நான் நானாக

/நான் நானாக

(1)

வேடிக்கையாய் இருந்தது.

நம்பமுடியாமலும் இருந்தது.

பால்கனி குட்டைக் கைப்பிடிச் சுவரின்மேல் முழங்கைகளை ஊன்றி, நான்கு மணிகூட ஆகாததால் வெறிச்சிட்டுக்கிடந்த மணல்பரப்பு, தூரத்தில் அகண்டு விரிந்து நீலமாய் ஜொலித்த கடல், அதில் கரும்புள்ளிகளாய் இங்குமங்கும் தெரிந்த கப்பல்கள், உயரத்தில் தன்னந்தனியாய் வட்டமடித்த கழுகு என்று எந்தக் குறிக்கோளுமின்றி பார்வையை அலையவிட்ட நிமிஷத்தில்தான், அந்தப் பசுமாட்டையும் அவள் பார்த்தாள்.

பழுப்புநிறப் பசு… தாழ்ந்திருந்த நிறைமடியும், கூட்டிக் குவிந்திருந்த வயிறும், அது சினையாக இருப்பதை உடனே உணர்த்தின.

தெருவுக்கு அந்தப் பக்கம், மணல் துவங்கும் இடத்தில் நின்றுகொண்டு, முழுசாய் ஒரு நிமிஷத்துக்கு தொலைவில் தெரிந்த நீர்ப்பரப்பை வெறித்த பிறகு, நேர்க்கோட்டில் நிதானமாய்த் தண்ணீரை நோக்கி பசு நடக்க ஆரம்பிக்க, அந்த நேர்ப்பார்வையும், யோசிக்கிற மாதிரி நின்ற பாவனையும், பின்னர் ஏதோ முடிவுக்கு வந்துவிட்ட தினுசில் இப்படியப்படி கவனத்தைத் திருப்பாமல் நடந்த தோரணையும், மாட்டின் செயல்களாக அல்லாமல், மனுஷத்தனம் கலந்திருப்பதாகத் தோன்ற, சுவாரஸ்யம் தட்டியது.

இப்படி நாலுமணி வெயிலைப் பொருட்படுத்தாமல் நீளக்க கடலைப் பார்க்க நடக்கும் பசுவின் நடத்தை, அவளுக்குப் புதுசாகப் பட்டது.

இந்தப் பசு எங்கே செல்கிறது? கடலுக்கா? ஏன்? மணலின் அந்தப்பக்கம் இருப்பது சமுத்திரம் என்பது அதற்குத் தெரியுமோ? ஒருசிலர் தங்கள் வளர்ப்பு நாய்களைக் கூட்டி வருவதும், கடலுக்குள் கட்டையை எறிவதும், அந்த நாய்களும் நீரில் பாய்ந்து கட்டையைக் கவ்வி எடுத்துவந்து விளையாடுவதும் உண்டே தவிரவும், பெசன்ட் நகர் வீட்டுக்குக் குடிவந்து இத்தனை வருஷங்களில் இப்படிக் கடலை நோக்கி ஆடோ மாடோ சென்று கண்டதே இல்லையே! அப்புறம், இது மட்டும் ஏன் போகிறது?

இதுநாழிகை வேடிக்கையாய் தோன்றியது, நமநமவென்று தவிப்பாய் மாற, சற்றே முன்னால் சாய்ந்தவள் தெருவில் மாட்டுக்குச் சொந்தக்காரர் மாதிரி யாராவது வருகிறாரா என்று பார்த்தாள்.

கூடை நிறைய அலுமினியப் பாத்திரங்களை சைக்கிள் காரியரில் கட்டிக்கொண்டு போன வியாபாரி, வேகமாய் வந்து நின்று மறுபடி கிளம்பிப்போன பல்லவனிலிருந்து இறங்கிய வயசான பெண்மணி, கல்லை உதைத்தபடி சென்ற சிறுவன், எருக்கம் புதரைப் பார்க்கத் திரும்பி நின்று சிறுநீர் கழித்துக்கொண்டிருந்த பேண்ட் போட்ட இளைஞன்… இன்னும்…

அவள் மறுபடியும் பார்வையைப் பசுவிடம் வீசியபோது, அது அலைகள் அடித்து ஓயும் மேட்டை அடைந்துவிட்டிருந்தது.

