியில் அவர் யதார்த்தத்தை எழுத முற்பட்டதற்குப் பெரும் வரவேற்பு. எதுவும் பயிரிடப்படாத பூமியை ‘கன்னிபூமி’ என்பதுபோல, எழுத்தினால், சிந்தனையினால் தொடப்படாத இலக்கியக் ‘கன்னிப்பகுதி’யை எங்களில் சிலர் தொட்டு சிந்தித்திருப்பது பெருமைக் குரிய விஷயம்.

  • தொடர்ந்து, பொதுவான விஷயங்களைப்பற்றிப் பேச விரும்புகிறேன். 1961-ல் கோவா விடுதலை பெற்றது. சுதந்திரத்திற்கு முன் இருந்த கோவா, இன்றைய கோவா – மக்கள், பொருளாதாரம், சிந்தனை – இவற்றில் நீங்கள் காணும் வித்தியாசம் என்னென்ன?

இந்தியா முழுவதுமே இந்த 40 வருடங்களில் நிகழ்ந்த மாற்றங்கள் – வளர்ச்சி, வீழ்ச்சி இரண்டுமே – இங்கும் நடந்திருக்கின்றன. முக்கியமாய் சொல்ல வேண்டியது, தற்சமயம் உண்டாகியிருக்கும் பாதுகாப்பின்மை உணர்வு. முன்பெல்லாம் கோவாவில் எந்த வீட்டின் ஜன்னலுக்கும் கம்பிகள் கிடையாது. வாசக்கதவை சாத்தி வைத்ததாக ஞாபகமே இல்லை! நாம் உட்கார்ந்திருக்கும் இந்தக் கூடத்திற்குக்கூட 7 கதவுகள் இருப்பதைப் பாருங்கள்… இது அந்தக்காலக் கட்டடம். புதுக் கட்டடங்களில் ஜன்னலுக்குக் கம்பி, ஒரே ஒரு கதவு என்று எல்லாம் மாறிவிட்டன. ஏன், எங்கள் வீட்டு ஜன்னல்களுக்குக்கூடக் கம்பிகளைப் பொறுத்திவிட்டோம்! மக்களின் சிந்தனை, வாழ்க்கைமுறை மாறிவிட்டதை இந்த ஒரு செயல் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதே!

  • போர்த்துகீசிய ஆட்சியில் மக்களுக்குப் பாதுகாப்பு அதிகம் இருந்தது; விடுதலைக்குப் பிறகுதான் பல சீரழிவுகள் என்கிறீர்களா?

கண்டிப்பாக. முன்பு கிராம் சம்ஸ்தான் ஒரு கூட்டுறவுச் சங்கம் போல இயங்கி, மக்களின் தேவைகளை அக்கறையாய் கவனித்துக்கொண்டது. இப்போது நிலைமை மாறிவிட்டதே! ‘உழுபவனுக்கு நிலம்’ என்ற கோஷம் எழுந்த பிறகு, சில பட்கார்கள் (Badkar) – மிராசுதார் – ஓட்டாண்டியாகிவிட்டார்கள். சில உழவர்கள் முதலாளியாகிவிட்டார்கள். வேலை தேடி வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களில் சிலரது நடத்தையாலும், கோவாவின் அமைதி பெருமளவுக்குப் பாதிக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 1973-ம் வருடம்வரை நாங்கள் மின்சாரம் இல்லாமல்தான் இருந்தோம். ஆனாலும், நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லாமல் வாழ்ந்தோம்.

  • 1973-ம் ஆண்டுவரை மின்சாரம் இல்லாமலா? அதிர்ச்சியாக இருக்கிறதே! இதற்குக் காரணம் என்ன? அரசாங்கத்தின் அலட்சியப் போக்கா? அல்லது, எதையும் தட்டிக்கேட்கத் தெரியாத மக்களின் குணமா?

இரண்டும்தான். 400 வருடங்களுக்கும் மேலான அடிமைவாழ்க்கை எங்களை ஒருவித சோம்பேறிகளாக்கிவிட்டது (lethargic). போர்த்துகீசியமொழியில் ‘ஸுஸேகாட்’ (susegad) என்றொரு வார்த்தை உண்டு. இது, எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும், எதற்கும் அலட்டிக்கொள்ளாத ‘ஈஸி கோயிங்’ சுபாவத்தைக் குறிக்கும். இது கோவர்களுக்குப் பொருந்தும்.

  • கோவர்கள் குடித்து, சந்தோஷமாக இருப்பதைப் பெரிதும் விரும்பும் மக்கள் என்கிற கருத்தை ஏற்பீர்களா?

