அவன்

/அவன்

(1)

ப்ரேம்…”
“……………”
“ப்ரேம்…”
இப்போது அம்மாவின் குரலுடன், கதவைத் தட்டும் ஓசையும் சேர்ந்து கொள்ள, ப்ரேம் உறக்கம் கலைந்து புரண்டு படுத்தான்.
இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே படுத்துக்கிடக்க வேண்டும்போல இருந்ததை மீறிக்கொண்டு கண்களைக் கீறாகத் திறந்தபோது, விலகியிருந்த ஜன்னல் திரை வழியாக அறைக்குள் பாய்ந்த வெளிச்சம் ‘விடிந்து நேரமாகி விட்டது, அப்பனே’ என்றது.
“ப்…ரேம்… எழுந்துக்கப்போறியா, இல்லியா? மணி ஏழரை…”
“வரேம்மா…”
குரல் கொடுத்தவன், போர்வையைத் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்தான்.
தலை லேசாகக் கனத்துக்கொண்டு, ‘இன்னும் சில நிமிஷங்களாவது தூங்கேன்’ என்று ஆசை காட்டியது.
நேற்று குடித்த வொயின் கொஞ்சம் அதிகமோ?
சினேகிதர்களுக்குக் கொடுத்த பார்ட்டியில், இவனையும் வளர்ந்த பிள்ளையாகக் கருதி, “ஒரு குட்டி கிளாஸ் வொயின் ஊத்திக்க, ப்ரேம்…” என்று அப்பா சொல்லியதை சாக்காக வைத்துக்கொண்டு, மற்றவர்களுக்கு ஊற்றிக் கொடுக்கும் வேலையை ரொம்பப் பெரியவனாய் செய்ய முன்வந்து, யாரும் பார்க்காத சமயத்தில் தன் கிளாஸையும் நிரப்பிக்கொண்டது நினைவுக்கு வந்தபோது, ப்ரேமுக்குப் பெருமையாக இருந்தது.
இந்தப் பெரியவர்களை, எத்தனை சுலபமாக ஏமாற்ற முடிகிறது!
“ப்…ரே…ம்…”
“யா… யா… எழுந்திட்டேன்.”
“கதவத் திறப்பா… முதமுறையா காலேஜுக்குப் போறே… நேரத்தோட எழுந்து தயாராக வேணாமா?”
கதவு திறந்து, எதிரில் நின்ற பிள்ளையைப் பார்த்த ரேவதி, முகத்தைச் சுளுக்கினாள்.
“நைட் ட்ரெஸ் மாத்திக்காம படுக்கப் போகாதேன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கேன், ப்ரேம்!”
“ஸாரிம்மா… டயர்டா இருந்துது…”
“அதுக்காக? வரவர நீ சொன்னதையே கேக்கறதில்ல, ப்ரேம்! சாயங்காலம் டென்னிஸ் விளையாடிட்டு அப்படியே வந்து பார்ட்டியில கலந்துகிட்டே… ‘நாலு பேர் வீட்டுக்கு வர்றப்ப, சுத்தமா, பளிச்சுனு இரு, ட்ரெஸ்ஸ மாத்திக்கிட்டு ஃப்ரெஷ்ஷா படுக்கப் போ’ன்னு அப்பாவும் நானும் நூறு தரம் சொல்லிட்டோம்… எங்க! பெரியவங்க நல்லதச் சொல்றப்ப, கேட்டாத் தேவல! அடுத்தாப்பல, ஸந்தியாவப் பாரு… உன்னைவிட ரெண்டு வயசுதான் பெரியவ… ஆனாலும், என்ன பொறுப்பு! நேத்து என் ஃப்ரெண்ட்ஸ்கூடச் சொன்னாங்க… ‘இந்த மாதிரி சமத்தா பொண்ணு இருக்க நீ அதிர்ஷ்டம் பண்ணியிருக்கே’ன்னு! ஆமா… நேத்து நீ வொயின் குடிச்சியா என்ன?”