அங்கேயே சில நொடிகள் நின்று மாடு தண்ணீரை வெறித்துப் பார்ப்பதை, துல்லியமாக முதல்மாடியில் நின்றிருந்த காரணத்தால் காணமுடிய, அவளுடைய தவிப்பு அதிகமாயிற்று.

கடல் என்று புரியாமல் நீரில் இறங்கி, அலைகள் இழுத்துக்கொண்டு போய் விட்டால் என்ன செய்வது? கர்ப்பமாய் இருப்பதுபோல வேறு தோன்றுகிறதே!

அவள் அனாவசியமாய் பதைத்த சமயத்தில், பசு நாலடி நடந்து, சரிவான மேட்டிலிருந்து இறங்கி, அலைகளின் நுனிநாக்கு கால்களில் படும்படி நின்றது. காலடியில் ஆர்ப்பரித்த தண்ணீரை லட்சியம் பண்ணாமல், அலை வீசிக்கொண்டு வந்தபோது முகத்தைத் தாழ்த்தி, மேலாக மிதந்த தண்ணீரை ஒருவாய் குடித்து, மணல் வாய்க்குள் புகாமலிருக்க வேண்டி அவசரமாய் முகத்தை நிமிர்த்திக் கொள்ள…

பாரதி, ”அட, எமனே!” என்றாள் உரக்க.

தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கவேண்டி கடலை நெருங்கி, சற்று தூரம் போனால் ஆழம் என்பதை உணர்ந்து துவக்கத்திலேயே நின்று, திரும்பிச் செல்லும் அலைகள் மணல் துகள்களையும் தன்னோடு இழுத்துச்செல்லும் என்பது புரிந்து, வரும் அலையில் மேலாக உள்ள நீரைக் குடித்து…

ஓ… இந்தப் பசு வாஸ்தவத்திலேயே புத்தியுள்ளதுதான்!

தவிப்பாகச் சற்றுமுன் தோன்றிய உணர்வு பாராட்டாக மாற, மாட்டின் செய்கையை ஆமோதிக்கும் விதமாய் இருந்த இடத்திலிருந்தே பாரதி உதட்டைப் பிதுக்கி பெருமையுடன் புன்னகைத்தாள்.

நாலு தரம் குனிந்து தண்ணீரைக் குடித்த பிறகு, பசு மீண்டும் மேட்டில் ஏறி மணலில் நடக்க ஆரம்பிக்க, எவ்வளவு தாகமாக இருந்தால் உப்புத் தண்ணீரைக் குடிக்கச் சென்றிருக்கும், பாவம் என்கிற நினைப்பு புதுசாக அவளுக்கு எழுந்தது.

கூடவே, இந்த உப்புநீர்கூடக் கிட்டாமல் இன்னும் எத்தனை வாயில்லா ஜீவன்கள் எப்படியெப்படி தவிக்கின்றனவோ என்கிற ஆதங்கமும் எழ, ‘என்ன அரசாங்கம், என்ன கார்ப்பரேஷன் வேண்டிக்கிறது! வெயில் தாளாமல் தாகத்தில் தவிக்கும் வாயில்லா ஜீவன்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கக்கூட வழி செய்ய இயலாமல்!’ என்கிற எரிச்சலும் தலை தூக்கியது.

என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால், தெருவுக்கு ஒரு தொட்டி கட்டி வைத்து, அதில் ஆடுமாடுகள் மட்டுமல்லாது பறவைகளும் நினைத்தபோது நீர் அருந்தி இன்புறும் வகையில் தண்ணீரை நிறைத்து…

 

மேற்கொண்டு இதே ரீதியில் சிந்தனை தொடரும் முன், பாரதி சட்டென்று தன்னைத்தானே உலுக்கிக்கொண்டாள்.

