என் கண்ணோட்டத்தில்…
அப்பா
“உங்களை வெகுவாகப் பாதித்த, நீங்கள் உருவாகக் காரணமான, உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் முழுமையாகப் பாத்திரமான ஒருவரை அறிமுகப் படுத்துங்களேன்…” என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல உட்காருகையில், முதலில் என் நினைவில் மேடை போட்டு அமர்பவர் என் அப்பா.
இன்றைக்கு நீங்கள் எழுத்து மூலம் தெரிந்துகொண்டிருக்கும் சிவசங்கரியின் உடம்புக்கும் குணங்களுக்கும் விதை ஊன்றினவர், அஸ்திவாரம் போட்டவர்.
அப்பா…
எப்பேர்ப்பட்ட மனிதர் அவர்!
மனிதாபிமானம், நேர்மை, கண்டிப்பு, தன்னம்பிக்கை, அன்பு, திறமை – என்று அத்தனை குணங்களையும் ஒருசேரக் குழைத்து என் அப்பாவை உருவாக்குவது அந்த பிரம்மாவுக்கு (என் தாத்தா பாட்டி என்று குறிப்பிடுவதுதான் சரியோ!) எப்படி சாத்தியமாயிற்று?
அப்பாவான அப்பாவா அவர்!
எல்லோருக்கும் எளிதில் அப்படியொரு அப்பா கிடைத்துவிடுவாரா?
கண்களை, புத்தியை சுழற்றிப் பார்த்தவரையில், என் அப்பா லட்சத்தில் ஒருவர் என்பதைப் புரிந்துகொள்ள முடிய, அந்த அற்புதமான ஆண்மகனுக்கு மகளாய் பிறக்க எத்தனை ஜென்மங்கள் தவம் செய்தேனோ என்ற நினைப்பில் கண்கள் பனிக்கின்றன… உடம்பு சிலிர்க்கிறது… மனசு நெகிழ்கிறது…
என் அப்பா ‘ஆஜானுபாகு’ என்கிற ரகம்… ஐந்தடி பதினோரு அங்குல உயரம், அதற்கேற்ற பருமன், தொந்தி. அலையலையாய் நெளியும் தலைமுடி, கணீரென்று நாபியிலிருந்து எழும் குரல், கண்களில் வெளிச்சம் போடும் உரத்த சிரிப்பு.
அப்பாவின் பெயர் சூரியநாராயணன்… ஆனாலும், ‘சூரி அண்ட் கோ’வின் ஸ்தாபகர் சூரி என்றே அவர் பிரபலமாய் இருந்தார். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தாலும், தன் அயராத உழைப்பினால், நாட்டின் தலைசிறந்த ஆடிட்டர்களில் ஒருவர் என்கிற நிலைக்கு உயர்ந்தவர். சூரி அண்ட் கோவுக்கு முதன்முதலில் கடல் கடந்து அன்றைய மலேயாவில் கிளை திறந்தவர்.
இன்றைக்கு சின்னக் கணக்குகளைக் கூட்ட கால்குலேட்டரின் உதவியை எல்லோரும் நாடுவதைப் பார்க்கும்போது, அப்பா லட்சம், கோடி ரூபாய்க் கணக்கு களைக்கூட ஒன்று, பத்து, நூறு என்று வரிசையாய் கூட்டாமல், எட்டு வரிசையில் – அதாவது கோடிக்கணக்கில் – எழுதப்பட்ட கணக்குகளை ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு விரல் என்கிற ரீதியில் எட்டு எண்களுக்கு நேராக எட்டு விரல்களை வைத்து, அப்படியே கண்மூடித்திறக்கும் நேரத்தில் பக்கம்பக்கமாய் கூட்டினது நெஞ்சில் பெருமைப் பூக்களைப் பூக்கச் செய்கிறது.
காலையில் பம்பாய்க்குப் போய்விட்டு, அங்கிருந்து டெல்லி சென்று இரவு ஊர்திரும்பும் அளவுக்கு வேலை இருந்தபோதும், குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க அப்பா என்றுமே தவறினதில்லை. உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளை எழுப்பி, ‘இன்றைக்கு ஸ்கூலில் என்னம்மா நடந்தது?’, ‘டெஸ்ட் எப்படி எழுதியிருக் கிறாய்?’, ‘என்ன பாட்டு கற்றுக்கொண்டாய்?’, ‘இண்டர் ஸ்கூல் கிரிக்கெட் மேட்ச் என்னாயிற்று?’ – என்று ஆர்வத்துடன் கேட்பார் என்பதால், அப்பாவிடம் நல்ல சேதியாகச் சொல்லி அவர் பெருமைப்படும்படி நடந்துகொள்ள வேண்டுமே என்கிற தவிப்பு ரொம்ப சின்ன வயசிலேயே எங்களுக்கு உண்டானது நிஜம்.
