இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – தொகுதி – 1 – தெற்கு

/இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு – தொகுதி – 1 – தெற்கு

மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயருடன் ஒரு பேட்டி

“நான் கேள்விப்பட்டிருக்கும் சில அற்புதமான பிரும்மாண்ட சமுத்திரங்களைவிட, நான் பார்த்து, மிக நெருக்கமாக உணர்ந்திருக்கும் என் கிராமத்து ஆறு எனக்கு உன்னதமானது” என்று கூறும் எம்.டி. வாசுதேவன் நாயரை முதன்முதலில், 1989-ல் ‘அக்னி’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘கவிராத்திரி’ நிகழ்ச்சியில் சந்தித்தேன். பலமுறைகள் பார்த்து, மணிக்கணக்கில் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டு, நெருங்கின நண்பர்களாக மாறிவிட்ட பின்னர், இன்னமும் எப்போது சந்திக்க நேர்ந்தாலும், ‘என்ன ஆச்சர்யமான அறிவுஜீவி இவர்!’ என்கிற பிரமிப்பு என்னுள் தோன்றுவது நிஜம்.

தழையத்தழைய புரளும் வேஷ்டி, மேல் இரண்டு பட்டன்களைப் போடாமல் திறந்திருக்கும் அரைக்கை ஸ்லாக், கலைந்த தலைமுடி, அவ்வப்போது எட்டிப் பார்க்கும் கழுத்துச் சங்கிலி, இடக்கையில் எப்போதும் காணப்படும் பீடிக்கட்டு, வத்திப்பெட்டி… அதிகம் பேசாத குணம்; ஆனால், பேச முற்பட்டால், ஆழ்ந்த சிந்தனையோடுகூடிய அறிவுச்சுடராக வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் ‘அட்சரம் லட்சம் பெறும்’ என்பது நாடறிந்த விஷயம்!

சமீபத்தில் கோழிக்கோடுக்குச் சென்றிருந்தபோது அவரோடு சேர்ந்து வைக்கம் முகம்மது பஷீரைச் சந்திக்கப் போனதும், மலையாள இலக்கியத்தின் தந்தை எனப்படும் எழுத்தச்சனின் நினைவாலயத்தைச் சென்று பார்த்ததும், எம்.டி.யின் கிராமமான கூடலூரில் கண்ணெதிரில் பாரதப்புழா ஆறு எங்கள் சம்பாஷணைக்கு சாட்சியாக ஓட, ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ தொடருக்காகப் பேட்டியெடுத்ததும்… சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.

மூன்று முறைகள் கேரள சாகித்ய அகாடமி விருது, மத்திய சாகித்ய அகாடமி விருது, வயலார் விருது என்ற உயர்ந்த இலக்கியக் கெளரவங்களையும், சிறந்த திரைக்கதை அமைப்புக்காக நான்கு முறை தேசிய விருதையும், பதினான்கு தடவைகள் கேரள மாநில விருதுகளையும் பெற்றிருப்பதோடு, இந்திய, உலக இலக்கிய விவரங்களை எந்தச் சந்தர்ப்பத்திலும் விரல்நுனியில் வைத்திருக்கும் எம்.டி., என்னைப் பொறுத்தவரையில் ஒரு ‘நடமாடும் கலைக்களஞ்சியம்’… சந்தேகத்துக்கு இடமில்லாமல்!

* * * *

  • தென்னிந்திய மொழிகளில், தமிழுக்கும் மலையாளத்துக்கும் நெருக்கம் அதிகம் என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. இதைச் சான்றுகளோடு விளக்குவதும், மலையாள மொழியின் துவக்கத்தையும் அதன் வளர்ச்சியையும் சுருக்கமாகக் கூறுவதும் இயலுமா?