சின்ன வயசில் அடிக்கடி ‘என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்’ கற்பனை அவளுக்குள் தோன்றி, ஒருவிதக் கிளர்ச்சி கலந்த நிறைவைத் தரும்தான். அதுவும், பிடிக்காத காரியங்களைச் செய்யும் நிர்ப்பந்தம் எழுந்தபோதெல்லாம் கட்டாயம் மனசுக்குள், ‘என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்’ என்று மெளனமாக முனகி, தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டது தப்பாமல் நடந்திருக்கிறது.

ஆனால், திருமணமான பிறகு முதல் சிலமுறைகள் புதுப்பெண்டாட்டி மனசு நோகவேண்டாமென்று புன்னகையோடு பேசாமலிருந்த ரமணி, அப்புறம் பொறுமை இழந்தவனாய், ”என்ன பைத்தியக்காரத்தனம் இது, பாரதி! இந்த மாதிரி கற்பனை உத்தரவு போடறதால பிரச்சினைக்குத் தீர்வு வந்துடுமா?” என்று கேட்ட பிறகு, அவமானத்தில் கொஞ்சம்கொஞ்சமாய் குறைய ஆரம்பித்த சின்னவயசுப் பழக்கம், நாளடைவில் மறந்தேபோனது.

இத்தனை வருஷங்களாய் காணாமல்போன ‘என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்’ ஆசை, திடுமென எங்கிருந்து இன்று மறுபடி முளைத்தது?

என்னாயிற்று இன்று?

பாரதி அடிஉதட்டைக் கடித்து, நீளமாய் மூச்சை உள்ளுக்குள் இழுத்து பெருமூச்சாய் வெளியிட்டாள்.

இன்று மட்டுமல்ல… கொஞ்ச நாள்களாகவே, கிட்டத்தட்ட ஒரு மாசமாய் இருக்குமா? இருக்கும், இருக்கும்… சின்னச்சின்னதாய், விவரிக்கத்தெரியாத விதமாய், என்னென்னவோ மனசுக்குள் நடக்கிற மாதிரியான உணர்வு…

என்ன விஷயம்?

ம்ஹூம், விளக்கத் தெரியவில்லை. பராக்குப் பார்ப்பதும், வெட்டியாய் பொழுதைக் கழிப்பதும்கூட அதிகமாகியிருப்பது இந்தச் சில நாள்களில்தான்… முன்பெல்லாம் அவள் இப்படியில்லை.

சோம்பேறித்தனமா? அப்படியும் தோன்றவில்லையே!

இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கலாம், வாய்க்குப் பிடித்த தின்பண்டங்களைத் தட்டில் நிரப்பிக்கொண்டு, சமீபகால வம்பைக் கூறும் அந்த வாரப் பத்திரிகை எதாவதுடனோ, விறுவிறுப்பான நாவல் ஒன்றுடனோ உட்காரலாமென்றால்… அதுவும் ரசிக்கவில்லையே! அப்புறம்?

பொருந்தி உட்கார்ந்து வி.சி.ஆரில் முழுப் படத்தையும் பார்க்கமுடியாமல், அம்மா வீட்டுக்குப் போய் விஸ்ராந்தியாய் அரட்டையடிக்கக்கூடப் பிடிக்காமல் ஒரு… என்ன உணர்வு அது?

இருப்புக்கொள்ளாமை? உறுத்தல்? வேதனை? அலுப்பு? சலிப்பு?

தெரியவில்லை… சரியாகப் புள்ளிகுத்தத் தெரியவில்லை.

ஏதோவொரு நெருடல் என்று மட்டும் புரிகிறது… ஆனால், அது என்ன, எதனால் என்றெல்லாம் தெளிவாகவில்லை என்பது நிஜம்.

பத்துப்பதினைந்து நாள்களுக்கு முன், முதல்முறையாகத் தனக்குள் ஏதோ அவஸ்தை நெருடுகிறது என்பது புரிய ஆரம்பித்த பிறகு, யாருடனாவது இது குறித்துப் பேசலாமா என்று பாரதி யோசிக்கவே செய்தாள்.

சரி… யாருடன்?