“அப்பாதாம்மா எடுத்துக்கச் சொன்னார்…”
“பதினேழு வயசுப் பிள்ளைய வளந்தவனா நடத்தணும்னு அப்பா அப்படிச் சொன்னாலும், நீ ஒரு ‘ஸிப்’ எடுத்திட்டு வெச்சிருந்தா, அது மரியாதை! ஆனா, உன் கையில முழு கிளாஸப் பாத்ததா எனக்கு ஞாபகம்…”
ப்ரேம் பதில் கூறாமல் மீண்டும் படுக்கையில் உட்கார…
ரேவதி ஜன்னலருகில் திரைகளை ஒதுக்கினாள். நின்ற இடத்திலிருந்தே பார்வையைச் சுழலவிட்டாள்.
அந்த அறை ரொம்பப் பெரிசில்லை… அதற்காக, சின்னது என்றும் சொல்ல முடியாது. நடுத்தரம். பத்தடிக்குப் பன்னிரண்டடி அறை அது.
சுவரை ஒட்டிப் போடப்பட்ட கட்டில். எதிர்ப்பக்கம் மேஜை, நாற்காலி. இங்குமங்குமாய் துணிகள். தலைக்கு மேல் வரிசையாய் தட்டுப் பலகைகள்… அதிலும் மேஜை மேலும் வாரியிறைந்திருந்த புஸ்தகங்கள்.
வலப்பக்க சுவர் பூராவும் பெரியபெரிய போஸ்டர்களில் பீட்டில்ஸ், க்வீன் இசைக் குழுவினர்… திறந்த மார்பும் பரட்டை முடியுமாய் நின்று வெறித்தனர். பக்கத்தில், பெரிசும் சின்னதுமாய் ரேஸ் கார்களின் வண்ணப் படங்கள். அத்தனைக்கும் நடுநாயகமாய், லேசாக மார்பகங்களைக் காட்டும் ப்ரூக் ஷீல்ட். மூலையில் கிடார், டென்னிஸ் ராக்கெட், கட்டிலுக்கு அடியில் கோலாப்புரி செருப்புகள், முதல்நாள் அவசரமாய் அவிழ்த்து எறிந்திருந்த டென்னிஸ் ஷூ, சாக்ஸ்…
கண்ணில் விழுந்த அலங்கோலத்தைச் சகிக்க முடியாமல், ரேவதி தலையை அசைத்து “ப்ச்…” என்றாள்.
டேபிள் மேல் கிடந்த புஸ்தகங்களை அடுக்கி, நாற்காலி முதுகில் தொங்கின துணிகளில் மடிக்க வேண்டியவற்றை மடித்து, தோய்க்க வேண்டியவற்றைச் சுருட்டி பாத்ரூமுக்குள் சென்று வாளியில் போட்டவள், தாளமாட்டாதுபோலப் பேசினாள்.
“ஆனாலும் நீ மோசம், ப்ரேம்… தனி ரூம் வேணும், நா பெரியவனாயிட்டேன், ஹாய், ஊய்னு பிடிவாதம் பண்ணி தனியறை வாங்கிட்டியே தவிர, அதை ஒரு நாளாவது சுத்தமா வெச்சிருக்கியா? எங்கப் பாரு குப்பை, துணி, புக்ஸ்… எடுக்கற சாமான் எதையும் கையோட அந்தந்த எடத்துல வெச்சா, பிரச்சினை இல்ல… ஆனா, நீ? மைகாட்! அறை காடு முளைச்சில்ல கிடக்கு! நீயும் ஒழுங்கா வெச்சுக்கறதில்ல, க்ளீன் பண்ண ஆளுங்க வந்தாலும் ‘என் அறைக்குள்ள வராதீங்க’ன்னு கத்தறே! உள்ள வந்தாலே வேர்வை நாத்தம்! அப்பாவும் சரி நானும் சரி, ரொம்ப க்ளீன் பர்ஸன்ஸ்! நீ யாரைக் கொண்டு இத்தன சோம்பேறியா இருக்கியோ… எனக்கு நிஜமா புரியல! நல்லவேளை, ஸந்தியாவாவது எங்கள மாதிரி சுறுசுறுப்பா, ஆர்கனைஸ்டா இருக்கா… அவ அறையப் போய் ஒருதரம் பாத்திட்டு வாயேன்… ப்ளீஸ்… எப்ப போனாலும் பளிச்சுனு, அந்தந்த எடத்துல…”
ப்ரேம் கொட்டாவி விட்டபடி எழுந்து நின்றான்.