நான் மொழிவல்லுனர் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு, உங்கள் கேள்விக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன். இப்போது வழக்கிலிருக்கும் மலையாள மொழி, 700 வருடங்களுக்கு முன் உருவானதுதான் என்பது பண்டிதர்களின் கணிப்பு. தமிழுடன் ஒப்பிடுகையில், இது இளமையான மொழிதான். 12-ம் நூற்றாண்டில் ராமாயணத்தைப் பின்பற்றி எழுதப்பட்ட ‘ராம சரித்திரம்’, எங்கள் மொழியிலுள்ள தொன்மையான நூல். தமிழுக்கும் மலையாளத்துக்கும் ஒட்டுறவு உண்டு என்பது உண்மையே. இங்கே ஒரு விஷயத்தை – இன்றைய கேரள மாநிலத்தின் சில பகுதிகள் முன்பு தமிழகத்தின் ஓர் அங்கமாக இருந்ததை – ஞாபகப்படுத்திக்கொள்வது அவசியம். அதனால், ‘பழந்தமிழ்’ என்று சங்ககாலத்தில் குறிப்பிடப்பட்டது இங்கேயும் பேச்சுவழக்கில் இருந்திருக்கிறது. அது மட்டுமல்ல, கேரள மக்களின் பழக்கவழக்கங்கள், ஓணம் பண்டிகை போன்றவற்றின் விவரிப்புகள், ‘மதுரைக் காஞ்சி’ போன்ற சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன என்பது, பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி போன்றோரின் கணிப்பு. மலையாள மொழியின் வளர்ச்சியைப்பற்றிப் பேசுகையில், 15, 16-ம் நூற்றாண்டுகளில் சம்ஸ்கிருதத்தின் கலப்போடு வழக்கிலிருந்த ‘மணிப்பிரவாள’ காலத்தை ஒரு கட்டமாகக் கூறலாம். இதனைத் தொடர்ந்து வந்த ‘பக்தி இலக்கிய’ காலத்தில், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘துஞ்சத்து எழுத்தச்சன்’ முக்கியமானவர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்தும் ஒரு சுயம்புவாக உருவான எழுத்தச்சன், வேத, உபநிஷத்துக்களில் புலமை உள்ளவர். மூன்று மாபெரும் புராணங்களான ராமாயணம், மகாபாரதம், பாகவதத்தை எளிமைப்படுத்தி மலையாளத்தில் எழுதிய பெருமை இவருக்குண்டு. அதுவரையில் எங்கள் மொழியில் இருந்த சம்ஸ்கிருத ஆதிக்கத்தைக் குறைத்து, பாமரனுக்கும் புரிகிற விதமாய் எங்கள் மொழி இலக்கியங்களை எளிமைப்படுத்தினார் என்பது, பெருமைக்குரிய சங்கதி. 20-ம் நூற்றாண்டை நவீன மலையாள இலக்கியத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்.

  • இந்த நூற்றாண்டில் எழுதப்பட்ட முதல் புதினம், சிறுகதை, கவிதைகளை எங்களுக்கு அறிமுகப்ப்படுத்துங்களேன்…

1891-ல் குன்ஞிராமன் நயனார் (Kunjiraman Nayanar) எழுதிய ‘வாஸனவிக்ருதி’, எங்கள் மொழியில் வெளியான முதல் சிறுகதை. 1889-ல் சந்துமேனன் எழுதி வெளியிட்ட ‘இந்துலேகா’-தான், முதல் நாவல். இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வாழ்ந்து, அற்புதமான கவிதைகளைப் படைத்த வள்ளத்தோள், குமரன் ஆசான், உள்ளூர் – என்ற மூன்று மாமேதைகளை, ‘மும்மூர்த்திகள்’ என்று குறிப்பிடுவோம். சமுதாய மறுமலர்ச்சியைத் தனது கவிதைகள் மூலம் தோற்றுவித்த ஸ்ரீநாராயண குருவின் கருத்துக்களைப் பின்பற்றி, குமரன் ஆசான் அந்தக் காலத்திலேயே ‘தீண்டாமை எதிர்ப்பு’ போன்ற கருத்துக்களை உள்ளடக்கி கவதைகளைப் புனைந்திருக்கிறார். தேசிய நோக்கம் கொண்டவராக வள்ளத் தோளைக் குறிப்பிடலாம். மொத்தத்தில், இந்த மும்மூர்த்திகளின் காலத்தை, இலக்கியத்தில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த காலகட்டம் என்ற உறுதிபடச் சொல்லலாம். சந்துமேனனின் ‘இந்துலேகா’, இன்றைக்கும் ஆர்வத்துடன் படிக்கப்படும், இன்றைய சூழலிலும் எடுபடும் ஒரு சிறந்த புதினம். ஓர் அத்தியாயத்தில் கதாபாத்திரங்கள், டார்வின், ஹக்ஸ்லி, பிராட்லா போன்றவர் களின் கருத்துக்களை அறிவுஜீவித்தனமாக உரையாடல்கள் மூலம் வெளியிடுவது ஆச்சர்யமான ஒரு விவரிப்பு! இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, மலையாளத்தில் நவீனத்துவம் சந்துமேனன் காலத்திலேயே துவங்கிவிட்டது என்பேன்.

  • தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகம்மது பஷீர், கரூர் நீலகண்ட பிள்ளை, எஸ்.கே. பொற்றேகாட் போன்றவர்களின் எழுத்துக்களை எந்தப் பிரிவில் சேர்ப்பீர்கள்?

1930-க்கு மேல் இவர்கள் எழுதிய இலக்கியங்கள், புனைகதைகளில் மறுமலர்ச்சி யைக் கொண்டுவந்த காலம் என்று கொண்டாடப்படுகிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை, நவீனத்துவம், பின்னை நவீனத்துவம் என்று கட்டம்கட்டுவது தேவையில்லாத ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுத்தாளர்கள் பரிட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வது தொடர்ந்து நடந்துவந்திருக்கிறது.

  • தமிழ், சம்ஸ்கிருதத்தைத் தவிர, வேறெந்த மொழியின் பாதிப்பு மலையாளத்தில் அதிகம் காணப்படுகிறது?

ஆங்கிலம். 1921-ல் வள்ளத்தோளின் நெருங்கின நண்பரான நாளப்பாடு நாராயண மேனன், விக்டர் ஹ்யூகோவின் ‘லே மிஸரபிள்ஸ்’ புதினத்தை மொழி பெயர்த்து வெளியிட்டபோது, அது எழுத்தாளர்களிடையே ஓர் அழுத்தமான பாதிப்பை உண்டாக்கியது. கரு, உத்தி, வடிவம் என்று அனைத்துக் கோணங்களி லிருந்தும் எங்களை இந்தப் புதினம் புதிதாகச் சிந்திக்கத் தூண்டியது என்பேன். மலையாள வாசகர்களைக் குறித்து பெருமைப்படக்கூடிய விஷயம் ஒன்று உண்டு… எந்த மொழியிலிருந்து தரமான எழுத்துக்களை மொழிபெயர்த்து இங்கு கொண்டுவந்தாலும், அதற்கு வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு இருந்ததில், பல மொழிகளின் இலக்கியங்களோடு எங்களுக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது. வாசகர்களிடம் இந்த ஆரோக்கியமான போக்கு இருக்கும் வரையில், புதுப்புது கண்ணோட்டங்களிலிருந்து சிந்திப்பதையும், புதுப்புது இடங்களில் தேடல்களை மேற்கொள்வதையும், இலக்கியப் படைப்பாளிகளும் செய்துகொண்டேதான் இருப்பார்கள்.

  • முதன்முதலில் உங்களது எழுத்துக்கள் அச்சேறியபோது உங்களுக்கு வயது பதினான்குதான் என்பதையும், அந்த இளம் பிராயத்தில் நீங்கள் ஒரே சமயத்தில் எழுதிய கதை, கவிதை, கட்டுரை மூன்றுமே பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எழுதத் துவங்கிய முதல் சில ஆண்டுகளின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