கணவர் ரமணியிடமா? இரண்டு நிமிஷம் காதுகொடுத்துக் கேட்பவர், பிறகு, ”ஒண்ணுமே இல்லாதத வீணா நீயா கற்பனை பண்ணிக்கறே… யூ ஆர் பர்ஃபெக்ட்லி ஓகே! சாயங்காலம் காலை வீசிப்போட்டு நாலு கிலோமீட்டர் நடந்துட்டு வா… எல்லாம் சரியாயிடும்… முன்னையவிட வெயிட் போட்டுட்டதால சுறுசுறுப்பு கொறைஞ்சுடுத்து, அதான்!” என்பார். அத்துடன் முடிந்தது கடமை என்கிற சந்தோஷத்துடன், ஆபீஸ் வேலையில் மூழ்கிவிடுவார்.

இரண்டு பிள்ளைகளில், பெரியவன் கெளதம் கொஞ்சம் அனுசரணை யுள்ளவன். எதையுமே நிதானமாய் கேட்டு, அடுத்தவர் கண்ணோட்டத்தையும் புரிந்துகொள்ள முயற்சிப்பான். ஆனால், அவன்தான் இங்கே இல்லையே! திருச்சி ரீஜனல் என்ஜினியரிங் காலேஜில் படிக்க அவன் போன புதுசில், அவ்வப்போது மனசுவிட்டுப் பேசக்கூட ஆள் கிடைக்காமல் பாரதி சிரமப்பட்டிருக்கிறாள். இந்த மூணு வருஷத்தில் அதுவும் பழகிவிட்டது. முதல் வருஷம் மூன்று பெரிய விடுமுறைகளுக்கு மட்டுமல்லாது, நடுவில் இரண்டு நாள் ஸ்ட்ரைக் அது இது என்றாலும் சென்னைக்கு ஓடிவந்துவிடும் பிள்ளை, அடுத்த வருஷத்துக்குள் மாறித்தான்போனது. பெற்றவளையும் வீட்டுச் சாப்பாட்டையும் நினைத்து ஏங்கிக் கொண்டு வருவது நின்றுபோனதோடு, சுதந்திரமாய் முடிவெடுத்து விடுமுறைகளில் நண்பர்களோடு வடநாட்டுக்குக் போவதும், வெவ்வேறு தொழிற்சாலைகளில் ‘சம்மர் டிரையினிங்’ எடுக்கச் செல்வதும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

சின்னவன் விக்ரம், குணத்தில் அண்ணனுக்கு நேர்மார். சரியான ஜாலிப் பேர்வழி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பரபரக்கும் சுபாவம். ஒரு நிமிஷம் ஓரிடத்தில் அவனால் சும்மா இருக்க முடியாது. ஸ்டீரியோவில் ‘பிங்க் ஃப்ளாய்ட்’ பாட்டை அலறவிட்டுக்கொண்டே, டிவியில் கிரிக்கெட் மாட்ச் பார்க்கும் ரகம். வாயைத் திறந்தால் ‘விஷயஞான’ பேச்சோடு, ‘ஏ’ ஜோக்குகளும் தாராளமாகவே கொட்டும். நெருங்கின உறவுக்காரப் பெண்மணி ஒருவரின் புது வீட்டுக்குப் போயிருந்த சந்தர்ப்பத்தில், தோட்டமும் புல்வெளியும் கொண்ட அத்தனை பெரிய பங்களா இல்லை என்கிற குறையோடு ”இது சின்ன வீடு…” என்று அந்தப் பெண்மணி ஆரம்பிக்க, சடக்கென்று குறுக்கே புகுந்து, ”யாருக்கு?” என்று கேட்கும் அளவுக்கு அரட்டை. அங்கேயே முறைத்து, வீட்டுக்கு வரும் வழியில், ”என்ன விக்ரம், இது? அசிங்கமா கேலிபண்றே?” என்றதும், தலையைப் பின்னுக்குத் தள்ளி உரக்க சிரிப்பு. பிறகு, ”ரிலாக்ஸ்ம்மா… எதையும் சீரியஸா எடுத்துக்கக் கூடாது… சிரிக்கக் கத்துக்கணும்! அப்பத்தான் வியாதி எதுவுமில்லாம ஹெல்தியா இருக்கலாம்! நார்மன் கசின்ஸ் தெரியுமா? ‘சாடர்டே ரெவ்யூ’ பத்திரிகையோட எடிட்டர்… அவர் என்ன சொன்னார்னா…” என்று தர்க்கரீதியாக வாதம்! வயசு பதினேழு… கற்பூர புத்தி… டிஸ்டிங்ஷனில் பிளஸ் டூ தேறி, ராஜபாட்டையில் ஐ.ஐ.டி.க்குள் நுழைந்து, எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பி.டெக் படிக்கவென ஹாஸ்டல்வாசியாக மாறி ஒரு மாசமே ஆகிறது. சனி ஞாயிறுகளில் ”ஹாய்!” என்று கத்தியபடி வந்து, இரண்டு பை நிறைய அழுக்குத் துணிகளைக் கொண்டு தள்ளி, பாரதி வறுத்துவைத்திருக்கும் உருளைக்கிழங்கு வறுவலை டப்பாவோடு எடுத்துவந்து, சோபாவில் காலை நீட்டிப் படுத்து கொறித்தவாறு, குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மூன்று படங்களை வி.சி.ஆரில் பார்ப்பது தற்சமயம் வாராவார நடப்பு.

