பஞ்சாபி எழுத்தாளர் அஜீத் கெளருடன் ஒரு பேட்டி
பஞ்சாபி மொழியின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான அஜீத் கெளரை, நான் பல வருடங்களாக அறிவேன். இலக்கியக் கூட்டங்கள் பலவற்றில் ஒன்றாகக் கலந்துகொண்டபோது, ஒரு கலகலப்பான, வெளிப்படையாய் பேசும் சினேகிதியாக இவரை உணர்ந்திருக்கிறேன். தில்லியில் செயல்படும் இவருடைய ‘அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் அண்ட் லிட்ரேச்சர்’, அவசியம் பார்க்கவேண்டிய இடம். பசுமையான தோட்டம் சூழ கம்பீரமாய் நிற்கும் நான்கு மாடிக் கட்டடத்தின் ஒரு தளத்தில், அடித்தட்டுப் பெண்களுக்கு நடனம், இசை, ஓவியம், மண்பாண்டம் செய்வது, தையல் – என்று பல துறைகளிலும் பயிற்சி கொடுப்பது நடக்கிற தென்றால், இன்னொரு தளத்தில் பெரிய நூலகம், ஓவியக் கண்காட்சி, இன்னொன்றில் இசைக் கச்சேரி என்று நுண்கலைகளின் அனைத்துப் பிரிவுகளையுமே அங்கு ரசனையுடன் அனுபவிப்பது சாத்தியமாகிறது.
1934-ம் ஆண்டு லாகூரில் பிறந்த அஜீத் கெளர், புனைகதைகள் படைப்பதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைத் தக்கவைத்துக்கொண்டவர். இவரது படைப்புக்கள் மத்திய சாகித்ய அகாடமி, பாரதீய பாஷா விருதுகள் உள்ளிட்ட பல கெளரவங்களைப் பெற்றுத்தந்துள்ளன. வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் 53 மாணவர்கள் இவரது எழுத்துக்களை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவரது ஐந்து கதைகள் டெலிஃபிலிம்களாக எடுக்கப்பட்டு மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
* * * * *
- இந்தப்பகுதி, பாரசீக, இஸ்லாமிய, சீக்கிய, ஆங்கிலேய ஆட்சியின் ஆளுமையின்கீழ் பல நூற்றாண்டுகள் இருந்துள்ளது… அப்போது துவங்கி இன்றுவரை, பெண்களின் நிலை பொதுவாக எப்படியிருந்தது என்பீர்கள்?
ஆட்சியாளர்களைப்பற்றிப் பேசுகையில், சரித்திரப் புத்தகங்கள் வெளியிடாத ஒரு வியப்பூட்டும் உண்மையைத் தெரிவிப்பது அவசியமாகிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை 200 வருடங்கள் ஆண்டார்கள் என்பது வரலாறு… ஆனால், பஞ்சாபை அவர்களால் வெறும் 98 வருடங்களுக்கு மட்டுமே ஆள முடிந்தது என்ற விவரம் என் போன்றவர்களைப் பெருமிதத்தில் ஆழ்த்துகிறது. பஞ்சாபில் நுழைய ஆங்கிலேயர் செய்த அனைத்து முயற்சிகளும், வீரம் மிகுந்த பஞ்சாபிக்களால் கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முறியடிக்கப்பட்டன. ஆனால், அதற்குப் பழி தீர்த்துக்கொள்ளும் வகையில், பஞ்சாப் மாநிலத்தை ரத்தக்களறியாக்கித் துண்டாடியதில், இந்த மாநிலம் அனுபவித்துள்ள கஷ்டங்கள் ஏராளம்!
பல நூறு வருடங்களாக பஞ்சாப் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற பிரதேசமாகத்தான் இருந்துவந்துள்ளது. பஞ்சாபிக்கள் கடின உழைப்பாளிகள், விவசாயத்தில் தீவிர கவனம் செலுத்துபவர்கள் என்பதால், வளமைக்குப் பஞ்சமில்லை. எல்லைப்பகுதியிலுள்ள மாநிலமாக இருந்ததில், ஏதாவது படையெடுப்பு, போர் என்று ஒன்று மாற்றி ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்ததால், அனேகமாய் ஆண்கள் போரில் ஈடுபட்ட தருணத்தில் குடும்ப, இதர பொறுப்புக்களை முழுமையாகப் பெண்களே ஏற்று நடத்துவது வழக்கம். குழந்தைகள் பராமரிப்பில் துவங்கி, நிலம், மாடுகள் என்று அனைத்தையும் பெண்கள் செம்மையாய் நிர்வகிக்கக் கற்றிருந்தார்கள். இது எங்கள் பெண்களிட மிருந்த பலம். ஆனால், எத்தனை திறமைவாய்ந்தவளாக இருந்தபோதும், இதர மாநிலங்களைப் போன்று அவளுடைய வாழ்க்கையும் ஆண்களால், ஆண்களை முன்னிறுத்தி, ஆண்களுக்காக நிர்ணயிக்கப்பட்டது என்ற உண்மையையும் சொல்லியேதீர வேண்டும்! இங்கு தந்தைக்குத் தலைப்பாகையும், சகோதரனுக்கு மீசையும் தன்மானச் சின்னங்களாக – இஸ்ஸத் (honour) – கருதப்படுவதால், தந்தையின் தலைப்பாகை மானத்தை, சகோதரனின் மீசை மானத்தைக் காப்பாற்றும் விதமாய் ஒரு பெண் நடந்துகொள்ளவேண்டும் என்பது சிறுவயது முதலே சொல்லித்தரப்படுவது ஒரு மூளைச்சலவையாகவே ஆகிவிட்டது!
- அம்மா, சகோதரிகளின் தன்மானச் சின்னங்களாக எவை கருதப்பட்டன?