“ஸந்தியாவோட சும்மாச்சும்மா என்னை கம்பேர் பண்ணாதீங்கம்மா… ஐ டோண்ட் லைக் இட்! நேத்து பூரா நா வீட்டுலயே இல்ல… காலைல கிடார் கிளாஸுக்குப் போயிட்டேன்… சாயங்காலம் டென்னிஸ்… வந்த உடனே பார்ட்டி… ஒழிக்க ஏது நேரம்?”
“அதுசரி… ரொம்ப பிஸிதான், போடா! காலையில ரெண்டு மணிநேரம், சாயங்காலம் ரெண்டு மணிநேரம் கிளாஸுக்குப் போயிட்டு வந்து, நேரமில்லேன்னு அலுத்துக்கறியே… என்.ஸி.ஸி., காலேஜ், அப்பறம் ஃப்ரெஞ்ச் கிளாஸ் எல்லாத்துக்கும் போயிட்டுவந்துதான் ஸந்தியா நேத்து டின்னருக்கு ‘புட்டிங்’ தயார் பண்ணினா, தெரியுமா? பிரமாதமா படிக்கறதோட, பியானோ கத்துகிட்டு, எல்லாத்துலயும் கெட்டிக்காரின்னு பேர் வாங்கறவளுக்கு, அறைய சுத்தம் பண்ண நேரமிருக்கு, உனக்கு இல்ல… அதா…”
அவள் முடிக்கும் முன்னர் ப்ரேம் குறுக்கிட்டான். கத்தலாகப் பேசினான்.
“ஓ, ஸ்டாப் இட், மா… கம்பேர் பண்ணாதீங்க, எனக்குப் பிடிக்காதுன்னு சொல்லிட்டே இருக்கறது காதுல விழலியா? ஓகே, ஸந்தியா உசத்தி, நா மட்டம்! அவ கெட்டிக்காரி, நா முட்டாள்! உங்களுக்கு அவளப் பிடிக்கும், என்னைப் பிடிக்காது… சரிதானா?”
உதடுகள் துடிக்க, மிகமிக லேசாகக் கண்கள் கலங்கிப்போக பிள்ளை பேசினதும், மனசாகாத மாதிரி ரேவதி அருகில் வந்தாள். தோளில் தட்டிக் கொடுத்து, “ஹேய்…” என்றாள். “நீ மட்டம், அவ உசத்தினு இல்ல, ப்ரேம்… நீங்க ரெண்டு பேருமே என் பசங்கதான்… அதை மறந்திட்டுப் பேசாதே! வயசு பதினேழு ஆறதுக்கு, இன்னும் கொஞ்சம் பொறுப்போட நீ நடந்துகிட்டா, நா சந்தோஷப்படுவேன்… தட்ஸ் ஆல்! அதைத்தான் சொல்ல வந்தேன்.”
அம்மாவின் சமாதான வார்த்தைகள் காதில் விழாத தினுசில், ப்ரேம் அவள் பிடியை விலக்கிக்கொண்டு பாத்ரூமிற்குள் வந்து கதவைச் சாத்திக்கொண்டான்.
ஸந்தியா இப்படிச் செய்தாள், ஸந்தியா அப்படிச் செய்தாள், முதல் ராங்க் வந்திருக்கிறாள், அருமையாய் பியானோ வாசிக்கிறாள், ஸந்தியா… ஸந்தியா… ஸந்தியா…
அம்மா, அப்பா, மற்றவர்கள் ஸந்தியா புகழ் பாடுவதைக் கேட்டு அலுத்துத்தான் போய்விட்டது.
சரி… ஸந்தியா மாதிரி நான் அத்தனை அதிபுத்திசாலியாக, கெட்டிக்காரனாக இல்லாமல் இருக்கலாம்…
அதற்காக?