தாளமுடியாமல், ”விக்கி… ஏண்டா இப்படிப் பொறுப்பில்லாம இருக்கே?” என்று வினவினால், ”காலேஜ்ல பொறுப்போட இருக்கேனே, போறாதா? ரிலாக்ஸ்ம்மா!” என்பது தயார் பதில்!

பாரதிக்கும் மனசாவதில்லைதான்… போகட்டும், குழந்தைதானே… வீட்டுக்கு வரும் ஓரிரு நாள்களில்கூட இப்படி இல்லாவிட்டால் எப்படி!

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்தப் பிள்ளை வீட்டை விட்டுப் போனதிலிருந்து, செய்வதற்கு ஒரு காரியமும் இல்லாத தினுசில் ஒரு வெறுமை உண்டாகியிருப்பது மாதிரியே தோன்றுகிறது.

மூத்தவன் வீட்டை விட்டு மூன்று வருஷங்களுக்கு முன் கிளம்பியபோது, இதயத்துக்குள் முதல்முறையாய் ஒரு சூன்யத்தை உணரமுடிந்தது. இப்போது இரண்டாமவனும் ஐ.ஐ.டியில் சேர்ந்த பிறகு, அதுவே நிரந்தரமாகி…

சிறகுகள் முளைத்துவிட்ட பறவைக் குஞ்சுகள் பறக்க ஆர்வம் காட்டுவது போல, வளர்ந்துவிட்ட குழந்தைகள், அவரவர் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள பாதைகளைத் தேர்ந்தெடுப்பது இயற்கைதானே!

அப்புறம், எதற்காக இதுகுறித்து வேத…

 

”நேரமாகலியாம்மா? சின்னத்தம்பி வர்றதுக்கு முன்னால டிபனை ரெடி பண்ணணும்னு சொன்னீங்களே?”

திரும்பினாள்.

புஷ்பா…

சமையல், இதர வேலைகளில் உதவுவதற்காக வீட்டோடு இருப்பவள். கல்யாணமான நாலாம் மாசம், உறங்கிக்கொண்டிருந்தவளின் ஆறு பவுன் நகைகளை, தாலி உட்பட, கழட்டிக்கொண்டு ராவோடு ராவாகக் கணவன் ஓடி விட்டதில், நிர்க்கதியாய் நடுத்தெருவில் நின்று, தெரிந்தவர்களின் சிபாரிசில், இவர்கள் மந்தைவெளி வீட்டில் இருக்கும்போது வந்து ஒண்டிக்கொண்டவள். புஷ்பாவின் கதை தனியாகச் சொல்லவேண்டியது… இங்கே வேண்டாம்.

”மணி என்ன?” கழுத்தை ஒடித்து, டைனிங் ஹால் கடிகாரத்தை ஏறிட்டபோது, அது நாலரை என்றது.

”நாழியாச்சுதான்… நீ போய், நேத்து வாங்கிட்டுவந்த பொரி பொட்டலத்தப் பிரிச்சு சுத்தம் பண்ணு… நா வந்துண்டேயிருக்கேன்…”

அவள் சென்றதும், பாரதி நிமிர்ந்தாள்.