எதுவுமில்லை! மான, அவமான உணர்வுகளெல்லாம் ஆண்களுக்குத்தான், பெண்களுக்கு எதுவும் கிடையாது என்பது நம் நாடு முழுவதும் நிலவிய, ஏன், நிலவும் எண்ணம்தானே! ஆனாலும், இதர மாநிலங்களில் பெண்களுக்கு நடந்ததாகக் கேள்விப்படும் கொடுமைகள் இங்கு மிகக் குறைவு என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்காக நான் கூறும் காரணத்தைப் பலர் ஏற்க மறுக்கலாம்… பாரசீகத்திலிருந்து நுழைந்த ஸூஃபி சிந்தனைகள் இங்குள்ளவர் களிடம் உண்டாக்கிய தாக்கம், நல்ல விளைவுகளைத் தந்துள்ளது. இறைவனை ஓர் உயர்ந்து இடத்தில் வைத்து ஆராதிப்பதோடு நின்றுவிடாமல், ஆன்மாவைத் தொடும் விதமாய் அவரை நேசிக்கும், ஆசை வைக்கும் நபராய் சித்தரித்ததற்கு, ஸூஃபிக்களின் சிந்தனைத் தாக்கம்தான் முக்கியக் காரணம் என்று நம்புகிறேன். அந்தத் தருணத்தில்தான் பக்தி இயக்கத்தின் துவக்கமும் நிகழ்ந்தது. ஸூஃபி சிந்தனைகளும், பக்தி இயக்கமும் ஒன்றையொன்று பாதித்தன எனலாம். பக்த மீரா, லால் டெட், அக்கா மகாதேவி – போன்றவர்கள், சமுதாயம் தந்த உறவுகளை விடுத்து, இறைவன்பால் தாங்கள் கொண்டிருந்த காதலைத் துணிச்சலுடன் பிரகடனம் செய்தவர்கள்.
ஸூஃபி சிந்தனைகள் உஸ்பெக்கிஸ்தான், துருக்மெனிஸ்தான், அஸார்பைஸான், பாரசீகம், அரபு நாடுகள், காஷ்மீரம், லாகூர், பஞ்சாப் – என்று ஒரு பறவையைப் போன்று பறந்து பரவியுள்ளதை நினைக்கும்போது வியக்காமல் இருக்க முடியவில்லை! ஸூஃபி சிந்தனைகளும் பக்தி இயக்கமும், ஒன்றை யொன்று அரவணைத்து வளர்ந்திருப்பது இன்னொரு ஆச்சர்யமான நிகழ்வு!
தமிழ்நாட்டில் ஆண்டாள், கர்நாடகாவில் பஸவண்ணா, கேரளாவில் துஞ்சன், ராஜஸ்தானில் மீரா, உத்திரப் பிரதேசத்தில் கபீர், பஞ்சாபில் நானக், அக்கா மகாதேவி – போன்றவர்கள், பக்தி இலக்கியத்திற்குப் புத்துயிர் தந்து, புத்துணர்வு சேர்த்தவர்கள். அதுகாறும் கடைப்பிடிக்கப்பட்டுவந்துள்ள சடங்குகள், சம்பிரதாயங்கள், இறை பயம், பிராமண ஆதிக்கம் – போன்ற பல நம்பிக்கைகள் குறித்து புதிய சிந்தனைகளைத் தந்தார்கள். ஒருவிதத்தில் பக்தி இயக்கமும், ஸூஃபி சிந்தனைகளும் ஒரு மெளனப் புரட்சியைச் செய்துள்ளன எனலாம். இஸ்லாம், இந்து மதங்களில் பின்பற்றப்பட்டுவந்துள்ள தீவிர அடிப்படை மதவாதங்கள்; மெளல்வி, பண்டிதர்களால் கையாளப்பட்டுவந்த அரபு, சம்ஸ்கிருத மொழிகள் – ஆகியவற்றின் தீவிர ஆதிக்கம் குறைய அவர்கள்தான் முக்கியக் காரணம். மதம் சார்ந்த சிந்தனைகள் எளிமையாக்கப்பட்டு, சாதாரண மக்களின் வீடுகளில் நுழைவதற்கும் ஸூஃபி, பக்தி இயக்கச் சிந்தனைகளே உதவின. இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே மூன்றாவது நபர், தரகர், இல்லாமல் செய்தது எத்தனை பெரிய புரட்சி!
பஞ்சாபைப் பொறுத்தவரை, இவ்விரண்டு சிந்தனைகளின் தாக்கமும் பூரணமாய் கிட்டியது, ஓர் அதிருஷ்டமில்லாமல் வேறென்ன? உஸ்பெகிஸ்தானிலிருந்து லாகூருக்கு வந்து, தனது தர்பாரை 10-ம் நூற்றாண்டு ஸ்தாபித்த தத்தா ஹஜ்வேரி ஸாகிப், அனைத்து மதங்களையும் சமமான மரியாதையுடன் நடத்தியவர். பாபா ஷேக் ஃபரீத் 12-ம் நூற்றாண்டில் படைத்த அற்புதமான ஸூஃபி கவிதைகளை, எங்களது ஐந்தாவது குருவான குரு அர்ஜன், எங்கள் புனித நூலான குரு கிரந்த் ஸாஹிப்பில் சேர்த்தார். அந்த வகையில் பாபா ஷேக் ஃபரீத்தைத்தான் பஞ்சாபி மொழியின் முதல் கவிஞராக ஏற்கிறோம்.
- கடவுளைக் காதலனாக, கணவனாக வரிக்கும் மனோபாவம் ஸூஃபியிஸத்திலிருந்து வந்தது என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. ஆயர்பாடியில் கோபிகைகளாக ஜனித்து கிருஷ்ணனை நேசித்த அனைவரும் ரிஷிக்களே என்று நமது ஆதிநூல்கள் தெரிவிக்கின்றனவே!
அப்படியா? கடவுளைக் காதலனாகப் பார்க்கும் மனோபாவத்தை யார் சொல்லி யிருந்தாலும் அது அழகான செய்திதான். இறைவனைக் கணவனாக எண்ண வேண்டும் என்று குரு நானக் கூறியது, கடவுளே நமக்கு எல்லாமாக ஆகிறார் என்பதையும், சரணாகதி தத்துவத்தை உணர்த்தவும்தானே? ஆனால், அந்த விளக்கத்தை விடுத்து, நமது ஆண்கள் தங்களுக்கேற்ப ‘ஆணுக்குப் பெண் அடிமை’ என்கிற நோக்கில் மொழிபெயர்த்து, செயல்படுத்திவிட்டார்களே! காலிஸ்தான் இயக்கம் தீவிரமடைந்தபோது, பெண்ணுக்குத் தந்தையின் சொத்தில் – குறிப்பாக விவசாய நிலங்களில் – உரிமை இல்லாதபடி செய்யும் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி நடந்தது. ஆனால், பலர் – நான் உள்பட – தீவிரமாய் எதிர்த்துப் போராடியதும், அது கைவிடப்பட்டது.