எத்தனை தலைபோகிற காரியமாக இருந்தாலும், வெள்ளிக்கிழமை இரவு எட்டுமணிக்கு மேல் கபாலீஸ்வரர் கோவிலுக்கு குடும்பத்துடன் போவதை அப்பா வழக்கமாகக் கொண்டிருந்தார். மணலில் கால்கள் புதையப்புதைய நடந்து பிராகாரத்தைச் சுற்றின நேரத்தில், அப்பா பல விஷயங்களை எங்களுக்கு எடுத்துச் சொல்வார். ஆகாயத்திலுள்ள ‘சப்தரிஷி மண்டல’ நட்சத்திரக் கூட்டத்தை அடையாளம் காட்டுவார். காந்திஜி சுதந்திரத்துக்காக எப்படிப் பாடுபடுகிறார் என்று விவரிப்பார். சின்ன வயசில் ஸ்கௌட்ஸில் செய்த ஒரு வீரதீரச் செயலை வர்ணிப்பார்… நேர்மை, உண்மை, எத்தனை அவசியமான குணங்கள் என்று வலியுறுத்துவார்.
அப்பா வெகு திறமையாக வண்டி ஒட்டுவார். வெளியூருக்குப் போக நேரிடும்போது, கார் எப்படி ஓடுகிறது என்று எளிமையாகச் சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல், “போன தடவை திருச்சிக்கு வந்தபோது, மாமா வீட்டுக்கு வழி சொல்லிக்கொடுத்தேனே… நினைவிருக்கிறதா? எங்கே, வழியை இப்போது நீ சொல் பார்க்கலாம்…” என்று உற்சாகப்படுத்துவார். அப்பாவின் இந்த வழக்கத்தால், முதல் முறை போகும்போதே ‘மூன்று மாடிக் கட்டடத்துக்கருகில் இடதுபக்கம் திரும்பணும், சர்ச்சுக்கு எதிர் ரோடு, பூங்காவுக்கு வலதுபக்கம்’ என்று அடுத்த முறைக்காக என்னை நான் தயார்பண்ணிக்கொண்டது, இன்றைக்கு ‘ஒருதரம் போனால்கூட உனக்கு வழி தெரிந்துவிடுகிறதே!’ என்கிற பாராட்டை தெரிந்தவர்களிடம் பெறவைக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
தானும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து, அடுத்தவர்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டியதில், அப்பாவுக்கு நிகர் அப்பாதான்.
நினைவு தெரிந்த நாளாய் அப்படி அவர் தன்னம்பிக்கை கொடுத்த நிகழ்ச்சிகள் நூற்றுக்கணக்கில் இருப்பினும், இரண்டை இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.
‘அன்னதான சிவன்’ இயக்கத்தின் பொறுப்பை அப்பா ஏற்று, விழா நாள்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்த காலம் அது. கும்பகோணம் மகாமக உற்சவத்தில் சுமார் லட்சம் சாம்பார் சாதப் பொட்டலம் போட்டு வினியோகித்த பின்னர், மாலையில் அன்னதான சிவனைப் பற்றிய கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. திரு. சி. சுப்ரமணியம், திரு. பக்தவத்சலம், திரு. கல்கி போன்ற பேச்சாளர்கள். இடையே, “சிவன் மாமாவைப்பற்றி இவளைப் பேசச் சொல்லுங்களேன்…” என்று நண்பர்கள் சொல்ல, நான் பயப்பட, “உன்னால முடியும்மா… தைரியமாப் பேசு!” என்று அப்பா ஊக்கம் கொடுக்க… அப்பா சொன்ன பிறகு சந்தேகம் எதற்கு என்கிற துணிச்சலுடன், ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த விழாவில் துளியும் பயமில்லாமல் நானும் பேசிப் பாராட்டு பெற்றேன். அப்போது எனக்கு வயசு ஏழு!
இதேபோல…
கல்லூரி இறுதியாண்டில் பி.எஸ்.சி. தேர்வுக்கு இருபது நாள்கள் இருக்கையில், “உன்னிடம் ஒரு முதல் வகுப்பை எதிர்பார்க்கிறேன்…” என்று ஒற்றை வரியில் பேசின புரொஃபஸர், ரெஃபரன்ஸுக்காகச் சில புத்தகங்களைத் தந்துசெல்ல, நான் வாஸ்தவமாகவே நடுங்கிப்போனேன். அதே உதறலுடன் வீட்டுக்கு வந்து, “எப்படிப்பா முடியும்? ஜுவாலஜியில் முதல் வகுப்பு வாங்குவது கடினமாயிற்றே?” என்றதும், அப்பா சிரித்தார்.