இந்தக் கூற்று ஓரளவுக்குத்தான் உண்மை. நாங்கள் வாழ்க்கையை நிதானமாக எடுத்துக்கொள்ள, அனுபவிக்க விரும்புகிறோம். இதை உதாரணம் மூலம் விளக்குகிறேன். காலையில் எழுந்து வீட்டு வேலைகள் முடிந்து ஒன்பது மணிக்குக் கடையைத் திறந்தால், ஒரு மணிக்கு மூடிவிடுவோம். மீண்டும் நான்கு மணிக்குத் திறந்து எட்டு மணிவரை வியாபாரத்தைக் கவனித்து, கடையை மூடி, வீட்டுக்கு வந்துவிடுவோம். ஆனால், வெளிமாநிலத்திலிருந்து வந்திருக்கும் வியாபாரிகள், அதிகாலையில் கடையைத் திறந்து, இடைவெளி இல்லாது இரவு பத்துமணிவரை வியாபாரம் செய்கிறார்கள். இது எங்கள் பழக்கவழக்கங்களை தடாலடியாய் மாற்றவைக்கிறது. குடிப்பதும் பாடுவதும் சில கிறிஸ்தவர்களிடையே காணப்படுமே தவிர, இந்துக்களிடையே இது குறைவு. அப்படியும்கூடத் தெருவில் குடித்துத் தள்ளாடுபவர் நிச்சயம் வெளிமாநிலத்தவராகத்தான் இருப்பார். கோவருக்கு நிதானம் தவறாமல் குடிப்பது எப்படி என்று தெரியும்.

  • கோவர்களுக்கு மூடநம்பிக்கை அதிகம் என்று ஒரு குறிப்பு படித்தேன். ஒவ்வொரு தெருவிலும் துளசிமாடம் போல சிலுவைமாடம் கட்டியிருப்பது கூட அதன் வெளிப்பாடுதான் என்றார் ஒரு நண்பர். இக்கருத்தை ஆமோதிக்கிறீர்களா?

கண்டிப்பாக இல்லை. மற்ற மாநிலங்களைப் போல இங்கும் சிலருக்கு சில நம்பிக்கைகள் இருக்கலாம்… அவ்வளவே. சிலுவை மாடங்கள் கட்டப்பட்டது போர்த்துகீசியரின் ஆட்சிக்காலத்தில். மற்றபடி பெரும்பாலான கோவர்கள் விஞ்ஞான ரீதியாய் சிந்திப்பவர்தாம்.

  • இலக்கியத்தைப் பொறுத்தவரை உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

தற்சமயம் கொங்கணி பாஷா மண்டலின் தலைவர் பொறுப்பை ஏற்றிருப்பதில், நிர்வாக வேலை அதிகமாய் உள்ளது. எழுதுவதற்கும் படிப்பதற்கும் நேரம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. எனினும், இரண்டு நாவல்களுக்கான விவரங்களைத் தயார்பண்ணிக்கொண்டிருக்கிறேன். கிழக்கு ஆப்ரிக்காவுக்குப் பிழைக்கப்போன கோவர் குடும்பங்களை மையமாக வைத்து ஒரு நாவலை எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றது, தென்கிழக்கு கோவாவில் கட்டப்பட்டிருக்கும் ஸலோலிம் (Salaulim) அணை சம்பந்தப்பட்டது. அணை கட்டுவதற்காக இடமாற்றம் செய்யப்பட்ட மக்களைப் பற்றியது. சிறு அணைகள் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டப்படலாம்… ஆனால், பெரியளவு அணை, கூடவே கூடாது. மகாராஷ்டிரத்தில் கட்டப்பட்ட ‘கொய்னா’ அணை காரணமாய் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் தோன்றுகிறதே!

  • வாழ்க்கையில் உங்களுக்கென ஏதாவது கொள்கை வைத்திருக்கிறீர்களா? கடைப்பிடிக்கும் சித்தாந்தம் ஏதேனும் உண்டா?

வரலாறு நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லித்தர முனைகிறது. ஆனால் நாம்தான் எந்தப் பாடத்தையும் கற்க மறுக்கிறோம். வாழ்க்கைப் பயணத்தில், எதுவும் மனிதநேயத்தின் அடிப்படையில் முன்னேற்றத்தை நோக்கியே இருக்க வேண்டும். நான் வாழ்க்கையை நேசிக்கிறேன், ரசிக்கிறேன். உயிர் வாழ்வதற்காக சம்பாதிக்கிறேனே ஒழிய, சம்பாதிப்பதற்காக உயிர் வாழவில்லை. இதுதான் என் சித்தாந்தம், கொள்கை எல்லாம்.

– டிசம்பர், 2000.

                                                                                                              மேலும் படிக்க