நினைவு தெரிந்த நாளாய் எனக்கு இலக்கியத்தின்பால் ஒரு பிரமிப்பு கலந்த ஈர்ப்பு இருந்திருக்கிறது. அதற்குக் காரணம் என்ன, அதை ஊட்டி வளர்த்தது எது என்றெல்லாம் எனக்குக் குறிப்பிடத் தெரியவில்லை. சின்ன வயதிலிருந்தே, வள்ளத்தோள், செங்கம்புழா போன்ற அற்புதமான கவிஞர்களின் கவிதைகளையும், எழுத்தாளர்களில் எஸ்.கே. பொற்றேகாட் போன்றவர்களின் கதைகளையும் ரசித்துப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதாலோ என்னவோ, எழுத்தைத் தவிர வேறு எதையும் தொழிலாக ஏற்க நான் கற்பனை பண்ணக்கூட முயன்றதில்லை.
எட்டாவது வகுப்பு படிக்கையில், புதுசாய் வெளியான ஒரு பத்திரிகைக்கு வெவ்வேறு பெயர்களில் கதை, கவிதை, கட்டுரையை எழுதியனுப்பினேன். ஒரே இதழில் மூன்றுமே பிரசுரமாக, அதன் பிறகுதான் இந்த மூன்று பிரிவுகளில் எதை எனது வாகனமாக்கிக்கொள்வது என்ற பிரச்சினை எழுந்தது. கவிஞனாவது எனது அடிமனசு ஆசையாக இருந்தபோதிலும், முழுமையான கவிதை படைப்பதில் எனக்கு ஏதோ பிடிபடாமல் இருப்பதை உணர முடிய, சிறுகதை எழுதுவதில் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். கல்லூரியில் படித்த நாட்களில் பெரிய பத்திரிகைகளில் எனது சிறுகதைகள் பல வெளியாகியுள்ளன. நான் மாணவன் என்பது யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக, விலாசங்களை மாற்றிமாற்றி எழுதுவேன்.

  • இலக்கிய ஜாம்பவான்களை அந்த இளம் வயதிலேயே ரசித்தது, ஈரமண்ணில் சுலபமாய்ப் பதியும் காலடி போல உங்களைப் பாதித்து, அவர்களின் சிந்தனை, நடையைப் பின்பற்றத் தூண்டியதா?

இல்லை. ஒரு வாசகனாக நான் அவர்களை ஆராதித்தேனே தவிரவும், எழுத்தாளனாகப் பின்தொடர எண்ணியதே கிடையாது. என்னை மிகவும் கவர்ந்தவர் எஸ்.கே. பொற்றேகாட்… பின்னர் பஷீர். ஆனாலும், இவர்கள் யாரையும் நான் பின்பற்றியதே இல்லை. இதற்கு முக்கியக் காரணம், கதைகளுக்கு நாங்கள் தேர்ந்தெடுத்த கருக்கள், அவற்றுக்குத் தேவையான நடை, உத்தி – என்று அனைத்துமே மாறுபட்டதுதான்.

  • மாற்றம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

பொதுவாக எனக்கு முன்னால் எழுதியவர்கள், சமுதாயப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, வார்த்தைகள் மூலம் கதாபாத்திரங்கள் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொள்ள வைத்தார்கள். ஆனால், அப்படி வெளிப்படுத்திக்கொள்ளும் ஒருவன் முகமூடி அணிந்தவனாக இருந்தால்…? அதை எப்படி உணர்வது? முகமூடியை எப்படிக் கழட்டுவது? அவன் மனசுள் எட்டிப்பார்த்தாலேஒழிய, நிஜமான அந்த மனிதனைப் புரிந்துகொள்வது சாத்தியமாகாது, அல்லவா? இந்த அடிப்படையில், கதாபாத்திரங்களின் ஆழ்மனங்களில் நான் சஞ்சாரிக்க முற்பட்டது தான், என் எழுத்தை அடுத்தவர்களின் கதைகளிலிருந்து வித்தியாசப்படுத்தியது என்று நினைக்கிறேன். மாற்றம் என்றால் இதுதான்.

  • ‘நாலு கட்டு’ என்ற உங்கள் முதல் நாவலை எழுதியதற்கான பின்னணி என்ன?

