அம்மா சொன்ன கதைகள் புத்தகத்திலிருந்து…
பச்சை மிளகாய்
ரொம்ப நாளைக்கு முன்பு, ராமன், வள்ளி என்று ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். இவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லை. குழந்தை பிறக்காதது குறித்து ரொம்பவும் வருத்தத்தோடு இருந்தார்கள்.
ஒரு கோவில் குளம் விடாமல் சென்று, “எப்படியாவது ஒரு குழந்தையாவது எங்களுக்குப் பிறக்க வேண்டும்…” என்று மனமாரப் பிரார்த்தனை செய்தார்கள்.
தினமும், கணவன் வேலைக்குச் சென்றதும், வள்ளி வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்த தோட்டத்துக்கு வருவாள். அங்கு விதம்விதமாகப் பூத்திருக்கும் பூச்செடிகளை ரசித்துவிட்டு, செடிகளுக்கு ஆசையோடு நீர் ஊற்றிவிட்டுச் செல்வாள்.
ஒருநாள் அப்படி தோட்டத்திற்கு வரும்போது, பச்சை மிளகாய்ச் செடியில் நிறைய பிஞ்சுகள் இறங்கியிருப்பதைக் கண்டாள். பச்சைப்பசேலென்று பளபளப்பாக விரல் விரல்களாய் இருந்தவற்றைப் பார்த்து முதலில் சந்தோஷப்பட்ட வள்ளி, பிறகு சற்றே வருத்தப்பட்டாள். ‘இந்த மிளகாய்ச் செடிக்குக்கூட நிறைய குழந்தைகள் – காய்களாகக் காய்க்கின்றனவே, எனக்கு மட்டும் ஏன் ஒரே ஒரு குழந்தைகூடப் பிறக்கவில்லை?’ என்று நினைத்து ஏங்கினாள். செடியின் கிளைகளைப் புரட்டி, பிஞ்சுகளை மெதுவாகத் தடவிக்கொடுத்தாள். செடியிடம் குனிந்து, ‘நீ அதிர்ஷ்டக்காரி!’ என்று மனதாரப் பாராட்டினாள்.
இறைவன் அருளால், கொஞ்ச நாள் கழித்து வள்ளி கர்ப்பமானாள். வீட்டில் எல்லோருக்கும் ஒரே சந்தோஷம். இத்தனை வருஷங்கள் கழித்தாவது நமக்கென்று ஒரு குழந்தை பிறக்கப்போகிறதே என்று வள்ளியும் ராமனும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ரொம்ப கவனமாக, அவளைப் பெரியவர்கள் பாதுகாத்துப் பேணினார்கள். பத்து மாதங்கள் சென்று வள்ளிக்குப் பிரசவம் ஆயிற்று. அவளுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க ஆவலாக இருந்த எல்லோருக்கும் ஒரே அதிர்ச்சி! ஏன் தெரியுமா?
அவளுக்குப் பிறந்திருந்த குழந்தை, பச்சை மிளகாய்க்குக் கையும் காலும் முளைத்த மாதிரி, அசப்பில் ஒரு பச்சை மிளகாய் போலவே இருந்தது! பச்சை மிளகாயைப் போய் எப்படிக் குழந்தையாக வளர்ப்பது என்று முதலில் வருத்தமாக இருந்தது. ஆனால், ‘கடவுளே நமக்கு இதைக் குழந்தையாகக் கொடுத்திருக்கும் போது, குறை சொல்வது கூடாது. ஏதோ இதுவாவது பிறந்ததே…’ என்று சீக்கிரமே வள்ளியும் ராமனும் மனதைத் தேற்றிக்கொண்டுவிட்டார்கள்.
அடுத்துவந்த நாள்களில், அந்தப் பச்சை மிளகாயை ஒரு குழந்தையை வளர்ப்பது போன்று கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்கள். கூடத்து அலமாரியில் சின்ன தொட்டில் செய்து படுக்க வைத்தார்கள். தினம் அதற்குப் பாலும் சோறும் கொடுத்துவந்தார்கள். வெளியே அனுப்பாமல், பத்திரமாகப் பாதுகாத்தார்கள். நாளாக ஆக, சின்னதாக இருந்த அந்தப் பச்சை மிளகாயும் அம்மாவின் அன்பான கவனிப்பினால் விரல் நீளத்திற்கு வளர்ந்து அழகாக ஆயிற்று.
“அம்மா… அம்மா…” என்று வள்ளியை வாய் ஓயாமல் கீச்சுக்குரலில் கூப்பிட்டது. ஓடியாடி வீட்டுக்குள் நிறைய விஷமம் செய்தது.