ரொம்ப நேரமாக ஊன்றியிருந்ததால் வலி கண்டுவிட்ட முழங்கைகளைத் தடவிக்கொடுத்தாள். சொரசொரவென்றிருந்த கைப்பிடிச்சுவரால், ஊன்றிய இடத்தில் தோல் சிவந்து, சிறுசிறு மேடுபள்ளங்களாக மாறியிருந்தது.

உள்ளே செல்லத் திரும்பும் முன், பசுமாடு எங்கேயென்று பாரதி தேடினாள்… காணோம். எங்கே போனதோ!

சமையலறையில் புஷ்பா, இவள் காலையிலேயே சொல்லியிருந்த விதத்தில் சாமான்களை எடுத்துவைத்திருந்தாள்.

விக்ரமுக்கு ‘பேல்’ என்றால் உயிர். மூன்று நான்கு கிண்ணங்கள்கூட சாப்பிட்டுவிடுவான்.

புஷ்பா அரிசிப்பொரியை முறத்தில் கொட்டி சுத்தம் செய்த நாழிகையில், பாரதி இரண்டு பெரிய உருளைக் கிழங்குகளை அலம்பி பிரஷர் பேனில் வேகப் போட்டாள்.

ஒரு பெரிய வெங்காயம், இரண்டு தக்காளி, கொத்துமல்லியைப் பொடியாக நறுக்கவென, தனித்து வைத்தாள்.

ஒரு கை மைதா மாவு, அரைக்கை கோதுமை மாவை தாம்பாளத்தில் கொட்டி, திட்டமாய் உப்பு, ஒரு ஸ்பூன் விழுது நெய் சேர்த்து ஜலம் தெளித்துக் கெட்டியாய்ப் பிசைந்தாள். கடப்பாக் கல் மேடையைத் துடைத்து, கோதுமை மாவை ஒத்தாற்போலத் தூவி, பிசைந்த மாவை அதில் வைத்து குழவியின் உதவியால் மெல்லிசு அப்பளமாக இட்டாள். ஒரு இஞ்சு அளவில் துண்டங்கள் வரும் விதத்தில், கத்தியால் குறுக்கும் நெடுக்கும் கோடு கிழித்தாள். வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும், கவனமாய் துண்டங்களை கை கையாய் போட்டு, பொன்னிறத்தில் முறுகல் பூரிகளாகப் பொரித்துவைத்தாள்.

ஒரு கிண்ணத்தில் தித்திப்புச் சட்னிக்காக பத்துப் பேரீச்சம்பழங்கள், ஒரு சின்ன உருண்டை வெல்லம், சிட்டிகை உப்பையும், இன்னொன்றில் காரச் சட்னிக்காக ஒரு கட்டு ஆய்ந்து அலம்பிய புதினா இலைகள், ஆறு பச்சைமிளகாய், ஒரு ஸ்பூன் சீரகம், கொட்டைப் பாக்கு அளவு புளி, உப்பையும் போட்டு, இரண்டு கிண்ணங்களையும் புஷ்பாவிடம் தந்து, ”தனித்தனியா நைஸா அரைச்சு, திட்டமா தண்ணி கலந்து, கெட்டிச்சட்னியா வெச்சுடு…” என்றாள்.

வெந்துவிட்ட உருளைக்கிழங்குகளின் தோலை நீக்கி, உதிர்த்தாள். முதல் நாளே செய்துவைத்திருந்த ஓமப்பொடி நமுத்துப்போகாமல் இருக்கிறதா என்று வாயில் போட்டுப் பார்த்தாள். இருந்தது.

இரண்டு கை அரிசிப்பொரி, ஒரு கை ஓமப்பொடி, உதிர்த்த உருளை ஒரு கரண்டி, ஒன்றிரண்டாய் நொறுக்கப்பட்ட ஏழெட்டுப் பூரிகள், நறுக்கிய வெங்காய, தக்காளி, கொத்துமல்லிக் கலவையில் தாராளமாய் ஒரு கை, இத்தனைக்கும் சிகரம் வைத்த மாதிரி தேவையான அளவு ஸ்வீட், காரச் சட்னி… அவ்வளவுதான். ஸ்பூனைச் செருகிவிட்டால், கண்ணைக் கவரும் விதத்தில் ருசியான ‘வடநாட்டு பேல்’ ரெடி!