உண்மையாகச் சொல்லவேண்டுமானால், ‘நாலு கட்டு’ நான் எழுதிய முதல் நாவல் அல்ல. ‘பாதி ராவும் பகல் விளிச்சு’ என்ற இந்து-முஸ்லிம் காதல் கதை தான் நான் முதலில் எழுதியது. ஆனாலும், ‘நாலு கட்டு’ வெளியாகி நான் பிரபலமான பிறகே, இது வெளியிடப்பட்டது. ‘நாலு கட்டு’ என்பது, கேரள கிராமங்களில் காணப்படும் வீடுகளின் அமைப்பைக் குறிப்பது. நான் சிறுவனாக இருந்த காலத்தில், பார்த்து, கேட்டு, வளர்ந்த கிராமியச் சூழ்நிலை, அனுபவங்களோடு, அதுவரை எங்கள் சமூகத்தில் ஆளுமை செய்துகொண்டிருந்த தாய்வழி மரபு நொறுங்கத் துவங்கி, தகப்பன் வழி மரபுகளின் நாட்டாண்மை தலையெடுத்து என்னுள் உண்டாக்கிய பாதிப்புகளையும் விவரிப்பதுதான், ‘நாலு கட்டு’ கதை. அடிப்படையில் நான் கிராமவாசி என்பதனால், எனது கதைகளின் கருக்கள் பெருமளவில் கிராம அனுபவங்களையே சார்ந்திருக்கும்.

  • கதைக்கான கருவைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் சிரமப்படுவீர்களா?

ஓர் எழுத்தாளரின் மிகப்பெரிய பிரச்சினையே, சரியான ‘நொடியை’, ‘கணத்தை’, அடையாளம் கண்டுகொள்வதுதான். குறிப்பிட்ட அந்த ‘நொடி’ தன்னிச்சையாக நம்மைத் தாக்கவேண்டுமே தவிர, நாமாகக் கதைகளைத் தேடிப்போக அவசியமே இல்லை. சரியான விழிப்புணர்வோடு இருந்தோமென்றால், நமக்குள்ளேயே ஒரு குரல், ‘அதோ… அதோ… அந்தக் கணம்தான்! விட்டுவிடாதே, நிறுத்திக்கொள்!’ என்று சொல்லும்… நிச்சயமாய்.

 

  • கருவைத் தீர்மானித்த பிறகு அதை எழுத்தில் வடிப்பதற்கு, உங்களுக்கென ஏதாவது தனி வழிமுறை வைத்திருக்கிறீர்களா?

எனக்குள் எப்போதுமே இரண்டு அல்லது மூன்று கருக்கள் சோம்பேறித் தனத்துடன் உறங்கிக்கொண்டுதான் இருக்கும். சிந்திக்கும் மனோநிலையில் இருக்கும் தருணங்களில், ஒரு பையன் கால்சட்டைப் பையில் கோலிகுண்டு களைப் போட்டுவைத்து உருட்டிக்கொண்டேயிருப்பது போல, அந்தக் கருக்களை இப்படியப்படி திருப்பி, முறுக்கி, எழுதத் தயாரா என்று பார்ப்பேன். திருப்தி இல்லா விட்டால், மறுபடி உள்ளே தள்ளிவிட்டு, இன்னொரு சரியான மனோநிலைக்காகக் காத்திருப்பேன். அப்படியொரு பக்குவம் வந்த பிறகு எழுத உட்கார்ந்தால், ஒரே மூச்சில் கதையை முடித்துவிடுவேன். அது ஓர் அவசரக் கோலம்தான்… என்னைத் தவிர வேறு யாராலும் படிக்கக்கூட முடியாததாக இருக்கும். ஆனாலும் அந்த முதல் உருவம் வெளிப்பட்டுவிடுவது பெரிய நிம்மதி. அதற்குப் பிறகு நேரம் எடுத்துக்கொண்டு மெதுமெதுவாகத் திருத்தி, மெருகேற்றுவது ஓர் அலாதி இன்பம், குஷி. ஆரம்பம் முதலே நான் பிற்பற்றும் செயல்பாடு இதுதான். எழுதியதைத் திருத்தி எழுதாமல் எதையும் பிரசுரத்திற்கு அனுப்பியதே இல்லை.

  • தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கதையாக ஓர் எழுத்தாளர் எழுதுவதாலேயே சமுதாயத்தின் பிரதிபலிப்பாக இலக்கியம் ஓரளவுக்கு விளங்குகிறது என்ற கருத்தில் உங்களுக்கு உடன்பாடு உள்ளதா?