- ஆக, மற்ற மாநிலங்களில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் நிகழாவிட்டாலும், இதுவும் ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயம்தான் என்று சொல்கிறீர்களா?
உறுதியாய் ஆணாதிக்கச் சமுதாயம்தான்! எங்கள் குருமார், ‘பெண்கள் மரியாதைக்குரியவர்கள்’ என்று தொடர்ந்து போதித்து, வலியுறுத்திவந்தபோதும், குருத்வாராக்களில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களுக்கு இருக்கை அளித்த போதும், ‘பெண்ணிடம் பிறந்து, பெண்ணை மணந்து, அவள் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொள்கையில், அவளை ஏன் வெறுக்கிறாய்?’ என்று குருநானக் எழுதிய போதும், அத்தனையையும் மீறிக்கொண்டு ஆணாதிக்கம் தலையெடுத்துள்ளது. பெண்ணை ஒரு ‘பயன்படுத்தும் பொருளாக’ நடத்தும் மனப்பான்மை என்னை வெகுவாகக் காயப்படுத்துகிறது, சிவசங்கரி. தீண்டாமை, ஜாதிப்பிரிவினையை ஒழிக்க எங்கள் குருமார் தீவிரமாய் போராடியுள்ளனர். குருத்வாராக்களில் ‘லங்கார்’ என்ற இலவச உணவுக் கூடத்தை அமைத்து, சமபந்தி சாப்பாட்டுக்கு அவர்கள் வழிவகுத்தார்கள். தீண்டத்தகாதவனின் நிழல் உயர்ஜாதிக்காரனின் சாப்பாட்டின் மேல் விழுந்தால்கூட, உணவைக் குப்பையில் போட்டுவிடும் வழக்கத்தை மாற்றி, அனைத்து மக்களும் ஒரே இடத்தில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து, ஒரே வகையான உணவை உண்ணும்படி செய்த பெருமை எங்கள் குருமார்களுக்கு உண்டு. ஆனால், தீண்டாமை ஒழிப்புக்குக் கொடுத்த தீவிர கவனத்தை, பெண் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தரவில்லை.
- விதவைப் பெண்ணை கணவனின் சகோதரருக்கு மறுமணம் செய்து வைக்கும் வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது என்று கேள்விப்பட்டேன்… விதவைக் கொடுமைகளுக்கு இது நல்ல தீர்வுதானே? இன்றைக்கும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதா?
அதிகமாக கிராமப்புறங்களில் இப்பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கு விதவைப்பெண் தனிமையில் தவிக்கக்கூடாது என்பதைவிட, குடும்பச் சொத்தும் விவசாய நிலங்களும் வெளியே போய்விடுமே என்ற கவலைதான் முக்கியக் காரணம். ஏற்கனவே திருமணமானவனுக்கோ அல்லது வயதில் மிகவும் குறைந்தவனுக்கோ ஒரு விதவைப் பெண்ணை மறுமணம் செய்வதை, அவளுடைய பிரச்சினைக்குக் கிட்டிய முழுமையான தீர்வு என்று சொல்வது எப்படி நியாயமாகும்? உருது இலக்கியத்தின் சிறந்த நால்வரில் ஒருவரான ராஜேந்திர சிங் பேடி, ‘ஏக் சத்தர் மைலி ஸி’ – ஒரு கசங்கின படுக்கை விரிப்பு – என்று ஒரு பிரபலமான குறுநாவல் எழுதியுள்ளார். அதில், விதவைப் பெண்ணின் மடியில் ஒரு சிறுவனாக அவளை மறுமணம் செய்யவிருக்கும் கணவனின் சகோதரன் அமர்ந்திருப்பதாக எழுதியிருப்பார். இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கும்போது, அவற்றை நல்ல மாற்றம் என்று எப்படிக் கொண்டாடுவது?
- கடந்த நூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட பஞ்சாபி இலக்கிய வரலாற்றில், அம்ருதா ப்ரீதம், நீங்கள், ப்ரப்ஜோத் கெளர் ஆகிய ஒருசில பெண் எழுத்தாளர்களின் படைப்புக்களைத் தவிர வேறு பெண்கள் எழுதியதாகத் தெரியவில்லை… அதிகமான பெண்கள் எழுதவில்லையா, அல்லது நான் படிக்கத் தவறிவிட்டேனா?
தலிப் கெளர் திவானா என்ற எழுத்தாளரையும், பால் கெளர் என்ற இளைய தலைமுறைக் கவிஞரையும் உங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். மற்றபடி, உங்கள் கணிப்பு சரியானதுதான். பெண்களுக்குப் பல நிர்ப்பந்தங்கள் இருந்ததில், நிறைய பேர்களால் எழுத முடியவில்லை என்று நினைக்கிறேன். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்… திருமணமாகி கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் எழுதுவதற்கு நான் அனுமதிக்கப்படவில்லை. போராடி எழுத்தைத் தொடர வேண்டியிருந்தது.
- ஆச்சர்யமாக இருக்கிறது, அஜீத்! குருத்வாராவில் ஆண்களுக்குச் சமமாக இருக்கை தந்து, ‘லங்கார்’ நிர்வாகத்தை முழுமையாகத் தந்தவர்கள், ஏன் பெண்களை எழுத அனுமதிக்கவில்லை?
ஒவ்வொரு சமூகத்திலும் அதற்கென சில முரண்பாடுகள் உண்டு, சிவசங்கரி!
- பஞ்சாபிக்களையும் ஸிந்திக்களையும் பாதித்த அளவு தேசப்பிரிவினை மற்ற மொழிக்காரர்களை பாதிக்கவில்லை என்பதால், அந்தச் சம்பவம் உங்களை, பொதுவாகப் பெண்களை, எவ்வகையில் பாதித்தது?