என்னுடைய ப்ளஸ் பாயிண்ட் என்னவென்று புரிந்து அதைத் தட்டிக் கொடுக்காமல், அவள் மாதிரியே நீயும் இரு என்றால் என்ன அர்த்தம்?
நான் பாடி, கிடார் வாசிப்பதைக் கேட்டு நண்பர்கள் எல்லாம் அசந்து போகிறார்கள்… ஏன், மேடைப் பாடகனாக மாறினால், எக்கச்சக்க புகழ் நிச்சயம் என்கிறார்கள்.

டென்னிஸிலும் நான்தானே ஸ்கூல் சாம்பியன்! தீவிரப் பயிற்சி பெற்றால் விம்பிள்டனில் ஈடுவது சாத்தியம் என்று சொல்கிறார்கள்தானே!
அப்புறம்?
இதெல்லாம் அப்பா அம்மாவுக்குத் தெரியாதா என்ன?
என்ன தெரிந்து என்ன!
“எதிர்காலம் நல்லா அமைய படிப்பு முக்கியம், ப்ரேம்… கவனமா படிச்சு, எம்.பி.ஏ., இல்ல வேற ஏதாவது கோர்ஸ் முடி… அப்பறமாதான் பாட்டு, டென்னிஸ் எல்லாம்!” என்றுதானே தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.
எம்.பி.ஏ. படித்தால்தானா?
கம்ப்யூட்டர் சயன்ஸில் தேர்ச்சி பெற்றால்தானா?
நான்சென்ஸ்… ப்ளடி நான்சென்ஸ்!
சின்னதாக எரிச்சல் மண்ட, ஒரு சிகரெட் பிடித்தால் என்னவென்று தோன்றியது.
சிகரெட் வெளியறையில் இருந்தது, அலமாரியில் துணிகளுக்கு அடியில்.
அம்மா இன்னும் அங்கு இருந்தால், ‘பாதிக் குளியலில் எங்கு வந்தாய்? அறை முழுவதும் ஈரம்! இப்படியா ஜலம் சொட்ட வருவார்கள்?’ என்று ஆரம்பித்து விடலாம்.
வேண்டாம்.
ஐந்து நிமிஷங்களில் குளித்து முடித்தவன், வெளியில் வரும் முன், தோய்ப்பதற்கென அம்மா வாளியில் போட்டிருந்த துணிகளிலிருந்து நீல ‘லீவைஸ்’ ஜீன்ஸை உருவியெடுத்து அதையும், பனியன் இல்லாமல் ஒரு டீ ஷர்ட்டையும் அணிந்துகொண்டான். தலைமுடியை லேசாக வாரிக்கொண்டு, பர்ஸில் பணம் இருக்கிறதா என்று பார்த்தான்.
பன்னிரண்டு ரூபாய் இருந்தது.
முதல்நாள் செலவுக்கு இது போதாதா? போதும்.
ப்ளஸ் டூவில் உபயோகித்த நோட்டுப் புஸ்தகங்களையும், பாதி படித்து வைத்திருந்த ‘ஸிட்னி ஷெல்டன்‘ புஸ்தகத்தையும் எடுத்துக்கொண்டு, கீழே வந்தான்.
மாரிசாமியை இட்லி கொண்டுவரச் சொல்லிவிட்டு சாப்பிடுகையில், மாதவன் வந்து மேஜை முன் அமர்ந்தார்.
“குட்மார்னிங், ப்ரேம்.”
“மார்னிங்ப்பா…”
“காலேஜுக்குப் போகத் தயாரா?”
“ம்.”
“எக்ஸைடட்?”
ப்ரேம் வாயில் இட்லியுடன் தலையாட்டினான்.
“குட்! ஆமா… இந்த ட்ரெஸ்லியா காலேஜுக்குப் போகப்போறே?”
“ஏன்? இதுக்கு என்ன?”
“என்னவா? அழுக்கு ஜீன்ஸ்… சாயம்போன டீஷர்ட்… டிஸ்கஸ்டிங்! உடனே போய் மாத்திக்கிட்டு வா…”
“அப்பா… வந்து…”
“முதல்ல நீ எழுந்திரு… இப்படி முதல் நாள் போய் நின்னீன்னா, எனக்குத்தான் ப்ரேம், அவமானம்! கமான்… கெட் அப்… அப்படியே தலைய நல்லா படிய வாரிக்கிட்டு வா!”