நிச்சயமாய். சமுதாயத்தின் ஓரங்கமாக நாம் இருக்கும்போது, நம் சிந்தனை, செயல், எழுத்து என்று அனைத்திலும் அந்தச் சமுதாயம் வெளிப்படுவது இயற்கை தானே! என் எழுத்துக்களையே எடுத்துக்கொள்ளுங்கள்… நான் வளர்ந்த கிராமத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதிய ‘நாலு கட்டு’, ‘அசுரவித்து’ இரண்டு நாவல்களிலும், அந்தக் காலகட்டத்தில் சமுதாயமும், ஏன் நானும்தான், சம்பந்தப் பட்ட பிரச்சினைகளை மையமாக வைத்துத்தான் எழுதியிருக்கிறேன்.

  • சின்ன வயசுப் பாதிப்புகளையும் நீங்கள் மறந்துவிடவில்லை போலத் தெரிகிறதே… ‘ஒரு பிறந்தநாளின் ஞாபகம்’, ‘கார்கடகம்’ போன்ற கதைகள் அந்த அடிப்படையில் உருவானவைதானா?

ம்ம்… முறிந்துபோன குடும்பம்… சிலோனிலிருந்த அப்பாவால் பணம் அனுப்ப இயலாத நிலை… விவசாயம் மூலம் வந்த சொற்ப வருமானமும், பலர் அடங்கிய குடும்பத்துக்குப் போதாத சூழ்நிலை… சாப்பாட்டுக்கே கஷ்டம்… நினைவு தெரிந்த நாளிலிருந்து, பிறந்தநாள் கொண்டாட்டம் என்று எதையும் நான் அனுபவித்தது கிடையாது. ஒரு பிறந்தநாளின்போது, சுடுசோறு வேண்டுமென்று நான் ஆசைப் பட்டேன் என்பதற்காக, என் தாய் யார் வீட்டிலிருந்தோ அரிசி வாங்கிவந்து சமைத்துப் பரிமாற முனைந்தபோது மணி பிற்பகல் மூன்று ஆகிவிட, அதற்குள் எனக்குப் பசி முற்றிப்போய்விட்டது. அம்மா சாப்பிடக் கூப்பிட்டபோது சாப்பிட முடியாமல்போய், பக்கத்து வீட்டுப் பையனின் கேலிக்கு உள்ளானேன். அதிலிருந்தே பிரமாதமாக வசதிகளை அனுபவிப்பதிலும், தடபுடலாய் உடை உடுத்திக்கொள்வதிலும்கூட எனக்கு ஈடுபாடு குறைந்துவிட்டது என்று சொல்லலாம்.

  • இந்த மாதிரியான அவமானங்கள், காயங்கள், ஒருவித பழிவாங்கும் உந்துதலை உங்கள் எழுத்துக்களுக்குத் தந்திருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?

சில விமர்சகர்கள் அப்படிக் குறிப்பிட்டது உண்டுதான் என்றாலும், அது உண்மையல்ல. பழிவாங்குவதில் எனக்கு என்றுமே நாட்டம் இருந்ததில்லை. ஆனால், கசப்பான அந்த அனுபவங்கள் பிற்காலத்தில் பல கதைகளுக்கு நல்ல அடித்தளங்களாக அமைந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

  • ஓர் எழுத்தாளர் என்று மட்டுமல்லாமல், பொறுப்புவாய்ந்த பத்திரிகை ஆசிரியராகவும் இருக்கும் அனுபவங்களைக் கொண்டு, தற்சமயம் மலையாளத்தில் வெளியாகும் எழுத்துக்களைப்பற்றிக் கூற இயலுமா?

பொதுவாகத் தற்கால மலையாள எழுத்துக்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்… பிரபலப் பத்திரிகைகளில் தொடராக வரும் கதைகள் ஒரு பிரிவு; ஆழ்ந்த சிந்தனையோடுகூடிய நல்ல எழுத்துக்கள் நேரடியாகப் புத்தகமாக வருவது மற்ற பிரிவு. பிரபலப் பத்திரிகைகளில் வரும் தொடர்களில் பல பொழுது போக்குக்காக எழுதப்படுபவையே… இப்படித் தொடராக வரும் பல நவீனங்கள் புத்தகங்களாக வெளிவருவதில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இப்படிச் சொல்வதனால், நல்ல எழுத்துக்கள் தொடராக வருவதேயில்லை என்று ஒட்டுமொத்தமாகக் கூறுவதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவ்வப்போது சிறந்த இலக்கியம், பத்திரிகைகளில் தொடராக வருவது உண்டுதான்… என்றாலும், பிரபலப் பத்திரிகை வாசகர்களிடையே ஆழ்ந்த சிந்தனை எழுத்துக்களுக்கு வரவேற்பு கம்மி என்பதுதான் யதார்த்தம்.