அத்தனையும் சாப்பாட்டு மேஜைமேல் தனித்தனியாய் கொண்டுவைத்து, விக்ரமுக்குப் பிடிக்குமே என்கிற நினைப்பில் காலை வெயிலைப் பொருட்படுத்தாமல் சென்று, கிராண்ட் ஸ்வீட்ஸ் ஸ்டாலிலிருந்து வாங்கிவந்து, சில்லென்று இருக்கவேண்டி ஃப்ரிஜ்ஜில் வைத்திருந்த ரசமலாய் சட்டியை எடுத்த நிமிஷத்தில், வாசல் மணி அழைத்தது.

 

”ஹாய், மா!”

”ஹாய், விக்கி!”

எதிரில் வந்து நின்ற பிள்ளையைக் கரிசனத்துடன் பாரதி ஏறிட்டாள்.

”என்னடா, ஒரு வாரத்துல கறுத்து இளைச்சுப்போயிட்டே? சாதம் சரியா சாப்பிடறதில்லியா?”

விக்ரம் இரண்டு கைகளையும் அகல விரித்து அம்மாவை அணைத்துக் கொண்டான்.

”என்னம்மா… ஒரு வாரத்துல இன்னும் குண்டாயிட்டே! எங்க சாப்பாட்டையெல்லாம் சேத்து சாப்பிடறியா, என்ன?”

இல்லாததைச் சொல்லி மகன் சீண்டுவது புரிய, ”போடா…” என்றாள் பாரதி.

”அம்மா, ஒரு ஜோக் கேக்கறியா? ஒரு ஆண் தன் பொண்டாட்டி எறங்க கார்க் கதவத் திறந்துவிடறான்னா, என்ன அர்த்தம்?”

”என்ன?”

”ஒண்ணு, கார் புதுசு… இல்ல, பொண்டாட்டி புதுசு!”

ஜோக் விளங்கி பாரதி சிரித்தபோது, போன் ஒலித்தது.

எடுத்து, ”ஹாய், பாஸ்… இப்பத்தான் நுழஞ்சுகிட்டேயிருக்கேன்…” என்றவன், அரைநிமிஷம் நண்பன் சொன்னதைக் கேட்டுவிட்டு, ”வாவ்! நிச்சயமா! அஞ்சு நிமிஷம் டைம் குடு… வாசல்ல ரெடியா இருக்கேன்…” என்று கூறி தொடர்பைத் துண்டித்துவிட்டு தன்னறைக்குச் சென்றுகொண்டே பேசினான், ”மா… ஆறரை மணிக்கு யூ.எஸ்.ஐ.எஸ் ஆடிட்டோரியத்துல, அமெரிக்காலேந்து வந்த மியூசிக் க்ரூப் ஸ்பெஷல் டெமான்ஸ்ட்ரேஷன் குடுக்கறாளாம்… ரகு வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னான்…”

”அதுக்கு முன்னால உனக்கு நா பண்ணிவெச்சிருக்கற ‘பேல்’ சாப்டுட்டு, எங்க வேணா போ!”

”நோ டைம், மா… ரகு இப்ப வந்துடுவான்…”

கிட்டத்தட்ட ஒருமணிநேரத்துக்கும் மேலாய் மன்றாடி அவனுக்காகத் தயாரித்திருந்த ‘பேலை’ ருசித்துப்பார்க்கக்கூட அவகாசமோ நினைப்போ இல்லாமல், ”ஸீ யூ, மா…” என்று கூறி விடைபெற்ற விக்ரம், தடதடவென்று வெளியே ஓட, இப்போதெல்லாம் அடிக்கடி ஆட்கொள்ளும் அவஸ்தை சடக்கென்று மறுபடி நெஞ்சில் கனமாகப் படர்வதைத் தடுக்க இயலாமல், பாரதி நாற்காலியில் அமர்ந்து மேஜைமேல் கவிழ்ந்துகொண்டாள்.

மேலும் படிக்க

• • • • •