பிடிக்காவிட்டாலும், அப்பாவை எதிர்த்துப் பேசத் துணிவில்லாமல் மேலே சென்று உடை மாற்றி, தலை வாரி கீழே வந்து, அம்மா, அக்காவின் ‘ஆல் தி பெஸ்ட்’ வாழ்த்துக்களை ஏற்று, முதல் நாள் என்பதால் தானே அவனைக் கல்லூரியில் விட்டுச் செல்ல அப்பா முடிவு செய்திருந்ததற்கும் வாயைத் திறக்காமல் சம்மதித்தான்.
காரில் செல்லும்போதும், “நல்லா படிக்கணும், ப்ரேம்… எதிர்காலத்துக்கு அதான் நிஜமான அஸ்திவாரம்…” என்று அப்பா சொன்னதற்கெல்லாம் சரி, சரி என்று தலையாட்டிவிட்டு, கல்லூரி வாசலில் வண்டி நின்றதும், “ஆல் தி பெஸ்ட், ப்ரேம்…” என்று அவர் வாழ்த்தியதற்கு, “தேங்க்ஸ்ப்பா…” என்று பதில் கூறி, அவர் சென்ற பிறகு முதல் வேலையாய் யாரும் தன்னைக் கவனிக்கும் முன் தலைமுடியைக் கலைத்துவிட்டுக்கொண்டான்.
கொஞ்சம் நிதானித்து மெதுவாக உள்ளே நுழைந்தவனை, காம்பவுண்ட் சுவரில் உட்கார்ந்திருந்த ஒரு சீனியர் மாணவர் கூட்டம் விரலைச் சொடுக்கி அழைக்க, கிட்டத்தில் போனான்.
நல்ல உயரமாய், ஒல்லியாய், மீசையும் கட்டம்போட்ட சட்டையுமாய் இருந்த ஒருவன், “ஹாய் தேர்… நா சுனில்… செகண்ட் இயர் ஸ்டூடண்ட்! சமத்தா காலைத் தொட்டு வணக்கம் சொல்லு பாக்கலாம்!” என, பேசியவனை நிமிர்ந்து பார்த்தான் ப்ரேம்.

• • • • •

சுனில்
சுனிலை முதல்முதலாக ப்ரேம் சந்திக்கும் இந்த சந்தர்ப்பத்தில், நாமும் அவனைக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?
சுனில், அவனைப் பெற்றவர்களுக்கு ஒற்றைப்பிள்ளை. ஏக செல்லம். அப்பா பகவன்தாஸ், வெள்ளைக்கார துரை ஒருவரிடம் கிளார்க்காகச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி, இன்று கோத்தகிரியில் தேயிலைக் காடுகளுக்குச் சொந்தக்காரராக, தடபுடலாய் வாழ்பவர். அம்மா ரோஹிணி, அப்பாவைக் கைப்பிடிக்கும்போது அவர் சாதாரண நிலையில் இருந்ததால், அவரையும்விட அதிசாதாரண குடும்பத்துப் பெண்… இன்று பணம் காசு தாராளமாகப் புழங்கும் போதும் ஆடம்பரமாக இருக்கத் தெரியாமல், இன்றைக்கும் தான் வளர்ந்த வழக்கப்படி பூஜை புனஸ்காரம் என்று எளிமையாக வாழ்பவள். கணவனின் நாகரிக வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கத் தெரியாததோடு, பகவன்தாஸ் என்ன அடாவடி செய்தாலும் ‘ஆயிரம் சொன்னாலும் அவர் புருஷர், எதுவும் செய்வார். நாம்தான் பொறுத்து, அனுசரித்துப்போக வேண்டும்’ என்கிற ‘க.க.க.தெய்வம்’ மனப்பான்மை கொண்டவள்.
அவர்களுக்குத் திருமணமாகி கிட்டத்தட்ட பதினேழு ஆண்டுகள் ஆகி, போகாத தலம் இல்லை, முங்காத குளம் இல்லை என்று அலுத்துப்போய்விட்ட பிறகு, திடுமென ஜனித்தவன் இந்த சுனில்.