  • ஒரு பத்திரிகை ஆசிரியர் என்கிற ரீதியில், வாசகர்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர நீங்கள் முனையக் கூடாதா?

இதில் பல விஷயங்கள், வியாபார நிர்ப்பந்தங்கள், நிர்வாகம் – என்று அடங்கி யிருக்கின்றன. அதனால், நினைத்ததை உடனடியாய் சாதிப்பது இயலாத காரியம். தவிர, லட்சக்கணக்கில் விற்பனையாகும் பத்திரிகைகளையோ, அவற்றில் எழுதும் எழுத்தாளர்களையோ, அல்லது அவற்றைப் படிக்கும் வாசகர்களையோ நான் மட்டமாக ஒதுக்க விரும்பவில்லை. கொஞ்ச காலத்துக்குப் பிறகு முதிர்ச்சி வரும் போது, எழுத்தாளர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளலாம்… அல்லது, வாசகர்கள் சாதாரண மசாலா சமாச்சாரங்கள் அலுத்துப்போய் இன்னும் சிறந்த எழுத்துக்களைத் தேடிப்போகலாம்… ஆக, எதுவும் இயல்பாக நடக்கும்போதுதான் நிரந்தரமான பலன் கிட்டும்.

  • இளைய தலைமுறையைச் சார்ந்த ஓர் எழுத்தாளரோடு பேசிக் கொண்டிருந்தபோது, வாசகரின் ரசனைகளில் மாற்றம் உண்டாக்கும் முயற்சிக்கான துவக்கம், எழுத்தாளர்களிடமிருந்து வரவேண்டுமென்று கூறினார். இந்தக் கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?

இல்லை. வாசகர்களுக்காக ஓர் எழுத்தாளர் எழுதக்கூடாது. அவர் தனக்கும் எழுத்துக்கும் உண்மையாக நடந்துகொள்பவராக இருந்தால், தான் எழுதுவது சிறு பத்திரிகையில் வருகிறதா என்றெல்லாம் அலட்டிக்கொள்பவராக இருக்கமாட்டார். ஒரு கதையைச் சொல்லும்போது, தனது ஆத்மதிருப்தி, தனக்குள் நிர்ணயித்துக் கொண்டிருக்கும் தரம், ஓர் எழுத்தாளருக்கு ரொம்ப முக்கியம்.

  • கேரள மாநிலத்தில், எழுத்தைத் தொழிலாக மேற்கொள்ளும் ஒருவர் வசதியாக வாழ்வது சாத்தியமா?

ஆரம்ப காலத்தில் ரொம்பக் கஷ்டமாக இருக்கும். வயிற்றுக்காக சம்பாத்தியமுள்ள ஒரு வேலையையும், ஆன்மாவுக்காக எழுத்தையும் வைத்துக் கொள்வது சிறந்தது.

  • ஓர் எழுத்தாளருக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்து, அவரை ஒரு சிறந்த எழுத்தாளர் என்று முத்திரை குத்துவது எது?

எழுதவேண்டுமென்ற நினைப்பு ஓர் எழுத்தாளருக்குள் ஆக்ரமிப்பாக மாறி, இதோடு, சரியான கரு, காந்தம் போலக் கவர்ந்திழுக்கும் மாயாஜாலம் போன்ற உத்தி – இரண்டும் சேரும்போது, அற்புதமான எழுத்து ஜனிக்கும்… கண்டிப்பாய். அதுசரி, சிறந்த அல்லது உயர்ந்த எழுத்து என்பதற்கு அளவுகோல் என்ன? என்னைக் கேட்டால், அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற விதி எதுவும் கிடையாது என்பேன். இது மலையின் உச்சியில் நின்றுகொண்டு பள்ளத்தாக்கைப் பார்க்கும் செய்கை போன்றது. ஊன்றிப் பார்க்கப்பார்க்க எத்தனையோ புதுசுபுதுசாய் தென்படலாம்… அல்லது, ஒன்றுமேயில்லாத வெறும் பாலைவனமாகவும் தெரியலாம். எதுவாக இருப்பினும், அது ஏதோ சேதியைக் கண்டிப்பாக முணுமுணுக்கும். சிறந்த இலக்கியமும் அப்படிப்பட்டதுதான்… ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புது கோணத்திலிருந்து சிந்திக்கவைக்கும். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், என்னை, என் அடுத்த வீட்டுக்காரரை, என் சமுதாயத்தை, நான் வாழும் காலத்தை, நான் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள வைக்கும் எந்த எழுத்தும் சிறந்த இலக்கியம்தான்.