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், ‘கொடூரமான அனுபவம்’! வேற்று மதத்தைச் சார்ந்த ஒரு குடும்பத்தின் மானத்தை அழிக்கவேண்டும் என்பதற்காக அக்குடும்பப் பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வது, எத்தனை கொடுமையான விஷயம்! பாலியல் பலாத்காரம் என்பது வெறும் பாலுணர்வு மட்டும் சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்ல… அப்பெண்ணையும், அவளது குடும்பம், கிராமம், மதம் – எல்லாவற்றையுமே ஆள நினைப்பதும்கூட. பலாத்காரம் செய்யும் நபர்கள் சார்ந்திருக்கும் அந்த மதம்தான், ஆண்மை உடையது, சமுதாயத்திற்கு ஏற்றது என்று உலகுக்கு அறிவிக்க நினைப்பதும் ஓர் காரணம். அம்ருதா ப்ரீதம் எழுதிய ‘பிஞ்ஜர்’ என்ற புதினத்தைப் படித்திருப்பீர்கள்… பிரிவினை ஒரு குடும்பப் பெண்ணை எவ்வகையில் புரட்டிப்போட்டது என்பதை, கன்னத்தில் அறைகிற மாதிரி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். பிரிவினைப் பாதிப்புக்களை மையமாக வைத்து பல புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், இரண்டு புத்தகங்களை முக்கியமாய் குறிப்பிட விரும்புகிறேன்… ரீது மேனன், ஊர்வசி புடாலியா எழுதிய நூல்கள் பெண்களுக்குண்டான பாதிப்பை நமக்கு நன்கு உணர்த்துவதாயுள்ளன. ராஜேந்திர சிங் பேடியின் ‘லாஜ்வந்தி’ என்ற கதையையும் இப்போது குறிப்பிடுவது அவசியமாகிறது. பிரிவினை சமயத்தில் காணாமல் போய்விட்ட மனைவி, அகதி முகாமிலிருந்து மீண்டும் கணவனிடம் அனுப்பப் படுகிறாள். கணவனுக்கு அவளை ஏற்க மனமில்லை, என்றாலும் கட்டாயப்படுத்தி உடன் அழைத்துச்செல்ல வைக்கிறார்கள். வீட்டுக்குத் திரும்பியதும் அவளைத் தீண்டத்தகாதவள் போன்று அவன் நடத்துகிறான். ‘லாஜ்வந்தி’ என்றால் தொட்டால் சுருங்கி என்று பொருள். அற்புதமான கதை!
- பஞ்சாபில் பெண்ணிய இயக்கத்தின் செயல்பாடுகள் எந்தளவில் இருந்தன? பெண்ணிய இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சியை அறிமுகப்படுத்த முடியுமா?
பெண் விடுதலைப் போராட்டம் என்று தனியாக ஓர் இயக்கம் பஞ்சாபில் நிகழவில்லை. சுதந்திரப் போராட்டத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்பு எல்லோரும் அறிந்ததே! இன்றைக்கும் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறைச்சாலைகளில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களைக் காணும்போது, அது புனிதத் தலயாத்திரையாகத்தான் தோன்றுகிறது. தற்சமயம் இந்தியாவில் குழந்தைகளாக இருக்கும் அனைவரையும் அங்கு கூட்டிச்சென்று காண்பித்து, எத்தகைய தியாகத்தில் கிட்டிய சுதந்திரம் இது என்பதை உணர்த்தவேண்டும். ஒரு இந்துவாக, சீக்கியராக, இஸ்லாமியராக, கிறிஸ்தவராக அன்றி, இந்தியராக ஒவ்வொருவரும் நம் வரலாற்றை அறிவது அவசியம். பிற்காலத்தில் பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததில் இடதுசாரி இயக்கங்களுக்கு முக்கியப் பங்குள்ளது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் மனைவிகளான விம்லா டாங், விம்லா ஃபரூக்கி போன்றவர்கள் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர்கள். அம்ருதா ப்ரீதம், நான் – எழுதிய பல கதைகள் ‘பெண்ணிய இலக்கியம்’ என்ற முத்திரை இல்லாமலேயே பெண் விடுதலைச் சிந்தனைகளை உள்ளடக்கியவைதாம்!
- மலையாள மொழியின் முன்னணி எழுத்தாளராகத் திகழ்ந்த தகழி சிவசங்கரன் பிள்ளைகூட, ‘தலித் இலக்கியம் என்ற அடைமொழியுடன் எழுதாவிட்டாலும், ‘தோட்டியின் மகன்’, ‘செம்மீன்’ போன்ற எனது கதைகள், தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றியதுதானே?’ என்று என்னிடம் கூறியுள்ளார். இனி, உங்கள் படைப்புக்களுக்கு வருவோம். உங்களுக்கு மத்திய சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத்தந்த சுயசரிதை ‘கானா பதோஷ்’ பற்றிப் பேசலாமா? உங்கள் இளைய மகள், பத்தொன்பது வயதில் ஃபிரான்ஸ் நாட்டில் தீவிபத்துக்குள்ளாகி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட ஒவ்வொரு நிமிடத்தையும், பின்னர் எதுவுமே உதவாமல் மரித்ததையும், ஒரு தாயின் அவஸ்தையோடு மிகமிக உணர்வுபூர்வமாக முதல் அத்தியா யத்தில் விவரித்திருக்கிறீர்கள்… அதைப் படித்தபோது, அந்த வலியின் தீவிரம் என்னையும் ஆட்கொண்டது. மிகக் கடினமான, துக்கமான நாட்கள் அவை, அல்லவா?
வேண்டாம், சிவசங்கரி… அந்த நிகழ்வின் வலி எனக்குள் இன்னும் அப்படியே இருக்கிறது… அந்த ரணம் ஆறவேயில்லை. தயவுசெய்து அதுபற்றிப் பேச வேண்டாமே…
- கண்டிப்பாகப் பேச வேண்டாம். ஆனால், இன்றைக்கும் அத்தனை வலியுடன் வாழ்பவருக்கு, அந்த அனுபவத்தை எப்படி எழுத்தில் கொண்டுவர முடிந்தது?