பின், “உன் புரொஃபஸருக்கு உன் மேல் இருக்கும் நம்பிக்கை, உனக்கு உன் மேல் இல்லையாம்மா? என் கொள்கை என்ன தெரியுமா? ‘இஃப் ஐ வாண்ட் எ திங் டு பீ டன், இட் ஷால் பீ டன், அண்ட் இட் வில் வீ டன் (If I want a thing to be done, it shall be done, and it will be done)’ என்பதுதான்! நீ என் பெண்… தயங்கலாமா?” என்று கூற, ஓர் உத்வேகத்துடன் நான் மாடிக்கு வந்தேன். அப்பா சொன்ன வாசகத்தை மேஜைக்கு முன்னால் இருந்த சுவரில் கொட்டையாய் எழுதிவைத்து, தினமும் பத்து தரம் உரக்கப் படித்தேன். ‘முடியும்’ என்று எனக்குள் தீர்மானித்துக்கொண்டு பாடங்களைப் படிக்க, அந்தத் தேர்வில் ஹை ஃபர்ஸ்ட் கிளாஸ் மட்டுமல்ல, கல்லூரியிலும் நான்தான் முதல்!
அப்பா ரொம்ப சிஸ்டமாடிக் பர்ஸன். சொன்னபடி நடந்துகொள்வதும், குறித்த நேரத்தில் காரியங்களைச் செய்வதும், அவரிடம் இயல்பாகக் காணப்பட்ட சமாச்சாரங்கள். அவரிடம் பணிபுரிந்த மற்றவர்களிடமும் இந்த சொல்-செயல் சுத்தத்தை அவர் கட்டாயம் எதிர்பார்த்தார்.
நன்றாக நினைவிருக்கிறது… ஒருதரம் அப்பாவின் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த நபர் ஒருவர், ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டும் மீண்டும் அதே தவறைச் செய்துவிட, அன்றே வேலையிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால், தன் நெருங்கிய நண்பரிடம், “இந்தப் பையன் ரொம்ப நல்லவன், பெரிய சம்சாரி… பொறுப்பு வரணும் என்பதற்காகவும், ஆபீஸில் கட்டுப்பாட்டோடு இருக்கணும் என்பதற்காகவுமே நான் அவனை வேலையிலிருந்து நீக்கிவிட்டேன். அவன் தவறுக்கு தண்டனை கொடுத்தாயிற்று. திரும்ப நானே அவனை எடுத்துக் கொண்டால், வேலையில் பயம் போய்விடும். நீங்கள் வேலை போட்டுக் கொடுங்கள்… அவன் நேர்மைக்கு நான் உத்தரவாதம்!” என்று சொல்லி, மறுநாளே வேறு வேலையை அப்பா வாங்கிக்கொடுத்துவிட்டார்.
இதேபோல, என் சினேகிதி ஒருத்தியை, சாதாரண நிலையில் இருந்தவளை, வீட்டில் இறக்கிவிட மறுத்து, “அவங்க வீட்டுக்குக் கார் போகாதுங்க… ரோடு மோசம்…” என்று காரோட்டி ஒரு நாள் கூறினான் என்பதற்காக, அவனைக் கீழே இறங்கச் சொல்லிவிட்டு தானே வண்டியை ஓட்டிக்கொண்டு போய் அவளை வீட்டில் விட்டு வந்து, யாராக இருந்தாலும் மனிதாபிமானம், மரியாதையோடு நடந்துகொள்வது, மனிதராகப் பிறந்தவருக்கு அவசியம் என்பதைச் செயலிலும் எடுத்துக்காட்டினதுண்டு.
பெண்டாட்டியைப் போகப் பொருளாகவும், இயந்திரமாகவும் நடத்திவந்த அந்தக் காலத்திலேயே, அம்மாவைப் பெயர் சொல்லிக்கூட அழைக்காமல், பத்து பேர் நடுவிலும் ‘மேடம்’ என்று அழைத்து ஒருவித மரியாதையைத் தந்தவர். அப்பா, அம்மாவை மட்டுமல்ல, தான் பெற்ற குழந்தைகளைக்கூட அன்போடுதான் நடத்துவார். எங்களை கைநீட்டி ஒருதரம் அடித்ததும் இல்லை. ஆனாலும், அப்பாவிடம் எத்தனைக்கெத்தனை அன்பு இருந்ததோ, அத்தனைக்கத்தனை பயம், மரியாதை எங்களுக்கும், ஏன் அவரை அறிந்த அனைவருக்கும் இருந்தது மறுக்க முடியாத உண்மை. ‘டோண்ட் பீ ஸில்லி (Don’t be silly)!’ என்று அப்பா முகம் லேசாகச் சுருங்கி சொல்லிவிட்டால், வானமே இடிந்து தலையில் விழுந்துவிட்ட மாதிரி நொறுங்கிப்போவோம். இனியொரு தரம் தப்பித்தவறிக்கூட அவர் மனம் நோக நடக்கக்கூடாது என்பதில் கவனமாக இருப்போம்.