  • இந்தக் கூற்றை உதாரணத்தோடு விளக்க முடியுமா?

தாஸ்தாவ்ஸ்கி எழுதிய ‘பிரதர்ஸ் கராமஸாவ்’… இதைச் சில வருஷங்களுக்கு முன் படித்தபோது புரிந்த அர்த்தம் வேறு, இப்போது படிக்கையில் புரிவது வேறு. என் வளர்ச்சி, முதிர்ச்சி, அனுபவங்களையொட்டி, ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு பரிமாணங்களில் புதுப்புது ஆழங்களில் நான் பயணிப்பது நிஜம்.

  • ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்டுவிட்டீர்கள்… எனினும் விளக்கமாகத் தெரிந்து கொள்வதற்காகக் கேட்கிறேன். பொதுவாக எந்த மொழி இலக்கியத்தையும், புராதனம், நவீனம், அதிநவீனம் என்று பல பிரிவுகளாகப் பிரிப்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?

இல்லை… கண்டிப்பாக இல்லை. ரொம்ப வருடங்களுக்கு முன் எழுதிய மாபெரும் எழுத்தாளர்கள்கூட, நவீனச் சிந்தனை இல்லாமல் இருந்தார்கள் என்று எப்படிக் கூற இயலும்? வரலாற்று நிபுணர்கள் ஓர் அவசியத்துக்காக இப்படிக் கட்டம்கட்டுவதை ஒப்புக்கொள்ளலாமே தவிர, இந்த மாதிரியான கட்டுப் பாட்டுக்குள் எழுத்தாளர்களை அடைப்பது சரியல்ல என்றே நான் நினைக்கிறேன். ஒவ்வொரு எழுத்தாளரும் நவீனச் சிந்தனை உள்ளவராகத்தான் இருக்க வேண்டும். நவீனம் என்பது அடையாளச் சீட்டோ முத்திரையோ அல்ல… அது ஓர் உணர்வு… தொலைதூரம் பார்க்கக்கூடிய உணர்வு.

  • ஆக, எழுத்தாளர் தீர்க்கதரிசியாகவும் இருக்கவேண்டும் என்கிறீர்களா?

நிச்சயமாய். காலத்தைத் தாண்டி நிற்கவேண்டுமென்றால், இதுவரை கண்டு பிடிக்கப்பட்ட பாதைகளைத் தவிர்த்து புது வழிகளை எடுத்துச்சொல்ல முனைய வேண்டும். ஐயாயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பிரமிடுகளில் ஆராய்ச்சி செய்தபோது, ‘எனக்கு ஒரு புது மொழியைக் கொடு, நான் சாதித்துக் காட்டுகிறேன்’ என்று ஓர் இளம் கவிஞன் எழுதிவைத்திருந்ததைக் கண்டுபிடித்ததாகச் சொல்வார்கள். சிருஷ்டிக்க விரும்பும் எவரும், வழக்கமான பாதையிலிருந்து மாறுபட்டுப் பயணிக்க விரும்புவது இயற்கை. சரியான கருவோடு, காந்த சக்தி யோடுகூடிய உத்தி, ஊடுருவும் தொலைநோக்குப் பார்வையும் சேரும்போது, காலத்தை வென்று நிற்கும் இலக்கியம் சிருஷ்டிக்கப்படும்… இதில் சந்தேகமே வேண்டாம்.

– டிசம்பர் 1992.

                                                                                                                 மேலும் படிக்க