சில வருஷங்கள் நகர்ந்தன.
ஒரு சமயம், ராமன் வேலைபார்த்து வந்த இடத்தில், அவரை திடுமென வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள். வேறு எங்கு தேடியும் வேலை கிடைக்காமல்போக, வீட்டில் தரித்திரம் தாண்டவமாடத் துவங்கியது. கஷ்டம் தாள முடியாமல்போன ஒரு நாளில், தீவிரமாக யோசித்துக்கொண்டே வள்ளியிடம் வந்த பச்சை மிளகாய், “அம்மா…” என்று அழைத்தது. தீர்மானமாய் பேசியது.
“நான் இப்போது வளர்ந்து பெரியவனாகிவிட்டேன். இனிமேல், பிள்ளையாய் லட்சணமாய் வெளியே சென்று சம்பாதிக்க விரும்புகிறேன். அதனால், வீட்டுக்கு வெளியே போக எனக்கு அனுமதி கொடு.”
இதைக் கேட்டு வள்ளி திடுக்கிட்டாள்.
“நீ வெளியே போனால், உன்னை யாராவது அடித்து, நசுக்கிவிடுவார்கள்… மாட்டேன்!” என்று மறுத்தாள்.
ஆனால், பச்சை மிளகாய் விடாமல் கெஞ்ச, கடைசியாய் அரை மனதுடன் சம்மதித்தாள்.
அம்மாவை வணங்கிவிட்டு வீட்டிலிருந்து கிடுகிடுவென்று நடந்த பச்சை மிளகாய், நேராக, ஏகமாய் தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கும் ஒரு மளிகைக் கடைக்குள் சென்று, அங்கு உண்ட மயக்கத்தில் இருந்த முதலாளியின் மூக்கினுள் சர்ரென்று நுழைந்துகொண்டது.
மிளகாய் மூக்குக்குள் நுழைந்தால் எப்படியிருக்கும்? ‘‘ஆச்சூ… ஆச்சூ…” என்று தும்மித் தவித்த முதலாளி, சில நிமிஷங்களில், “மூக்கு எரிகிறது…” என்று புலம்ப ஆரம்பித்தார். எப்படியாவது மிளகாயை வெளியே எடுத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்துபார்த்தார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அப்போது மூக்குக்கு உள்ளேயிருந்து கபகபவென்று சிரித்தவாறு அந்தப் பச்சை மிளகாய் பேசிற்று.
“ஐயா… நான்தான் உங்கள் மூக்கிலிருக்கும் பச்சை மிளகாய் பேசுகிறேன்… நீங்கள் தலைகீழாக நின்றாலும் என்னை வெளியே எடுக்க இயலாது! நான் வெளியே வரவேண்டுமானால், நீங்கள் என் வீட்டில் அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் மாசாமாசம் கொண்டு போட வேண்டும்… அதற்குப் பதிலாக, தினமும் என் அப்பா உங்கள் கடைக்கு மாலை நேரங்களில் வந்து கணக்கு எழுதி உதவுவார். இதற்கு நீங்கள் சம்மதிக்காவிடில், நான் வெளியே வரவே மாட்டேன்!”
மூக்கு எரிச்சலைத் தாங்க முடியாத முதலாளி, “சரி, சரி… நீ சொன்ன பொருள்களை இப்போதே சென்று உன் வீட்டில் போட்டுவிடுகிறேன். அப்பாவையும் வேலைக்கு வரச் சொல். முதலில் தயவுசெய்து வெளியே வந்துவிடு…” என்று சொன்னார்.
பச்சை மிளகாயும் அவர் மூக்கிலிருந்து வெளியேறி, தன் வீட்டு விலாசத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, “மறக்காமல் இப்போதே நான் கேட்ட சாமான்களை என் வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டு மறுபடி வேகமாய் நடந்தது.
அடுத்ததாக, பொய்க்கணக்கு எழுதி ஏகமாகப் பணம் சேர்த்துவிட்ட ஒரு துணிக்கடைக்குச் சென்று, அங்கிருந்த முதலாளி கொஞ்சம் அசந்துபோன நொடியில் சர்ரென்று மூக்கில் புகுந்துகொண்டது.
அவரும் தொடர்ந்து தும்மி, மூக்கிலும் கண்களிலும் நீர் வடிய கெஞ்ச முற்பட்டதும், பச்சை மிளகாய் முன்போலவே, “நான் வெளியே வர வேண்டுமானால், வருஷத்துக்கு இரண்டு தரம் என் வீட்டிற்குப் புடவை, வேட்டி, துண்டு எல்லாம் அனுப்ப வேண்டும். இதற்குப் பிரதியுபகாரமாய், ஒவ்வொரு ஞாயிறும் என் தந்தை உங்கள் கடைக்கு வந்து கணக்கெழுதித் தருவார். இந்த ஏற்பாட்டிற்குச் சம்மதிக்காவிட்டால், நான் இங்கேயே உட்கார்ந்து உங்களுக்கு எரிச்சல் மூட்டிக்கொண்டேயிருப்பேன்!” என்று அவரைப் பயமுறுத்தியது.