அருமை மகளின் இழப்பைத் தாளமுடியாமல் சதா அழுதுகொண்டே இருந்தவளிடம் அம்ருதா ப்ரீதம், ‘எழுதுவது உன் வேதனையைக் குறைக்கும்… அந்த நிகழ்வுபற்றி எழுது’ என்று வற்புறுத்தியதில், கொஞ்சம் எழுதினேன். ‘இன்னும் கொஞ்சம்’ என்று அவர் விடாமல் தூண்டியதில், மீண்டும் எழுதினேன். அச்சமயம், ‘நாக்மணி’ என்ற பத்திரிகையை அம்ருதா நடத்திக்கொண்டிருந்தார். அதில் என் அனுபவத்தைத் தொடராக வெளியிட்ட பிறகு, புத்தகமாக வந்தது. தொடர்ந்து, நுண்கலைக்கும் இலக்கியத்துக்குமான அகாடமி ஜனித்தது. ‘வாழ்க்கையில் நீ எதையும் சேமிக்கவில்லை… உன் பெண்களுக்காகவாவது ஏதேனும் செய்ய வேண்டும்’ என்று கூறிய என் தந்தை, பெண்கள் பேரில் இரண்டு ஃபிளாட்களைப் பதிவு செய்திருந்தார். அவை தயாரான பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஸ்காலர்ஷிப்புடன் இரண்டு மாதம் ஃபிரான்ஸ் சென்றிருந்த என் இளைய மகள் வந்த பிறகு வீட்டுச் சாவியை அவளிடமே தந்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், அவள் திரும்பவேயில்லை. அதன் பிறகு, அவள் நினைவாகவும், என் வேதனையை அடக்குவதற்காகவும், ஏதாவது நல்ல காரியம் செய்யவேண்டுமென்று தோன்ற, டி.டி.ஏ. அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அவள் வீட்டில் நுண்கலை, இலக்கிய அகாடமியைத் துவக்கி, என் மகளையொத்த வயதுடைய இளம் ஏழைப் பெண்களுக்குப் பல கலைகளிலும் கைத்தொழில் துறைகளிலும் பயிற்சிக் கொடுக்க ஆரம்பித்தேன்.
- ‘ஒரு கதவை மூடினாலும் இறைவன் இன்னொரு கதவைத் திறப்பார்’ என்ற நம்பிக்கைக்கு உங்கள் அனுபவம் சிறந்த உதாரணமாகிறது. சிறிய அளவில் ஏழை, ஆதரவற்ற பெண்களுக்கு வழிகாட்டுவதற்காகத் துவங்கிய அகாடமி, இன்று ‘சார்க்’ நாடுகளோடு இணைந்து கருத்தரங்கங்கள் நடத்துமளவுக்கு வளர்ச்சி பெற்ற கதையைத் தெரிந்துகொள்வதற்கு முன், உங்கள் இளமைக் காலம், நீங்கள் எழுத்தாளரானது எப்படி போன்ற விவரங்களை அறிய விரும்புகிறேன்…
என் சுயசரிதையை நீங்கள் படித்திருப்பதால், இளமைக்காலம்பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்கள். என் தந்தை ஒரு மருத்துவர், தாயும் நன்கு படித்தவரே. இருப்பினும், காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றிய குடும்பம் என்பதால், வாழ்க்கை எளிமையாக இருந்தது. கட்டுப்பாடுகள் அதிகம். சின்ன வயதில் நான், தலையில் முட்டாக்கும், நிலத்தின் மீது தாழ்ந்த பார்வையும் கொண்ட பரம சாது என்றால் நம்புவீர்களா? தனிமையில் மொட்டைமாடிக் கயிற்றுக்கட்டிலில் படுத்து ஆகாயத்தையும், நட்சத்திரங்களையும் பார்த்து மகிழ்ந்து வளர்ந்தேன். அம்ருதா ப்ரீதத்தின் தந்தை கர்தார் சிங் ஹிட்கரி, என் தாத்தாவின் நண்பர், ஒரே ஊர்க்காரர். ஒரே பெண் அம்ருதாவை லாகூரில் மணமுடித்துக் கொடுத்த பின், அவள் பிரிவைத் தாங்காமல் குஜ்ரன்வாலா ஊரிலிருந்து அவரும் லாகூருக்கு வந்தபோது, தாத்தாவின் அறிமுகத்தால் எங்கள் குடும்ப நண்பரானார். அவர் பஞ்சாபி மொழியில் பாண்டித்தியம் பெற்றவர். உயர்நிலை ‘க்யானி’ பட்டம் பெற்றவர். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த என்னை, ‘மிஷினரி தரும் ஆங்கிலப் படிப்பு வேண்டாம், நான் குர்முகியில் பஞ்சாபி கற்றுத்தருகிறேன்’ என்று என் தந்தையிடம் சொல்லி, ஒன்பதாவது வயதில் பள்ளியை விட்டு நிறுத்திவிட்டார். அவரிடம் படித்து ‘புத்திமானி’ என்ற பஞ்சாபிப் பட்டத்தை வாங்கினேன். எனது ஒன்பதாவது வயதில் நான் வாங்கிய கல்லூரிப் பட்டம் அது! அந்தச் செய்தி எல்லா இந்தி, உருது, பஞ்சாபி, ஆங்கில தினசரிகளிலும், என் புகைப்படத்துடன் பரபரப்பாய் வெளியானது. ஆனால், எத்தனை வருத்தத்துடன் பள்ளியை விட்டு நான் நிறுத்தப்பட்டேன், நண்பர்களை இழந்து எப்படித் தவித்தேன், ஆசிரியர் கியானி கர்தார் சிங் ஹிட்கரிஜி என்னைத் தூக்கிக்கொண்டு போய் பரிட்சை எழுத வைத்தபோது, புயலில் இலை அல்லாடியது போன்று என் மனம் எப்படி நடுங்கியது – என்பது பற்றியெல்லாம் யாருமே எதுவும் எழுதவில்லை!
- அப்படியென்றால், நீங்கள் பள்ளி, கல்லூரியில் முறையாகப் படித்துப் பட்டம் பெறவில்லையா?
முறையாகக் கல்வி கற்று முதுகலைப் பட்டம் பெற்றது, தில்லியில் பின்னர் நடந்த சம்பவம். எழுத்தாளரானது எப்படி என்று கேட்டீர்களே… நான் எழுத்தாள ரானதற்கு கர்தார் சிங் ஹிட்கரி அவர்களும் ஒருவகையில் காரணம். எனக்குப் பாடம் சொல்லித்தர வரும்போது அவர் அம்ருதாவின் முதல் கவிதைத் தொகுப்பான ‘அம்ரித் லெஹ்ரன்’ என்ற, தங்க எழுத்துக்கள் பொறித்த சிவப்புப் புத்தகத்தை, மார்போடு அணைத்து உடன் எடுத்துவருவார். அம்ருதா மீதும், அவர் கவிதைகளிலும் அவருக்கு அப்படியொரு பிரேமை. ஒரு தந்தை மகளின் கவிதைத் தொகுப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்தபோது, நாமும் அப்படியொரு புத்தகம் எழுதவேண்டும், கண்களில் பெருமிதம் மின்ன என் தந்தையும் அப்புத்தகத்தைத் தன் நெஞ்சோடு அணைத்து, என்னைக் கொண்டாட வேண்டும் என்கிற ஆசை, என் ஆழ்மனதில் விதைக்கப்பட்டது என்று நம்புகிறேன்.