அப்புறம் செல்லத்திற்குக் கேட்பானேன்! ஆஹா, என் பிள்ளை என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்குச் சொல்வானேன்!
சுனில் வளர்ந்தான்.
ஊட்டி கான்வெண்டில் பள்ளிப்படிப்பு.
எட்டாவது வகுப்பில் படிக்கும்போது சுனில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தான். இரண்டு வருஷத்தில், ஒரு நாளைக்கு இருபதைத் தொட்டான்.
முதல்முறையாக பியரை பதினான்காவது வயசில் ருசி பார்த்தான். பள்ளியிறுதி ஆண்டு வருவதற்குள், ‘ஐயா ருசி பாக்காத ட்ரிங்க் இல்ல, தெரியுமா?’ என்று நண்பர்கள் நடுவில் பெருமை பேசுமளவுக்குத் தேர்ச்சி பெற்றான்.
பகவன்தாஸ் வருஷம் தப்பாமல் பள்ளிக்குக் கொடுத்த நன்கொடை, சுனில் ஒவ்வொரு வகுப்பாகத் தாண்ட உதவியது என்பது நிஜம். பள்ளியிறுதி ஆண்டிலும், ரோஹிணியின் கண்ணீருக்குப் பயந்து, யார் எந்தப் பேப்பரைத் திருத்துகிறார் என்று அறிந்து, கணிசமான ரொக்கம் கை மாறியதில், ‘நானும் பள்ளிப் படிப்பை முடித்தேன்’ என்று பேர் பண்ணிவிட்டு, ஜம்மென்று சென்னைக் கல்லூரி ஒன்றில் இரண்டாம் வருஷ பி.ஏ. படிப்பு படிக்கிறான், ஒரு சப்ஜெக்டிலும் தேறாமல்! தட்டிக் கேட்க ஆள் இல்லாத ஹாஸ்டல் வாசம்.
இந்த சுனில், ப்ளஸ் டூ படிப்பு படிக்கும்போதே, ‘க்ராஸ்’ எனப்படும் கஞ்சாவுக்கு அவனுடைய நண்பனால் அறிமுகப்படுத்தப்பட்டவன்.
ஒன்று, இரண்டு என்று துவங்கி, இன்று ஒரு நாளைக்குத் தாராளமாய் பத்திலிருந்து பன்னிரண்டு வரை கஞ்சா சிகரெட்டுகளைப் பிடிக்கும் சுனிலுக்கு, பணத்தைப்பற்றி எந்தக் கவலையும் இல்லை. இருக்கவே இருக்கிறாள் அம்மா… ‘பணம் வேணும்மா’ என்று செல்லப்பிள்ளை திருவாய் மலர்ந்துவிட்டால், தான் வணங்கும் அந்த கிருஷ்ண பரமாத்மாவே நேரில் வந்துவிட்ட சந்தோஷத்தோடு, ஏன், என்ன, எதற்கு என்ற ஒரு வார்த்தைகூடக் கேட்காமல் நூறும் இருநூறுமாய் தூக்கித் தர அவள் தயாராக இருக்கும்வரை, சுனிலுக்குத்தான் என்ன குறை!
ஒரு நாள் விட்டு ஒரு நாள், ஒரு தோலா ‘பொட்டலம்’ வாங்கி, அதை இருபத்தைந்து சிகரெட்டுகளில் பகிர்ந்து அடைத்து, தான் பெறும் இன்பத்தை மற்றவர்களும் பெறவேண்டி, நண்பர்களுக்கு இலவசமாகக் கொடுத்து, இந்தத் தாராள மனப்பான்மை காரணமாய் கல்லூரியின் ‘பாரிவள்ளல்’ என்ற பட்டப் பெயரைப் பெற்றுள்ள சுனில்தான், இன்று ப்ரேமை ‘காலைத் தொட்டு வணக்கம் சொல்லு பார்க்கலாம்’ என்று அழைத்திருக்கிறான்.
நாமும் பார்க்கலாம்.

(தொடரும்)

• • • • •

மேலும் படிக்க