அவரும் பயந்துபோய், “சரி… இப்போதே நீ கேட்டவற்றை உன் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறேன். உன் வீட்டு விலாசத்தைக் கொடு…” என்றார். பச்சை மிளகாயும் விலாசத்தைக் கொடுத்துவிட்டு சந்தோஷத்தோடு வெளியேறியது.
இரண்டு தெரு தள்ளியிருந்த வட்டிக்கடைக்குச் சென்று, சுகமாய் திண்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்த வட்டிக்கடைக்காரரின் முன்புறமாய் சென்று, சர்ரென்று அவர் மூக்கில் புகுந்துகொண்டது.
“அரே… அரே…” என்று கை கால்களை உதறித் தவித்தவரிடம், “நீங்கள் அடாவடி வட்டி வாங்கி ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறீர்கள். இதை உடனடியாய் நிறுத்த வேண்டும். அப்படி நீங்கள் ஒழுங்காகச் செய்கிறீர்களா என்பதைக் கண்காணிக்க, உங்கள் கடையில் பத்து மணியிலிருந்து மாலை ஐந்து மணிவரை என் அப்பா கணக்கெழுதுவார். இதற்காக என் அப்பாவுக்கு நீங்கள் மாசம் ஒரு தங்கக்காசு கொடுக்க வேண்டும். சம்மதமா? சரி என்றால், இறங்குகிறேன்… இல்லையென்றால், உங்கள் மூக்கினுள்ளேயே நிரந்தரமாய் தங்கிவிடுவேன். என்ன சொல்கிறீர்கள்?” என்று அதட்டியது.
பயந்துபோன வட்டிக்கடைக்காரர், அதன் நிபந்தனைகளுக்கு உடனடியாக ஒப்புக்கொள்ள, குஷியாய் ஒரு குதி குதித்து பச்சை மிளகாய் மூக்கை விட்டு வெளியேறியது.
சாயங்காலம் அது வீட்டிற்கு வந்தபோது, வீடு நிறைய மளிகைச் சாமான்களும் துணிமணிகளும் வந்து இறங்கியிருந்தன. அம்மா அப்பா முகங்களில் ஏக மகிழ்ச்சி.
பச்சை மிளகாயைப் பார்த்ததும் வள்ளி, “வந்துவிட்டாயா? இங்கே பார்… இத்தனை பொருள்களையும் நாங்கள் வாங்கவேயில்லை… யாரோ அனுப்பியிருக் கிறார்கள்! இதோடு, உன் அப்பாவைக் கணக்கு எழுத வரச்சொல்லி யார் யாரோ கூப்பிடுகிறார்கள்… இதெல்லாம் யார் வேலை என்று தெரியவில்லை!” என்றாள்.
பச்சை மிளகாய், தன் குட்டித் தலையைப் பின்னுக்குத் தள்ளி சிரித்தது. பின், “யாரோ இல்லை, அம்மா… நான்தான் அவர்களை அனுப்பச் சொன்னேன்! சாதாரணக் குழந்தை பிறந்திருந்தால், இப்போது பெரியவனாக வளர்ந்து, வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொடுத்திருக்கும், அல்லவா? அதைத்தான் நானும் செய்தேன். இனிமேல், மாசா மாசம் மளிகைச் சாமான்கள் வீடு தேடி வரும். அப்பாவுக்கு வரும் சம்பளப் பணம், மிச்ச செலவுகளுக்குச் சரியாக இருக்கும்!” என்று பெரிய மனுஷன் போலப் பேச, வள்ளியும் ராமனும் அசந்துபோனார்கள்.
இதுநாள் வரை ஒரு பச்சை மிளகாய் மகனாகப் பிறந்ததே என்று வருத்தப் பட்டதற்காக, ராமனும் வள்ளியும் வெட்கப்பட்டார்கள். பெற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமையை பச்சை மிளகாய் புரிந்துகொண்டிருப்பதற்காக, ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.
அன்றிலிருந்து, “இப்படியொரு உயர்ந்த மகன் பிறக்க நாங்கள் தவம் பண்ணியிருக்க வேண்டும்!” என்று தெரிந்தவர்களிடம் சொல்வது அவர்களது வாடிக்கையாயிற்று.
• • • •