- எந்த வயதில் எழுதத் துவங்கினீர்கள்?
என்னுடைய முதல் கதையை பதினாறு வயதில் எழுதினேன். அடுத்துவந்த பத்து வருடங்களில் சுமார் நூறு கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. புத்தகமாய் வெளியிட பதிப்பகத்தார் என்னை அணுகியபோது, நானே ஒரு விமர்சகராக, தரமானவை என்று கருதிய பன்னிரண்டு கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து, ‘குல்பானோ’ என்ற தலைப்பில் வெளியிடத் தந்துவிட்டு, மற்றவற்றைக் குப்பையில் போட்டுவிட்டேன்.
- உங்கள் முதல் கதையின் கரு என்ன? அதை எழுதத் தூண்டியது எது?
முதல் கதை மட்டுமல்ல, ஆரம்பகாலத்தில் எழுதிய பல கதைகளும், பெண்களைப் பற்றிய வெறும் உணர்ச்சிக் குவியல்கள்தாம். எனக்கு அவை நினைவிலும் இல்லை.
- சில கட்டுரைகளில் படித்த விமர்சனங்கள் குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்… ‘அஜீத் கெளர் அதிர்ச்சி தரும் விதத்தில் மிகத் துணிச்சலாக எழுதுபவர்; அம்ருதா ப்ரீதத்தைத் தன் வழிகாட்டி, முன்னோடியாகக் கொண்டவர்’ என்ற விமர்சனம் சரியானதுதானா?
பாலுணர்வை விவரிக்கும் கதைகளை நான் எழுதியுள்ளதால், ‘அதிர்ச்சி தரும் துணிச்சல் எழுத்து’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆண், பெண் சேர்க்கையைக்கூடக் கவித்துவமாக, பாடல் வடிவில், ஓரிரு கதைகளில் வர்ணித்திருக்கிறேன். என்னைத் தொடர்ந்துதான் அம்ருதா, துகல் ஆகியோர் பாலுணர்வு குறித்து எழுத முற்பட்டனர். அந்த வகையில், இலக்கியத்தில் மூடப்பட்டிருந்த கனமான இரும்புக் கதவுகளைத் திறக்க நான் காரணம் என்பதை ஏற்கிறேன். ஆனால், அம்ருதா என் வழிகாட்டி, முன்னோடி என்பது சரியான கணிப்பல்ல. சின்ன வயது முதலே அவரை எனக்குத் தெரியும் என்பதால், அவரை நான் வெகுவாக நேசித்தேன். அவருடைய கவிதைகள் அற்புதமானவை. உரைநடையில் ‘பிஞ்ஜர்’ புதினத்தைத் தவிர வேறு எதுவும் என் மனதைத் தொட்டதில்லை. அம்ருதாவின் தந்தையை என் வழிகாட்டியாக நிச்சயம் குறிப்பிடுவேன்.
- திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் எழுத அனுமதிக்கப்படவில்லை என்றீர்கள்… காரணத்தைத் தெரிந்துகொள்ளலாமா?
ஆரோக்கியமற்றிருந்த என் தாய், தான் இறந்துவிடுவோம் என்ற பயத்தில் சின்ன வயதிலேயே எனக்குத் திருமணம் செய்துவிட்டார். என் கணவர் வேறொரு பெண்ணை நேசித்தார். இரண்டு பெண்கள் விபத்தாகப் பிறந்தார்களே ஒழிய, மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையாக இருந்ததேயில்லை. அதைத் திருமண வாழ்க்கை என்றே கூற முடியாது! ஒன்பது வருடங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு அவர் கட்டளைக்கு அடிபணிந்தவள், பிறகு எழுதத் துவங்கினேன். பதிமூன்று வருட தாம்பத்திய வாழ்க்கையில், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சித்ரவதை செய்யப்பட்டு, எட்டு முறை பிறந்த வீட்டுக்கு என் கணவரால் அடித்துத் துரத்தப்பட்டேன். ஒவ்வொரு முறையும், ‘நீ கணவன் வீட்டுக்குப் போகாவிட்டால் நான் இறந்துவிடுவேன்’ என்று அம்மா மிரட்டியதில், திரும்பிச் சென்றேன். ஆனால், எட்டாவது தடவை அம்மா மரித்துவிட, கணவர் வீட்டுக்குப் போகக் கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்தேன். என் முடிவை அப்பா ஆமோதிக்காத தால், அவர் வீட்டை விட்டும் வெளியேறினேன். குழந்தைகளுடன் பெண்கள் விடுதியில் தங்கிக்கொண்டு கடினமாய் உழைத்தேன். அது 1965-ம் ஆண்டு என்று நினைக்கிறேன்… கணவரின் மிரட்டலுக்கு பயந்து பெண்களை ஷிம்லாவில் படிக்க வைத்தது பணத்தேவையை ஏற்படுத்தியது என்பதால், தினமும் பதினெட்டு பைசாவுக்குப் பால், பன்னிரண்டு பைசாவுக்கு பாதி ரொட்டி வாங்கித் தின்று நான்கு வருடங்கள் அல்லாடி உழைத்தேன். பஸ்ஸில் போனால் பணம் செலவாகுமென்று எங்கும் நடந்துதான் போவேன். என் மகள் அர்பணா இன்றும், ‘நீ இனிமேல் உழைக்கவோ நடக்கவோ வேண்டாம். ஆயுளுக்கும் தேவையானதை முன்பே செய்துவிட்டாய்’ என்பாள், கரிசனத்தோடு!
- இன்றைக்கு நான் அறிந்த அஜீத் கெளராக – துணிச்சல், தைரியம், வெளிப்படையான பேச்சு என்றிருக்கும் அஜீத் கெளராக – உங்களை மாற்றியது அந்த வருடங்கள்தானா?