பெரியவர்களிடத்தில் மரியாதையுடன் நடந்துகொள்வதிலும், வயதில் பெரியவர்களை வணங்கி அவர்களுக்கு மதிப்பளித்து நடப்பதிலும், அப்பாவுக்கு நிறைய நம்பிக்கை உண்டு. “பெரியவர்கள் இல்லாவிட்டால், நாம் இல்லை. உடல், குணம், புத்திசாலித்தனம் எல்லாவற்றையும் வழிவழியாக நமக்கு அவர்கள்தான் அளிக்கிறார்கள். அதனால், ‘ஆஹா, நான் இதைச் சாதித்துவிட்டேன்!’ என்று தலைக்கனம் பிடித்துத் திரிவதைத் தவிர்த்து, இது பெரியவர்கள் நமக்குக் கொடுத்த மூலதனம் என்று அடக்கத்தோடு நடந்துகொள்ள வேண்டும்!” என்பது அவர் கருத்து.
அப்பாவுக்கு என்று சில கொள்கைகள் உண்டு. மது அருந்த மாட்டார், அசைவம் உண்ண மாட்டார். பெண், ஆண்களின் மனமும் எண்ணங்களும் நாகரிகமடைய வேண்டுமே தவிரவும், நடை உடையோடு நிற்கும் நாகரிகம் வளர்ச்சிக்கு உதவாது என்று ஆணித்தரமாக நம்பியவர். இதனாலேயே, பெண் குழந்தைகளைப் பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கவைத்து, இருபது வயசுக்குள் திருமணம் செய்துவைத்துவிட்டாலும், பெண் ஆணுக்கு எந்த விதத்திலும் சிந்தனை, திறமையில் குறைந்துவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி, எங்களை ஸ்கௌட்ஸ், என்.சி.சி. சேரவைத்தார். நாட்டியம், பாட்டு, நீச்சல் என்று ஒன்றுவிடாமல் அனைத்திலும் பயிற்சி அளித்தார்.
வளமான சமுதாய அமைப்பிற்கு ஆரோக்கியமான குடும்பங்கள் அஸ்திவாரக் கற்கள் ஆகின்றன என்பதிலும், விட்டுக்கொடுப்பதும், இருப்பதைப் பகிர்ந்துகொள்வதும், அனுசரித்து நடப்பதும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்பதிலும், அப்பாவுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. சமீபத்தில் என் எழுத்துக்களை ஆராய்ச்சி செய்த டாக்டர் நடராஜன் என்னும் பேராசிரியர் ஒரு பேப்பர் படித்தபோது, ‘குடும்ப அமைப்பு சிதையாமல் இருக்கவேண்டியதன் அவசியத்தை சிவசங்கரி தன் எழுத்துக்கள் மூலம் வலியுறுத்துகிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்தைத் தெரிந்துகொண்ட பிறகு, இதுகுறித்து நான் யோசனை செய்தபோது, என் அப்பா, இதர பெரியவர்களின் நம்பிக்கை எனக்குள்ளும் வளர்ந்து என் எழுத்துக்களிலும் பிரதிபலிப்பதுதான் உண்மையோ என்று தோன்றியது.
இன்றைக்கு இந்தக் கட்டுரை எழுதவேண்டி ஆற அமர யோசிக்கும் நிமிஷங்களில், அப்பா இறந்த தினமும், அவர் இரண்டாம் பேர் அறியாமல் செய்த உதவிகளைப்பற்றிச் சொல்லி பலர் அழுததும், ஒரு நண்பர் ‘நமக்கெல்லாம் ஓர் இதயம் என்றால், சூரிக்கு உடம்பு பூராவும் இதயம்’ என்று மனப்பூர்வமாகப் புகழ்ந்ததும் ஞாபகத்துக்கு வருகின்றன.
வாஸ்தவத்திலேயே அப்பா ஓர் அற்புதமான மனிதர்தான். அவரைப் போலவே ஊக்கம், அன்பு, கண்டிப்பு என்று அனைத்தும் கொடுத்து தம்தம் குழந்தைகளை இன்றைய தந்தைகளும் வளர்ப்பார்களேயானால், என்னையும்விட அதி திறமைசாலிகள் வீட்டுக்கு வீடு ஜனித்து, அமோகமாய் மணப்பார்கள்… இதில் எனக்குச் சந்தேகமே இல்லை.
அப்பா ஒரு ஜயண்ட்… எல்லாவிதத்திலும். அவரை மனசுக்குள் நிறுத்தி, முன்னுதாரணமாக வைத்து வாழ முயற்சிப்பது, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குவதோடு, மகளாகப் பிறந்த என் கடமையும்கூட என்பது புரிவதால், முயற்சிக்கிறேன்… விடாமல் முயற்சிப்பேன்.
• • • • •