அந்த சிரமமான காலகட்டம் மட்டுமல்ல… இளம் குருத்தான என் இளைய மகளை அநியாயமாய் அவளது பத்தொன்பதாவது வயதில் நினைத்த நினைப்பில் லாமல் இழந்தது என்னை உலுக்கிப்போட்டது. நீர்த்தேக்கம் உடைந்து, கட்டுக் கடங்காமல் வெள்ளம் பிரவாகமெடுத்தது… தயக்கங்கள், நெறிமுறை என்று கூறப் படுபவை, பாரம்பரிய குடும்ப மதிப்புகளின் மீதான மரியாதை – எல்லாவற்றையும் வெளியேற்றியது. பசித்த மிருகம் போல எதிர்ப்புணர்வில் முனகிக்கொண்டிருந்தது, வீடுகளையும், மக்களையும், அத்தனை குப்பைகளையும் தன் வயிற்றுக்குள் இழுத்துக்கொண்ட கடல் சுனாமி அது! அதற்குப் பிறகு, என் வாழ்வுடன் சம்பந்தமில்லாத யாரைப்பற்றியும் அக்கறை கொள்வதை விட்டுவிட்டேன். என் மகள் அர்ப்பணா மட்டுமே எனக்கு முக்கியம் என்று மாறிவிட்டேன்.
- இனி, உங்கள் அகாடமியின் செயல்பாடுகளைப்பற்றிப் பேசலாமா?
என் மகளுக்கு நான் செய்யமுடியாமல்போன அனைத்து விஷயங்களையும் ஏழைப் பெண்குழந்தைகளுக்குச் செய்ய விரும்பினேன். ஷிஃபான் புடவை, வைரநகைகளில் பளபளத்த ‘குண்டு’ அம்மாக்கள், தங்கள் ‘குண்டு’ குழந்தைகளைக் கவனிக்கவென வீடுதோறும் வேலைக்கு வைத்திருந்த ஏழைப் பெண்கள்; சின்ன வயதிலேயே பத்துத் தேய்த்து, வீடு பெருக்கி, மெழுகி, ஓடாய்த் தேய்ந்த பெண்கள் – போன்றவர்களின் வாழ்க்கைத் தரத்தை எப்படியாவது உயர்த்த ஆசைப்பட்டேன். அவர்கள் ஒவ்வொருவரிலும், மரித்துப்போன என் பெண்ணைத்தான் நான் பார்த்தேன்! அகாடமியின் முதல் குறிக்கோளே அப்பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதுதான்! அந்த வகையில், கடந்த 33, 34 வருடங்களாகப் பல நூறு பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க முடிந்திருப்பது நிறைவான விஷயம்! இதைத் தவிர மனிதர்களிடையே, முக்கியமாய் இந்தியா-பாகிஸ்தானிடையே நிலவிவரும் கசப்பு, காழ்ப்புணர்ச்சி குறித்து ஏதேனும் செய்ய ஆசைப்பட்டேன். இரண்டு நாட்டிலிருந்தும் எழுத்தாளர்களைச் சந்திக்கவைத்து நிலைமையை மாற்ற எண்ணினேன். 1987-ல் முதல் கருத்தரங்கை மிகுந்த போராட்டத்திற்குப் பின் நடத்தினேன். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இந்தியா-இலங்கை உறவை மேம்படுத்தும் ஆர்வம் எழுந்தது. அதன் விளைவுதான் ‘சார்க்’ நாடுகளைச் சார்ந்த எழுத்தாளர்கள் கூட்டம். அதன் ஆக்கபூர்வமான பாதிப்பைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது. நேபாள பிரதம மந்திரியாக இருந்த கிரிஜா பிரசாத் கொய்ராலா, ‘இது போன்ற இலக்கியச் சந்திப்புகள் தொடர்ந்து நடக்குமென்றால், புது தில்லியில் உள்ள எங்கள் தூதரகத்திற்கு வேலை இருக்காது; அதை மூடவும் நான் தயார்’ என்று எல்லோர் முன்னிலையிலும் கூறியதைவிடச் சிறந்த பாராட்டு, வேறென்ன இருக்க முடியும்? ‘சார்க்’ அமைப்பில் அங்கத்தினராக உள்ள, கலாச்சார ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடும் எட்டு நாடுகளில், எங்கள் அமைப்பைப் போன்று வேறெங்கும் இல்லை என்பதும், எங்கள் திறமை புரிந்து இப்போது ‘சார்க்’ உயர்மட்டக் குழுவாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம் என்பதும் பெருமைக்குரிய செய்தி. நானும் என் நண்பர் டாக்டர் கெளஹர் ரிஸ்வியும் ஓயாது கடந்த நான்கைந்து வருடங்களாக முயற்சியெடுத்ததன் விளைவாக, விரைவிலேயே ‘சார்க் பல்கலைக்கழகம்’ உருவாகத் தேவையான ஆரம்பகட்ட வேலைகள் துவங்கிவிட்டன என்பது இன்னொரு ஆக்கபூர்வமான செய்தி.
- இன்றைய சீக்கிய, பஞ்சாபி இளைய தலைமுறையின் சிந்தனைப்போக்கு எப்படியிருக்கிறது என்பீர்கள்?
இளைய சமுதாயத்திற்கு நமது கலாச்சாரம், பாரம்பரியம், இத்தியாதிகளின் மேல் ஈடுபாடு குறைந்துவருகிறதோ என்று உண்மையாகவே கவலையாய் இருக்கிறது. இளைய சமுதாயம் சீக்கிய அடையாளச் சின்னங்களைச் சுமக்க ஏன் தயங்குகிறது என்று எண்ணத் தோன்றுகிறது. மொழிகளின் அடிப்படைக் கலாச்சாரப் பிணைப்புகளைப் பொறுத்தவரை, ஒரு பஞ்சாபி தன் குழந்தைகளுடன் இந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசுவது எனக்கு விநோதமாய், பரிதாபமாய் படுகிறது. நாகரிகமாகவும், மொழிபேதங்களின்றி இருப்பதாகக் காட்டிக்கொள்வதற் காகவும், தாய்மொழியை மறப்பது, தவிர்ப்பது – விநோதமில்லாமல் வேறென்ன? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால், பஞ்சாபின் பாரம்பரியத்தை மீட்டுக்கொணர ஒருபக்கம் முயற்சிகள் நடப்பது ஆறுதலான விஷயம்.
- பஞ்சாபி இலக்கியத்தின் தற்சமயப் போக்கு ஆரோக்கியமாய் இருக்கிறதா?
ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் வகையில் அதிகமாய் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் எழுத முன்வரவேண்டும் என்று நான் ஆசைப் படுகிறேன். முதலில் இந்திய பஞ்சாப், பாகிஸ்தான் பஞ்சாப் என இரு துண்டு களாக இந்த மாநிலம் வெட்டப்பட்டது. பிறகு, இன்ன காரணம் என்றில்லாமலேயே இந்திய பஞ்சாப் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒன்று பஞ்சாப் என்றும், மற்றவை ஹரியானா, ஹிமாச்சல் மாநிலங்கள் என்றும் அறிவிக்கப்பட்டன. பிரிவினையைத் தொடர்ந்து பஞ்சாபிகள் சோர்ந்துபோய், எதிர்க்கும் சக்தியை இழந்துவிட்டார்கள் என்ற அலட்சியத்துடன் மத்திய அரசு பஞ்சாபைத் துண்டாடி யது, இந்திய அரசின் நிர்வாகத்தில் ஒரு கறுப்புப்புள்ளியை வைத்தது என்று நான் உறுதியாய் நம்புகிறேன். முன்பு, பஞ்சாப் முழுமையாக இருந்த காலத்தில் எனது புத்தகங்கள் அச்சிட்ட உடனேயே ஐயாயிரம் பிரதிகள் விற்றுவிடும்… இப்போது இரண்டு வருடங்களில் ஆயிரம் பிரதிகள்கூட விற்பதில்லை! இந்தப் போக்கு, பஞ்சாபி மட்டுமல்ல, எந்த இலக்கியமும் ஆரோக்கியமாக வளர உதவாது!
- இயல்பிலேயே பஞ்சாபிக்கள் தைரியம் மிக்கவர்கள் என்று சொல்லப் படுகின்றனர்… பஞ்சாபிக்களுக்கென சில குணங்கள் இருப்பதாய் நம்புகிறீர்களா?
கண்டிப்பாய்! உறுதியாய்! பிரிவினை சமயத்தில் எங்களில் பலர் நிலம், வீடு, பணம், சொத்து என்று அத்தனையையும் இழந்து அகதிகளாக இங்கு வந்தோம். இருப்பினும், பஞ்சாபி அகதிகள், அதிலும் முக்கியமாய் சீக்கிய அகதிகள், எந்த சந்தர்ப்பத்திலும், யாரிடமும், யாசகம் கேட்டதேயில்லை. அகதிகள் முகாமில், எந்த வசதியும் இன்றி வாழ்ந்த சந்தர்ப்பத்தில்கூட, தன்மானம் நிறைந்த பஞ்சாபிக்கள், ‘உழைக்காமல் வரும் சோற்றுக்கு’ ஆசைப்பட்டதேயில்லை. அத்தனை கஷ்டத்திலும் முதுகெலும்பை அவர்கள் உறுதியாக வைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் குருமார், ‘பத்து விரல்களால் உழைக்காமல் வரும் உணவை ஏற்கக்கூடாது’ என்பதை ஒரு விதியாகவே வைத்துள்ளனர். நாங்கள் மிகக் கடுமையாக உழைப்பவர்கள், கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் என்பதாலேயே, புது மண்ணில் எங்களால் ஆழமாக வேர்விட முடிந்தது. மேற்சொன்ன காரணங் களுக்காகவே, ஐந்து நதிகள் ஓடும் பஞ்சாப் மண்ணில் பிறந்தவள் என்ற பெருமை எனக்குண்டு. பஞ்சாபிகள் தைரியசாலிகள் மட்டுமல்ல, சுயபச்சாதாபத்தில் அமிழ்ந்துபோகாதவர்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.
- ஒரு படைப்பாளியாக, வரும் நாட்களில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?
ஒவ்வொரு நாளின் முடிவிலும், அறியாமையால் அன்றைய தினத்தை வீணாக்கிவிட்டேனே என்று என்னை நானே சபித்துக்கொள்வேன். மூடிய லெவல் கிராஸிங் கதவுகளுக்கு முன் நிற்கிற மாதிரியும், முடிவேயில்லாத புகைவண்டி ஒன்று மிக மெதுவாகத் தாண்டிக்கொண்டிருக்கிற மாதிரியும், திரும்பிப்போக வழியில்லாமல் பின்னால் ஏராளமான வண்டிகள் நிற்கிற மாதிரியும் ஓர் உணர்வு! செய்யவேண்டிய காரியங்கள், போராடவேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்கின்றன! தில்லி மாநகரில் எத்தனை புராதனச் சின்னங்கள் கேட்பாறின்றி, கவனிப்பாரின்றி சிதிலமடைந்துவருகின்றன! அவற்றைப் பாதுகாக்கப் போராட வேண்டும்.
எத்தனை மரங்கள் காரணமேயில்லாமல் வெட்டப்படுகின்றன! சுற்றுப்புறச் சூழலின் சீரழிவு குறித்து நாம் எப்போது கவலை கொள்ளப்போகிறோம்? ஒவ்வொரு மரம் வெட்டப்படுவதை எதிர்த்தும் நான் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். வரப்போகும் ‘காமன்வெல்த்’ விளையாட்டுப் போட்டிகளுக்காக யமுனை நதியை அழிக்கும் திட்டம் ஒன்று இருக்கிறது. காடுகளையும் நதிகளையும் கொன்றுவிட்டு மனித சமுதாயம் வாழ்வது சாத்தியமா? இப்படி என்னைச் சுற்றி சமுதாயத்தில் நடக்கும் ஒவ்வொரு சீர்கேடும் என்னை ஆழமாய் பாதிக்கிறது. ஆஃப்கானிஸ்தான், ஈராக் நாடுகளின் மேல் போடப்படும் குண்டுகள் என்னைக் காயப்படுத்துகின்றன. என்னைச் சுற்றி எழும் அழுகுரலையும், ஊளைகளையும் எதிர்கொள்வதில் என் நேரம் கழிகிறது. இருப்பினும், அவ்வப்போது சில கதைகளுக்குக் குறிப்புகளை எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். என்னை நானே கடுமையாக விமர்சிப்பேன் என்பதால், எனக்கு வேறு விமர்சகர் தனியாகத் தேவையேயில்லை. 19 புத்தகங்களை வெளியிட்ட போதும் இன்னமும் என் உள்மனக் குரல் என்னை எச்சரிக்கவும், நெறிப்படுத்தவும் தவறுவதேயில்லை!
– ஆகஸ்ட், 2003.


